in ,

சூரசம்ஹாரம்… (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 21)

நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாக  இயங்கிக் கொண்டிருந்தது. 

டெலிபோன் மணி அடிக்க, “சார் கண்ட்ரோல் ரூமிலிருந்து கூப்பிடுறாங்க, கவிதாலயா அபார்ட்மெண்டுக்கு பின்னால உள்ள  குளத்துல ஒரு ஆணோட பிணம் மிதக்குதாம்” எனவும், அடுத்த அரைமணி நேரத்தில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்  அங்கு  போய்ச்  சேர்ந்தார்

அதற்குள்ளேயே பாரன்சிக் டிபார்ட்மெண்ட் வந்துவிட, வழக்கமான பார்மலிடீஸ் முடிந்து, பாடியை போஸ்ட்மார்ட்டதிற்கு  அனுப்பும் வரை பிஸியாக இருந்தார்

உடனே பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர் 

“சார்… போன வாரம் ஈ.சி.ஆர் ரோட்டில் ஒரு ரிசார்ட் பக்கத்துல ஒரு ஆணோட பாடி கிடைச்சதே, அந்த கொலைக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கா?”

“அந்தக் கோணத்திலும் விசாரிப்போம். போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சாத் தான் மற்ற விபரங்கள் தெரியும். ப்ளீஸ் வெயிட்” என்று சொல்லி விட்டு ஜீப்பில் ஏறி பறந்தார் ராஜேஷ்

நைட் ஷிப்ட் முடிந்து, கீர்த்தனா வீட்டுக்குத் திரும்பும் போது,  விடியத் தொடங்கி, பரபரப்பாக இருந்தது அப்பார்ட்மெண்ட்

ஒரே அலுப்பாக இருந்தது. சாப்பாடு கூட வேண்டாம், போய் தூங்குனா தேவலை எனத் தோன்றியது. 

அவளைப் பார்த்து விட்டு பின்னாலேயே வந்த லெஷ்மி, “உங்க வீட்டு வேலைய முடிச்சுட்டு போயிடுறேன் அக்கா” என்று சொல்ல

‘சரி தான் லெஷ்மி வேலைய முடிச்சிட்டு போயிட்டா நிம்மதியா தூங்கலாம்’ என நினைத்தவளாய் கதவைத் திறந்தாள் கீர்த்தனா 

லக்ஷ்மி பெருக்க ஆரம்பிக்கும் போது, “அக்கா உங்களுக்கு தெரியுமா… நம்ம அபார்ட்மெண்டுக்கு பின்னாடி இருக்கற குளத்துல, ஒரு ஆம்பளையோட டெட்பாடி கிடைச்சிருக்கு. வயசு 40 இருக்கும், கழுத்தை அறுத்துக் கொன்னிருக்காங்க… எப்படித் தான் இப்படி கொடூரமாக கொலை பண்ண முடியுதோ? போலீஸ், பிரஸ்ஸுனு ஒரே பரபரப்பா இருந்தது ரொம்ப நேரம்” 

கீர்த்தனா கேட்டுக்கிட்டே காபியைக் கலந்து லெஷ்மிக்கும் கொடுத்து, தானும் குடித்து விட்டு, நூடுல்சை கிண்டி சாப்பிட்டாள்

பின் லெஷ்மியை அனுப்பி விட்டு, கதவை தாழிட்டு படுக்கையில் விழுந்தது தான் தெரியும், தூக்கம் … 

டுத்த போன் வர….  நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன்  மீண்டும் பரபரப்பானது. இந்த முறை, பாதி கன்ஸ்ட்ரக்ஷன் நடந்த ஒரு கட்டடத்தில் தண்ணீர் தொட்டியில் ஒரு ஆணின் பிணம் 

ராஜேஷுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், எல்லாமே அவருடைய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதாக இருந்தது.

‘இவை  ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா? இவர்களுக்குள் ஏதேனும் சம்பந்தம் உண்டா? எல்லோரும் ஒரே மாதிரியாக கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான மோடிவ் என்ன?’ என யோசித்தார் 

கான்ஸ்டபிள் முகுந்தன் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கொண்டுவந்து மேஜையில் வைத்தார்.  

“சார் அந்த முதல் கேஸ்ல இறந்தவன் பேரு தனபாலு. பொண்டாட்டியும் பிள்ளைகளும் திருச்சில இருக்காங்க. இவன் மட்டும் தான் இங்க சென்னைல இருந்திருக்கான்.

இவன் சொந்த ஊர் திருச்சி பக்கத்துல இருக்கற கிராமம், கந்துவட்டிக்கு பணம் கொடுக்கிறான்.செம வட்டி சார், இவன் கிட்ட நிறைய பேரு கடன் வாங்கியிருக்காங்க”  “ஓ…அப்ப அந்த கோணத்தில் விசாரிப்போம். அவன்கிட்ட கடன் வாங்கினவங்க லிஸ்ட் எனக்கு வேணும் முகுந்தன்“

“ஓகே சார், அப்புறம் போன மாச கடைசில செத்த அந்த ஈ.சிஆர் கேஸ் பேர்  ராகுல். R.G.S சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்’ங்கற ஐ.டி. கம்பெனியில் மேனேஜரா  இருக்காரு.ஃபேமிலியோட கேளம்பாக்கத்தில ஒரு அபார்ட்மெண்ட்ல இருக்காரு. தினசரி வேலை முடிச்சுட்டு, சரியா ஏழு மணிக்கு அவர் கார்ல கிளம்பிடுவாரு. அன்னைக்கும் அதே மாதிரி  கிளம்பினவரோட கார்,  சோழிங்கநல்லூர்கிட்ட  நின்னுகிட்டிருந்தது”

“ஏன் முகுந்தன் அவர் வீடு கேளம்பாக்கம்ன்னா அவர் ஏன் சோழிங்கநல்லூர்  போகணும்? யாரைப் பார்க்கப் போனாரு? காரை நிறுத்திட்டு எங்க போனாரு? அவர் காரை நிறுத்துன  இடத்தில  சி.சி.டி.வி. கேமரா ஏதாவது இருக்கா? இருந்தா அதோட புட்டேஜ்  எனக்கு வேணும் ?”

“சார்… ஒரு விஷயம்.. அவர் இறந்த அன்னைக்கு அவர் குடும்பம் கேளம்பாக்கத்துல இல்ல. அவங்க ஒய்ப் திருச்சி வரைக்கும் அவங்க அப்பா வீட்டுக்கு போயிருக்காங்க” 

“ம்…” 

“கடைசியா அந்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல  இறந்தவன் பேரு மணி,சாதாரண  ஃபேமிலி.சின்ன லெவல்ல கேப்ஸ் நடத்திகிட்டு வந்திருக்கான். அவனுக்கு சொந்தமா நாலு வண்டி இருக்கு …” 

“ம் சரி… விசாரணையை நாம இன்னும் தீவிரப்படுத்தணும் முகுந்தன். நாளைக்கு ஸ்பாட்டுக்கு போய் விசாரிக்கணும். இவங்க மூணு பேருக்கும் பொதுவான எதிரி யாரும் இருக்காங்களா, பொதுவான விஷயம் ஏதேனும் இருக்குதானு பார்க்கணும்” என்றார் ராஜேஷ் 

காக்க காக்க கனகவேல் காக்க…  

நோக்க நோக்க நொடியில் நோக்க… 

தாக்கத் தாக்க தடையறத் தாக்க… 

பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட …. 

எல்லார்  வீட்டிலும் கந்த சஷ்டி கவசம் சூலமங்கலம் சகோதரிகள் குரலில் ஒலிக்கும் என்றால், செல்லம்மா வீட்டில் மட்டும் அது செல்லம்மாவின் குரலிலேயே  ஒலிக்கும். 

செவ்வாய்க்கிழமை காலையில் கந்த சஷ்டி கவசம், மாலையில் லலிதாசகஸ்ர நாமம். இது செல்லம்மாவின் பக்தி டைம் டேபிள் 

அதிகாலையில் எழுந்து குளித்து, வாசல் தெளித்து கோலமிட்டு, விளக்கேற்றி ஆறு மணிக்குள் கணவனுக்கும் காபி கொடுத்து விடுவாள்.  

பக்கத்து வீட்டு மூர்த்திக்கு இது பெரிய ஏக்கத்தை உண்டு பண்ணும்

“சோமு… கொடுத்து வைச்சவர் ஐயா நீர்.காலங்காத்தால பில்டர் காபி குடிக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்” என்பார் பொறாமை தெறிக்கும் குரலில்

அன்று செல்லம்மா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும் போது, கீர்த்தனா வழக்கம் போல் அரை தூக்கத்தில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்

செல்லம்மாவுக்கு கீர்த்தனா பேர் தனி பிரியம். தன் பெண் போல ஒரு பாசம். இருவரும் மணிக்கணக்கில் அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். வயது வித்தியாசம் பாராத நட்பு… ஏன் அதையும் மீறிய ஒரு பாசப் பிணைப்பு.  

