in ,

உறவுப்பாலம் (சிறுகதை) –  தி.வள்ளி, திருநெல்வேலி. 

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

காலையிலிருந்து மகிழ்ச்சியில் பரபரத்துக் கொண்டிருந்தாள் மரகதம் …”வயசு 70-க்கும் மேல ஆச்சு.. காலெல்லாம் வலிக்குது” என்ற வழக்கமாக புலம்பும், புலம்பல் கூட அன்று காணும் ..

“நெசமாத்தான சொல்ற …ராகினிக்கு எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு? மசக்கை வாந்தி இருக்கா?” சின்னப்பிள்ளை மாதிரி பத்து தடவை கேட்டு விட்டாள்.

பின்ன சந்தோஷம் இருக்காதா? பிரசாத் மூத்த பேரன். கல்யாணமாகி ஒரு வருஷம் ஆன நிலையில் எப்ப இந்த செய்திய சொல்லுவான்னு ஆசையா மரகதம் எதிர்பாத்துக்கிட்டு இருந்தாள். ‘வீட்டுக்கு மூத்த வாரிசு ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு சின்ன குழந்தை ‘ என்ற ஆர்வத்தில் மனம் பரபரத்தது.

“அத்தை! நேத்து ராத்திரி பத்து மணிக்கு பிரசாத் போன் பண்ணான். இப்படி நாள் தள்ளிப் போயிருக்கு டாக்டர்கிட்ட காண்பிச்சதுல’ பிரக்னன்சி கன்ஃபார்ம்’ ன்னு சொன்னாங்கன்னு சொன்னான். அததான் உங்ககிட்ட காலையில சொன்னேன். ராகினி கிட்ட பேசினாத் தான் மத்த விபரம் தெரியும் ” என்றாள் அகிலா.

அகிலா மரகதத்தின் மூத்த மருமகள். பிரசாத் அவள் மூத்த பையன்…ராகினி மருமகள் . மகளை பெங்களூரில் கல்யாணம் பண்ணி கொடுத்திருந்தார்கள். ராஜலட்சுமி என்கிற ராஜி இரண்டாவது மருமகள் அகிலாவின் ஓர்ப்பிடி.. ஒரு வீட்டுக்கு வாழ வந்த மருமகள்கள் என்றாலும் அக்கா தங்கை போல தான் ஒருவருக்கொருவர் அன்பாக, உயிராக இருந்தார்கள்.

ராஜிக்கு இரண்டு பெண்கள் சின்னவள் கல்லூரியில் முதல் ஆண்டும், பெரியவள் கல்லூரியில் கடைசி வருஷமும் படித்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகளில் தன் பிள்ளை அவள் பிள்ளை என்று பேதம் பார்க்க மாட்டார்கள். ஒன்றாக வளர்ந்ததாலோ என்னமோ பிள்ளைகளும் ஒருவருக் கொருவர் அன்பாக ,உயிராக இருப்பார்கள். மொத்தத்தில் அது ஒரு பாசம் மிகுந்த குடும்பம்.

“ராகினி இப்ப அவங்க அம்மா வீட்டுல உள்ளூர்லதான இருக்கா. போன்ல பேசறதை விட நீயும், ராஜியும் ஒரு நடை போய் பாத்துட்டு வாங்க ” என்றாள் மரகதம் .

அகிலாவும், ராஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். உள்ளூரிலேயே இருந்து கொண்டு இந்த சந்தோஷ செய்தியை ராகினி தங்களுக்கு ஒரு போனில் கூட சொல்லவில்லையே என்ற எண்ணம் இருவர் மனதிலும் எழுந்தது.

