in

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் ❤ (சிறுகதை) – ✍ சல்மா அம்ஜத் கான்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் ❤ (சிறுகதை)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“போதும்டி. இன்னும் எவ்வளவு நேரம் நிலத்தை அளந்துகுட்டு இருப்ப. கொஞ்சம் சீக்கிரம் நட. பஸ் போயிற போது.” என சலித்துக் கொண்டே அஞ்சலியின் கையை பிடித்து இழுத்து சென்றாள், பிரேமா. 

பிரேமா இழுத்துக் கொண்டு சென்றாலும் அஞ்சலியின் மனம் ஏனோ தவித்துக் கொண்டிருந்தது. இன்று நடக்கப்போகிற நிகழ்ச்சியை எண்ணி கவலையில் ஆழ்ந்து இருந்தாள். 

தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் நிலையை எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டாள். கண்களில் இருந்து வெளிவர துடிக்கும் கண்ணீரை தன் கீழுதட்டை பற்களால் அழுத்தி கட்டுப்படுத்திக் கொண்டாள். 

“பாரு. உன்னால பஸ் போயிடுச்சு. அப்படி என்னடி உனக்கு? காலைல இருந்து மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே சுத்திக்கிட்டு இருக்க. கிளாஸ் கவனிக்கிறது இல்ல. பேசினா பதில் இல்லை. வெளியே வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்க. அப்படி என்னதான் உன் பிரச்சனை? சொன்னா தானே தெரியும்” 

அப்பொழுதும் அஞ்சலி மௌனம் காக்க பிரேமாவிற்கு கோபம் உள்ளிருந்து பொங்கியது. 

“நீ எல்லாம் ஒரு ஆளுன்னு உன்கிட்ட கேட்டேன் பாரு. நீ சொன்னா என்ன? சொல்லாட்டி என்ன? எனக்கு எதுவும் தேவை இல்லை.” என முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“இன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வராங்க.” என்ற அஞ்சலியின் குரல் உடைந்து இருந்தது. 

கண்களின் ஓரத்தில் நீர் துளிகள் கசிய தொடங்கியது. அது அவளது கன்னத்தை உரசி செல்லும் முன்னே கைகளால் துடைத்துக்கொண்டாள். 

ஒரு பெருமூச்சுடன் அஞ்சலியை பார்க்க, “நல்ல விஷயம்தானே. இதுல வருத்தப்பட என்ன இருக்கு. படிப்பும் இன்னும் ஆறு மாசத்துல முடிஞ்சுரும். அப்புறம் மேரேஜ் சூப்பர் தானே. லைஃப்ல எப்படியோ செட்டில் ஆயிடுவ.” 

“என்னை பத்தி தெரிஞ்ச நீ இப்படி சொல்லலாமா பிரேமா. என்னோட வலி உனக்கு கூட தெரிய மாட்டேங்குதுல.” 

“இதுல வலி எங்கே இருந்து வந்தது. நீ ஒருத்தன ஒன் சைடா லவ் பண்ணிக்கிட்டு இருந்த. சாரி… சாரி… லவ் பண்ணிக்கிட்டு இருந்தன்னு சொல்லக்கூடாது. சைட் அடிச்சிட்டு இருந்த.அவ்ளோ தானே.” 

“என்னடி இப்படி அசால்டா சொல்லிட்ட.” 

“பின்ன என்னடி. என்ன சொல்ல சொல்ற. சொல்லு. லைலா மஜ்னு காதலை மறந்து கல்யாணம் பண்ற மாதிரி பெருசா பில்டப் கொடுக்கிற. அந்த எய்த்த கண்ஸ்ட்ரக்ஷன்ல இருக்குற பையன ரெண்டு வருஷமா சைட் அடிச்சுட்டு இருக்க. அவ்ளோ தானே. ஆனா நீ சைட் அடிக்கிறது கூட அவனுக்கு தெரியாது. முதல்ல அவன பத்தி ஏதாவது உனக்கு தெரியுமா?” 

அஞ்சலி பதில் எதுவும் சொல்லாமல் தலையை குனிந்து இருந்தாள். 

“ஏன் இங்கயும் பொண்ணு பாக்க வராங்களா? கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து சொல்லு. அவன் பேர் என்ன?” 

