in , ,

உடல் பொருள் ஆவி (அத்தியாயம் 5) – ஸ்ரீவித்யா பசுபதி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4

சென்னை ஈசிஆர்.

ஈசிஆர் சாலையிலிருந்து  கடற்கரையை நோக்கிப் பிரிந்த சிறு சிறு சாலைகளில் வரிசைகட்டி நின்றிருந்தன விதவிதமான பங்களாக்கள்.  ஒவ்வொரு பங்களாவும் செல்வச் செழிப்பை பறைசாற்றின. கடல் அலையின் ஓசையும், கடல் காற்றின் ஓசையும் தவிர, எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் ஆழ்ந்த அமைதியில் இருந்தன அனைத்து பங்களாக்களும்.

கடற்கரையை ஒட்டிய  பங்களாக்களில் சற்று ஒதுக்குப்புறமாக இருந்தது  அந்தப்  பெரிய பங்களா. அந்த பங்களாவைப் பார்க்கும் போதே அசாதாரண அமைதி தெரிந்தது.

வாசலில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து கவலையுடன் ஆகாயத்தைப் பார்த்தபடி ஆடிக் கொண்டிருந்தார் ராஜரத்தினம். அவர் மனதில் ஏதோ குழப்பம், கவலை இருந்ததை அவர் முகமே காட்டிக்கொடுத்தது.

அதே குழப்பத்துடன் அலைபேசியை எடுத்து ஒரு நம்பருக்கு அழைத்து காதில் வைத்தார். எதிர்முனையில் பதில் கிடைத்ததும், தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார்.

“நான் ராஜரத்தினம் பேசறேன்.”

“………”

“எப்படி நல்லா இருக்க முடியும்? உசுரோட இருக்கேன்னுதான் சொல்ல முடியும்.”

“………”

“இப்படிப் பேசாம வேற எப்படிப் பேசறது? செய்தி எல்லாம் கேக்கறீங்களா,  இல்லையா? இந்த வாரத்துல நடந்த அசம்பாவிதங்கள் பத்தித் தெரியுமா?”

“……..”

“நான் மட்டும்தான் உயிரோட இருக்கேன். மத்த மூணு பேரும் உயிரோட இல்லை.”

“……..”

“எதேச்சையா நடந்ததுன்னா எப்படி வரிசையா  ஒரு வாரத்துல மூணு  பேரும் இப்படி அகாலமா உயிரை விடுவாங்க? முதல்ல அமிர்தவளவன், அப்புறம் அம்பலவாணன், இப்போ மணிவேல். இன்னும் பாக்கி இருக்கிறது நான் மட்டும்தான்.”

“……..”

“நாங்க  பண்ண பாவமா? ஏன் சொல்ல மாட்டீங்க. உங்க குடும்ப மானத்தைக் காப்பாத்தத்தானே நாங்க அந்த பாவத்தை செஞ்சோம். இப்போ உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி பேசறீங்க?”

“………”

“உண்மைதான். இவ்வளவு வருஷம் எந்தச் சிக்கலும் இல்லாம வாழ்ந்தோம். ஆனா இப்போ இந்த மூணு பேருக்கும்  நடந்ததைப் பார்த்தா,  எனக்கு எந்த நேரத்துல என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு.  உசுரைக் கைல புடிச்சிகிட்டு ஈசிஆர்ல இருக்கற பங்களால தனியா இருக்கேன். பங்களாவை விட்டு வெளியே வராம, உள்ளேயே அடைஞ்சு  கிடக்கேன்.”

“………”

“அதெப்படி நீங்க அப்படிச் சொல்லுவீங்க? முப்பது வருஷம் முன்னாடி பண்ணாலும் தப்பு தப்புதானே. முப்பது வருஷமா ஏன் எதுவுமே நடக்கலேன்னு கேட்டா அதுக்கு என்கிட்ட பதில் இல்ல. ஆனா இப்ப நடக்கறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க.”

“…….”

“எதேச்சையா நடந்த விபத்துன்னே வச்சுப்போம். அப்போ ஏன் மூணு பேரு சாவுலயும் ஒரு கருப்பு நாய் இருக்கு? அந்தக் கருப்பு நாய் எங்கிருந்து வந்துச்சு? ஏன் அது யார்கிட்டயும் சிக்கல? இதுக்கு விளக்கம் சொல்ல முடியுமா உங்களால? இது  உங்க பொண்ணோட வேலையாக்கூட இருக்கலாமே.”