எதையும் வெளிக்காட்டாமல் “சரியத்தை போய் பார்த்துட்டு வரோம் .நீங்க வரலையா? “

“நல்லா சொன்ன போ உங்க மாமா போன பிறகு நான் எந்த வெளி இடத்துக்கு போயிருக்கேன் பொறந்த வீட்டத் தவிர., கொண்டான், கொடுத்தான் வீட்டுக்கெல்லாம் போகக்கூடாது. நீங்க போயிட்டு வாங்க. ராகினி உள்ளூர்ல தானே இருக்கா.. ஒரு நட தோது படும் போது வரச் சொல்லு ..புடிச்சத பண்ணிக் கொடுப்போம். மூணாம் மாசம் கூட்டாஞ்சோறு பண்ணிக் கொடுக்கனும் “

“சரியத்த.. நாங்க வேலை முடிச்சுட்டு ஒரு பத்து மணிவாக்கில் கிளம்பறோம் “

“நல்லா சொன்ன போ.. சூலியை வெறுங்கையோடவா பாக்கப் போறது? பழம் பூ எல்லாம் வாங்கிட்டு அதோட திரட்டு பால் கிளறித் தாரேன் கொண்டுட்டு போங்க”

பிரசாத் டாக்டருக்கு படித்திருந்தான்.. அவர்கள் சொந்த பந்தத்தில் டாக்டர் பெண்ணே இல்லாததால் கொஞ்சம் அசலாய்த்தான் ராகினி வாய்த்தாள்.தாங்களும் அந்தஸ்தான குடும்பம் என்றாலும் தங்களை விட அந்தஸ்தில் கொஞ்சம் அதிகப்படியாக இருந்த பெண் ராகினியை மருமகளாக ஏற்பதா என்று கொஞ்சம் யோசிக்கத் தான் செய்தார்கள்.

ஆனால் ஜாதகம் நல்ல பொருந்தி டாக்டர் பெண் என்பதால் மாற்று கருத்து இல்லை. எல்லோரும் சேர்ந்து முடிவு செய்ய பிரசாந்த்- ராகினி திருமணம் நடந்தது .

இருவரும் பெங்களூரில் ஒரே ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தார்கள். ராகினி அவ்வப்போது அம்மா வீட்டுக்கு சென்னைக்கு வருவாள். வந்தாலும், அம்மா வீட்டில் தான் இருந்துவிட்டு, பேருக்கு இரண்டு நாள் வந்து பிரசாத் வீட்டில் தலையை காட்டுவாள் ..அதுவும் பிரசாத் இருந்தால் மட்டுமே..

முதலில் இருந்தே புகுந்த வீட்டோடு ஒட்டாமல் தான் இருந்தாள் பற்றாக்குறைக்கு அவள் அம்மா வேறு அவ்வப்போது தூபம் போடுவாள் .

இப்போதும் தான் உண்டானதை நேரில் சொல்ல மனமில்லாமல் பிரசாத் மூலமாக சொல்கிறாள்.

மதியம் காரில் செல்லும் போது …”இவ ஏன் இப்படி இருக்கா ராஜி ..இவள உள்ளங்கையில வைச்சுத் தான் தாங்குறோம் இந்த வீட்டுக்கு மூத்த மருமகள் . உன் பிள்ளைகள் ரெண்டும் “அண்ணி அண்ணி” என்று எவ்வளவு பிரியமா இருக்காங்க. அங்க அவ வீட்ல தனியா இருக்கறதுக்கு இந்த பிள்ளைகளோட வந்து எவ்வளவு சந்தோஷமா பொழுதக் கழிக்கலாம் …உறவுகளை மதிக்கத் தெரியலையே. பிரசாத் தான் பாவம் தவிச்சுப் போறான்..”

