2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
ராஜரத்தினத்திடம் ஃபோனில் பேசிவிட்டுக் கிளம்பிய கபிலன், வாகன நெரிசலில் சிக்கி, ஈசிஆரில் உள்ள அவரின் பங்களாவிற்கு வந்து சேரும் போது சுமார் ஒரு மணி நேரம் கரைந்து போயிருந்தது. சற்று ஒதுக்குப்புறமாக, ஆளரவமற்று இருந்த அந்த பங்களாவைப் பார்ப்பதற்கே கொஞ்சம் திகிலாக இருந்தது.
கபிலன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பங்களாவின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார். அழகான புல்வெளிகளையும், பூச்செடிகளையும் கடந்து போனதுமே ஏதோ வித்தியாசமாகப் பட்டது கபிலனுக்கு.
தரையில் ஒரு நாய் நடந்து போனதற்கான கால்தடம், அதுவும் சிவப்பு நிறத்தில். கொஞ்சம் உற்றுப் பார்த்தார் கபிலன். சுடச்சுட ரத்தம், ஈரம் காயாமல். ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து போனது கபிலனுக்கு.
வேகமாக நடந்து போர்டிகோவைத் தாண்டியதும் ஒரு வெள்ளை நிற நாய் அசைவில்லாமல் கிடந்தது. அதற்கு எதிர்ப்புறத்தில் கோணலாக விழுந்து கிடந்தார் ராஜரத்தினம். வேகமாக அவர் அருகில் போய் உயிர் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார் கபிலன். இல்லை, அவர் அடங்கிப் போயிருந்தார். ஆனால் அவர் தலையிலிருந்து வழிந்த ரத்தம் இன்னும் காயாமல் அப்படியே இருந்தது. அங்கிருந்து ஆரம்பித்த அந்த நாயின் கால் தடம், கேட்டிற்கு சற்று முன்னால் காணாமல் போயிருந்தது.
நடந்ததைப் புரிந்து கொண்டார் கபிலன்.
‘இதுவும் அந்தக் கருப்பு நாயோட வேலையா? ஒரு நாய் வேற வேற ஏரியால போய் எந்தத் தடையும் இல்லாம எப்படி உயிரை எடுக்க முடியும்? மகாபலிபுரத்தில் நடந்த மணிவேலோட மரணத்தில் நேர்ல பார்த்த சாட்சிகள் ஏதோ அமானுஷ்ய சக்தி மாதிரி சொன்னாங்க. அப்படியா இருந்தா அந்த நாய் எங்கேயிருந்து வந்துது? மாமா சொன்ன தகவலை வச்சுப் பார்த்தா, அந்த நாலு பேரும் இப்ப உயிரோட இல்லை.
மிச்சமிருக்கிறது அந்த வல்லபன் மட்டும்தான். வல்லபன் பத்தின தகவல்களை மதுரை போலீஸ்கிட்ட கேட்டிருக்கேன். ஆனா இந்த நாலு பேரும் கொன்னது வல்லபனோட பொண்ணை மட்டுமா, இல்ல அவ காதலிச்ச அந்தப் பையனை மட்டுமா, இல்ல ரெண்டு பேரையும் கொன்னுட்டாங்களா? ஆனா அதுக்கான பழிவாங்கலா இருந்தா, ஏன் முப்பது வருஷம் கழிச்சு இப்ப நடக்குது?’
இப்படி பல கேள்விகள் கபிலனைக் குடைந்தெடுத்தன. ஈசிஆர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்லி, ராஜரத்தினம் வீட்டில் நடந்த சம்பவத்தை சுருக்கமாக சொல்லி, மேற்கொண்டு நடக்க வேண்டியவற்றை கவனிக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் கபிலன். கூடவே ராஜரத்தினத்தின் கைபேசியைக் கைபற்றி, தகவல்களைத் திரட்டித் தரும்படி உத்தரவிட்டார்.
நேராகக் கமிஷனரை சந்தித்து, இதுவரை நடந்த நால்வரின் மரணத்தைப் பற்றியும், நான் சேகரித்த தகவல்கள் பற்றியும் அவரிடம் விவாதித்துவிட்டு, மேற்கொண்டு என்ன செய்வது என்றும் ஆலோசனை செய்தார். ஒருமுறை மகாபலிபுரம் சென்று கூடுதல் தகவல்களை சேகரிக்க முடிவு செய்திருப்பதாகச் சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.
கபிலன் மகாபலிபுரம் போய்க் கொண்டிருக்கும்போது, மதுரையிலிருந்து வல்லபன் பற்றிய தகவல்கள் கிடைத்தன. ஜாதி வெறி பிடித்த ஒரு பணக்கார முதலை வல்லபன் என்றும், அவரது ஜாதிக்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார் என்பதும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் கருத்து.
வல்லபனுக்கு மிகவும் நெருங்கிய வட்டத்தில் விசாரித்த போதுதான் கூடுதல் தகவல்கள் கிடைத்தன. அவரின் ஒரே மகள் வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பதை அறிந்து அவளைக் கொல்லவும் துணிந்தவர். அதற்காக தன்னிடம் வேலை பார்த்த குறிப்பிட்ட நான்கு பேரைத் தேர்வு செய்து, அவர்கள் இருவரையும் தேடிக் கொலை செய்ய அனுப்பினாராம்.