“ஏண்டி… ராத்திரி ஷிப்டா? உடம்பு என்னத்துக்கு ஆகறது தினம் இப்படி ராத்திரி தூங்காம முழிச்சா” 

“அதான் பகல்ல நல்லா தூங்கிடுறேனே மாமி” 

“பகல்ல தூங்குனாலும் ராத்திரி தூங்குற மாதிரி வருமாடி. பாதி நாள் நூடுல்சை பண்ணி சாப்பிட்டுகிட்டு இருக்கே. ஒரு அரை மணி நேரம் தூங்கிடாம இரு, அடைக்கு அரைச்சு வச்சிருக்கேன், ரெண்டு அடை ஊத்திக் கொண்டு  வந்து தரேன்” எனவும் 

“ஐ அடையா… சரி தாங்க. நான் அதுக்குள்ள தேங்காயை  சட்னி உங்களுக்கும் சேர்த்து பண்ணிடுறேன்”

உள்ளே வந்தவள் காபி போட்டுக் குடித்து விட்டு, தேங்காயை கீறி சட்னி அரைக்க ஆரம்பித்தாள். சட்னி ரெடியாக, உள்ளே வந்தார் மாமி

“ஏண்டி கீர்த்தனா… அம்மாவை வந்து இருக்கச் சொன்னா வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவாங்கல்ல. உனக்கும் ஒரு பாதுகாப்பா இருக்கும்.” 

“சொல்லியாச்சு மாமி… தினமும் ஒரு மணி நேரம் போன்ல பேசுறாங்க, கூப்பிட்டா இப்ப வரேன் அப்ப வரேன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்றாங்க. அவங்களுக்கு கிராமத்து வாழ்க்கையை விட்டு வர்றதுக்கு மனசே வராது”

“ம்… கஷ்டம் தான். சரி, சாயந்தரம் சத்யநாராயண பூஜை வச்சிருக்கேன் வந்துடு” எனவும் 

 “மாமி நான் சாயங்காலம் 6 மணிக்கே கிளம்பிடுவேன்” என்றாள் கீர்த்தனா 

 “சரி சரி… போகும் போது வந்து  சாமிய  கும்பிட்டுட்டு போ” எனக் கிளம்பினார் மாமி 

நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன் எப்பொழுதையும் விட பரபரப்பாக இருந்தது. ஸ்டேஷன் எல்லைக்குள் நடந்த கொலைகள்… விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்கள் என பரபரப்பாக இருந்தது 

இன்ஸ்பெக்டர் ராஜேஷுக்கும் நெருக்கடி அதிகமாக இருந்தது.மேலிடத்திலிருந்து தொடர் கொலைகளைப் பற்றி கேட்ட வண்ணம் இருந்தனர்

இதுவரை இறந்தவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்களாக இருந்தனர். ஒரே மாதிரியாக கொலை செய்யப்பட்டது ஒன்று மட்டுமே அவர்களை இணைக்கும் ஒரு விஷயமாக இருந்தது. அதுவும் மிகக் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் சரியான நரம்பை அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்கள்

ராஜேஷ் யோசித்தார்,  ‘நூலின் நுனி கிடைத்தால் அதைப் பற்றி ஏறிடலாம். அந்த நுனி எங்கே?” என்று தான் தேடிக் கொண்டிருந்தார்

றுநாள் காலை வழக்கம் போல கீர்த்தனா வந்த போது, அபார்ட்மெண்ட் அமளிதுமளியாக இருந்தது

“உய்ய்ங் உய்ய்ங்” என்ற ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வண்டியின் சத்தம், ஆட்களின் நடமாட்டம் என்று, பரபரப்பாய் இருந்தது. அந்தப் பரபரப்பு கீர்த்தனாவையும்  தொற்றிக் கொள்ள, தூக்கம் தொலைந்து போனது

“என்ன ஆச்சுங்க?” என  செக்யூரிட்டியிடம் கேட்க

“என்னமா  சாவகாசமா கேக்கற? பெரிய விஷயம் நடந்து போச்சும்மா. உன் வீட்டுக்கு எதுத்தாப்புல இருக்காங்களே செல்லம்மா அம்மா, அவங்க வீட்டுக்காரர் சோமுவை யாரோ கொலை பண்ணிட்டாங்க. கொலை பண்ணி மேல இருக்கிற தண்ணி டேங்குல போட்டுட்டாங்க” எனவும், அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் கீர்த்தனா. 

