in

தவறுகள் (சிறுகதை) – ✍ க.வெள்ளிங்கிரி, கோயம்புத்தூர்

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“வினோத்… வினோத்…” ஹோட்டலுக்குள் சாப்பிட நுழைந்த போது யாரோ தன்னை கூப்பிட்டது போல் இருந்ததால், இருபுறமும் மாறி மாறிப் பார்த்தான் வினோத்.

“வினோத் இங்கடா…” சத்தம் வந்த திசையை சரியாக கண்டுபிடித்து அழைத்தவரை உற்றுப் பார்த்தான். இரண்டு நொடியில் அது தன் பள்ளி நண்பன் விமல் என்பதை கண்டுகொண்டு அவனிடம் வந்தான்.

“பார்த்து நாலஞ்சு வருஷமாச்சு, எப்படிடா இருக்க?”

“நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்கே?”

“நல்லா இருக்கேன்டா, உட்காரு”

விமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சேரின் எதிரில் அமர்ந்து கொண்டான் வினோத்.

விமல் சர்வரை அழைத்து விட்டு, “என்னடா சாப்பிட்டறே?” என்று வினோத்தை பார்த்து கேட்டான்.

“மீல்ஸ்டா”

“ஒரு மீல்ஸ், ரெண்டு காபி” சர்வரிடம் சொன்னான். சர்வர் தலையாட்டிவிட்டு உள்ளே சென்றார்.

“வினோத்… என்னடா டவுனுக்கு வந்து இருக்கே?”

“ஆமாண்டா… என்னோட பையன் இங்க கான்வென்ட்ல சேர்க்க வந்தேன். மார்னிங்கே வந்து இப்பதான் வேலை முடிஞ்சுது. வீட்டுக்கு போய் சேர இன்னும் லேட் ஆயிடும், அதனால லஞ்ச்ஐ முடிச்சரலாம்னு இங்க சாப்பிட வந்தேன்”

“ஓ…! என்ன படிக்கிறான் உன் சன்?”

“சிக்ஸ்த்டா”

“ஏன் ஹாஸ்டல்ல சேர்த்து விடறே… உன் ஊர்ல நல்ல ஸ்கூல் இல்லையா?”

“இருக்குடா, ஆனா இவன கவனிக்கிறது மிகவும் சிரமமா இருக்கு. குறும்பு அதிகம், வீட்டில் வைத்து சமாளிக்க முடியல. அதான் ஹாஸ்டல்ல இருந்தா கட்டுப்பாடா இருப்பான்னு சேர்த்துட்டேன். நீ ஏதாவது வேலையா இங்க வந்தாயா விமல்?”

“என் அப்பா, அம்மா என்னோடு தான் இவ்வளவு நாள் இருந்தாங்க. வீட்ல கொஞ்சம் பிரச்சினை ஆயிடுச்சு. என் மனைவிக்கும் என் அப்பா அம்மாவுக்கும் ஒத்து வரல. பழைய ஆளுங்க என் பேரன்ட்ஸ். அவங்க நடந்துக்கிறது என் மனைவிக்கு பிடிக்கல, என்னோட மனைவியோட நாகரிகம் இவங்களுக்கு பிடிக்கல. அதான் இங்க ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல நல்ல ஒரு முதியோர் இல்லத்துல சேர்த்துட்டேன். அடிக்கடி வந்து பார்க்கணும், மாதா மாதம் கரெக்டா பணம் கட்டணும்”  சற்று இறுக்கமான முகத்துடன் சொன்னான் விமல்.

சர்வர் மீல்ஸையும், இரண்டு காபியையும் டேபிள் மீது வைத்து சென்றான்.

“ஏன் முதியோர் இல்லத்தில சேர்க்கணும்? பக்கத்துல ஏதாவது வீடு எடுத்துக் கொடுத்து பார்த்துக்கலாமில்ல” சாப்பாட்டை பிசைந்தவாறே கேட்டான் வினோத்.

“அந்த முயற்சியும் செய்துட்டேன், அப்பவும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கடைசியில இந்த முடிவு எடுத்துட்டேன்” 

“என்ன இருந்தாலும் இவ்வளவு தூரம் தள்ளி நீ அவர்களை தனியாக விடுவது சரி இல்லடா”

“மனைவியை பேரன்ட்ஸ் கூட சமாளிக்கிறதும் ரொம்ப சிரமம்டா. ஏன்… இப்ப நீயே என்ன செய்திருக்க? உன்னோட மகனோட குறும்பை தாங்க முடியாமல் ஹாஸ்டலில் சேர்த்துட்டு வந்திருக்கே…”

விமலின் வார்த்தைகள் சுருக்கென்றது வினோத்துக்கு.

“ஒழுக்கத்துக்காகவும், படிப்புக்காகவும் தாண்டா நான் ஹாஸ்டல்ல விட்டிருக்கேன். இதுல என்னடா தவறு?” 

“நல்லா வளர்ந்த பிறகு கல்லூரிப் படிப்புக்காக ஹாஸ்டலில்  விடுவது தவறில்லடா ஆனால் சின்ன வயசுல இந்த மாதிரி செய்யுறது சரியில்லடா. அன்பில்லாத கட்டுப்பாடு நல்வழிப்படுத்தாது. நான் செய்தது தவறுதான்… எனக்குத் தெரியும், ஆனால் நீ செய்வது மகா தவறு”

அமைதியானான் வினோத். சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தார்கள். வினோத் தன் செல்போனை எடுத்து டயல் செய்து காதில் வைத்தான். 

“ஹலோ… நான் யுவராஜ் அப்பா வினோத் பேசுறேன். அவனோட அட்மிஷனை கேன்சல் செய்துடுங்க. எங்க ஊர்ல இருக்கிற ஸ்கூல்ல அவனை நான் சேர்த்துக்கறேன்”

போனை கட் செய்துவிட்டு விமலிடம் விடைபெற்று, கான்வென்ட்டை நோக்கி பயணித்தான் வினோத்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 3) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    பெருமிதம் (சிறுகதை) – ✍ பு. பிரேமலதா, சென்னை.