அந்த நால்வரும் மகாபலிபுரத்தில் வல்லபனின் மகள் வளர்மதியையும், அவள் காதலித்த சேதுபதியையும் கண்டுபிடித்து, சேதுபதியை உயிரோடு மண்ணில் புதைத்ததாகவும் தகவல்களைச் சேகரித்து சொன்னார்கள். வளர்மதி பற்றிய விபரம் கிடைக்கவில்லை.
தன் மாமனார் சொன்ன தகவல்கள், மதுரையிலிருந்து கிடைக்கப் பெற்ற செய்திகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு முறை கோர்வையாக யோசித்துப் பார்த்தார். வளர்மதி பற்றிய தகவல்கள் கிடைத்தால், மர்மம் கொஞ்சம் அவிழும் எனத் தோன்றியது.
வளர்மதி பற்றியும், கருப்பு நாய் பற்றியும் தகவல்களைத் திரட்ட தன் துறையைச் சேர்ந்தவர்களுக்கு உத்தரவிட்டார். ஆழ்ந்த யோசனையில் பயணித்து மகாபலிபுரம் வந்தடைந்தார் கபிலன்.
மகாபலிபுரத்தில் மணிவேல் மரணித்த அந்தக் குழி இருந்த இடத்தை ஆய்வு செய்தார். அங்கே வேலைகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்த குமரனை விசாரித்தார்.
“சார், இந்த இடத்துல ஒரு வாரம் முன்னாடியே வேலையை ஆரம்பிச்சோம். இந்த இடத்தை சுத்தம் செஞ்சபிறகு ஒரு பெரிய மரத்தோட அடிப்பகுதி மட்டும் இருந்துது. அதைத் தோண்டி எடுக்கச் சொன்னாங்க. அதனால நானும் எங்க ஆட்களும் அந்த பட்ட மரத்தை வேரோட தோண்டி எடுத்தோம். நாங்க எடுத்து முடிக்கும்போது இருட்ட ஆரம்பிச்சுருச்சு. அதனால அப்படியே விட்டுட்டு போய்ட்டோம்.
மறுநாள் வந்து பார்த்தப்போ, இந்த குறிப்பிட்ட இடத்துல மட்டும் குழி மூடியிருந்துச்சு. எங்களுக்கு ஒண்ணும் புரியல.
சரி, பள்ளமா இருந்ததால மணிவேல் சார் வேற யாரையாவது வச்சு அதை மூடியிருப்பார்னு நினைச்சு நாங்களும் விட்டுட்டோம்.
நாங்க மத்த இடத்துல வேலைகளை முடிச்சுட்டிருந்தோம். நாலு நாள் முன்னாடிதான் வேலை இருக்குன்னு இங்கே திரும்பவும் வந்தோம். அப்போ தானாவே குழி வந்துச்சு. அன்னிக்குதான் இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்து போச்சு. ஆனா அந்த கருப்பு நாய் எங்கேயிருந்து வந்துச்சுன்னே தெரியல சார். ஒரு நாள்கூட எங்க கண்ணுல படல. திடீர்னு சிறுத்தை மாதிரி பாய்ஞ்சு வந்துச்சு சார். அப்படியே மணிவேல் சாரை உள்ளே தள்ளிட்டு, அதுவும் உள்ளே குதிச்சிருச்சு. அதுக்கப்புறம் குழி தானாவே மூடிருச்சு சார்.
ஒரு அரைமணி நேரத்துக்குள்ள குழியைத் தோண்டிப் பார்த்தா மணிவேல் சாரோட எலும்புக்கூடுதான் இருந்துது. எப்படி சார் அரைமணி நேரத்துல ஒரு ஆளோட ரத்தமும் சதையும்னு மொத்த உடம்பும் காணாமப் போகும்? கொடுமையான மரணம் சார்.
எங்களைப் பொறுத்தவரை இது ஏதோ காத்து கருப்பு வேலை மாதிரிதான் தெரியுது. எந்த நாயும் இப்படி குழிக்குள்ள எல்லாம் தள்ளி விடாது. அதுவும் நாங்க இவ்வளவு பேர் குழி தோண்டும் போது எதுவும் நடக்கல. மணிவேல் சாருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? ஏதோ பழைய பகைக்குப் பழி வாங்கற ஆவியோட வேலையா இருக்கும் சார்.”
“சரி குமரன், நீ சொன்ன தகவல்கள் எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும். வேற ஏதாவது சொல்லாம விட்டிருந்தா, எப்போ வேணா இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணு.”
குமரனிடம் சொல்லி விட்டு, இன்னும் சிலரிடம் விசாரித்து விட்டு, மணிவேலின் உடலை முதலில் பரிசோதித்த டாக்டரிடம் விசாரித்தார் கபிலன்.
“இட்ஸ் ஹைலி இம்பாசிபிள் ஐஜி சார். உயிரோட குழிக்குள்ள விழுந்த ஒரு மனுஷனை, அரைமணி நேரத்துல வெறும் எலும்புக்கூடா எந்த அனிமல்னாலயும் பண்ண முடியாது. ஒரே ஒரு நாயால கண்டிப்பா முடியாது. வெறும் எலும்புக்கூடு, அதுல அங்கங்கே கொஞ்சமா ஒட்டிட்டிருந்த சதைத் துணுக்குகள், ரத்தம், அவ்வளவுதான். என் மெடிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்ல இந்த மாதிரி ஒரு கேஸ் பார்த்ததேயில்ல சார். சம்திங்க் அப்நார்மல்.”
டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்னை கிளம்பினார் கபிலன். அதிர்ச்சித் தகவலோடு சென்னை அவரை வரவேற்றது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings