in

சொல்லத் துடிக்குது மனசு ❤ (சிறுகதை) – ✍சக்தி ஸ்ரீநிவாஸன்

சொல்லத் துடிக்குது மனசு ❤

“அவிந்த் ஸார்! காவேரி குரூப்ஸ் கம்பெனி, கொடேஷன் சம்பந்தமா மெயில் பண்ணியிருக்காங்க.   என்ன ரிப்ளைப் பண்ணட்டும்?” என்றுக் கேட்ட உதவியாளினி தீப்தியிடம், அது சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்டுகளை அரவிந்த் கொடுக்க

“ஸார்! இந்த ஆபிஸ்ல எத்தனையோ பேர் வேலைப் பாக்கறாங்க.  ஆனா உங்கள மட்டும் தான் எனக்குப் பிடிச்சிருக்கு. ஏன் தெரியுமா? ” என்று கேட்டவளின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த போது, டமடமடம என ஒரு பேரிறைச்சல்.

“சே! மனுஷன் கொஞ்சம் நிம்மதியா தூங்கக் கூடாதே, அதுக்கும் இடைஞ்சல் இந்த ஊர்ல” என இன்பக் கனவுக் கலைந்த கோபத்தில், முணுமுணுத்தபடி கட்டிலிலிருந்து விருட்டென எழுந்தான் அரவிந்தன்

மாடி ஜன்னலின் வழியே சத்தத்திற்குக் காரணம் தேடி தெருவில் பார்வையை ஓட விட்டான்

அவன் வீட்டிற்கு எதிரில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுமானத்திற்காக, லாரியில் வந்திறங்கிய ஜல்லி கற்கள் குவியலின் சத்தம் தான் அது என்பது புரிந்தது 

இனி கட்டுமானம் முடியும் வர தனது இன்பக் கனவுகளுக்கு வேட்டு தான் என்பது புரிந்தது

போன மாதம் தான் எதிர் வீட்டு ஹெட்மாஸ்டர் வீட்டை விற்று விட்டு, ஜெர்மனியில் வசிக்கும் தமது மகனுடனே தங்கிவிடப் போவதாக கூறிச் சென்றார் 

அந்த வீட்டை வாங்கியவர் இடித்து அடுக்குமாடி குடியிருப்பை அமைக்க உள்ளார் போலிருக்கிறது. நல்லவேளை, வாரத்தில் ஆறு நாட்கள் அலுவலகம் சென்று விடுவதால், பகலில் இந்த இரைச்சல் தலைவலி இருக்காது என நிம்மதியடைந்தான் அரவிந்தன்

அம்மா தான் பாவம், ஏற்கனவே ஒற்றைத் தலைவலி. எங்காவது விசேஷத்திற்கு, திருமணத்திற்கு வெளியில் சென்றாலே,  பஸ் இரைச்சல், நாதஸ்வர இசை, ரிஸப்ஷன் லைட் மியூசிக் இரைச்சல், வெடி சத்தம் என தலைவலி வந்துவிடும்.

ஆனால் அவர் பேசிக் கொண்டே இருப்பது பலருக்கு தலைவலி என்பது மட்டும் அவருக்குப் புரியாது.

‘அம்மா இந்த கட்டுமான இரைச்சலை எப்படி சமாளிக்கப் போகிறாரோ?’ என எண்ணியபடி அலுவலகம் செல்ல தயாராக குளிக்கச் சென்றான்,  கனவில் சிரித்தவளை நேரில் காணலாம் என்ற ஆவலுடன்

“இன்னிக்கும் புதினா சட்னியா? முந்தா நேத்து தான பச்சையா ஒரு சட்னி வெச்ச. தினமும் ஏதாவது ஒரு பச்சைக் கலர் சட்னி. வாய்க்கு ருசியா சமைக்கவே தெரியாதா உனக்கு. உடம்புக்கு நல்லதுனு சொல்லி தினமும் மனுஷன டார்ச்சர் பண்ற”  என அரவிந்தன் கூற

“ஆமாம்ப்பா… அம்மா டெய்லி இப்படியே சமைச்சு நம்ம மூடை கெடுக்குது. டிபனும் நல்லால்ல, லஞ்சும் சரியில்லை” என தன் அப்பாவுக்கு ஒத்து ஊதினான், அரவிந்தின் ஏழு வயது மகன் முகேஷ்

“ஏன் சொல்ல மாட்ட… நீங்க எல்லாரும் நேரத்துக்கு ஆபிஸுக்கும் ஸ்கூலுக்கும் போகணும்னு தினமும் நேரத்துல எழுந்து  தயார் பண்ணி அனுப்பறேன்ல, என்னை சொல்லணும்.  என்ன நிவி  உன் பங்குக்கு எதுவும் சொல்லல?” என கோபமாய் உரைத்தாள் பூரணி

“ஏம்மா என்னை வம்புக்கு இழுக்குற. நானே இன்னிக்கு பிராக்டிக்கல்ஸ் டென்ஷன்ல இருக்கேன். பிரிட்ஜில் எல்லா பூவும் இருக்குல்ல. ஏதாவது ஒண்ணு மிஸ் பண்ணாலும் அவ்வளவு தான், எங்க சாரை சமாளிக்க முடியாது” என்றபடி எழுந்தாள் நிவேதா

அரவிந்தன், நகரின் பிரபல எம்.என்.சி நிறுவனத்தில் ப்ரோஜெக்ட் மானேஜர். அவன் மனைவி பூரணி இல்லத்தரசியாய் வீட்டை நிர்வாகம் செய்கிறாள்

மகள் நிவேதா ஒன்பதாம் வகுப்பும் மகன் முகேஷ் ஐந்தாம் வகுப்பும் படிக்கின்றனர்.

அரவிந்தனின் பெற்றோர், இளைய மகன் முகுந்தனுடன் அதே வீட்டின் கீழ்த்தளத்தில் வசிக்கின்றனர். திருமணமாகி மனைவி கவிதா மற்றும் மகனுடன் இருக்கும் முகுந்தன், ரெயில்வேயில் பணிபுரிகிறான். 

அரவிந்தன் மேல்தளத்தில் தனியே வசித்தாலும், தனது பெற்றோரின் தேவைகளை அவ்வப்போது கவனித்து நிறைலேற்றத் தவறியதில்லை. 

எப்பொழுதும் தன் பெற்றோரிடம் விடைபெறாமல் அலுவலகம் செல்ல மாட்டான். அன்றும் அப்படியே.

“அம்மா… அம்மா…” என்றபடி சமையலறையில் இருந்த தாயிடம் சென்றவன், “அம்மா!  எதிர்ல கன்ஸ்ட்ரக்சன் ஆரம்பிச்சுட்டாங்க. இனிமே ரொம்ப இரைச்சலாவும்  தொந்தரவாவும் இருக்கும். ஏற்கனவே உங்களுக்கு தலைவலி பிரச்சனை இருக்கு. அதனால, சாப்பிட்டு உங்க வேலை எல்லாம் முடிஞ்சதும் பேசாம கதவை சாத்திட்டு டிவி பாத்திட்டிருங்க. மாத்திர எல்லாம் நேரத்துக்குப் போட்டுடுங்க. ஏதாவது கசாயம் வேணும்னா பூரணிக்கிட்ட போன்ல சொல்லிடுங்க, அவக் கொண்டு வந்து குடுப்பா. அப்புறம்… அப்பாவப் பத்தி உங்களுக்கே தெரியும். இந்த மாதிரி வேலை ஏதாவது நடந்தா, அங்கப் போய் வேடிக்கைப் பாத்துட்டு அவங்கக்கிட்ட ஏதாவது பேசிட்டுருப்பாரு. அது வம்புல தான் முடியும். தம்பிக்கிட்டயும் நான் சொல்றேன். சரியா? நான் ஆபிஸ்க்கு கிளம்பறேன்மா” என்றபடி தாயிடம் விடைபெற்றான் அரவிந்தன்

கட்டுமானப் பணி அதிவிரைவாக நடந்து கொண்டிருந்தது. நிறைய ஆட்கள் வேலை செய்வதால் இரு மாதங்களிலேயே முழுப்பணியும் முடிந்து விடும் போலிருந்தது. பணியாட்கள் மூன்று குடிசைகள் போட்டுத் தங்கியிருந்தனர்

குடும்பங்களாக இருந்ததால் தனித்தனி குடிசைகள் அமைத்தனர் போலும்.

காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் வேலை, இரவு ஏழு எட்டு வரை நீடித்தது. மாலை ஆறு மணியானதும் அடுப்பைப் பற்ற வைத்தனர் அப்பெண்கள்

கொசுக்கள் வீட்டுக்குள் நுழைந்து விடுமே என்ற அச்சத்தில் தினமும் சரியாக ஆறுமணியானதுமே ஜன்னல்களை மூடி விடுவது வழக்கம் என்பதால், அன்றும் ஜன்னல் பக்கம் சென்ற போது அந்த சித்தாள் பெண்கள் ஒருவருடன் ஒருவர்  பேசியவாறு சமையல் செய்து கொண்டிருந்ததை கண்டாள் பூரணி 

வித்தியாசமான நறுமணம் மூக்கைத் துளைத்தது. டிவி தொடர்களை விட இவை சுவாரஸ்யமாய் இருப்பதாக எண்ணி, அன்று முதல் அவர்கள் சமையலை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள் பூரணி

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான குழம்பு வறுவல் பொரியல் என அமர்க்களப்படுத்தினர்

அவ்வப்போது இரவு வேலைகளுக்கிடையே இந்த வேடிக்கைக்கு என இடைவெளி விட்டுக் கொண்டாள் பூரணி 

அடுத்த நாள் மதிய நேரம் வேலைகள் ஒழிந்து, பூரணி ஓய்வாக புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த போது, “அக்கா… அக்கா” எனக் குரல் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். எதிர்வீட்டு சித்தாள் பெண்களில் ஒருத்தி நின்றிருந்தாள்

இவள் தான் அவர்களில் இளையவளாகவும் சுட்டியாகவும் தென்பட்டதால், எளிதில் அடையாளம் கண்டு கொண்டாள் பூரணி 

‘ஏன் இன்னும் கவிதாவோ அத்தையோ வெளியில் வரவில்லை? இவள் வெகுநேரம் குரல் கொடுக்கிறாளே?’ என யோசித்தபடி கீழே இறங்கி வந்தாள் பூரணி

“அக்கா, உங்க வீட்ல அம்மி இருக்கா? மீன் குழம்புக்கு மசாலா அரைக்கணும். கொஞ்சம் அரைச்சுக்கட்டுமா?” என பவ்யமாக கேட்டவளிடம், மறுக்க மனம் இல்லாமல் வீட்டின் பின் பக்கத்திற்கு அழைத்துச் சென்றாள் பூரணி

தோட்டத்தில் தான் அம்மிக்கல் போடப்பட்டிருந்தது. அதை அவர்கள் பயன்படுத்துவதே இல்லை. விசேஷ நாட்களில் மட்டும் மாமியாரின் வற்புறுத்தலினால், பூரணியோ கவிதாவோ அம்மிக் கல்லை கழுவி மஞ்சள் குங்குமமிட்டு மலர்சூட்டி வழிபடுவர். அது மாமியார் வீட்டு குல வழக்கமாம்

அந்தப் பெண் அம்மிக்கல்லை நன்றாக சுத்தம் செய்தபின், தான் கொண்டு வந்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து அரைக்கத் தொடங்கினாள்

‘அதிகளவு சேர்த்த மிளகாய் அவள் கைக்கு எரிச்சலை அளிக்கவில்லையா?’ என்ற ஐயம் பூரணிக்கு எழுந்தது. ஆனால் அவள் முகத்திலோ எரிச்சலின் சாயல் துளியளவும் இல்லை. மெல்லிய பாடலுடன் அரைத்தது, அவள் அதை ரசிப்புடன் செய்வதை உணர்த்தியது  

“ஏம்மா,  உன் பேரென்ன?”  எனக் கேட்டாள் பூரணி

“மல்லிகா’ங்க, என் வூட்டுக்காரு மல்லி மல்லினுக் கூப்பிடுவாரு. ஏன்க்கா… நீங்க அம்மீல அரைக்க மாட்டீங்களா. இப்படிப் பாழாய்க் கிடக்குது பாருங்க” என்றாள்

“அய்யய்ய… என்னாலலாம் அம்மீல அரைக்க முடியாது. எனக்குப் பழக்கமும் இல்ல. அதோட உன்னப் பாரு.  இப்ப மொளகா அரைச்சதுல எவ்ளோ எரிச்சல் எடுக்கும் உனக்கு. எப்படித் தான் தாங்கறியோ? இதெல்லாம் தேவையா?” என்ற பூரணியிடம்

“எரிச்சலா? என்றபடி கலகலவென சிரித்தாள் மல்லிகா

“ஏன்க்கா என் மனசு, உடம்பு முழுக்க என் வூட்டுக்காரரோட பாசம் ஓடும் போது, எனக்கு எப்படி கைவலி இல்ல எரிச்சல் இருக்கும்? இந்த மசாலாப் போட்டு மணக்க மணக்க நான் வெக்கிற குழம்ப அவுரு சப்புக் கொட்டி சாப்பிடும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என வெட்கத்துடன் கூறினாள்

“இதுல நான் அரைக்கும் போது மனசார அவர நினைச்சுக்குனுல அரைக்கறேன். என் பாசத்தோட வாசமும் சேர்ந்துல குழம்புல மணக்கும். அப்புறம் எரிச்சலுக்கு எங்க எடம்? ரொம்ப டாங்க்ஸ்க்கா. அவளுக எல்லாம் கடைத் தூளயேப் போட்டுக்கறேன்னு சொன்னாளுங்க. நான் தான் கேட்டுப் பார்ப்போமேன்னு வந்தேன். சரி நான் வர்றேன்க்கா” என விடை பெற்றாள்.

“யாருக்கா அது?” என்றபடி உள்ளே வந்தாள் கடைக்குச் சென்றிருந்த கவிதா. விவரம் சொன்னாள் பூரணி. மாமியார் தூங்கிக் கொண்டிருந்தார் உள்ளே நடந்தவை அறியாமல்.

மேலே வந்து நாற்காலியில் அமர்ந்த பூரணியின் எண்ண அலைகள் பின்னோக்கி நகர்ந்தன. மல்லிகா பேசியதை அசை போட்டாள். 

‘வூட்டுக்காரரு பாசம்’ என்று அவள் கூறியது அவள் மொழி. இவள் புரிந்துக்  கொண்டது அவர்களுக்குள்ளான  அந்நியோன்யத்தின் அடிப்படையாம் காதலை, அந்த உணர்வையே அவள் அடியோடு மறந்து விட்டதுப் போன்ற குற்றஉணர்வில். தவித்தாள் பூரணி 

பதினான்கு வருடங்களுக்கு முன்பு திருமணமானப் போது மிதமிஞ்சிய இன்ப உணர்வுகளோடு கணவனுடன் திளைத்த நாட்களில் மேலோங்கியிருந்த காதல் உணர்வு படிப்படியாக குறைந்து, வருடங்கள் வளர தேய்ந்து இப்போது மறைந்தே போய் விட்டதை உணர்ந்தாள்

அதற்கு தான் மட்டுமே குற்றவாளியல்ல என்பதையும் அவள் அறிவாள். கணவனது பாராமுகம்   நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதையும் அவள் உணராமலில்லை.  

இவர்கள்  இப்போது அதிகபட்சம் பத்து வாக்கியங்களை மட்டுமே தினமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் உணவுப் பரிமாற்றம் இவள் பக்கமிருந்து பணப் பரிமாற்றம் அவனிடமிருந்து

நடப்பு உறவோட்டத்திற்கு ஆதாரம் பிள்ளைகள். பேச்சு வார்த்தையின் அடிப்படையும் அவர்களே.  அன்புப் புதுப்பித்தலை அவளுள் எழுப்பியது மல்லிகாவின் பேச்சு

மல்லிகாவை விட அழகில் குறைந்தவள் இல்லை பூரணி. உண்மையிலேயே பூரணி அழகிய தோற்றம் கொண்டவள். 

அவளது கருவண்டு கண்களும் சுருண்டு நீண்ட தலைமுடியும் களையான தோற்றமும் அரவிந்தனை அவளது தாசாதித் தாஸனாகக் கட்டி வைத்தது

பூரணியைச் சுற்றி சுற்றி வந்த அந்த அரவிந்தன் தான் இப்போது பாராமுகமாய் இருக்கின்றான். இவர்களது காதல் கசந்ததன் காரணம் அறிய முடியவில்லை அவளுக்கு.

திருமண புதிதில் அவள் மேல் கொண்ட காதல், உணவின் சுவையை அறியவில்லை. அவள் கையினால் அளிக்கப்பட்ட அத்தனையும் அமுதும் தேனுமாய் இனித்தது அவனுக்கு

ஆனால் இப்போதோ, வெளியுணவில் மட்டுமே மோகம். இவள் சமைக்காமல் இருந்தால் அதுவே அவன் அதிர்ஷ்டமாய் உள்ளது.

கண்ணாடி முன் நின்ற பூரணி, தன் தோற்றத்தை கண்டு திடுக்கிட்டாள். கண்ணாடி முன்பு இரு நிமிடங்களே செலவிடுகிறாள் இப்போதெல்லாம். வெளியில் செல்வதானால் மட்டும் அதிகபட்சம் பத்து நிமிடம் 

இப்போது தான் தன்னை நன்றாகக் கவனித்தாள். முப்பத்தேழுக்குரிய தோற்றம் ஐம்பதாகக் காட்டியது. உடல் பருமன் கூடாவிட்டாலும் தோல் சுருக்கம் வயதைக் கூட்டியது. தனது வசீகரத்தைத் தொலைத்து விட்டு கணவனைக் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை

தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொண்ட நாட்கள் அவள் மனக்கண் முன் வந்து சென்றன. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடுவதாக எண்ணி, தன்னவனுடனான மணித்துளிகள்  நாட்கள், மாதங்கள், வருடங்கள் என்னும் வெள்ளமாய் பெருகி காலமென்னும் கடலில் வீணாய் கலந்துக் கரைந்ததை எண்ணி வருத்தம் கொண்டாள்

இனியும்  இந்நிலைத் தொடராமல், காதலெனும் பேராற்றல் துணைக் கொண்டு கணவனை  தன்னுள் மீண்டும் கட்டுற  தீர்மானித்து பீரோவின் மேல்தட்டில், தன்னால்  வருடக் கணக்காக புறக்கணிக்கப்பட்ட அவங்காரப் பெட்டிப் பேழையை எடுத்து வாஞ்சையுடன் தடவினாள் 

அது அவள் கணவனால் ஆசையாகப் பரிசளிக்கப்பட்டது. அழகியான பூரணியின் அழகைப் பூரண பௌர்ணமியாய் ஒளிரச் செய்து அவன் அவ்வொளியில் மூழ்க 

அன்றைய தினம் அலுவலகத்தில் ஏனோ வேலையே ஓடவில்லை அரவிந்தனுக்கு. கோப்புகளை எத்தனை முறைப் புரட்டினாலும், எந்தவொரு முடிவையும் எடுக்க முடியவில்லை அவனால்

என்றும் புன்னகையுடன் காட்சி தரும் அரவிந்தன் சிடுசிடுத்தவாறு இருப்பதைக் கண்டு அதிசயித்த தீப்தியும் அவனை நெருங்காமலே இருந்தாள். ஆனால் க்ளையண்ட் ஒருவருக்கு உடனடியாக பதில் கூற வேண்டியிருந்ததால் அரவிந்தனை அணுகினாள் தீப்தி

என்றுமே தூக்கலான ஒப்பனையுடன் வலம்  வரும் தீப்தியின் ரசிகர் மன்ற தலைவனே அரவிந்த் தான்.  இப்போது என்று இல்லை.  எப்பொழுதுமே அவன் அழகை ஆராதிப்பவன். 

அதனாலேயே தனது தாய் பல பெண்களை தனதுத் திருமணத்திற்காக பார்த்த போது,  அவன் உடன் செல்லவில்லை.  அவர்களை மறுத்து அவர்கள் மனம் நோக அவன் விரும்பவில்லை.  

இறுதியாக தனது தாய் காண்பித்த பூரணியின் புகைப்படத்தைக் கண்டதும் வசீகரிக்கப்பட்டு, அவளை நேரில் கண்டு அவளை தன்பால் ஈர்த்து, தான் அவளிடம் வீழ்ந்தான், அன்பாய் மணந்தான்.  

அப்படிப்பட்டவன் இப்போது  இன்றுத் தன்னெதிரில் சௌந்தர்ய வலை வீசியவளின் கண்வீச்சை கூர்மையாய் எதிர் கொண்டான். பார்வைத்தணல் சுடவே, சூழல் உணர்ந்து வெளியேறினாள் தீப்தி அவன் அறையினின்று

தனது குழப்பத்தின், கோபத்தின் காரணம் பூரணி. சில நாட்களாக, அவளது நடவடிக்கைகள் மர்மமாக இருப்பதாய் உணர்ந்தான்

நேற்று கூட அவன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய போது அவள் வேலையில் ஒரு கண்ணும் ஹால் ஜன்னலில் ஒரு கண்ணுமாக, சமையலறைக்கும் ஹாலுக்கும் இடையே ஓட்டப் பந்தயம் ஓடி அவனுக்குக் கண்ணாமூச்சிக் காட்டினாள். இது ஒரு வாரமாக தினசரி நிகழ்வாக உள்ளது

அப்படி அவளை இழுக்கும் காந்தம் எதுவாக இருக்கும் என அறியாமல் தான் இந்த குழப்பம்… ஆத்திரம் எல்லாம். 

‘இருக்கட்டும் இருக்கட்டும்… இதற்கு இன்று முடிவு கட்டுகிறேன்’ என கறுவிக் கொண்டு, கோபத்தைக் கிக்கரில் காண்பித்து வீட்டை நோக்கி வண்டியில் சீறினான்

வீட்டில் பிள்ளைகள் இருவர் மட்டுமே இருந்தனர் 

“எங்க உங்கம்மா?” எனக் கேட்டான்.

“அப்பா, அம்மா பக்கத்து வீட்டு மஞ்சு ஆன்ட்டி கூட மேல்மருவத்தூருக்குப் போயிருக்காங்க. மத்தியானம் தான் கிளம்பினாங்கனு கவிதா சித்தி சொல்லி எங்கக்கிட்ட  சாவிக் கொடுத்தாங்க.  டிபன்லாம் பண்ணி வெச்சுட்டு தான் போயிருக்காங்க. நாங்க சாப்டோம்ப்பா, உங்களுக்கு எடுத்து வெக்கட்டுமா?” எனக் கேட்க மகளிடம்

“நான் பார்த்துக்கிறேம்மா, நீ போய்ப் படி” என்றான் அரவிந்தன் 

இது போல் எத்தனையோ முறை பூரணி கோயிலுக்கோ,  ஷாப்பிங் செல்வதற்கோ பக்கத்து வீட்டுத் தோழியரோடு செல்வது வழக்கம் தான்

தனது தாய் வீட்டிற்கு செல்லும் போது மட்டுமே தன் துணை நாடுவாள்.  இது வழக்கம் என்பதால் அவனும் கண்டுக்கொள்ள மாட்டான். ஆனால் இன்று ஏனோ அவள் இல்லாத வெறுமை அவனை ஏதோ செய்தது. 

உடனே, இது தான் சந்தர்ப்பம் அவளது மர்ம செய்கையின்   காரணமறிய என மனம் சொன்னது . நேராக ஜன்னலருகே சென்றவன் திரை நீக்கி தாள் திறந்தான். இதமான தென்றல் முகம் வருட பார்வையை சாலையில் செலுத்தினான். 

பூரணத்தை நெருங்க முயலும் நிலவின் இருண்ட பாதியை மேகம் மறைக்க, ஒளிர்ந்த பாதி நிலவொளியில் அவன் கண்ட காட்சியின் உறுப்பினர்களாக மல்லியும் அவள் கணவனும் இரு குழந்தைகளும் தோன்றினர்.

கட்டுமானத்திற்காக குடிசைகள் போடப்பட்டிருப்பது அவன் அறிந்த ஒன்று தான். ஒன்றன்பின் ஒன்றாக குடிசைகள் அமைந்திருக்க, இந்தக் குடும்பத்தினர் முதலாமவராகக் குடியிருந்ததால் அவர்களின் குடித்தனமே இவர்களின் ஐன்னலிலிருந்துத் தெரிகிறது போலும். 

இரவு நேரப் புழுக்கம் போக்கவே இவர்கள் குடிசை வாசலை நித்தமும் தஞ்சம்  கொள்வார்கள் போல. குழந்தைகள்  ஆளுக்கொருவராக தாய் தந்தை மடியில் படுத்துறங்க,  கணவன் மனைவி இருவரும் காதல் மொழிப் பேசிக் கொண்டிருந்தனர். 

அவர்கள் பேசுவதுக் கேட்காவிட்டாலும், அவர்கள் கண்களும் உதடும் அரவிந்தனுக்குப் பொருள் உணர்த்தின. காளிதாஸனின் காதல் நாடகத்திற்கிணையான அவர்கள் காதலில், துளியும் விரசம் இல்லை. 

அன்பு மட்டுமே இருந்தது. இந்த அன்புப் பரிமாற்றத்தைத் தான்  பூரணி அவ்வப்போதுக் கண்ணுறுகிறாள்  என்பதை அறிந்துக் கொண்டான் அரவிந்தன். அவர்கள் தங்கள் காதலைத் தொடரட்டும் என நினைத்த படி ஜன்னல் கதவை சாத்தினான்.  