குனிந்த தலை நிமிராமல் தெரியாது என தலையை மட்டும் ஆட்டினாள். 

“அவன் இங்க கம்பெனி வச்சுருக்காங்குறத தவிர எதுவும் தெரியாது. அப்படித்தானே. ஆனா ரெண்டு வருஷமா அவர லவ் பண்றீங்க.” 

“இந்த மாதிரி ஒரு பொண்ணு அவரை சைட் அடிக்குதுன்னு என்னைக்காவது நிமிர்ந்து அவர் உன்னை பார்த்து இருக்காரா?” 

இல்லை என குனிந்த தலை நிமிராமல் தலையை ஆட்டினாள். 

“முதல்ல இந்த பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுறத நிப்பாட்டு.” 

“அது எப்படி, உனக்கு அவர் பேர் தெரியாது. ஆனா நீ அவர காதலிக்கிற. உன்னை மாதிரி ஒரு பொண்ணு இருக்கிறதே அவருக்கு தெரியாது. ஆனா என்னமோ லைலா மஜ்னு காதல் தோத்து போனமாதிரிமாதிரி ரொம்ப பீல் பண்ற.” 

இம்முறை அஞ்சலியையும் மீறி அவள் கண்ணீர் அவளுடைய கன்னத்தை உரசி சென்றன. தன் கன்னத்தை துடைத்து விட மனமில்லாமல் நிமிர்ந்து பார்த்தாள். 

ஏ.கே கன்ஸ்ட்ரக்ஷன் என்ற அந்த சிறிய ஆபிஸில் கண்ணாடி கதவின் வழியே நீலநிற சட்டையுடன் கணினியை பார்த்துக்கொண்டிருந்த அவனை கண்கொட்டாமல் பார்த்தாள். 

“போதும்டி பார்த்தது. இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்த பார்வை பரிமாற்றம்.” 

“என்னால முடியலடி.” 

“என்ன முடியல. ஒருத்தன காதலிச்சா அந்த காதலை சொல்ல தைரியம் வேணும். காதலை சொல்ல தைரியம் இல்லாத நீ எல்லாம் எதுக்கு காதலிக்கிற.” 

“ஒருவேளை அவன் என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டா?” 

“ஆவுன்னா எல்லாரும் இந்த டயலாக்க சொல்லிருவீங்களே. எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. உனக்கு அவர புடிச்சிருக்கு அவருக்கும் உன்னை தான் பிடிக்கனும்னு நினைக்கிறது முட்டாள்தனம். உன் காதலை சொல்லி பாரு.ஒருவேளை அவனுக்கும் உன்னை பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்படி இல்லாட்டி அவர விட்டு விலகிரு.” 

“என்னாலே எப்படி அவர விலக முடியும்.” 

“அப்போ இப்ப மட்டும் மேடம் என்ன பண்ண போறீங்க? அதான் வீட்டுக்கு பொண்ணு பாக்க வராங்கல. போய் அந்த மாப்பிள்ளையை பார்ப்ப. எப்படியும் உங்க அப்பா அம்மா ஓகே சொல்லுவாங்க. நீ உன் அப்பா அம்மா என்ன சொல்லுவாங்களோன்னு அவங்க கிட்டயும் எதுவும் சொல்ல போறதில்ல. கடைசில அப்பா அம்மா சந்தோசத்துக்காகன்னு எப்படியும் அடுத்தவனுக்கு கழுத்தை நீட்ட தானே போறே.” 

“நான் யாருக்கும் கழுத்தை நீட்ட போறதுல. கல்யாணம்னு ஒன்னு பண்ணினா அது அவர தான்.” 

“அவனைத்தான் கல்யாணம் பண்ண போறியா நீ?” 

“ஆமா?” என்றாள் உறுதியாக. 

“அந்த அவருக்கு பேர் என்னமா?” பிரேமாவின் கேள்வியில் உடைந்து போனாள் அஞ்சலி. 