“ஐயோ மாமி” என்று அலறியவள், லிப்டைக் கூட எதிர்பார்க்காமல், மூன்று மாடிகள் படியேறி ஓடினாள்

செல்லம்மாவின்  வீடு போலீஸ்காரர்களால் நிறைந்திருக்க,சோமுவின் உடல் ஹாலில் கிடத்தப்பட்டிருந்தது

ஓடி வந்து மாமியை கட்டிக் கொண்ட கீர்த்தனா, “ஐயோ மாமி என்ன ஆச்சு? எப்படி ஆச்சு?” என கதறினாள் 

“அடி கீர்த்தனா… மாமாவை பாரு எப்படி கிடக்காருனு. யாரோ கொலை பண்ணிட்டாங்க. அந்த மனுஷனுக்கு ஒரு விரோதி கூட கிடையாது. யார் இப்படி பண்ணினான்னு தெரியலயேடி. இப்படி ஒரே ராத்திரியிலே என்ன விட்டுட்டு போயிட்டாரேடி. ஒரு நோய் நொடி கிடையாது.  அடிச்சுக் கொன்னாலும் ஆயிரம் நாளாகும்’ங்கற மாதிரி இருந்தவரை எந்த பாவியோ கொன்னுட்டானே” என்று புலம்பியவர், கீர்த்தனாவின் மடியில் படுத்து அழுதார் 

மாமியை கட்டிக் கொண்ட கீர்த்தனாவும் வாய் விட்டு அழுதாள்.  

“நீ யாரும்மா எதிர்த்த வீட்ல இருக்கியா?”என இன்ஸ்பெக்டர் ராஜேஷ் அவள் கழுத்திலிருந்த கம்பெனி ஐ.டி. கார்டை பார்த்தவாரே கேட்க 

“ஆமாம் சார் நான் எதிர் வீடு, சாப்ட்வேர்  கம்பெனியில வேலை பாக்குறேன்” என்றாள் 

“வித்தியாசமா எதையாவது கவனிச்சியாம்மா? யாராவது தெரியாதவங்க நடமாட்டம் இந்த காரிடார்ல இருந்ததா?” 

“எனக்குத் தெரிஞ்சு இந்த ரெண்டு நாளா வழக்கமா வர்றவங்க தவிர, வேற யாரும் இங்க நடமாடின மாதிரி தெரியல சார்” 

செல்லம்மாவிடம் திரும்பிய இன்ஸ்பெக்டர், “ஏம்மா உங்க வீட்டுக்காரருக்கு விரோதி யாரும் இருக்காங்களா? சமீபத்துல யார் கூடவாவது சண்டை போட்டாரா?”

“ஒண்ணுமே இல்லையே சார். அவருக்கு யாருமே விரோதி கிடையாது” என அரற்றினார் மாமி 

அதற்குள் செகரெட்ரி மெதுவாக, “சார்… இது யாரோ சீரியல் கில்லர்னு நினைக்கிறேன். தொடர்ந்து  ஆம்பளைங்களை கொலை பண்ணிக்கிட்டு  இருக்கான், சைக்கோ போலருக்கு” என்றார் 

“நான் உங்க ஒவ்வொருவரையும் தனித்தனியா விசாரணை பண்றேன், இப்ப தயவு செய்து எல்லாரும் இந்த இடத்தை காலி பண்ணுங்க. நாங்க எங்க வேலையை பார்க்கணும்” என்றார் இன்ஸ்பெக்டர் கடுகடுப்பாக 

மாமியை கைத்தாங்கலாக எழுப்பி ரூமுக்குள் கூட்டிக் கொண்டு போனாள் கீர்த்தனா. சோமு மாமாவின் இறுதி காரியங்கள் போஸ்ட் மாற்றத்திற்குப் பிறகு முடிய, வந்திருந்த ஓரிரு சொந்தங்களும் கிளம்பி விட்டனர்

அடுத்து வந்த நாட்களில், செல்லம்மாவை மாமியை விட்டு பிரியாமல், இரவும் பகலும் கூடவே இருந்தாள் கீர்த்தனா

தன் வீட்டிலேயே சமைத்துக் கொண்டு வந்து செல்லம்மாவை வற்புறுத்தி சாப்பிட வைத்தாள்

டுவில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் திரும்பவும் விசாரணைக்காக வந்தார். 

சோமுவின் செல்போனை வாங்கிக் கொண்டவர்.அப்பார்ட்மெண்ட் சி.சி.டிவி புட்டேஜ்ஜையும் காப்பி பண்ணி வாங்கிக் கொண்டார்

செல்லம்மாவிடமும் கீர்த்தனாவிடமும்,திரும்பத் திரும்ப பேசி சில விபரங்களை தெரிந்து கொண்டார்

மாத்திரை போட்டுக் கொண்டு படுத்ததால், சம்பவத்தன்று  இரவு 9க்கு பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்று கூறினார் செல்லம்மா 

சி.சி.டிவி கேமரா ஒவ்வொரு தளத்திற்கும் இல்லாமல், கீழே கார் பார்க்கிங் மற்றும் வாசலையும் மட்டும் பார்க்கும்படி இருந்ததால், அன்றைய தினம் அந்த ஃப்ளோரில் நடந்தது சரியாக தெரியவில்லை

