தேதி : செப்டம்பர் 11, 1893
இடம் : சிகாகோ நகரம், அமெரிக்கா
இலையுதிர் காலத்தின் குளிரையும் பொருட்படுத்தாது, சிகாகோ நகரில் மக்கள் குழுமத் தொடங்கி இருந்தனர்
தன் தந்தை தனக்கு விட்டுச்சென்ற ஒரே சொத்தான, வெளிர் மஞ்சள் நிற கோட்டின் பாக்கெட்டில் கையை விட்டபடி, இன்னும் கூட்டம் சேர காத்துக் கொண்டிருந்தான் ஜேம்ஸ்
அன்று காலை தன் மனைவி டோரதி விடுத்த எச்சரிக்கை, அவன் மனதில் நிழலாடியது
“இன்னொரு முறை மதத்தின் பெயரால், கலவரம் போராட்டம் என நீ ஜெயிலுக்கு செல்ல நேர்ந்தால், நானும் நம் நான்கு பிள்ளைகளும் உயிரோடு இருக்க மாட்டோம். நம் மதத்தை சேர்ந்த எல்லோருமா இப்படி இருக்கிறார்கள்? நீ மட்டும் ஏன் இப்படி மதம் பிடித்த யானையாய் இருக்கிறாய்?” என்று அவள் கேட்டது, மனதை கனக்கச் செய்தது
ஆயினும், மதம் என்பது ஒரு போதை போல் ஆகி விட்டது ஜேம்ஸிற்கு. தன் மதம் அல்லாதவர்களை எதிரிகளாய் பாவிக்கும் எண்ணம், சிறு வயது முதலே மனதில் பதிந்து போனது
“உலக சமய மாநாட்டில், இந்தியாவை சேர்ந்த ஒரு இளம் துறவி, தன் மதத்தை பற்றி பேசப் போகிறாராம்” என நண்பன் கூறியதும், ஜேம்ஸின் மனதில் கோபம் கனன்றது
என் மண்ணில் இன்னொரு மதத்தை சேர்ந்தவன், தன் மதத்தை பற்றி பேசுவதா என எரிச்சலானான். ஏதேனும் கலவரம் செய்து, பேச விடாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடனே அங்கு வந்திருந்தான் ஜேம்ஸ்
நிகழ்ச்சி ஆரம்பமாக, முதலில் வேறு சிலர் பேசினர். இந்திய இளைஞனின் பேச்சுக்காக காத்திருந்தான் ஜேம்ஸ்.
அவன் எதிர்பார்த்த இளம் துறவி பேச வர, “இந்த பொடிப்பயலா தன் மதத்தின் சார்பாய் பேசப் போகிறான்?” என்ற ஏளனமே ஜேம்ஸின் மனதில் முதலில் தோன்றியது
“அப்படி என்ன தான் பேசுகிறான் பார்ப்போம்” என விருப்பமின்றி அரைகுறையாய் கேட்கத் துவங்கினான்
திடீரென விண்ணை பிளக்கும் கைத்தட்டல் ஒலித்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம், எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்தது. அப்படி என்ன தான் பேசினார் அந்த துறவி என பேச்சில் கவனம் செலுத்தத் துவங்கினான் ஜேம்ஸ்
“அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே…” என துவங்கிய அந்த துறவி, தன் பேச்சால் மொத்த பார்வையாளர்களையும் கட்டிப் போட்டார், ஜேம்ஸயும் சேர்த்து
முதலில் அசுவாரஸ்யமாய் கேட்கத் துவங்கியவன், தன்னை மறந்து லயித்தான். நேரம் போவது தெரியாமல், அனைவரும் அந்த உரையில் அமிழ்ந்தனர்
பேச்சின் இந்த சில வரிகள், ஜேம்ஸின் மனதில் நீங்கா இடம் பிடித்தது
“பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்து விட்டன