மனம் முழுக்க எண்ண அலைகள் மோத, உந்தப்பட்ட உணர்வுகள், பூரணி மீதான பழைய காதலைக் கிளறத் தொடங்கின

இந்த நினைவுடனே  இன்கம்டாக்ஸ் சம்பந்தமாக சில கோப்புக்களைத் தேடிய போது, திருமண ஆல்பம்  கண்ணில் பட்டது. எடுத்துப் ளைப் புரட்ட புரட்ட, ஆல்பம் முழுக்க இனித்தது இருவர் காதல்

திரும்ப வைக்கும் போது, கையோடு உறவாடின கால் கொலுசுகள். திடுக்கிட்டுப் போனான் அரவிந்தன்

அழகிய வர்ண வேலைப்பாடுகள் அமைந்த இரண்டடுக்குக் கொலுசு அது. திருமணப் புதிதில், மிக மெல்லிதான  ஒற்றைச் சலங்கைக் கொலுசு அணிந்திருந்தவளிடம், ஜல் ஜில் ஒலி ஒலிக்க அதிகச் சலங்கைகள் கொண்ட இந்த  கொலுசை வாங்கிக் கொடுத்து, அவள் அதை அணிந்து வரும் அழகைக் கண்டு ரசித்தான்.

ஆனால் ஒரே வருடத்தில் நிலை மாறியது. அலுவலக அழுத்தத்தில் இருந்தவன் அருகே, ஆசையின் பேரொலியோடு இவள் வர, கோபத்தில் மூர்க்கமானவனின் சுடுசொற்கள் அவளைத் தாக்க, கொலுசுகளின் ஒலியை அறவே வெறுத்து ஒழித்தாள்

அவ்விதம் பன்னிரண்டு ஆண்டுகளாக ஓய்வுப் பெற்ற கொலுசுகள், இவ்விதம் கறுத்துக் கிடக்கின்றன. அவைகளை அப்படியே தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டான்.

‘எங்கே தொலைந்தது எங்கள் காதல்? வசீகரத்தை நாங்கள் இருவருமே தொலைக்கவில்லை.  பார்ப்பவர்கள் எங்கள் இருவரின் தோற்றத்தைப் பாராட்டத் தவறியதில்லை. ஆனால் பேச்சு தான் தொலைந்தது. இருவரிடையே தொலைந்த உரையாடல் காதலைக் களவாடி விட்டது

இன்று பூரணியின் சமையலைக் குறை கூறும் நாம் தான் அன்று நண்பர்களின் உணவை குறை கூறி கேலி செய்தோம். காதல் தலைக்கேறியதால் எழுந்த கேலி அது

மனம் பலவாறாக பின்னோக்கி பயணித்துப் பிராயசித்தம் தேடியது. இதோ அவள் வந்து விட்டாள் என மனம் அறிவித்தது. அவளது பிரத்யேக மணத்தை மனம் அறிந்ததால்

எக்கணமும் அவனுள் ஆழ்ந்திருக்கும் அவளின் காதலை இத்தருணம் உணர்த்தியது. இருவரின் பார்வையும் இப்போது ஒரே நேர்கோட்டில். குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்தது. தலைக் கவிழ்ந்தனர், காதலை மறந்த தவறுணர்ந்து

அவசரமாய்  தன் தலைசூடிய ஜாதிமலர் சரத்தைக் கழற்றி ஜன்னலோரமாய் வைத்தாள் பூரணி. பொருளுணர்ந்தவன் புழுவாய்த் துடித்தான்

பூரணியின் அழகின் அடையாளமாய் அவன் கண்டதே நீண்ட பின்னலை மறைக்கும் மூன்று முழ மலர்ச்செண்டு தான். அதன் தூக்கலான மணம் நெடியேற்றினாலும், காதலின் வீரியம் காரணமாய், அவன் கரம் நித்தம் அவள் கூந்தலை கற்றையான மலர்ச்செண்டு கொண்டு அலங்கரித்தது

அளவு மீறினால் அமுதமும் நஞ்சாக, கொஞ்ச கொஞ்சமாகக் கசந்த காதலும் கரை கண்டது. அதன் பிரதிபலிப்பு எதிலும் தெரிந்தது. பாவம் மலரையும் விடவில்லை அவனது நிராகரிப்பு. 