“தெரியாது.ஆனால் தீராக்காதல். இது உனக்கே அபத்தமா தெரியலையா. அவனோட பேர் கூட தெரியாம இரண்டு வருசமா எந்த நம்பிக்கையில் நீ காதலிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு திரியற? ஒழுங்கா அவன்கிட்ட போய் பேசு. அப்படி இல்லையா அவனை மறந்துட்டு உன்னை பார்க்க வர பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்கிட்டே இரு. சும்மா உன்னை நீயே ஏமாத்திக்கிட்டு கடைசியா வாழ்க்கையில தோத்துட்டு  நிக்காத.”என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களின் முன் ஒரு பல்சர் வந்து நின்றது. 

தங்களுடைய பேச்சு சுவாரஸ்யத்தில் மூழ்கியவர்களை உரசி சென்று நின்ற அந்த வண்டியின் சத்தத்தில் பிரேமாவும் அஞ்சலியும் ஒரு அடி பின்னால் சென்று பயத்துடன் தன் முன்னே இருந்த அவனை பார்த்தனர். 

தலையில் ஹெல்மெட் உடன் நீல நிற சட்டை கருப்பு நிற ஃபார்மல் பேண்டுடன் வண்டியை முறுக்கிய வண்ணம் நின்றிருந்தவன் தன் இடது கையால் ஹெல்மெட்டை கழட்டி பெட்ரோல் டேங்க் மேலே வைத்தான். 

மீண்டும் வண்டியை முறுக்கிக்கொண்டு, “வண்டியில ஏறு. ” என்றான், கண்களில் கோபம் கொப்பளிக்க. பிரேமாவும் அஞ்சலியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பிரேமா அவனை நோக்கி ஒரு அடி முன்னே வந்தாள். 

“ஹலோ என்ன….” என பிரேமா பேச ஆரம்பிக்கும்போதே திரும்பி பிரேமாவை முறைத்தவன், 

“நான் உன்கிட்ட பேசினேனா?” என கறாரான குரலில் அவன் கேட்க அவள் திரும்பி அஞ்சலியை பார்த்தாள். அஞ்சலியும் பயத்தில் வெலவெலத்து இருந்தாள்.  

அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருக்க அவனோ அஞ்சலியை பார்த்து, “உன்னை தான் சொன்னேன். வண்டியில ஏறு.” என சொல்லிவிட்டு முன்னே திரும்பி மீண்டும் வண்டியை முறுக்கினான். 

அவளோ கண்களை அகல விரித்து நடப்பதை உணர முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, அவளை நோக்கி திரும்பினான். 

“என்ன முழிக்கிற என் மேல நம்பிக்கை இருந்தா, வண்டில ஏறு.” என அவளை காணாதவாறு முன்னே திரும்பினான். அதுவரை முழித்துக் கொண்டிருந்தவள், அவனின் வார்த்தைகளை கேட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். 

பிரேமாவும் என்ன நடக்கிறது இங்கே என்ற பாவனையில் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“அஞ்சலி நீ என்ன பண்ணிக்கிட்டு…” என்றவளின் பேச்சு காற்றில் கரைந்து போனது. 

அவள் பேச ஆரம்பிக்கும் போதே அவன் வண்டியை கிளப்பி இருந்தான். 

எவ்வளவு நாள் கனவு. இவனுடன் இப்படி செல்ல வேண்டும் என்று. இன்று அது நடக்கும் பொழுது கனவா நினைவா என்பதை அவளால் யூகிக்க முடியவில்லை. கனவாக இருந்தால் இந்த கனவிலாவது அவனுடன் சேர்ந்து வாழ்ந்து விடலாம் என, யோசிப்பதில் நேரம் கடத்துவதை விட்டுவிட்டு இந்த அழகிய நொடிகளை அனுபவிக்க எண்ணினாள், அஞ்சலி. 

அவனோ அஞ்சலியின் மேல் கோபம் இருந்தாலும் கண்ணாடி வழியே அவளை ரசிக்க மறக்க வில்லை. 

ஒரு ஸ்பீட் பிரேக்கில் வண்டி ஏறி இறங்க “ஆஆஆ…” அஞ்சலியின் என்ற குரலில் சடன் பிரேக் போட்டான். 

“என்னாச்சு…?” என பதட்டத்துடன் அவன் பின்னால் திரும்பி கேட்டான். 

“அது… ஸ்பீட் பிரேக்ளா வண்டி ஏறும் போது பேலன்ஸ் இல்லாமல் ஃபுட் போர்ட்ல இருந்த கால் ஸ்லிப் ஆயிடுச்சு.” அவள் திக்கி திணறி கூறினாள். 

“ஏன் அப்படி ஸ்லிப் ஆகுற மாதிரி உட்கார்ர. புடிச்சுக்க வேண்டியதுதானே. புடிச்சிகிட்டா என்ன குறைஞ்சா போய்டுவ. அப்படி நம்பிக்கை இல்லாட்டி எதுக்கு வண்டியில ஏறுன” என அவன் நம்பிக்கையை பற்றி பேச, உடனே தனது வலது கையை அவன் வலது தோளில் வைத்தாள். 

அவளுடைய திடீர் செய்கையில் மனம் மகிழ்ந்த அவன் மூஞ்சியை விறைப்பாக வைத்துக்கொண்டு, அவனுடைய தோளில் இருந்த அவளது வலது கையை தன் வலதுகையால் எடுத்தவன் பின் வழியாக கீழே இறக்கி தனது இடது கைக்கு மாற்றி அவனது இடுப்பின் வழியே அவனது வயிற்றில் அவளுடைய கையை வைத்து அழுத்தினான். 

அவளின் கைகளில் இருந்த மென்மை அவனுக்கும் வந்ததோ என்னவோ, மென்மையாய் அவளது கையை வருடியபடி மெல்லிய புன்னகையுடன் கண்ணாடி வழியே அவளை பார்த்தான். 

அவன் கைவிரல்களின் ஸ்பரிசம் அவளுக்கும் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கண்களை மூடியவள் இம்சையாய் நெளிய அதை உணர்ந்து சிரித்துக் கொண்டே வண்டியை மீண்டும் எடுத்தான். வண்டி எடுத்த பின் தன் கண்களை திறந்தவள் அந்த நிமிடங்களை ரசித்தவாறு அவனிடம் பேச ஆரம்பித்தாள். 

 “நாம எங்க போறோம்?” 

 “பீச்…” 

 “ஓஓஓ..” 

 அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாக “நம்ம ஊருல தான் பீச் இல்லையே?” 

 “அப்போ பார்க் போகலாம்.” 

மீண்டும் அமைதியானவள் என்ன பேச என்று தெரியாமல் சுற்றிலும் கண்கள் சுழல விட்டாள். சுற்றி இருந்த இடத்தை அப்பொழுது தான் கவனித்தாள். 

“ஐயையோ எதுக்கு இந்த பக்கம் போறீங்க. இந்த பக்கம் தான் என்னோட வீடு இருக்கு. வீட்ல யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும். நீங்க வேற பக்கம் போங்க” என அவள் கெஞ்ச, அவளின் கத்தலையும் பொருட்படுத்தாது வண்டியை அவள் வீட்டின் முன் நிறுத்தினான். 

அவள் வீட்டின் முன் வண்டி நின்றதும் கீழே இறங்கியவள் பதற்றமடைந்தாள். 

“எதுக்கு இங்க நிப்பாட்டினீங்க. யாராவது பார்த்தா பிரச்சனை ஆகிடும். முதல்ல இங்கிருந்து கிளம்புங்க. நான் எதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்” 

“எதுக்கு ஏதாவது சொல்லி சமாளிக்கணும்?” அவள் கையைப் பிடித்து உள்ளே செல்ல போக, அவள் அவனை பிடித்து இழுத்தாள். 

“என்ன பண்றீங்க?” 

“உனக்கு இப்போ என்ன பிரச்சனை? உனக்கு என்ன புடிச்சிருக்கு தானே? இல்ல சும்மா டைம் பாஸ்க்கு பாத்தியா?” கேள்வியாக அவளை நோக்கினான். 

அவன் கேள்வியில் அவனை அவள் முறைக்க, ” போதும் முறைச்சா பயந்துடுவேனா. ஒழுங்கா என்கூட வா. உன்னால தான் இவ்வளோ தூரம் ஆய்ருக்கு” என்றவன் அவள் கையை உரிமையுடன் பற்றி அவளுடைய வீட்டிற்குள் அழைத்து சென்றான். 