அக்கம்பக்கத்தினரும் வித்தியாசமாக சத்தம் ஒன்றும் கேட்கவில்லை என்று கூறிவிட, யோசித்துக் கொண்டிருந்தார் ராஜேஷ் 

டுத்த இரண்டு நாளில், பெண் காவலருடன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்  வர, அப்பார்ட்மெண்ட் பரபரப்பானது. செகரெட்ரியை கூப்பிட்டனுப்பினார் ராஜேஷ் 

பின் கீர்த்தனாவை பார்த்து, “ஸ்டேஷனுக்கு வர்றீங்களா?” எனக் கேட்க

“சார் அந்த பொண்ணு எதுக்கு?” எனக் கேட்டார் செகரெட்ரி

“வயசு பொண்ணு சார்… அவள  எதுக்கு ஸ்டேஷனுக்கெல்லாம் கூப்பிடுறீங்க? ஏதாவது விபரம் கேட்கணும்னு இங்கே கேட்டுக்கங்க…” எனத் தடுத்தார் செல்லம்மா

“இப்ப அவங்க வராங்களா? இல்லை என்று கைது பண்ணி கூட்டிட்டு போகவா?” என இன்ஸ்பெக்டர் மிரட்டலாய் கேட்க, எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர் 

ஒன்றும் புரியாமல் உடைந்து போனாள் கீர்த்தனா. வேறு வழியின்றி பெண் காவலர்களுடன் அழுது கொண்டே  நடக்க, அப்பார்ட்மெண்டே திகைத்து நின்றது 

அடுத்த ஒரு மணி நேரத்தில் செகரெட்டரியும், செல்லம்மாவும், லாயரை  கூட்டிக் கொண்டு  நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தனர்

“சாரி சார், இது தொடர் கொலை சம்பந்தப்பட்ட வழக்கு. எப்.ஜ.ஆர் போட்டாச்சு, நாளைக்கு  காலைல கோர்ட்டில் ஆஜர்படுத்தப்போறோம், நீங்க  கோர்ட்ல பாத்துக்கங்க” என்றார் ராஜேஷ்

அழுது கொண்டிருந்த கீர்த்தனாவைப் பார்க்க, செல்லம்மாவின் மனம் கசிந்தது

“சார் அந்த பொண்ணு பாவம், அப்பிராணி. கொலையெல்லாம் பண்ணி இருக்காது, தயவு செய்து நீங்க நல்லா விசாரிங்க” என செல்லம்மா கூற 

“விசாரிக்காம அந்த பெண்ணை கைது பண்ணுவேனாம்மா…  எல்லாம் விவரமா கோர்ட்டில் தெரிஞ்சுக்கோங்க” என பேச்சை முடித்தார் இன்ஸ்பெக்டர் 

றுநாள் காலை கோர்ட் ஆரம்பிக்க, கீர்த்தனாவுடைய கேஸ் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ்  தன் தரப்பை  விவரித்தார்

“திருச்சி பக்கத்துல ஒரு கிராமம், அது தான் கீர்த்தனாவோட சொந்த ஊர். கீர்த்தனா அவங்க அம்மாவோட வாழ்ந்தா, ஓரளவு வசதியான குடும்பம். அவளுடைய பள்ளிக் கூட படிப்பெல்லாம் அங்க தான்

படிப்பிலும், விளையாட்டிலும், கீர்த்தனா கெட்டிக்காரி. ரொம்ப அமைதியான, சாதுவான பெண். அவங்க அப்பா, அம்மாவை விட்டுட்டு வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணினது தான்,  முதல் முதல்ல கீர்த்தனாவோட மனசை மனச பாதிச்ச  விஷயம். 

கீர்த்தனா நல்ல படிச்சா,அதனால அவங்க அம்மாவும் அவளை நல்ல படிக்க வச்சாங்க. காலேஜ்ல படிக்க  சென்னைக்கு அனுப்பினாங்க. அவளுடைய காலேஜ் ஃபீஸ் கட்டுறதுக்கு கீர்த்தனா அம்மாவால சமாளிக்க முடியாத போது, வெளியில் கொஞ்சம் கடன் வாங்க ஆரம்பிச்சாங்க.

