எல்லோரும் தீபாவளி பக்ஷணம், பட்டாசு, துணிமணிகள் வாங்குவது என மும்முரமா இருப்பீங்க. நம்ம வீட்டிலே இந்த வருஷம் தீபாவளி இல்லை. அதுக்குனு இனிப்புச் செய்யாமல் இருப்போமா என்ன?
இன்றைய விசேஷத்துக்காக நேத்திக்கு ஓர் இனிப்புச் செய்தேன். அது தென் மாவட்டங்களிலேயே குறிப்பாத் திருநெல்வேலிப் பக்கம் அதிகம் செய்வாங்க
அதுவும் தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வந்தால், இது நிச்சயம் இருக்கும். அப்புறம் அல்வா, தவலை வடை! இப்போ இந்த ஸ்வீட் எப்படிச் செய்யறதுனு பார்ப்போமா?
இதை முதல் முதலாச் செய்யறேன் என்பதால், சோதனை எலியாக யார் மாட்டிப்பாங்கனு கவலையா இருந்தது.
அப்புறமா இன்றைய விசேஷத்துக்கு என வைச்சுட்டதாலே, இன்னிக்குச் சாப்பிட வரவங்க சாப்பிட்டுப் பார்க்கட்டும்னு நாங்க தப்பிச்சுட்டோம். சேச்சே, நாங்க அப்புறமாச் சாப்பிடலாம்னு இருந்துட்டோம்.
நம்ம ரங்க்ஸுக்குத் தான் இதிலே ஏக சந்தோஷம்! அவர் இம்முறை சோதனை எலியாக இருப்பதிலிருந்து தப்பிச்சுட்டாரே!
இதோட பெயர் திரிபாகம். இதைப் பத்திக் கேள்விப்பட்டிருந்தாலும் செய்முறை எல்லாம் தெரியாது.
இப்போத் தான் முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்ததைப் பார்த்துட்டு, நானும் கூகிளார் தயவில் தேடிப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
தேவையான பொருட்கள்:-
- கடலை மாவு – இரண்டு கிண்ணம்
- நல்ல கொழுப்புச் சத்து உள்ள பால் – அரை லிட்டர்
- சர்க்கரை இரண்டு அல்லது மூன்று கிண்ணம்
- நெய் – ஒரு கிண்ணம்
- ஏலக்காய், பச்சைக் கற்பூரம் பொடித்தது – ஒரு டீஸ்பூன்
- பாதாம், முந்திரிப் பருப்புப் பொடித்தது – இரண்டு டேபிள் ஸ்பூன்
செய்முறை:-
- பாதாமை நீரில் ஊற வைத்துத் தோலுரித்துக் கொள்ளவும்
- 50 கிராம் பாதாம் எனில் 50 கிராம் முந்திரிப்பருப்பு, இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு நறநறவெனப் பொடிக்கவும்
- தட்டில் கடலை மாவு, ஏலக்காய்த் தூள் (Tip – சுமார் 30, 40 ஏலக்காய்களை அல்லது பத்து கிராம் ஏலக்காய்களைத் தோலுரித்துக் கொண்டு இரண்டு டீஸ்பூன் சர்க்கரையோடு சேர்த்துப் பொடித்து வைத்து விடுவேன். தேவையானப்போ உபயோகிக்கலாம்)
- குட்டி டப்பாவில் பச்சைக் கற்பூரம். மற்றத் தேவையான பொருட்கள், முன்னால் இருப்பது அரை லிட்டர் பால், பக்கத்தில் நெய், பின்னால் கவரில் சர்க்கரை, பக்கத்தில் முந்திரி, பாதாம் பொடித்தது!
- அடுப்பில் கடாயை வைத்துக் கடலைமாவை அதில் போட்டு நன்றாக மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அரை லிட்டர் பாலை அதில் சேர்க்கவும்
- பால் சேர்த்துக் கிளறும் போது, மேலே காணும்படி பேஸ்ட் மாதிரி வரணும். நன்கு கிளறிக் கொடுக்கவும். கட்டி தட்டக் கூடாது!
- பின்னர் சர்க்கரை இரண்டு அல்லது மூன்று கிண்ணம் அவரவர் இனிப்புச் சுவைக்கு ஏற்றாற் போல் சேர்க்கவும்.
- சர்க்கரை சேர்த்ததும் கலவை நீர் விட்டுக் கொண்டு கீழ்க்கண்டபடி வரும்
- இப்போது இதில் நெய் சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். கட்டிகள் இருந்தால் உடைத்து விடவும்.
- கிளறிக் கொண்டே இருக்கையில் உள்ளே நாலாபக்கமும் நிறம் மாறிப் பொன் நிறத்தில் பூத்துக் கொண்டு பொங்கி வர ஆரம்பிக்கும்.
(அந்த நிலையில் படம் எடுக்க முடியவில்லை. ஏனெனில் படம் எடுத்தால் கிளற முடியாது! ஒரு கையால் கிளறிக் கொண்டே படம் எடுப்பது சிரமம்)
- ஆகவே அந்தச் சமயம் பொடித்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம் கலவையைக் கொட்டிக் கிளறிவிட்டு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து ஒரு கிளறு கிளறிக் கீழே இறக்கித் தாம்பாளத்தில் கொட்டி விட்டேன்
- இது பாதாம் அல்வா பதத்துக்கு அல்லது திரட்டுப் பால் பதத்துக்கு இருக்க வேண்டும். முந்திரி, பாதாமைச் சேர்த்த பின்னர், அதிகம் கிளற வேண்டாம்
- இது நன்கு ஆறியதும் பட்டர் பேப்பர் என்னும் வெண்ணெய் பேப்பரில் உருட்டி வைத்துத் தட்டையாக ஆக்கி நாலாபக்கமும் மூட வேண்டும்.
- விநியோகம் மற்றவர்களுக்குக் கொடுக்க எல்லாவற்றுக்கும் அப்படித் தான் வைச்சுப்பாங்க! கீழே அடுப்பிலிருந்து எடுத்துக் கொட்டியதன் படம்
- இது தான் திரிபாகம் என்பது! இது கடலைமாவு சேர்ப்பதால் மைசூர்ப்பாகு மாதிரியும், பால் சேர்ப்பதால் திரட்டுப் பால் மாதிரியும், முந்திரி, பாதாம் சேர்ப்பதால் காஜு கத்லி மாதிரியும் இருப்பதால் இதுக்கு அந்தப் பெயர்னு நினைக்கிறேன்
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
சுவையாக இருந்தது மாமி..ஒருமுறை நானும் செய்து பார்த்திருக்கிறேன்..பக்குவம் சரியாக வரவில்லை..:)
நன்றிப்பா,மாமிக்கு சஹானா இணைய இதழ் பக்கம் open ஆக மாட்டேங்குது
இன்னிக்குத் தான் அன்னபூரணியைப் பார்ப்பதற்காகத் திறந்திருக்கு. எல்லா பக்ஷணங்களும் சுவையாகவே வந்திருக்கின்றன. இன்னும் படிக்கணும். நாளைக்குனு வைச்சுண்டால் நாளைக்குத் திறக்குமோ, திறக்காதோ!
மறுபடி அன்னபூரணியை நெனச்சுட்டு வாங்க, திறந்திடு சீசே என வந்திடும் 😄