“சரி விடுங்க அக்கா ..பணக்கார வீட்டு பொண்ணு செல்லமா வளர்ந்திருக்கா. உறவுகளோட அருமை தெரியல.. அவ அம்மாவும் தான் ஒட்ட விட மாட்டேங்கறாங்களே .அத்தைக்கும் புரிய மாட்டேங்குது ..அவங்க ஆசைக்காவது இவ வரலாம் “

ராகினியின் வீட்டில் முன் போர்டிகோவில் காரை டிரைவர் நிறுத்த, இருவரும் இறங்கினர். முன்ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருந்த ராகினியின் அப்பா அவர்களை கண்டதும் வெறுமனே தலையசைத்தார். பின் உள்ளே பார்த்து

“வசுந்தரா இங்க வா ..இவங்க வந்திருக்காங்க பாரு “

வசுந்தரா வரும் வரை என்ன செய்வது என்று தெரியவில்லை இருவருக்கும்… அதுவும் அவர் உட்கார சொல்லாத போது உட்காருவதா .. இல்லை உள்ளே செல்வதா…

மௌனத்தை கலைத்த அகிலா…” ராகினி வீட்லதான் இருக்காளா? “

“உள்ள தான் இருக்கா போங்க” என்றார் ராகினியின் அப்பா. நல்ல வேளை தன் கணவனும், கொழுந்தனும் தங்களுடன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டாள் அகிலா ..

இவர்கள் வரவேற்புக்கு நாம வந்ததே அதிகம் என்று நினைத்துக் கொண்டாள்

அதற்குள் வந்த வசுந்தரா” வாங்க… என்ன வராதவங்க வந்திருக்கீங்க …உள்ள வாங்க” என்றாள்..”பேரப்புள்ள வந்தா தான் வரணும்னு இருந்திருக்கீங்க “

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அத்தைக்கும் வயசாகுது நாங்க வெளியே கிளம்புனா அவங்க வேலை பார்க்க கஷ்டப்படுவாங்க ..ராகினி இருக்காளா ..”

“ராகினி உங்க அத்தையும், சின்னத்தையும் வந்திருக்காங்க வா “என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள் “

அவர்களும் எத்தனையோ வீடுகளுக்கு போய் இருக்கிறார்கள் எந்த வீட்டிலும் பேசுவதற்கு யோசித்துக் கொண்டு பேசியதில்லை, சகஜமாக கலகலப்பாக பேசக்கூடியவர்கள் தான் அகிலாவும், ராஜியும் ஆனால் அங்கே பேசவே ஒரு தயக்கமாக இருந்தது. நல்ல வேலையாக ராகினி வந்து சேர்ந்தாள்.

“என்னம்மா எப்படி இருக்க? பிரசாத் நேத்து ராத்திரி விஷயத்தை சொன்னான். ரொம்ப சந்தோஷமா இருந்தது . மசக்க இருக்குதா? வாமிட் இருக்கா?”

” லேசா தல சுத்தல் இருக்கு ..மத்தபடி பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லை ” என்றாள் பட்டும் படாமல் ..இருவரையும் வாங்க என்று கேட்க கூட அவளுக்கு மனசு வரவில்லையா என்று நினைத்துக் கொண்டாள் ராஜி.

“ஆச்சிக்கு ஒரே சந்தோஷம் விஷயத்தை சொன்னதும். பிரசாத் நேத்து ராத்திரி விஷயத்தை சொன்னதிலிருந்து அவங்கள கைல புடிக்க முடியல ..”என்று ராஜி கூறியதும்

“அதுக்குள்ள மாப்பிள்ளை போன் போட்டு உங்களுக்கு விஷயத்தை சொல்லிட்டாரா ..?”

” அது எங்க வீட்டு குழந்தை எங்களுக்கு தானே முதல் தகவல் வரணும்” என்றாள் ராஜி பொறுக்க முடியாமல் ..

“சரி ராஜி விடு!” என்ற அகிலா.. “ராகினி உனக்கு திரட்டு பால் கிளறி ஆச்சி குடுத்துவிட்டிருக்காங்க. பேரன் புள்ள பூட்டான் வரான்னு அவ்வளவு ஆசை ..நீ ஒரு நடை வீட்டுக்கு வந்துட்டுப் போம்மா, ஆச்சி உனக்கு விதவிதமா சமைச்சு போடனும்னு நினைக்கிறாங்க ..”

” இப்பவெல்லாம் கூப்பிடாதீங்க…இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. அவளுக்கு ஓய்வு வேணும். இங்கேயும் அங்கேயும் அலைய முடியாது ..”