இந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால், மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பல மடங்கு உயர்நிலையை எய்தியிருக்கும். ஆனால், அவற்றிற்கு இப்போது அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலை, இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும், சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்” என்றதும், வானைப் பிளந்த கரவொலியில், சிகாகோ நகரமே அதிர்ந்தது
அந்த பேச்சின் ஆழத்தில், அது உணர்த்திய கருத்தில், தன்னை மறந்து கைத்தட்டி கொண்டிருப்பதை உணர்ந்து, அதிர்ந்தான் ஜேம்ஸ்
அன்று இரவு வீட்டிற்கு சென்ற ஜேம்ஸ், தன் மனைவி டோரதியிடம், “இனி நான் ஒரு புது மனிதன். ஒரு போதும் மதத்தின் பெயரால் சக மனிதனை புண்படுத்த மாட்டேன்” என உறுதியளித்தான்
நடந்ததை முழுதும் கேட்டறிந்த டோரதி, தான் பார்த்திராத அந்த துறவியான விவேகானந்தருக்கு, மனதார நன்றி கூறினாள்
அதன் பின் சக மனித நேசத்தால், தன் மதத்துவேஷமற்ற மனதால், ஜேம்ஸ் தொட்டதெல்லாம் துலங்கி, சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனிதனானான்
ஒவ்வொரு முக்கிய தருணத்திலும், விவேகானந்தரை நினைவு கூர்ந்தது ஜேம்ஸின் குடும்பம்
அடுத்து பிறந்த தனது ஐந்தாவது பிள்ளைக்கு, டேனியல் விவேகானந்தன் என பெயரிட்டு, தங்கள் நன்றியை பதிவு செய்தனர் ஜேம்ஸ் டோரதி தம்பதியர்
பிள்ளைகள் ஐவருக்கும், விவேகானந்தரை பற்றியும், அதன் மூலம் தான் புது மனிதன் ஆனதை பற்றியும் கூற தவறவில்லை ஜேம்ஸ்
அதிலும் ஜேம்ஸின் கடைசி பிள்ளையான டேனியல் விவேகானந்தன், தன் பெயரின் பின் பாதிக்கு காரணமான அந்தத் துறவியைக் காண ஆவல் கொண்டான்
தனது இருபத்தியொன்றாவது வயதில் கல்லூரி படிப்பை முடித்ததும், ஒரு முறை இந்தியா சென்று விவேகானந்தரை கண்டு வந்த பின் வேலை தேடுகிறேன் என பெற்றோருக்கு உறுதி அளித்தான்
பின், கடல் மார்க்கமாக, 1914ம் ஆண்டு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய பயணத்தை துவங்கினான் டேனியல்
அடுத்த சில நாட்களிலேயே முதல் உலகப்போர் வெடிக்க, கடல் போக்குவரத்து பெரிதும் முடக்கப்பட்டது. அதனால், டேனியல் இந்தியா வந்து சேர மூன்று மாதம் ஆகியது
நீண்ட கடல் பயணத்திற்கு பின், மெட்ராஸ் மாகாணத்தில் கால் பதித்த டேனியலுக்கு, விவேகானந்தர் 1902ம் ஆண்டே இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற செய்தி, பெரும் அதிர்ச்சியை அளித்தது
தகவல் தொடர்பு அத்தனை வளராத அந்த காலத்தில், பக்கத்து ஊரில் நடப்பதையே தெரிந்து கொள்வது சிரமம் எனும் போது, கண்டம் விட்டு கண்டம் இருந்த ஜேம்ஸின் குடும்பத்தினருக்கு, விவேகானந்தரின் மறைவு தெரியாமல் இருந்ததில் ஆச்சர்யமில்லை