ஒருநாள் வழக்கம் போல் தான் சூடியப் பூவுடன் கணவனை வரவேற்ற பூரணி, அவனது அன்றைய மன நிலையைக் கணிக்கத் தவறினாள். கோபம் தலைக்கேறியவனின் உஷ்ணத்தை மலரின் மணம் அதிகரிக்கவே, வெறுப்பை உமிழ்ந்தான் பூரணியிடம்

அன்று முதல் வாசனைப் பூக்களுக்கு விடுப்பளித்தாள். அன்று முதல் இன்று வரை ரோஜாவை மட்டுமே அனுமதிக்கிறாள், தலைவீட்டில் குடியேற

அன்றைய காலை உணவு மூவருக்கும் விருந்தாக அமைந்தது. வழக்கமான தேங்காய் சட்னி அன்று வித்யாசமாய் இருந்தது. குழந்தைகளுக்குப் புதிர், ஆனால் அரவிந்தனுக்கு அவள் காதல் புரிந்தது.

அம்மிக் கல்லின் வாசம் வசம் தந்த சுவை அதுவென உணர்ந்தான். பார்வையால் விடை பெற்றான். எதிரில் தென்பட்டவளின் மாற்றம் உணர்ந்தான்

விழித்திரையில் விழுந்த பூரணி, மனத்திரையில் நுழைந்து உடலின் ஒவ்வொரு செல்லிலும் நிறைந்தாள். அது காதல் தந்த இன்பம் என உணர்ந்து, ‘மீட்டேன் என் காதலை’ என அலுவலகம் சென்றவன் எதிரில் தென்பட்ட நங்கையர் அனைவரும், புகைமூட்டமாய் தென்பட்டு மறைந்தனர்

தீப்தியின் தேன்குரல் அவனை எட்டவில்லை. அஞ்சன விழி கொண்டு அவள்  எழுப்பும் கேள்விக் கணைகளும் அவனைத் தாக்கவில்லை. எங்கும் எதிலும் பூரணி நிறைந்திருந்தாள்

மெருகேற்றப்பட்ட  வெள்ளிக் கொலுசுடனும்  அடர்த்தியான சாதி மலர்ச் செண்டுடனும் அவள் மீதான தீராக் காதலுடனும் வீடு நோக்கி விரைந்தான்

வீட்டில் அவள் புகைப்பட ஆல்பத்தில் மூழ்கி இருந்தாள். கையில் வைத்திருந்த புகைப்படத்தில், ஊட்டிக்கு சென்றிருந்த போது உச்சி முதல் பாதம் வரை பரவியிருந்த காதலின் நெருக்கத்தை, தங்கள் முகத்தில் பெருக்கெடுத்து அழகாய் போஸ் கொடுத்திருந்தனர் அரவிந்தனும் பூரணியும்

எத்தனை முறை பார்த்தாலும், அவளுக்குக் கீழே வைக்க மனம் வராது. அப்போது இதழ்கள் தாமாக ஒரு பாடல் வரிகளை முணுமுணுக்கும், அதைக் கேட்டு ரசிப்பான் அவள் ரசிகன்

பல வருடங்கள் கழித்து இப்போது அவள் கையில் குடியேறியிருந்தது அந்த புகைப்படம்.  

பாட்டு…. இதோ ஒலிக்கிறது மெதுவாக… “சிவந்த இதழில் ஒரு நகையை அணிந்துக் கொண்டு… விரிந்த புருவங்களில் அழகைச் சுமந்துக் கொண்டு…. எனது மடியில் ஒரு  புதிய கவிதை சொல்ல வாராயோ… நீ வருவாய் என நான் இருந்தேன்”

அவள் கண்மூடி பாடி கண் திறந்ததும், எதிரில் நின்றிருந்தான் அவன். தனிமையில் அவர்கள், கரைப் பொங்கிய காதலின் துளிகள் விழிநீராய் விழுந்தன இருவர் கண்ணிலும் 

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி. பேச மறந்து சிலையாய் நின்றால்… பேச மறந்து சிலையாய் நின்றால்… அது தான் தெய்வத்தின் சன்னதி… அது தான் காதலின் சன்னதி…

ஆதலால் காதல் செய்வீர்… அதை சொல்லத் துடிக்குது மனசு…

        

#ad

      

        

#ad

       

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கோலாப்பூர் மஹாலக்ஷ்மி தரிசனம் – ✍ பானுமதி வெங்கடேஸ்வரன்

    காமராசர் வழியில் நான் (கவிதை) – ✍ கலைவாணி சுரேஷ்பாபு, துபாய்