அதே ஊரைச் சேர்ந்த தனபால்,கந்துவட்டிக்காரன். அவன் ஒரு தடவை கீர்த்தனாவுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டுவதற்கு பணம் இல்லைனு கேட்டப்ப கடன் கொடுத்தான். வாங்குன பணத்திற்கு அநியாய வட்டி கேட்டு அவங்க அம்மாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சான்

இதற்கிடையில் கீர்த்தனாவும் படிச்சு முடிக்க, R.G.S. சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்ல வேலை கிடைச்சது. வேலைக்கு போய் சம்பளம் வாங்கி, கடனை அடைச்சுட்டு, அம்மாவ சென்னைக்கு கூட்டிட்டு வரணும்ங்கற சந்தோஷத்தில் இருந்த கீர்த்தனாவுக்கு இடி விழுந்ததுபோல வந்தது அவங்க அம்மாவுடைய மரண செய்தி

கடன்  வசூல் பண்ண வந்தவன், அவ அம்மாகிட்ட தப்பா நடக்க, அந்த அவமானம் தாங்க முடியாம அவங்க தூக்குல தொங்கிட்டாங்க. கீர்த்தனா மனசளவுல நொறுங்கி போனா

சிறுவயசிலேயே ஆண்கள் மேல உள்ள வெறுப்பு, அம்மாவுடைய திடீர் மரணம், தனபால் அவ அம்மாவை சீரழித்தது இதெல்லாம் மனசளவுல, தாங்கிக்கவே முடியாத ஒரு மன அழுத்தத்தை கொடுக்க, அவ கற்பனையிலேயே வாழ ஆரம்பிச்சா

அவளுக்குள்ள எல்லோரையும் பழி வாங்கணும்ங்கிற எண்ணம் வர வர… ஸ்பிளிட் பர்சனாலிட்டி அப்படிங்கற மனநோய்க்கு ஆளானா

அதே நேரம் செல்லம்மாவுடைய அன்பு அவ அம்மாவை நினைவுபடுத்த, அது அவளுக்கு  பெரிய ஆறுதலாக இருந்தது. ஆனா பகல்ல நார்மலா இருக்கிறவ, ராத்திரி வேற விதமா மாற ஆரம்பிச்சா

அவ வேலை பார்த்தது மொத்தம் ஆறு மாசம் தான், கம்பெனிக்கு போற மாதிரி எல்லோரையும் நம்ப வைச்சிட்டு ராத்திரி வெளியே போய்டுவா. கேப்ல ஏறி கம்பெனியில் போய் இறங்குவா, அங்கிருந்து நடக்கும் தூரத்தில் இருந்த அந்த பாதி கட்டப்பட்ட கட்டடத்தில் போய் படுத்து தூங்கிட்டுகாலைல அப்பார்ட்மெண்ட் வந்திடுவா

இரவு நடந்தது எதுவுமே அவ மனசுல பதியல. தினமும் தான்  வேலைக்கு போய்ட்டு வர்ற மாதிரி  அவ மனசுல நினைச்சுட்டு இருந்தா. தனபால் மேல இருந்த வெறியில, கடன் பணத்த வாங்கிக்க சொல்லி வரச் சொன்னா. அவன் ஒரு பெண் பித்தன், எப்படியாவது அம்மாவப் போல பொண்ணையும் மடக்கிடலாம்ங்கற ஆசையில வந்தான்

அவன அப்பார்ட்மெண்ட்க்கு வரச் சொல்லி, அவன் வந்ததும் அப்பார்ட்மெண்ட் பின்னாடி இருந்த குளக்கரைக்கு கூட்டிட்டு போயி அவன் ஆசைக்கு இணங்கற மாதிரி நடிச்சு,  கையில வைத்திருந்த கூர்மையான கத்தியால, அவனை கழுத்தறுத்துக் கொன்னு அந்த குளத்தில போட்டுட்டு,  அங்கேயே உட்கார்ந்திருந்துட்டு  எப்போதும்  வேலைக்கு போயிட்டு வர்ற மாதிரி காலைல வந்துட்டா.  அதனால யாருக்கும் சந்தேகம் வரல 

ஈ.சி.ஆ.ரோட்டில இறந்தவர், இவ  வேலை பார்த்தப்ப இவளுக்கு மேனேஜரா இருந்திருக்கார். அப்பவே இவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ண, இவ பிடி கொடுக்காம இருந்திருக்கா.  ஒரு போன் பண்ணி அவரை வரவழைச்சிருக்கா, கம்பெனி பக்கத்துல இருக்கிற ரிசார்ட்டுக்கு   வரச்சொல்லி அவர் கூட இருக்கிற மாதிரி இருந்துட்டு, அவரையும் கொன்னுட்டா.  

அவரது உடலை  ரிசார்ட் பக்கத்துல ரோட்ல தானே இழுத்துட்டுப் போய் போட்டிருக்கா. போட்டுட்டு திரும்ப வந்து படுத்திட்டா, அதுக்குண்டான சக்தி கீர்த்தனாவுக்கு இருந்திருக்கு. 

