குக்கூ குக்கூ என்று கடிகாரத்தின் வாசல்கதவு திறந்து வெளியில் வந்த குருவி கூவியது. அதன் வலப் புறமிருந்த முரசத்தில் { அரசகட்டளையை பெரிய முரசறைந்து சொல்வது வழக்கம்) சேவகன் தோற்றத்துச் சிறு பொம்மை கையிலிருந்த கோலால் கொட்டி முழக்கியது.
இடப்புறமிருந்த சக்கரம் சுழல எழுந்த இனிய இசைக்கு நடுவிலிருந்த சிறிய வட்டமேடையில் சிண்ட்ரெல்லா போலொரு அழகு பொம்மை நடனமாடியது,அதன்பின் கடிகாரத்தின் பெண்டுலம் ஊஞ்சல்போல் அசைந்து கணீரென ஐந்து முறை ஒலித்தது. இந்த கடிகாரம் மின் இணைப்பு ஏதுமின்றி தொழில் நுட்பத்தால் இயங்குவது, சுவிட்சர்லாந்தின் சிறப்புகளில் ஒன்றாக அறியப்படுவது,
மகள் லலிதா வாங்கிக் கொண்டு வந்தது. இவை எதுவும் கேளாமல், இரவு முழுவதும் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்த கோபாலன் அப்போதுதான் தூங்கியிருந்தார். ஆனால் அடுத்த அரைமணிநேரத்தில்,தெருவில் சைக்கிளில் செல்லும் பால்காரர்கள் அடித்துக் கொண்டு சென்ற மணியும், கடற்கரைச் சாலை என்பதால் நடைப்பயிற்சிக்குச் செல்வோரும், அருகிலிருந்த பெரிய மைதானத்தில் பல்வேறு விளையாட்டுக்களுக்கானப் பயிற்சிகளுக்குச் செல்வோரும் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனங்களின் ஓசையும் அவரைத் தூங்க விடாமல் எழுப்பி விட்டன. உறக்கம் கலைந்தாலும் அசதியாக இருந்தது.
இரண்டடுக்கு மாளிகை அது. முன்புறத்தில் நடைபாதையோடு அழகான புல்வெளி, அதன் இருபுறமும், மல்லிகைக் கொடி,பவழமல்லி ,செம்பருத்தி ரோஜா, சாமந்தி, நித்யகல்யாணி, கொன்றை, நந்தியாவட்டை எனப் பூ வகைகள், அதனையடுத்து அம்மாவும் ,கோகிலமும் வீடு கட்டிக் குடி வந்ததும் ஆசைஆசையாக வாங்கி வைத்த பங்கனபள்ளி,நீலம்,ஒட்டு என மாமரங்கள் , தென்னை, பாக்கு பலா, தேக்கு, பூவரசன்,முருங்கை, சப்போட்டா மரங்கள் நின்றிருந்தன.
வீட்டின் பக்கவாட்டில் செவ்வாழை,கற்பூரவள்ளி,பூவன் வாழைமரங்கள் இருந்தன.ஆண்டுகள் இருபத்தேழு ஆனாலும் இன்னும் பயன் தருகின்றன.ஆனால் ஆற்றில் துவைத்த வெள்ளை வேட்டியைத் தரையில் உலர்த்தியது போல் வெளுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் இந்த மரங்கள் குற்றவாளிகளைப் போல் நிற்கின்றன?’ என்று நினைத்தவர் சுவரில் பெரிதாக மாட்டியிருந்த திருமணப் படத்தைப் பார்த்தார்.
என்ன அழகு, கோகிலா, குழந்தைத்தனம் மாறாத புன்சிரிப்பு, பக்கத்தில் அவள் தோளை அணைத்தபடி நிற்கும் தன்முகத்தில் கள்ளங்கபடமில்லாத ஒரு பெருமிதம்.
தினம் விழித்ததும் இந்தப் படத்தைத்தான் பார்ப்பார்.இன்று அளவிற்கு அதிகமாகவே மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது
அருகில் காவல்துறை உயர் அதிகாரியாக (டி.எஸ்.பி.) கம்பீரமாகச் சீருடையில் இருக்கும் படம். போட்டித் தேர்வு எழுதி காவல் துறை உயர் அதிகாரியாக நேரடியாகப் பணி நியமனம் பெற்றவர்
குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிப்பதில் ஒருநாளும் சோர்ந்து போகாத குணம் மக்களிடம் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
பொன்னும் பொருளும் கொடுத்தாலும் குற்றவாளிகளைத் தப்பிக்க விடமாட்டார். இல்லை ,தன் உயிருக்கு ஆபத்து என்றோ குடும்பத்திற்கு ஆபத்து என்றோ எவரும் அவரை பயமுறுத்தி விட முடியாது.கடமையை உயிராக மதிப்பவர் என்று எல்லோரின் மதிப்பையும் பெற்றவர்..
இந்த ஏழுஆண்டுகளில் எப்படி இப்படி மாறிப்போனோம்? நினைவுகள் நிம்மதி இழந்து அலைக்கழித்தனபடுக்கையில் எழுந்து உட்கார்ந்தவர் அருகிலிருந்த மேசையிலிருந்த கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு கட்டிலின் மீது சாய்த்து வைத்திருந்த செயற்கைக்காலை எடுத்து வலது காலில் பொருத்திக் கொண்டார்.