அஞ்சலி வீட்டிற்குள் நுழைய அதைப் பார்த்த அவள் தந்தை, “இதோ என் பொண்ணு வந்துட்டா.” என சிரிப்புடன் கூறியவர் அஞ்சலியின் கரத்தைப் பற்றி இருந்த அவனைப் பார்த்ததும் சிரிப்பு மறைந்தது. 

“யார் நீ” என்ற பாவனையில் அவனை பார்த்தார், அஞ்சலியின் தந்தை. 

என்னதான் அஞ்சலியின் கையை அவன் பற்றி இருந்தாலும் பயத்தில் அவன் பின்னால் ஒளிந்தாள். பின்னால் நின்றவளை முன்னால் இழுத்தான், அவன். 

“நீ போய் பிரஸ் ஆய்ட்டு வா” என அவன் சொல்ல, அவள் திருதிருவென முழித்தாள். 

“என்ன பாக்குற? போ.” என அவன் கட்டளை போல் கூற அவள், அவளுடைய தந்தையையும் அவளைப் பெண் பார்க்க வந்த குடும்பத்தினரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அவனைப் பார்க்க அவனோ சைகையால் ‘உள்ளே செல்’ என கூற, அவளும் அவளுடைய அறைக்கு சென்றாள். 

புன்னகையை தன் முகத்தில் சூடியவன் சோபாவில் அமர்ந்திருந்த அந்த இளைஞனை நோக்கி சென்றான். 

“சாரி பாஸ்.ஐ அம் அசோக்.” என்றவன் அஞ்சலியின் தந்தையை நோக்கி, 

“நானும் அஞ்சலியும் காதலிக்கிறோம்.” என பட்டென விசயத்தை உடைத்தான். 

“ஏய் யார் நீ ? என்ன பேசிகிட்டு இருக்க?” அஞ்சலியின் தந்தை கோபத்தில் எகிறினார். 

“என்ன மிஸ்டர் ரகுராம். கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்களா.” பெண்பார்க்க வந்தவனின் தந்தை ஆதங்கப்பட்டார். 

அவள் புறம் திரும்பிய அசோக், “என்ன மன்னிச்சிடுங்க அங்கிள். எனக்கு நீங்க பெண் பார்க்க வர்ற விஷயம் தெரியாது. தெரிஞ்சிருந்தா இவ்வளவு தூரத்துக்கு ஆயிருக்காது” என பொறுமையாக பதில் கூறினான். 

“எங்க வந்து என்ன உளர்ற.வீணா பிரச்சினை பண்ணாம போய்ரு.”கத்தினார், அஞ்சலியின் தந்தை. 

தந்தையின் கத்தலில் படபடக்க அறையை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள், அஞ்சலி. அவள் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. 

மாப்பிள்ளையாக வந்தவனோ, “உங்களுக்கு தெரிந்திருக்காது. அவங்களாவது முன்னாடியே இன்பார்ம் பண்ணியிருந்தால் நாங்க வந்திருக்க மாட்டோம் இல்லையா” என்றான். 

“சாரி ப்ரோ. எங்க காதல் சொல்லப்படாத காதல். இந்த நிமிஷம் வரை அவ என்னை காதலிக்கிறத என்கிட்ட சொல்லல. அதே மாதிரி நானும் அவளை காதலிக்கிறத அவகிட்ட சொல்லல.” 

“சொல்லலையா. உண்மையிலேயே ரெண்டுபேரும் காதலிக்கிறீர்களா?” இருவரையும் மாறி மாறி பார்த்தான், மாப்பிள்ளை காரன். 

“எங்கள் காதல் சொல்லப்படாத காதல் தான். ஆனால் அதை எங்களால் உணர முடியும்.” என அஞ்சலியின் கண்களை பார்த்து கூற அஞ்சலியின் கண்கள் கலங்கி நின்றன. 

“அப்ப நீங்க காதலிக்கிறது அந்த பொண்ணுக்கு கூட தெரியாதா?” என அஞ்சலியை ஆச்சரியமாக பார்த்தான். 