சாதாரண கீர்த்தனாவுக்கு அந்த அளவு பலம் கிடையாது. வேணும்னே காரை  சோழிங்கநல்லூர்கிட்ட நிறுத்திட்டு ஆட்டோல வர சொல்லியிருக்கா, அப்ப தான் சந்தேகம் வராதுன்னு

அப்புறம் அந்த மணி, அந்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டுக்கு இவ போறத, இவளை தினமும் கொண்டு விடுற இந்த கேப்ஸ் மணி கவனிச்சிருக்கான். ஏதோ தப்பு பண்ணுறான்னு நினைச்சிருக்கான்

பின்னாடியே போயி இவகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ண, அவனையும் கொலை பண்ணி கன்ஸ்ட்ரக்ஷன் இடத்துல இருந்த தண்ணி தொட்டியில் போட்டுட்டா

கடைசியா செல்லம்மா அம்மாவுடைய புருஷன் சோமு. அவர் இவகிட்ட தப்பா நடக்கல, ஆனா மாமி இல்லாதப்ப வேலைக்காரி கனகாவுடன் தப்பா நடந்துகிட்டத தற்செயலா  பார்த்திருக்கா.  மனசு பொறுமியிருக்கு. மாமிக்கு துரோகம் பண்றாரு அப்படிங்கிற வேகம் மனசுக்குள்ளே இருந்திருக்கு

அதனால, கனகா அப்பார்ட்மெண்ட்ல ராத்திரி தங்கற மாதிரியும், தன்னை வந்து மொட்டை மாடியில் பார்க்க சொல்ற மாதிரியும்  அவ குரலில் பேசியிருக்கா. வழக்கம் போல வேலைக்கு போற மாதிரி கிளம்பி போயிட்டு,திரும்ப அபார்ட்மெண்டுக்கு வந்திருக்கா

அபார்ட்மெண்ட்ல சி.சி.டிவி கேமரா எந்த இடத்துல இருக்குன்னு தெரியும். அதனால அதை தவிர்த்து வந்தவள், மொட்டை மாடியில அவருக்காக காத்திருக்க,கனகா தான் வரச் சொல்லியிருக்கான்னு நெனச்சுக்கிட்டு மொட்டைமாடிக்கு வந்த சோமுவை இவ தன்னோட ஆசைக்கு இணங்க கூப்பிட்ட மாதிரி சொல்லி, அவரையும் கொலை பண்ணி தண்ணீர் தொட்டியில் போட்டிருக்கா

அப்புறம் அபார்ட்மென்டுக்கு வெளிய போய், பக்கத்தில் இருக்கிற கோயில்ல படுத்திருந்துட்டு காலையில விடிஞ்சதும் ஒரு ஆட்டோ பிடித்து வந்திருக்கா

இதுல வேடிக்கை என்னன்னா, இரவு நேரத்தில  இத்தனை நடந்ததுக்கும்,பகல் நேரத்து கீர்த்தனாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, ஒரே ஒரு விஷயத்தை தவிர. அம்மாவை பத்தின விஷயம் வெளியில தெரிஞ்சிடக்கூடாதுங்கறதுக்காக, பகலில்  அம்மா கூட பேசறது மாதிரி நடிச்சிருக்கா

அவ மனசுல அம்மாவை பத்தின ஒரு சோகம் இருந்துகிட்டே இருந்திருக்கு.  இரவு இருக்கிற கீர்த்தனாவுக்கு இருந்த தைரியமும், வேகமும் பகலில் உள்ள கீர்த்தனாவுக்கு  கிடையாது. செல்லம்மா மாமி மேல அவ வைச்சிருந்த பாசம் உண்மையானது

அவங்கள கிட்டத்தட்ட அம்மாவா  பாவிச்சு வாழ்ந்திருக்கா. இதையெல்லாம் நாங்க கேட்கும் போது, கீர்த்தனாவுக்கு இத பத்தி ஒன்னுமே தெரியல. திரும்பத் திரும்ப பகலில் நடந்ததை மட்டும் தான் சொல்லிட்டே இருந்தா

இரவுக்கு வேலைக்கு போகல அப்படிங்கறத அவளால மனசளவில் புரிஞ்சுக்கவே முடியல. அவள ஆழ்மனச்சோதனைக்கு உட்படுத்தி அவளுக்குள் இருந்து அந்த இன்னொரு கீர்த்தனாவை பேச வெச்சு, அவகிட்டயிருந்து வாங்கின விஷயம் தான் இதெல்லாம் 

ஆரம்பத்தில நான் கீர்த்தனாவை சந்தேகப்படல. சோமு இறந்த அன்னைக்கு கீர்த்தனா உள்ள வந்தப்ப, அவ கழுத்துல இருந்த டேக்ல (tag), R.G.S சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்னு  இருந்ததை பார்த்ததும் தான் எனக்கு பொறி தட்டுச்சு