“……”

“அவ செத்துட்டான்னு நீங்கதான் சொல்றீங்க.”

“……..”

“அவ  சாகலேன்னு நான் எதுக்கு உங்களுக்கு நிரூபிக்கணும்? உங்க பொண்ணு மேல உங்களுக்கு அக்கறை இருந்தா,  முப்பது வருஷத்துல நீங்க தேடிக் கண்டுபிடிச்சிருக்கணும். நாங்க ரெண்டு பேரையும் கொல்லத்தான் மகாபலிபுரம் போனோம். அந்தப் பையனைப் புடிச்சு உயிரோட புதைச்சுட்டோம். ஆனா உங்க மக எங்க கண்ணுல மண்ணைத் தூவிட்டு தப்பிச்சுப் போய்ட்டா. அதுக்கப்புறம் ஒரு இடம் விடாம மகாபலிபுரம் முழுக்க தேடினோம். அவமட்டும் எங்க கைல சிக்கல. நீங்களும் உங்க ஜாதிப் பெருமைதான் முக்கியம்னு உங்க மகளைத் தேட முயற்சி எடுக்கவேயில்ல. உங்க மகளும் உங்களைத் தேடி வரல. நாங்களும் புதுசா கிடைச்ச வசதியான வாழ்க்கைல மூழ்கி, பழசை மறந்து வாழ்ந்துட்டோம். இப்போ உசுரைக் கைல புடிச்சுட்டு பயத்துல வாழறேன். உங்களுக்கு எல்லாமே பணமும், ஜாதியும்தான்.”

“……..”

“சரி, ஃபோனை  வைங்க. இவ்வளவு வயசான காலத்துலயும் உங்க குணம் மட்டும்  மாறவேயில்ல.  இப்படி  வெறி பிடிச்ச மிருகமா இருந்து  என்ன சாதிச்சீங்க? உங்களுக்குப்  போய்  ஃபோன் பண்ணினேனே, என்னைய சொல்லணும்.”

ஆத்திரத்துடன்  ஃபோனை  வைத்தார்  ராஜரத்தினம்.  மனதில் கோபம், பயம் அதிகரித்தது.

‘இன்னும் ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு எங்கேயும் போகாம இங்கேயே இருக்கணும். துணைக்கு வாசல்ல நம்ம டைகர் இருக்கான். அவனை மீறி யாரும் உள்ளே வர முடியாது. தன் கையே தனக்கு உதவி. இந்த ஆளை எல்லாம் நம்பி ஃபோன் பண்ணது என் தப்புதான்.’

தனக்குள்ளாகவே புலம்பிக்கொண்டு மாடி ஏறிப் போனார் ராஜரத்தினம். சூடாக ஒரு கப் காஃபி குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். பால்கனியில் வந்து நின்று டைகரைப் பார்த்தார்.

பச்சைப் பசேலென்று நன்றாகப்  பராமரிக்கப்பட்டிருந்த  புல்வெளியில், ஆங்காங்கே இருந்த பூச்செடிகளில் மலர்ந்திருந்த மலர்கள் காற்றில் பறந்து புல்வெளியில் உட்கார்ந்து அழகு சேர்த்தன.

புல்வெளியின் ஒரு ஓரத்தில், கன்றுக்குட்டியின் உயரத்திற்கு நெடுநெடுவென்று வளர்ந்திருந்த அந்த வெள்ளைநிற நாய் அமைதியாகப் படுத்துக் கிடந்தது. ராஜரத்தினம் அங்கிருந்தே கூப்பிட்டுப் பார்த்தார்.

“டேய் செல்லம், டைகர், கமான். இங்க பாரு.”

டைகரிடம் அசைவில்லை. இரண்டு மூன்று முறை ராஜரத்தினம் தன் நாயை வழக்கமாக அவர்  செல்லமாகக் கூப்பிடும் எல்லாம் முறைகளிலும் கூப்பிட்டுப் பார்த்தார். அசைவற்றுக் கிடந்தது டைகர். சுருக்கென்று மனதிற்குள் ஒரு பயப்பந்து உருண்டு வந்து தொண்டையை அடைப்பது போலிருந்தது அவருக்கு.