” எங்க அலையப் போறா உள்ளூர் தானே! ஏறுனா பத்து நிமிஷத்துல இருக்கு எங்க வீடு. இதுல என்ன அலைச்சல் இருக்கு …?”

” எல்லாம் மாப்பிள்ளை வரட்டும்..”

“அவன் வந்தா நேரா அங்க தான் வருவான் ..இந்த வார கடைசியில் ராகினி வந்தா…நாலு நாள் இருந்துட்டு பிரசாத் கொண்டு வந்து விட்டுட்டு போயிடுவான்.”

” இல்ல நாங்க மாப்பிள்ளையை இங்க வர சொல்லிட்டோம். அவர் இங்கதான் வருவாரு ..பொண்டாட்டி குழந்தை உண்டாயிருக்க அவள பாக்க வருவாறா.. உங்க வீட்டுக்கு வரணும்னு சொல்றீங்களே.. இது எந்த ஊரு நியாயம்”

அதற்குள் வேலை பார்ப்பவள் டிபனும், காபியும் கொண்டு வந்து வைக்க ..இதற்கு மேல் எது பேசினாலும் அது பிரச்சனையில் தான் முடியும் என்று தோன்றியது அகிலவுக்கு

டிபனை தொடாமல் காபியை மட்டும் குடித்தவர்கள், அப்ப நாங்க போயிட்டு வரோம் சாயங்காலம் பிள்ளைங்க காலேஜ்ல இருந்து வந்திடுவாங்க .ஏதாவது டிபன் பண்ணனும் ..நாங்க வரோம்…ராகினி உடம்ப பாத்துக்கோ நல்ல சத்துள்ளது சாப்பிடு.. ஜூஸ் குடி ….

“இருந்துட்டு போகலாமே ” என்று லேசாக ராகினி இழுக்க ..

“அதான் ராஜி …பிள்ளைங்க காலேஜ்ல இருந்து வந்திடு வாங்கன்னு சொல்றாங்களே …”

“சரிமா கிளம்பறோம் .. இந்த திரட்டுப்பால ஆச்சி அவங்க கையாலே பண்ணி கொடுத்தது” என்று திரட்டு பாலை கையில் கொடுத்துவிட்டு இருவரும் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறினர் .

வரும் வழியில் டிரைவரிடம்” நாங்கள் வழக்கமா உட்கார்ற பார்க்கல கொஞ்ச நிறுத்துங்க..”என்றாள் அகிலா.

வாடிப்போய் இருந்த அவள் முகத்தைப் பார்க்கவே பாவமாக இருந்தது ராஜிக்கு.

“வீட்டுக்குப் போனா அத்தை ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாங்க ராஜி… கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்திட்டு போவோம் . மனசுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.”

“ஏன் ராஜி… இவங்க எப்படி இருக்காங்க.. மனுஷாளே வேண்டாம்னு… அதுவும் மகளை புகுந்த வீட்டோடு ஒட்டவே கூடாதுன்னு நினைக்கிறாங்க. நாம அவளை நம்ம வீட்டுப் பொண்ணா தான் பாக்குறோம். எவ்வளவு அன்பக் காட்டுறோம்.. பிள்ளைகளும் எவ்வளவு பாசமா இருக்காங்க ..நம்மகிட்ட கண்டிப்பா இருக்கிற அத்தை கூட பேரன் பொண்டாட்டி பேத்தின்னு எவ்வளவு சலுகை காமிச்சு பாசமா இருக்காங்க, இதைவிட என்ன வேண்டும்?

ராகினி அவ அம்மாவை’ இப்படி எல்லாம் பேசாதீங்கன்னு’ ஒரு வார்த்தை சொல்ல மாட்டேங்கிறாளே.. நம்மகிட்ட ரெண்டு வார்த்தை அன்பா பேசினாத்தான் என்ன? பிள்ளைகளையோ ஆச்சியையோ.. மாமாவையோ.. ஒருத்தரையும் விசாரிக்கல ..பத்தாக்குறைக்கு மாப்பிள்ளைய நேர இங்கே வரச் சொல்லி இருக்கோம்னு நம்ம கிட்டயே சொல்றாங்க அந்த அம்மா ..”