ஈ.சி.ஆர் ரோட்டில் இறந்த ராகுலும் அதே கம்பெனியில் தான் மேனேஜர். அப்பத் தான் ஒரு சின்ன சந்தேகம், ஏதோ ஒரு தொடர்பு  இவளுக்கும் இந்த கொலைகளுக்கும் இருக்குமோன்னு தோணுச்சு

இந்த சாப்ட்வேர் கம்பெனில போய் விசாரிச்சப்ப, எங்களுக்கு கிடைச்ச அதிர்ச்சியான தகவல், இவ அங்க வேலை பார்த்தது ஆறு மாசம் மட்டுமே என்பது

மேலும் தனபால் பற்றி திரட்டிய தகவல்களில், அவனுடைய சொந்த ஊரும் கீர்த்தனாவோட ஊரும் ஒன்னுங்கறது ஒரு ஆச்சரியமான தகவலா இருந்துச்சு. தனபாலோட வீட்டை சோதனை போட்ட போது கிடைச்ச நோட்ல, கீர்த்தனாவோட அம்மா பேரு இருந்தது 

மணிய பத்தி  விசாரிக்கும் போது, மணி தான் தினமும் கீர்த்தனாவை அப்பார்ட்மெண்ட்லிருந்து கம்பெனிக்கு கூட்டிட்டு போன கேப்ஸ் டிரைவர் கம் ஓனர்னு  எங்களுக்கு தெரிய வந்தது. இப்படி எல்லா ஆதாரமும் கீர்த்தனாவ நோக்கி கையைக் காட்ட, கைது பண்ணி விசாரணைக்கு உட்படுத்தினோம் 

ஆனா அந்த பொண்ணு  அப்பாவியா ஒண்ணுமே செய்யல ஒண்ணுமே செய்யலனு சொல்லிக்கிட்டே இருந்தா. அவளுக்குள்ள இருக்கிற இன்னொரு கீர்த்தனாவை பத்தி அவளுக்கே தெரியல” என முடித்தார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்  

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்ததும், அவளுடைய எந்த ஒரு செய்கையும் அவள் நல்ல தெளிந்த மனநிலையில் செய்யவில்லை என்பதால், அவளை மனநல மருத்துவமனையில் அனுமதித்து குணமாகும் வரை இருக்க உத்தரவிட்டார் நீதிபதி 

ருடம் ஒன்று ஓடிவிட அன்று சோமு மாமாவின் முதல் திதி. எல்லா காரியங்களும் முடிந்து எல்லோரும் போன பிறகு கேரியரில் சாப்பாட்டை  எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார் செல்லம்மா

அவளைப் பார்த்ததும் கீர்த்தனா ஓடிவந்து கழுத்தை கட்டி அணைத்துக் கொள்ள, செல்லம்மாவின் கண்களில் கண்ணீர் பெருகியது. 

வெளியில் இருந்த மரத்தடியில் அவளை உட்கார வைத்து, சாப்பாடை பிசைந்து ஊட்டினார் 

“மாமி என்னை எல்லாரும் கொலைகாரினு சொல்றாங்க, சோமு மாமாவை நான் தான் கொன்னுட்டேன்னு சொல்றாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல, மாமாவை நான் கொலை செஞ்சிருந்தா நான் உயிரோடு இருக்கக் கூடாது” என அழுதாள் கீர்த்தனா

“அப்படி எல்லாம் பேசக் கூடாதுடி, உனக்கு உன் அம்மா நான் இருக்கேன். சீக்கிரத்தில் உனக்கு குணமாகி நீ வெளியே வந்துடுவ, அப்ப உன்ன வரவேற்க நான் காத்துட்டு இருப்பேன். நீ என்கூட உன்னுடைய மீதி நாளை சந்தோஷமா பாதுகாப்பாக கழிக்கலாம். இரண்டு பேரும்  ஒருத்தருக்கொருத்தர் உறவா இருப்போம்” என கீர்த்தனாவை கட்டிக் கொண்டார் செல்லம்மா 

இருவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads – Amazon Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

 

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. சூரசம்ஹாரம் கதை அருமை.. பெண் என்பவள் தீண்டும் போது வதம் செய்ய தயாராகி விடுகிறாள்… பெண்மையை மதிப்போம்.

  2. திக் திக் திக். ஆனால் முதலில் ஆரம்பத்திலேயே கீர்த்தனா தான் குற்றவாளி என்பது புரிந்து விட்டது. என்றாலும் காரணம் புரியவில்லை. நல்ல சரளமான நடையில் கோர்வையாக எழுதி இருக்கிறார்.

ரகசியத்தைச் சொல்லி விடாதே (சிறுகதை) – ✍ தீபா வேலு, வெள்ளக்கோவில், திருப்பூர் 

தன்னம்பிக்கை (கவிதை) – ✍ கவி தா பாரதி