‘டைகருக்கு என்னாயிருக்கும்? ஒரு நாளும் இப்படி இருந்ததில்லையே. நான் அவனைப் பார்க்கறது தெரிஞ்சாலே பரபரப்பான். நான் இவ்ளோ தடவை கூப்பிட்டும் அசையாம இருக்கான். ஏதாவது உடம்பு முடியலையோ? வாய்ப்பில்லையே. கொஞ்ச நேரம் முன்னாடிகூட நல்லாத்தானே இருந்தான்.’

அவருக்குள் உதித்த கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் குழம்பினார் ராஜரத்தினம். இனம்புரியாத இம்சை இதயத்தை என்னவோ செய்தது. அவசர உதவிக்கென்று ஒரு வேலையாளைக்கூட வைத்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் எழுந்தது.

ராஜரத்தினத்திற்கு  இருந்த பயம் காரணமாக எந்த வேலையாட்களையும் அவர் நம்பத் தயாராக இல்லை. எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் தனக்கு மிகவும விசுவாசமாக இருக்கும் டைகரின் துணை போதுமென நினைத்திருந்தார். இப்போது அந்த டைகருக்கே ஆபத்து என்றதும் கதிகலங்கிப் போனார் ராஜரத்தினம்.

மனதை அழுத்தும் பாரத்துடன் கலங்கிப் போயிருந்த ராஜரத்தினம் அப்போதுதான் கவனித்தார். அவருக்கு வெகு அருகில் ஏதோ சத்தம் கேட்டது. தலையை முழுவதும் திருப்பாமல் அடிக்கண்ணால் தனக்குப் பின்னால் பார்த்தார். டைகர் போலவே கருகருவென்று ஒரு நாய் அவரையே பார்த்துக் கொண்டு பின்னால் நின்றிருந்தது.

சப்த நாடியும் ஒடுங்கிப் போனது ராஜரத்தினத்திற்கு. மீண்டும் டைகரைத் துணைக்குக் கூப்பிட்டார். அதன் உடலில் அசைவே இல்லை என்பது இப்போதுதான் அவருக்கு உறைத்தது. தனியாக சிக்கிக் கொண்டது புரிந்தது.

எங்கேயும் நகர முடியாதபடி வெகு அருகில் இருக்கும் அந்த நாயிடம் சிக்காமல் எப்படித் தப்பிப்பது? ஆபத்துக்கு உதவ செக்யூரிட்டியைக்கூட  துணைக்கு வைத்துக் கொள்ளவில்லை. அவனையும் நம்புவதற்கு மனமில்லை. அதனால் யாரும் வேண்டாம் என்று சொன்னது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று இப்போது மூளைக்கு உறைத்தது.

பால்கனியின் கம்பியோடு ஒட்டிக் கொண்டு, பயப் பார்வையில் அந்த நாயையே பார்த்துக் கொண்டிருந்தார் ராஜரத்தினம். கருகருவென  கருஞ்சிறுத்தை போல நின்றிருந்த அந்த நாயின் கண்களில் ஒரு அமானுஷ்யம் தெரிந்தது.

தன் கதை முடியப் போகிறது என்பது புரிந்தது ராஜரத்தினத்திற்கு. எப்படியாவது தப்பிக்க வழி கிடைக்காதா என்று மனம் பரபரத்தது.  தனக்கு ஃபோன் செய்த காவல்துறை அதிகாரி விரைவில் வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் அவர் கண்களைக் கலங்க வைத்தது.

அந்த கருப்பு நாய்  அசையாமல் ராஜரத்தினத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தது. ராஜரத்தினம் நகராமலேயே அவரது கால்கள் தரையில் இருந்து மேலே எழும்பின. அந்தரத்தில் மிதந்த ராஜரத்தினம் அப்படியே அந்த பால்கனியில் இருந்து ‘தட்’ என்ற சத்தத்துடன் கீழே கருங்கல் தரையில்  விழுந்து  நொறுங்கினார்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அப்பாவின் இறுதி மூச்சு! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்

    போதையேறிப் போச்சு, புத்தி மாறிப் போச்சு (சிறுகதை) – ஜெயலக்ஷ்மி