“இல்ல அவ படிப்பு முடிஞ்சதும் சொல்லலாம்னு காத்துகிட்டு இருந்தேன்.” 

“அப்போ இப்போ மட்டும் எதுக்கு வந்த வெளிய போ. என் பொண்ண உனக்கு நான் கட்டிக் கொடுக்க மாட்டேன்.” 

“இப்பவும் நான் அஞ்சலியை காதலிக்கிறது வெளிய சொல்லனும்னு நினைக்கல. ஆனா என்னோட அஞ்சலி மத்தவங்களுக்கு முன்னாடி ஒரு காட்சிப்பொருளா நிற்கிறத நான் விரும்பல. இன்னொருத்தன் தன் மனைவியாக போறவ அப்படிங்கற ஸ்தானத்தில என்னோட மனைவிய பாக்குறத நான் விரும்பல. அதனாலதான் என்னோட காதலியா அவங்களுக்கு தெரியட்டும்னு இங்க வந்தேன்.” என்றவன் மாப்பிள்ளை காரனிடம் திரும்பி, “சாரி பிரதர். நீங்க உங்களுக்கான பல கனவுகளோடும் எதிர்பார்போடும் இங்க வந்திருப்பீங்க. ஆனால் எங்களுடைய சூழ்நிலை எங்களுக்குள் எதுவும் சொல்ல முடியல. அப்படி இருக்கும்போது பெரியவங்க கிட்ட எப்படி பேச முடியும். நாங்கள் பேசாதது எங்களோட தப்புதான். அது உங்களை எவ்வளவு பாதித்திருக்கும் என்று எனக்கு புரியுது. பட் எங்களுக்கு வேற வழி தெரியல. நீங்க என்னோட சிட்சுவேஷன்ன புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்” என தன் நிலையை புரிய வைக்க முயற்சித்தான். 

“அது எப்படி தம்பி ….” என மாப்பிள்ளை காரனின் தந்தை ஆரம்பிக்கும் போதே, 

“டேட்” என அவரை அடக்கிய மாப்பிள்ளை காரன் “லெட்ஸ் கோ” என்று அவன் தந்தையிடம் கூறி, “கங்கிராஜுலேசன் ப்ரதர்” என அசோக்கிற்கு கை கொடுத்து விட்டு அஞ்சலியை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு சென்றான், மாப்பிள்ளை காரன். 

“அவங்கள வெளியே அனுப்பிட்டா நான் என் பொண்ணை உனக்கு கட்டி தருவேன் நினைக்கிறியா? அதெல்லாம் இங்க நடக்காது. ஒழுங்கா வெளிய போயிடு.” 

“மன்னிச்சிடுங்க மாமா. உங்க இடத்தில் யார் இருந்தாலும் அவங்களுக்கு நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும்.  அஞ்சலிய உங்க கைல ஏந்துனதுல இருந்து இப்போ வரைக்கும் அஞ்சலிக்காக நீங்க எல்லாமே பார்த்து பார்த்து செய்யறீங்க. அது எனக்கு நல்லாவே தெரியும். ஒரு துணி எடுக்கணும்னா கூட அஞ்சலிக்கு அது நல்லா இருக்குமான்னு கேட்டு அவளோட விருப்பத்தை தெரிஞ்சு அவளுக்கு வாங்கி தரனும்னு நினைப்பீங்க. நானே உங்கள நிறைய தடவை அஞ்சலி கூட பாத்திருக்கேன். ஒரு அப்பாவா அவளுக்கு எல்லாம இருந்து இருக்கீங்க. 

உங்கள பார்த்து கூட நான் பொறாமை பட்டிருக்கேன். ஏன்னா எனக்கு அப்பா இல்லை. என்னை பத்தி சொல்லிடுறேன். என் பேரை நான் ஆல்ரெடி சொல்லிட்டேன்‌. சிவில் என்ஜினியர் முடிச்சிருக்கேன். ஏகே கன்ஸ்ட்ரக்ஷன் வச்சுருக்கேன். அதுல நல்ல வருமானம் இருக்கு. நீங்க உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் பொழுது ஒரு மாப்பிள்ளை கிட்ட என்ன என்ன தகுதிகளை எதிர்பார்ப்பீங்களோ அந்த எல்லா தகுதிகளும் என்கிட்ட இருக்கு. 