ஆயினும், அவர் நிறுவிய ராமகிருஷ்ணா மிஷனையேனும் பார்த்து செல்வோமென நினைத்தான் டேனியல். அது திருவல்லிக்கேணி “ஐஸ் ஹவுஸ்”ல் இருப்பதாக யாரோ கூற, தேடி சென்றவனுக்கு அங்கும் ஏமாற்றமே
ஐஸ் ஹவுசின் உரிமையாளர் பிலிகிரி ஐயங்கார் இறந்ததும், அந்த இடத்தை அவரின் உறவினர்கள் விற்க நேர்ந்ததால், ராமகிருஷ்ணா மிஷன் தற்போது மைலாப்பூரில் இயங்கி வருவதாக அங்கிருந்தவர்கள் கூறக் கேட்டு அங்கு சென்றான் டேனியல்
சிறு பிள்ளை முதல், தந்தை மூலம் அறிந்த மனிதரை பற்றி, அங்கு இருந்தவர்கள் மூலம் மேலும் பல விஷயங்களை கேட்டு அறிந்தான்
உலகப்போர் சமயத்தில் பயணம் மேற்கொள்வது சரியானதல்ல என அனுபவத்தில் உணர்ந்தவனாய், கொஞ்ச காலம் அங்கு தங்கி வருவதாக பெற்றோருக்கு கடிதம் மூலம் செய்தி அனுப்பி விட்டு, மெட்ராஸிலேயே தங்கினான் டேனியல்
1914 செப்டம்பரில், எம்டன் கப்பல் வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்த, தங்க கூட இடமின்றி தவித்தான் டேனியல்
அந்த சமயத்தில், அவனைப் போலவே விவேகானந்தர் மீது நாட்டம் கொண்ட சிவப்பிரகாசம் என்பவர், தன் வீட்டின் ஒரு பகுதியில் தங்கிக் கொள்ள டேனியலுக்கு அனுமதியளித்தார்
வந்த சில நாட்களிலேயே, சிவப்பிரகாசத்தின் மகள் சாரதாவின் அடக்கம் கலந்த அழகும், ஆங்கில புலமையும், ஆழ்ந்த அறிவும், விசாலமான மனதும் டேனியலை பெரிதும் ஈர்த்தது. சாரதாவும் டேனியலால் ஈர்க்கப்பட்டாள்
சில மாதத்திற்கு பின், தாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சாரதாவும் டேனியலும் கூற, சிவப்பிரகாசத்தின் குடும்பம் அதிர்ந்தது. பெரும் எதிர்ப்பும் கிளம்பியது
நீண்ட போராட்டத்திற்கு பின், 1915ம் வருடம் நவம்பர் மாதம் டேனியல் சாரதாவின் திருமணம் நடந்தது. டேனியல் பெற்றோருக்கு கடிதம் மூலம் விவரம் தெரிவித்து, அங்கிருந்தே வாழ்த்துமாறு வேண்டினான்
ஊர் போற்றும் படி வாழ்ந்த அந்த தம்பதியருக்கு, ஒரு மகன் ஒரு மகள் பிறந்தனர். நரேந்திரன் ஜேம்ஸ், நிவேதிதா டோரதி என பிள்ளைகளுக்கு பெயரிட்டு, அன்பும் பண்பும் போதித்து வளர்த்தனர்
1938ம் வருடம், மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்ற நிவேதிதா டோரதி, சிகாகோவில் இருந்த தன் தந்தையின் குடும்பத்தினரை சந்தித்து, அவர்களோடு அன்பை பரிமாறி மகிழ்ந்தாள்
உடன் பயின்ற ஜார்ஜை வாழ்க்கை துணையாக்கிக் கொள்ள விரும்புவதாக நிவேதிதா தன் பெற்றோரிடம் கூறினாள். அன்பே கடவுள் என்ற கோட்பாடுடன் வாழ்ந்த டேனியல் சாரதா தம்பதியர், மகளின் முடிவை மனதார ஏற்றுக் கொண்டனர்
மகன் நரேந்திரனுக்கு, சாரதாவின் அண்ணன் மகள் ஜானகியை திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு விவேகானந்தன் என பெயரிட்டு மகிழ்ந்தனர்
தேதி : செப்டம்பர் 11, 2020
இடம் : மயிலாப்பூர், சென்னை
