இது ஒரு பாரம்பரிய சிற்றுண்டி. என் மாமியாரிடமிருந்து தான் இந்த ரெசிபியை கற்றுக் கொண்டேன்.
அந்த காலத்தில் வெண்கலத் தவலையில்(பானை) இதை செய்வார்களாம். அதனால் இந்த பெயர் வந்திருக்கிறது.
ஆனால் நாம் இன்று தோசைக்கல்லில் தான் செய்யப் போகிறோம். இந்த தவல அடை கட்லட்டின் முன்னோடி என்று சொல்லலாம். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தமான இந்தச் சிற்றுண்டியின் செய்முறையை பார்க்கலாமா?
தேவையானப் பொருட்கள்:-
- பச்சரிசி – 1 கப் (200 கி)
- துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் பல்லு பல்லாக கீறியது – தேவையான அளவு
தாளிக்க:-
- எண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – ¼ டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
- வரமிளகாய் – 3 (அ) 4
- கறிவேப்பிலை – சிறிதளவு
#ad
ஆதி வெங்கட் எழுதிய புத்தகங்கள்👇
செய்முறை:-
- அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்சியில் போட்டு ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.
- கடாயில்எண்ணெய் காய வைத்து, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களான கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கிள்ளிய வரமிளகாய் துண்டங்கள், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்
- அனைத்தும் நன்கு வறுபட்டதும்,2½ தம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
- பின், தேங்காய்த் துண்டங்களையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்
- தண்ணீர் கொதித்ததும், உடைத்து வைத்துள்ள அரிசிக் கலவையை போட்டு கிளறவும். உதிர் உதிராக வரும் அளவுக்கு கிளற வேண்டாம். தண்ணீர் சுண்டி கொஞ்சம் கெட்டியாக வந்தால் நிறுத்தி விடலாம்.
- கை பொறுக்கும் சூட்டில் ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
- தோசைக்கல்லை காய வைத்து, உருண்டைகளை உள்ளங்கை அளவு அடைகளாக கைகளில் வைத்தோ, வாழையிலை அல்லதுபிளாஸ்டிக் ஷீட் இவற்றில் வைத்தோ தட்டிக் கொள்ளவும். மெலிதாக தட்டவேண்டாம். நான் எப்போதும் கைகளில் வைத்தே தட்டுவது தான் வழக்கம்.
- ஒரு சமயத்தில் ஏழு அடைகள் வரை தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு மூடவும்.
- நிதானமான தீயிலேயே இருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் கழித்து, கவனமாக அடைகளை திருப்பிப் போட்டு, மீண்டும் எண்ணெய் விட்டு மூடி வைக்கவும்
- இருபுறமும் முறுவலாக வந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.
- இதற்கு சட்னி, சாம்பார் போன்றவை எல்லாம் வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்களுக்கு விருப்பமிருப்பின் அவற்றுடனோ அல்லது இட்லி மிளகாய்ப் பொடியுடனோ சாப்பிடலாம்.
சுவையான தவல அடை, ருசிக்கத் தயார்
இதை மாலை நேர சிற்றுண்டியாகக் கூட சாப்பிடலாம்.
செய்து பார்த்து அதன் சுவையை தெரிந்து கொள்ளுங்களேன்.
Gift your better-half, these Romance Novels for Valentines Day👇
Cook Books 👇
பகிர்வுக்கு அன்பும் நன்றியும்.
Most Welcome pa. Thank you infact 🙂
ஹப்பா! ஆதி !!! ..அப்படியே எங்கள் வீட்டில் செய்வது போல !!!!! இது வரை என்னடா இது நாம செய்வது போல யாரும் போடலையெ…தவலை அடை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி ரெசிப்பி சொல்றாங்களேன்னுபார்த்தப உங்க மாமியாரின் ரெசிப்பி …அப்படியெ நம் வீட்டில் செய்வது போல!!!
சூப்பர் ஆதி படமும் அப்படியே நம் வீட்டில் வருவது போலவே அதை பார்த்துதான் அட நாம செய்யறா மாதிரியே இருக்கேன்னு பார்க்க வந்தேன்…
நல்லா வந்திருக்கு ஆதி…யுட்யூப்ல போடலையா இன்னும்?
போடுங்க சீக்கிரம்
கீதா