நல்ல வேலை. நல்ல சம்பளம். சொந்த வீடு. நல்ல குடும்பம். எனக்கு அப்பா இல்லை. ஆனால் அம்மா எல்லாவுமா இருந்து என்னை பார்த்துக்கிட்டாங்க. இப்போ அஞ்சலியும் எங்க வீட்டுக்கு வந்துட்டா எங்க ஃபேமிலி இன்னும் நிம்மதியா அழகா இருக்கும்னு தோணுது மாமா. 

நான் உங்களை வற்புறுத்தல. இதுவரைக்கும் என்னோட காதல நானும் அஞ்சலியும் பரிமாறிக்கிட்டது இல்ல. மத்தவங்க மாதிரி நாள் பூரா போன்ல பேசுனதும் இல்ல.காதல்னு சுத்துனதும் இல்லை. நான் முதல் முறையா இங்க வரும்போதுதான் அஞ்சலி கூட பேசுனேன். இதுக்கு முன்னாடி ஒரு வார்த்தை கூட அவ கிட்ட பேசினது இல்ல. நாங்க கண்ணியமா தான் இருந்திருக்கோம். 

அஞ்சலியோட படிப்பு முடிந்ததும் நானே உங்ககிட்ட வந்து பேசலாம் னு நினைச்சேன்.ஆனா நீங்க படிச்சிட்டு இருக்கும்போது பொண்ணு பார்ப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல. தெரிஞ்சிருந்தா நானே உங்ககிட்ட பேசி இருப்பேன். இப்பவும் ஒன்னும் இல்ல மாமா. நான் உங்க பொண்ண எனக்கு தான் கட்டி கொடுக்கணும்னு சொல்லல. எனக்கு கட்டிக் கொடுத்தா உங்க பொண்ண சந்தோஷமா வச்சுப்பேன் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. அந்த நம்பிக்கை அஞ்சலிக்கும் இருக்கு. உங்களுக்கும் அந்த நம்பிக்கை வரணும்னு நினைக்கிறேன். 

எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்ற நீங்க அஞ்சலி என் கூட இருந்தா நல்லா இருக்குமான்னு மட்டும் யோசிச்சு பாருங்க. அப்புறம் அவளோட விருப்பத்தையும் கேட்டு செய்வீங்கன்னு நான் நம்புறேன். இது என்னோட கார்ட். நீங்க யோசிச்சுட்டு எனக்கு சொல்லுங்க. நான் அம்மா கூட வந்து பேசுறேன்” என்றவன் எழுந்தான். 

“ஒரு வேளை எனக்கு உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ?” 

“பிடிக்கலைன்னா என்ன மாமா, பிடிக்கிற வரை வெயிட் பண்ணுவேன்.” 

“எந்த நம்பிக்கையில் வெயிட் பண்ணுவ? அவ்வளவு நம்பிக்கை இருக்கா உன் காதல் மேல?” 

அதற்கு அவன் சிரித்தவன், ” என் காதல் மேல நம்பிக்கை இருக்கு மாமா. ஆனா அதை விட நீங்க உங்க பொண்ணு மேல வச்சிருக்குற அன்புல அதீத நம்பிக்கை இருக்கு. உங்க பொண்ணுக்கு பிடிக்காத எதையும் நீங்க தர மாட்டீங்க. நான் வரேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்தான். 

பின் ஒரு நிமிடம் நின்று டைனிங் டேபிளின் பக்கம் திரும்பியவன் அங்கு நின்றிருந்த அஞ்சலியின் அன்னையை பார்த்து, “அத்தை, அஞ்சலி மதியம் சாப்பிடல. அவள முதல்ல சாப்பிட வைங்க.” என்றவன் அஞ்சலியை ஒரு பார்வை பார்த்து சிறு தலையசைப்புடன் நகர அவளோ உறைந்து நின்றாள். 

இங்க என்னடா நடந்தது இவனுக்கு எப்படி நான் சொல்லாம நான் காதலிக்கிறதுல இருந்து நான் சாப்பிடாத வரைக்கும் தெரியுது என ஆச்சரியமாக நின்றவளை அவனின் அலைபேசி அழைப்பு கலைத்தது. 

சொல்லாமல் தொட்டு 

செல்லும் தென்றல்  

என் காதல் 

தேவதையின் கண்கள் நெஞ்சத்தில்கொட்டி  

செல்லும் மின்னல் கண்ணோரம்மின்னும்  

அவள் காதல் 

அவன் அவளை ஏறிட அவளுக்கும் எல்லாம் புரிந்தது. அவன் நிமிர்ந்து அவளை காதலுடன் ஒரு பார்வை பார்த்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான். 

“என்னம்மா அப்படியே நிக்கிற மாப்பிள்ளை கிளம்பிட்டாரு. வாசல் வரை போய் வழியனுப்பிவிட்டு வாம்மா” என்ற குரல் தன் தந்தையிடமிருந்து வர ஆச்சரியமாக அவரை திரும்பி பார்த்தாள், அஞ்சலி. 

அவர் கண்ணசைத்து ‘போ’ என கூற, மகிழ்ச்சியுடன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடினாள். 

அவன் வெளியே சென்று கொண்டிருக்க எவ்வாறு கூப்பிட என தயங்கியவள், “உங்க பேர் என்ன?” என கத்தினாள். 

 அவள் குரலில் திரும்பியவன், சிரித்துக் கொண்டே அவளை நெருங்கினான். 

“என் கூட பேச தான் மாட்டேன்னு நினைச்சேன். ஆனா என் பேர் கூட உனக்கு தெரியாதா?” என ஆச்சர்யமாக அவளை பார்த்தான். 

“நான் என்ன பண்ணட்டும். எப்ப பார்த்தாலும் வேலையே கதின்னு கம்ப்யூட்டரிலேயே உட்கார்ந்திருந்தா, நிமிர்ந்து பார்த்தா தானே உங்களுக்கும் என்னை தெரியும்னு பேச முடியும்.” என சினுங்கினாள். 

“கம்ப்யூட்டரை பார்த்தேன் சரி வேலை பார்த்தேன்னு யார் சொன்னா. கம்ப்யூட்டர்ல சிசிடி வழியா வெளியே தெரியுற உன்னை தான் பார்த்துக்கிட்டு இருப்பேன்” என கூற அவள் கண்கள் அகல விரிந்தன. 

“ஆமா, என் பெயர் கூட தெரியாம தான் என்னை காதலிச்சுட்டு இருந்தியா? நீ என்னை எப்ப பாக்குறேன்னு எனக்கு தெரிஞ்சதோ அப்பவே உன்ன பத்தி ஃபுல் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன். சரி புள்ள படிக்கட்டும்மேன்னு கொஞ்சம் தள்ளியே இருந்தேன். கடைசில பார்த்தா வேற ஒருத்தன் அப்ளிகேஷனோட வீட்டுக்கு வந்துட்டான். 

இதுக்குமேல விட்டா எங்க நீ கைய விட்டு போயிடுவேன்னு தான் வந்துட்டேன். இப்ப கூட நீ என்கிட்ட வந்து சொல்லாதது செம கோபமா இருந்தது. அதான் உன்கிட்ட எதுவும் சொல்லாம கூட்டிட்டு வந்தேன். சரி… சரி… எல்லாத்தையும் மன்னிச்சு விட்டுறேன். இப்பயாவது உன் காதல சொல்லு.” 

“அதை சொன்னால் தான் தெரியுமா? உங்களால உணர முடியாதா?” என கேட்க, மீண்டும் அவன் அலைபேசி சிணுங்கியது. 

சொல்லாமல் தொட்டு 

செல்லும் தென்றல் 

என் காதல் 

தேவதையின் கண்கள் நெஞ்சத்தில்கொட்டி  

செல்லும் மின்னல் கண்ணோரம்மின்னும்  

அவள் காதல் 

இருவரின் கண்களும் மீண்டும் சந்தித்துக் கொள்ள அவர்களின் காதல் அவர்களை ஆட்கொண்டது. 

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மைசூர் உருளைக்கிழங்கு போண்டா – Recipe by சியாமளா வெங்கட்ராமன்

    மெரினா கடற்கரை (சிறுகதை) – ✍ சரத்