“அக்கா நீங்க வருத்தப்படாதீங்க .இந்த மாதிரி அம்மாக்கு பிள்ளையா பிறந்தா அந்த பொண்ணு சுயமாக சிந்திச்சு செயல்பட முடியுமா? ..அவங்க சொல்றத கேக்குற பொம்மையாத்தான் அவளை ஆக்கி வைச்சிருக்காங்க. இத பத்தி எதுவும் பிரசாத் கிட்ட பேசாதீங்க. நாளைக்கு அவங்க ரெண்டு பேருக்குள்ள விரிசல் வந்துடும். நம்மளால எதுக்குக்கா புருஷன் பொண்டாட்டிக்குள்ள வீண் பிரச்சனை ..என்னைக்காவது ஒரு நாள் அவளுக்கு நம்ம பாசம் புரியும் ..”

“அப்படியே புரியாமல் போனாலும் என்ன செய்ய ராஜி? சொந்தத்தை விட்டுக் கொடுக்கவா முடியும் ? ஏதோ அவளும் பிரசாத்தும் நல்லபடியா சேர்ந்து இருந்தா சரிதான் எத்தனையோ உறவுகளைத் தாண்டி வந்திருக்கிறோம். எத்தனையோ குணாதிசயங்களையும் கோபதாபங்களையும் பார்த்திருக்கிறோம் .இதையும் கடந்து போவோம்.”

“குடும்பத்துல உறவு பாலமா இருக்கிறது நாமதான். நாமளே பிள்ளைகளை விட்டுக் கொடுக்க முடியாது ..இன்னைக்கு நடந்தது நமக்குள்ளேயே வச்சுக்கிடுவோம்” என்ற முடிவுடன்

மனபாரம் அகல.. மனம் லேசாக.. புன்னகையுடன் கிளம்பினர்.

வரவழைக்கப்பட்ட அவர்களது புன்னகை, சந்தோஷம், மரகதத்தையும் தொற்றிக் கொண்டது. ” ராகினி நல்லா இருக்காளா? நீ திரட்டுப்பாலையும் அவ கிட்ட கொடுத்தியா? என்ன சொன்னா?” என்றாள் மரகதம் ஆர்வமுடன்.

” ரொம்ப தேங்க்ஸ் அத்தைன்னு என் கைய புடிச்சுக்கிட்டா.”

” நீ தேங்க்ஸ் சொல்ல வேண்டியது, ஆச்சிக்கு, ஆச்சி தான் கால் வலியையும் பொறுத்துக்கிட்டு ரெண்டு மணி நேரமா நின்னு இந்த திரட்டுப் பால கிளறி இருக்காங்கன்னு சொன்னேன்.. அவ்வளவுதான் அவ கண்ணுல கண்ணீர் வந்துடுச்சு .

“‘ஆச்சிக்கு தான் என் மேல எவ்வளவு பாசம். நான் ரொம்ப கேட்டேன் சொல்லுங்க. ஒரே அசதியா இருக்கு .ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு பிறகு அங்க வந்து ஆச்சியை பார்க்கிறேன்” ன்னு சொன்னா….

‘வரட்டும் வரட்டும் ..மெதுவா வரட்டும்.. நல்ல ஓய்வெடுக்கட்டும். “என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டார் மரகதம் மனம் முழுக்க சந்தோஷத்துடன் … அகிலாவும், ராஜியும் ஒரு புன்னகையை அர்த்த புஷ்டியோடு பரி மாறிக் கொண்டார்கள் தங்களுக்குள்..

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவளும் நானும் (குறுநாவல் – பகுதி 1) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

    கடவுள் என்றோர் சிநேகிதனுண்டு (அத்தியாயம் 8) – முகில் தினகரன், கோவை