in ,

நிழல் நிஜமாகிறது (சிறுகதை) – தெனாலி ராமன்

எழுத்தாளர் தெனாலி ராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இளைஞன் இளஞ்சிவப்பு சுவரில் மாட்டப்பட்டிருந்த சீனக்கண்ணாடி முன்னால் நின்றான். தன் அழகை ரசிக்க வேண்டும் என்ற ஆசையோடு பார்த்தபோது, அந்தக் கண்ணாடி அவனுக்குக் காட்டியது ஆறு மாதக் குழந்தைப் பருவத்திலிருந்து அறுபது வயது தாத்தா பருவம் வரை முழுக் குடும்பக் கூட்டமே! அதிர்ச்சியோடு சிரிப்பும் கலந்த சிந்தனைகள் அவனுள் ஓடின.  

மனிதர்கள் கண்ணாடி முன்னால் நிற்பது வெளிப்புற அழுக்கைத் துடைக்கத்தான்; ஆனால் இந்தக் கண்ணாடி முன்னால் நிற்பவனின் பரம்பரையையே பிரதிபலிக்கிறது. ஆன்மீகம் என்பது காவி கட்டுவதோ, காடுகளுக்குச் செல்வதோ அல்ல; அலுவலகத்திற்குப் புறப்படும் அவசரத்தில் கண்ணாடி முன்னால் நின்றால், தாத்தா, அப்பா, பேரன் எல்லோரும் தலையைச் சீவிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “நான்தானா இவர்களோ, இல்லை இவர்கள் தானா நானோ?” என்று குழம்பி, ஆசைகளைத் துறந்து தியானத்தில் அமர்வதே உண்மையான ஆன்மீகம் என்று அவன் உணர்ந்தான்.  

அமைதியான சிந்தனை திடீரென அரசியலாக மாறியது. சீனக் கண்ணாடி போலியான பிம்பங்களை மட்டுமே காட்டுகிறது; தேர்தலில் அரசியல்வாதிகள் தரும் வாக்குறுதிகளும் அதுபோல. தேர்தல் காலத்தில் ஏழ்மை, வறுமை எல்லாம் பிரதிபலித்து, “தங்கக் காசு தருவோம், சிங்கப்பூராக மாற்றுவோம்” என்று வாக்குறுதி அளிப்பவர்கள், வெற்றி பெற்ற மறுநாளே அந்த அறிக்கையை உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல மிதித்துவிடுகிறார்கள். மேடைகளில் முழங்கும் வெற்று முழக்கங்கள் அவனுக்குச் சிரிப்பைத் தந்தன.  

மக்கள் பிரதிநிதிகள் நிஜக் கண்ணாடியாக இருக்க வேண்டும்; ஏமாற்றும் சீனக் கண்ணாடியாக அல்ல. இதை உணர்ந்த அவன் பேனா, ஒரு கவிதையை எழுதியது:  
*“காலத்தின் கரங்கள் என் கன்னத்தில் வரையப் போகும் சுருக்கங்கள் முதுமையின் கோடுகள் அல்ல;   நான் கடந்து செல்லப் போகும் கண்ணீரின் பாதச்சுவடுகள்!  
சீனக் கண்ணாடிக்குத் தெரியாது என் புன்னகைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் சிதைந்த ரகசியங்கள்!”*  

அதனைத் தொடர்ந்து, இன்றைய தலைமுறைக்குத் தகுந்த புதுமொழியையும் அவன் உருவாக்கினான்: வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பில்டர்களால் அழகாகத் தோன்றும் முகம் நிலையற்றது; மனசாட்சி என்னும் கண்ணாடியில் தெரியும் பிம்பமே நிலையானது. முகமூடிகளை கழற்றி வைக்கும் தருணத்தில் தான் மனிதர்கள் தங்கள் சுயரூபத்தை உணர்கிறார்கள்.  

குடும்பத்தில் நகைச்சுவை எப்போதும் குறையவில்லை. ஒருநாள் அவனது தந்தை ஆன்லைனில் தலைமுடி வளரும் என்று விளம்பரப்படுத்தப்பட்ட சீனத் தைலத்தை வாங்கி வழுக்கைத் தலையில் தேய்த்தார். தலைமுடி வளர்ந்ததோ இல்லையோ, அந்தத் தைலத்தின் வீரியத்தில் மீசையும் புருவமும் உதிர்ந்து, முகம் முற்றிலும் வேறொரு மனிதரைப் போல மாறியது. இதைப் பார்த்த தாய் சிரித்தபடி,   “ஏங்க! சீனக் கண்ணாடி வாங்கி நம்ம பரம்பரையையே ஒரே நேரத்தில் காட்டியது போதாதுன்னு, இப்போ சீனத் தைலத்தைத் தேய்த்து உங்க மூஞ்சியையே மாத்திட்டீங்களா? இனிமே கண்ணாடி முன்னாடி நின்னா நீங்க யாருன்னே தெரியாது; முதல்ல மருத்துவரைப் பாருங்க!” என்று நக்கலாகக் கூறினாள்.  

அவன் சிரித்துக்கொண்டே கண்ணாடியை விட்டு நகர்ந்தான். ஆறு மாதக் குழந்தை முதல் அறுபது வயது முதியவர் வரை காட்டும் அந்தக் கண்ணாடி, அவனுக்கு வெறும் முகத்தை மட்டுமல்ல; வாழ்க்கையின் மொத்த தத்துவத்தையும் புரிய வைத்திருந்தது.

எழுத்தாளர் தெனாலி ராமன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மனைவியின் அறிவுரை (சிறுகதை) – மகாராஜா பரமேஸ்வரி

    அஷ்டாவதானி அவ்வை சண்முகி (சிறுகதை) – தெனாலி ராமன்