தனது உரையை முடித்த அந்த பிரபல சொற்பொழிவாளர், “அவ்ளோ தான் முடிந்தது” என்றார் சிறுபுன்னகையுடன்
“அந்த விவேகானந்தன் என்ன ஆனான்? அமெரிக்கா போய்ட்டானோ?” என பார்வையாளர்கள் கேள்வி கேட்க
“77 வயசான அந்த விவேகானந்தன் தான், இப்ப உங்களுக்கு கதை சொல்லிட்டு இருக்கான்” என அவர் அர்த்தத்துடன் புன்னகைத்தார்
ஒரு கணம் புரியாமல் விழித்த பார்வையாளர்கள், பின் புரிந்ததும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்
அமளி சற்று அடங்கியதும் தன் உரையைத் தொடர்ந்தவர், “ஆமாம்,
அதுல நம்ம சுவாமிஜி, தன் மதம் தான் பெருசுனு பேசல, உன் மதம் மோசம்னு நிந்திக்கல. சக மதத்தை மனிதனை மதிக்கணும்னு சொன்னார். அது என் கொள்ளு தாத்தாவைப் போல பல பேரோட வாழ்க்கைல, ஒரு திருப்புமுனையா இருந்துருக்குங்கறதுல சந்தேகமில்ல. நீங்களும் அது போல வாழ்ந்து, அன்பும் பண்பும் அதோட மனிதமும் கொண்ட அடுத்த தலைமுறையை உருவாக்கணுங்கறது தான் என்னோட வேண்டுகோள்
எல்லோருக்கும் அவங்க மதம் பெருசு தான், அப்படி நினைக்கறதும் பேசறதும் எந்த தப்பும் இல்ல. ஆனா அடுத்த மதத்தை நிந்திக்கற உரிமை நம்ம யாருக்கும் கிடையாது, அது சரியும் இல்ல. அதை எல்லாரும் உணர்ந்துட்டா, எந்த பிரச்னையும் இருக்காது. ‘அன்பே சிவம், மனிதமே மதம்’ அப்படிங்கற உணர்வோட வாழ்வோம். நன்றி வணக்கம்” என அவர் தன் உரையை முடித்ததும், கைத்தட்டல் ஓய நீண்ட நேரமானது
அன்பே சிவமென்போம்… மனிதமே மதமென்போம்… !!!
பின் குறிப்பு:-
இது உண்மை கதையல்ல. வரலாற்று நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்கொண்டு, எனது கற்பனையில் உருவாக்கப்பட்ட கதை மட்டுமே. இது உண்மை கதை என சிலர் புரிந்து கொண்டதால் இந்த குறிப்பை இங்கு சேர்க்கிறேன். நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
(முற்றும்)
Kindle Unlimited Subscription – Rs.169/month
Best Sellers in Amazon – Sports, Fitness and Outdoors
Best Sellers in Amazon – Books
Best Sellers in Amazon – Home Improvement Products
Best Sellers in Amazon – Home and Kitchen
super post ATM. very good. Keep it up. I didn’t know about this true story till today. Thank You for sharing.
மிக்க நன்றி பாராட்டுக்கு. ஆனால், இது உண்மை கதையல்ல. வரலாற்று நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்கொண்டு, எனது கற்பனையில் உருவாக்கப்பட்ட கதை மட்டுமே. Sorry if it mislead you to believe so. I added a note now in the end saying, “its a fiction, not a real happenning”. Thanks again 🙂
நானும் உண்மைக் கதை என்றே நினைத்தேன். இருந்தாலும் கற்பனை அபாரம் . அன்பே சிவம். ்ன்புடன்
மிக்க நன்றிங்க