யாராவது தோள் தந்தால் பிடித்துக்கொண்டு நடக்கலாம் என்று தோன்றியது.ஆனால் என்ன செய்வது? அதற்கு வாய்ப்பில்லை. தோட்டத்துக் கதவைத் திறந்தார். சில்லென்ற குளிர்காற்று வீசியது புழுங்கிய மனதுக்கு இதமாக இருந்தது.
வெள்ளி முளைத்த வேளையில் வேகமாக வெள்ளை மேகங்களுக்கு நடுவில் புகுந்து நீலவானைத் தொட்டு எதிர்வரும் சின்னசின்ன மேகங்களையும் சந்தித்து அளவளாவி நகரும் முழுநிலா, ‘என்னைப்பார் துன்பம் வந்தவழி பார்த்து ஓடும்’ என்று சோல்லிச் சிரித்தது ஆனால் இந்த அழகை இரசிக்கும் மனநிலையில் அவர் இல்லை. மேலே மாடியில் கோகிலா எழுந்துவிட்டாள், இரவு அதிக நேரம் புத்தகங்களைப் படித்துவிட்டு நேரம் கழித்து உறங்கினாலும் அதிகாலை ஐந்தரை மணிக்கே எழுந்துவிடுவாள். வீட்டின் பின்புறமும் ஒரு படிக்கட்டு உள்ளது. அதன்வழியாக இறங்கி பூக்களைப் பறித்துக்கொண்டு வருவாள்.
நிதானமாக அவற்றைத் தொடுத்து படங்களுக்குப் போட்டு, இருபுறமும் குத்து விளக்குகளும் நடுவில் காமாட்சி அம்மன் விளக்கும் ஏற்றி வைப்பாள் ,சிறிய மல்லிகை மொட்டுபோல் அவை சுடர்தர ஊதுபத்தி மணம் வீட்டை தெய்வீகமாக்கும். அது கோபாலனின் நாசியைத் தழுவும் இன்பத்திற்கு நிகர் எதுவும் இல்லை.
அன்னம்மா ஏழு மணிக்குதான் வருவாள். கோபாலனுக்கு சமையல் இவர்தான் செய்கிறார். இன்று நேற்று வந்தவள் இல்லை, வயது எழுபது ஆகிறது. ஆனால் உழைத்துப் பழகிய உடம்பு. தள்ளாட்டம் இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு அக்கறையோடு கவனிப்பாள். இந்த வகையில் ஏதோ துளி கருணை இறைவன் காட்டியிருக்கிறான் என்று நினைத்துக் கொள்வார் இவர்.
தோட்டவேலைக்கு முனியனும்,, வீட்டைப் பெருக்கிக் கழுவி துடைப்பதற்கு மஞ்சம்மாவும் வருகிறார்கள். மஞ்சம்மாவிற்கு அறுபதை எட்டிக்கொண்டிருக்கும் வயது,. இவர்களும் பத்து வருடங்களாக இங்கு வேலை செய்பவர்கள்தான்.
அன்னம்மாவிற்கு. இரண்டு பெண்கள்,ஒரு மகன், எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. பெண்கள் சென்னையில் இருக்கிறார்கள். மூத்தவள் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகவும், இளையவள் அரசுத்துறை ஒன்றில் எழுத்தராகவும் இருக்கிறாள்., மகன் ஜபல்பூரில் இராணுவத்தில் இருக்கிறான்.
மூவரும் தாயைத் தன்னோடு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால் அன்னம்மா பிள்ளைகளிடம், நீங்கள் படித்து வேலையில் இருப்பதற்கு காரணம் டி.எஸ்.பி ஐயாதான்,என் மூச்சு உள்ளவரை, கைகாலில் தெம்பு உள்ளவரை அந்த குடும்பத்துக்கு நான் முடிஞ்சதச் செய்யணும்’ என்று சொல்லி விட்டாள்.
பிள்ளைகள் தாயின் முடிவில் நன்றியுணர்வு இருப்பதைப் புரிந்து கொண்டார்கள். அன்னம்மா.இவருக்கு மட்டும் உதவுவதில்லை, கோகிலத்தின் பெறாத தாய் அவள்.
அவளுக்கு காய்கறி நறுக்கித் தருவது, பூஜையறைப் பாத்திரங்களை விளக்குவது, மதிய உணவை கேரியரில் எடுத்து வைப்பது, போட்டது போட்டபடி அவள் கல்லூரிக்குப் புறப்பட்ட பின்னர் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்வது, மஞ்சம்மா வீட்டைப் பெருக்கித் துடைத்த பின்னர வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துச் செல்வது. இன்னொரு சாவி கோகிலத்திடம் உண்டு.
தள்ளாடியபடி நடந்து சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தார். ஒரு காபி போட்டுத்தரக்கூட எவரும் இல்லை? தானே சென்று அடுத்த அறையிலிருந்த பிரிட்ஜிலிருந்து பாலை ஒரு பீங்கான் கோப்பையில் ஊற்றி மைக்ரோ ஓவனில் வைத்துச் சூடு செய்து, சர்க்கரை நோயிருப்பதால் அதில் காபித் தூளை மட்டும் கலந்து கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தார். காபி கசந்தது, அவரது வாழ்க்கையைப் போல.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings