sahanamag.com
குறுநாவல்

ஸங்ஷேபம் – குறுநாவல் (Part 2 of 4) – ✍ சத்யா.G.P, சென்னை

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

புதிய தளர்வுகளில் டீ, காபிக்கும் அனுமதி கிடைத்திருந்தது, ஆனால் பார்ஸலுக்கு மட்டுமே அனுமதி என்ற விசித்திர உத்தரவு. பல்வேறு வியாபார ஸ்தாபனங்கள், மேலும் சில உற்பத்தி கூடங்கள் திறக்க அனுமதி என்றும் அவை என்னென்ன என்று தெள்ளத் தெளிவாக ரகம் வாரியாக அரசு உத்தரவை அக்ஷரம் பிசகாது ரங்கராஜ் பாண்டே ‘சாணக்யா’வில் சொல்லிக் கொண்டிருந்தார்.

வண்டியில போறவங்க டீக்கடைக்கு வந்து எப்படி குடிப்பாங்க? பார்ஸல் சாத்தியப்படுமா? வண்டியை நிறுத்தி அஞ்சு நிமிஷம் டீ குடிச்சுட்டு கிளம்பறவங்க கைல ஃப்ளாஸ்க்கோட திரிவாங்களா? அலுமினிய பேப்பர் கவர்ல டீயைக் கட்டிக் கொடுத்தா? எங்க? எப்போ? எப்படி? குடிப்பாங்க?

மூவரசம்பேட்டையில இருந்து கிண்டி போற ஒருத்தன் டீ குடிக்க நம்ம கடைக்கு வந்து பார்ஸல் வாங்கினால் என்ன ஆகும்? கிண்டியில போற இடத்துல, அவங்ககிட்ட கிளாஸ் வாங்கி ஆறிப் போன டீயை குடிப்பானா? இல்ல போற இடத்துல சூடு பண்ணித் தர சொல்வானா? கிண்டில அவன் போய் சேர்ந்த இடத்துல அடுப்பு, பண்ட பாத்திரம் எல்லாம் வெச்சு ரெடியா இருப்பாங்களா?    

மக்கள் தெளிவாக இருந்தனர். அவர்களின் தெளிவுக்கு ஏற்ப டிஸ்போஸபிள் கப்புகள் வாங்க வேண்டியிருந்தது. டீயை கப்பில் வாங்கிக் கொண்டு கடை வாசலில் நிற்காது சற்று தள்ளி நின்றோ எதிர்சாரியில் குளத்துக் கரை அருகேயோ நின்று குடித்தார்கள்.

உணவங்களுக்கு வந்து பார்ஸல் வாங்குபவர்கள், டீ குடிப்பவர்களிடம் காவல் துறையினரும் கெடுபிடி காட்டாது பொறுமையாக இருந்தார்கள். கடைக்கு முன்பாக கூட்டம் சேராது இருக்க மட்டும் வலியுறுத்தினார்கள். மாஸ்க் அணிவதில் மட்டும் கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள். மாஸ்டர் வந்ததால் அம்மாவுக்கும், மனைவிக்குமான உணவக வேலைப்பளு குறைந்தது.

காலை பத்தரை மணி, டிஃபன் வாங்க வருபவர்கள் யாரும் இல்லாத போது இருவர் மட்டும் டீ வாங்கிக் கொண்டு நகர்ந்த போது மஹாதேவன் சார் கடைக்கு வந்தார்.

“சார் வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கேன் ரகு, நீங்க எப்படி இருக்கீங்க? ஹோட்டல் டீக்கடை நல்லா செட் ஆகிடுச்சு போல, இரண்டாம் லாக் டவுனைக் கடந்து வெற்றி முரசு கொட்டும் சாந்தா கேப்ஸ் ஸாரி உணவகம்னு போஸ்டர் அடிச்சுடலாமா?”

“நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு, கடை பக்கம் வரதே இல்லை”   

“டீக்கடையே இல்லாம பண்ணிட்டாங்களே. இப்போ தானே திறந்தாங்க, அதான் வந்துட்டேன். வொர்க் ஃப்ரம் ஹோம், வீட்டை விட்டு அவளும் நானும் எங்கேயும் போறதுல்ல. ஸோ வேளா வேளைக்கு சரியான நேரத்துக்கு போஜனம் ரெடி ஆகிடும்”

“டீ போட வா சார்?”

“இஞ்சி டீ ஒன்னு தாங்க ரகு, அப்புறம் பன்னெண்டு மெது வடை பார்ஸல், சட்னி இருக்கா”

“சட்னி குறைவா இருக்கு சார், சட்னியோட சாம்பாரும் கொஞ்சம் வைக்கவா?”

“ஓகே”

டீ கப்பை வாங்கிக் கொண்ட மஹாதேவன் சார் எதிர் பக்கம் நகர ஆயத்தமானவர், “ரகு ஃப்ரீயா இருக்கீங்களா, கொஞ்சம் பேசணும்”

“தாராளமா சார், கடைல தான் இருக்கேன், என்ன விஷயம் சொல்லுங்க”

“தம் டீ முடிச்சுட்டு வரேன். பார்ஸலை அப்படியே டேபிள்ல வெச்சுருங்க, பேசி முடிச்சுட்டுப் போகும் போது எடுத்துக்குறேன்”  

எதிர்ப்பக்கம் ஒதுங்கிய மஹாதேவன் சார், பால் பூத் அருகே நிற்காது மூவரசம்பேட் ப்ரைமரி ஹெல்த் சென்டர் அமைந்துள்ள சாலைக்குள் சிறிது தூரம் நடந்து குளத்தோரமாக காம்பவுண்ட் சுவர் அருகே போய் நின்றார். கையில் இருந்த டீ கப்பை நின்று கொண்டிருந்த ஒரு கார் மேலே வைத்தார். பேண்ட் பாக்கெட்டில் இருந்த சிகரெட் பாக்கெட்டைப் பிரித்து ஒன்றை எடுத்து வாயில் நிறுத்தியவர், இன்னொரு பாக்கெட்டில் இருந்த லைட்டர் துணையுடன் தீ மூட்டினார்.

ஆகாயத்தைப் பார்த்தபடி ஒரு ஸிப் டீயை உறிஞ்சுவது, ஒரு பஃப் இழுத்து புகையை விடுவது என்று ரசித்து தன் வேலையைச் செய்தார். இந்த தருணத்தில் அவர் பாக்கியவான் என்று யார் பார்த்தாலும் நினைப்பார்கள். இளைப்பாறி முடித்தவர் சாலையைக் கடந்து கடைக்கு வந்தார்.

“சொல்லுங்க சார், பேசணும்னு சொன்னீங்களே!”

“ரகு அது வந்து ஃபர்ஸ்ட் லாக் டவுன் டைம்ல வொர்க் ஃப்ரம் ஹோம்னு மாத்தினவங்க அதை அப்படியே கண்டினியூ பண்ணானுங்க. ஆர்டர்ஸ் குறையுதுன்னு சொல்லி சம்பளத்தை குறைச்சாங்க, இப்போ ரெண்டாவது லாக் டவுன்ல சுத்தம். நிறைய பேருக்கு சீட்டை கிழிச்சு வீட்டுக்கு அனுப்பறாங்க, அதுல நானும் ஒருத்தன்”

“ஆண்டவா, கஷ்ட ஜீவனம் தான் எல்லாரையும் இந்த ரெண்டாவது லாக் டவுன் சின்னாபின்னமாக்கிட்டு. ஆனால் பேப்பர்ல நியூஸ்ல இதைப் பத்தி எதுவுமே சொல்றதில்லை சார்”

“அடுத்த அஞ்சு வருஷத்துக்கு எதுவும் சொல்ல மாட்டாங்க ரகு. இந்தா எதிர குளம் இருக்கா, இதுல ஓடுறது தண்ணி இல்லை, ஒரு நாள் பால் மறுநாள் தேன்னு ஓடுறதா கூட பேசுவானுங்க, நாம பழகிக்க வேண்டியது தான்”

“மேடம்க்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் தானா சார்?”

“ஆமாம் ரகு, அவளுக்கு சம்பளத்தை குறைச்சுருக்காங்க, ஆனால் வேலை காலியாகல. ஆனா ரெகுலர் செலவு குறையலியே, நிறைய சேவிங்ஸ் காலி ஆகிட்டு. ஆனால் மாசா மாசம் ஹோம் லோன் ஈஎம்ஐ, ஒரு பெர்சனல் லோன் ஈஎம்ஐ கழுத்தை நெறிக்குது. அதனால காரை கொடுத்துடலாம்னு நினைக்கறேன்”

“வோல்வோ எக்ஸ்ஸி 40 யவா சார்?”

“ஆமாம் ரகு”

“வேற கார் உங்ககிட்ட இல்லையே சார்”

“இப்போதைக்கு தேவைப்படாது ரகு, என்கிட்ட சூஸுகி பர்க்மேன் இருக்கு அவளுக்கு ஒரு ஆக்டிவா வேற இருக்கு, நிலைமை சீராகட்டும். சின்ன காரா வாங்கிக்கிடலாம்னு யோசனை”

“சரிங்க சார், நான் என்ன செய்யணும்?”

“இந்த காரை சேல்ஸ் செய்ய உதவி பண்ணுங்க. 2018 மாடல், ஸிங்கிள் ஹேண்ட், ஓன் போர்ட், மாசத்துக்கு ஒரு தபா ஆஃபீஸ் மீட்டிங்குக்கு, மாசம் ரெண்டு வாட்டி சிட்டில வெளியே எங்கேயாவது அவுட்டிங் போக, வைதீஸ்வரன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், திருப்பதி, காலஹஸ்தி. கார் இவ்ளோ தான் போயிருக்கு, நல்ல கண்டிஷன், நீங்களே ஓட்டிப் பார்த்தா தெரியும். வண்டி லோன்ல இல்லை”

“ரேட் எவ்வளவு சார் சொல்றீங்க?”

“28…”

“அதிகம் சார். 23ல இருந்து 25 ன்னு சொல்லலாம். அதிகபட்சம் 24க்கு முடிய வாய்ப்பிருக்கு. ஆனால் இப்போ இருக்கற சூழல்ல வாங்கற ஆளைத் தேடிப் பிடிக்கறது கஷ்டம் சார். எனக்கு நாலு நாள் டைம் தரீங்களா?

“சரிங்க ரகு, உங்ககிட்ட ஃப்ராங்கா சொல்றேன், எனக்கு ஆறு லட்சம் இப்போ உடனடியா தேவை. ரெண்டு வருஷம் கழிச்சு காரைத் திரும்பக் கூட வாங்கிக்குவேன்.

“லோன் எகைன்ஸ்ட் கார் மாதிரியா சார்”

“அப்படி இல்லை. நீங்க காரை எடுத்து ரெண்டு வருஷம் சவாரிக்கு ஓட்டுங்க, ரெண்டு வருஷம் கழிச்சு நான் பணத்தை ரீபே செய்து காரை எடுத்துக்கற மாதிரி, முடியுமா? உங்களை எடுத்துக்க சொல்லல, உங்களுக்குத் தெரிஞ்ச நம்பகமான ஆள் இருந்தாலும் ரெஃபர் செய்யுங்க. மியூச்சுவல் சேஃப்ட்டிக்கு அக்ரீமென்ட் போட்டுக்கலாம்”

“ரெண்டு நாள் டைம் தாங்க சார், கண்டிப்பா நல்ல பதிலா உங்க பிரச்னை சால்வ் ஆகுறமாதிரி ஒரு பதிலை சொல்றேன்”

மஹாதேவன் சார் வடையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். ரகு யோசிக்கத் துவங்கினான்.

குவால் மஹாதேவன் சாரின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியவில்லை. நான்கைந்து பேரிடம் விசாரித்தும் கார் ஏற்பாடு தகையவில்லை. நான்கு மென்பொருள் நிறுவனப் பணியாளர்களை அவரவர் வசிக்கும் பகுதிகளிலிருந்து அள்ளிச் சுமந்து பணியிடத்தில் இறக்கி விடுவது, மீண்டும் வேலை முடித்து அவர்கள் வீடு திரும்ப சவாரி போவது என்று சுமார் 20 பேர்களுக்கு பிரயாண ஏற்பாடுகள் அவர் பரிந்துரையின் பேரில் தான் சாத்தியமானது.

அது தவிர பள்ளி செல்லும் எட்டு குழந்தைகளுக்கான பிக் அப் / டிராப் என்ற வருமானமும் அவர் சிபாரிசின் பேரில் அவர் வசிக்கும் அடுக்ககத்தில் உள்ள குடும்பங்களால் உருவானது.  பிரதிபலன் ஏதும் எதிர்பார்க்காது தன் பொருளாதாரத்தை மேம்படுத்திய மஹாதேவன் சாருக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் – ரகுவின் மனக்கட்டளையை ரகுவால் மீற முடியவில்லை.

காரைப் போய் பார்த்தான். நல்ல கண்டிஷனில் இருப்பது பார்த்த உடனே தெரிந்தது. டயர், பேட்டரி, ஸ்டீயரிங், சீட் எதிலும் குறையில்லை. மஹாதேவன் சார் வலுக்கட்டாயமாக டெஸ்ட் ட்ரைவ் செய்ய சொன்னார்.

பார்க்கிங் பகுதியில் இருந்து மெதுவாக வாகனத்தை ஓட்டி கீழிறக்கி இடது புறம் திருப்பி நேராக சென்று மீண்டும் இடது திருப்பி துர்கா மாயி மந்திர் வரை வாகனத்தை ஓட்டிச் செல்கையில் ரதம் போல் இருந்தது. ஆசை மேலிட மியூஸிக் சிஸ்டத்தை ஆன் செய்தால் எஃப்.எம் அலைவரிசையே துல்லியமாகக் கேட்டது. தெளிவான க்ரிஸ்டல் கிளியர் ஒலி.

மேலும் யோசிக்கவில்லை. வருவது வரட்டும் எப்படியோ சமாளிக்கலாம். தூக்கிவிட்ட மனிதருக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்பை திருப்பதி பாலாஜியே தேடி நம்மிடம் தந்திருக்கிறார். இந்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது.

“சார் பணம் ஏற்பாடு பண்ண ரெண்டு நாள் டைம் கொடுங்க. நானே வண்டியை எடுத்துக்கறேன். கண்டிப்பா வண்டியை இஷ்டத்துக்கு லாங் ட்ரிப் அடிக்க எடுக்க மாட்டேன். நீங்க வண்டியைத் தந்த மாதிரியே கச்சிதமா திரும்ப ஒப்படைக்கிறேன்”

மஹாதேவன் சாருக்கு சொல்ல முடியாத வியப்பு. “ரொம்ப நன்றி ரகு. நீங்க அஞ்சு லட்சம் தந்தாக் கூட போதும். மேனேஜ் பண்ணிடுவேன். ஹோம் லோன் ஈஎம்ஐ, பிஎல் ஈஎம்ஐ, வீட்டு செலவு, எஸ்ஐபி, இன்சூரன்ஸ் ப்ரீமியம்னு எந்த கமிட்மெண்ட்டையும் விட முடியல ரகு”  

“புரியுது சார் பாப்பா இப்போ அஞ்சாவது தானே படிக்கிறா”

“ஆமாம் ரகு, அவளுக்கும் ஆன் லைன் தான்”

உணர்ச்சி வேகத்தில் நன்றியுணர்வே மேலோங்கி இருந்த தருணத்தில் யோசிக்காமல் வாக்கு தந்துவிட்டான். இனி நிதானமாக யோசிக்க வேண்டும். சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.

வங்கிக் கணக்குகளை அலசி ஆராய்ந்ததில் இரண்டு லட்சம் + என்று இருப்பு காட்டியது. அணிந்துள்ள மோதிரம், பெரிய செயின் தவிர்த்து வீட்டில் அணியாமல் உள்ள தன்னுடைய ஆபரணங்கள் என்று பார்த்தால் பத்து சவரன் தேறலாம். நகை அடமானக் கடனுக்கு வங்கியில் ரெண்டரை லட்சம் கிடைக்கும்.

நான்கு லட்சம் கைவசம் புரட்டி விடலாம். அம்மாவிடம் சொல்லி ஒரு லட்சம் வாங்கினால், மனைவியின் நகைகளை கை வைக்காமல் அஞ்சு லட்சம் சாத்தியமே! கையிருப்பை அதிகமாக காலி செய்வது சிக்கலில் கொண்டு போய் விடுமோ? குழப்பமே எஞ்சிய நேரத்தில் ஃபோன் ஒலித்தது.

“ஹலோ…”

“…”

“சொல்லுங்க சார் ரகு தான் பேசறேன்” 

“…”

“வைஃப்க்கும், பசங்களுக்கும் ஈ பாஸ் எடுத்துட்டீங்களா?”

“…”

“போய் விட்டுட்டு உடனே வந்துடலாம்ல?”

“…”

“ஓகே சார், வண்டி என்னிக்கு, எப்போ, எத்தனை மணிக்கு வேணும்”

“…”

“என் பேரை யார் சார் ரெஃபர் செய்தது”

“…”

மீண்டும் மஹாதேவன் சார் சிபாரிசில் வெளி மாநில சவாரி. அதுவும் வருமானம் இல்லையே என்று யோசிக்கும் போது! நான்கு நாட்கள் கழித்து கேட்கிறார். மஹாதேவன் சாரின் காரிலேயே போய் வரலாம். அடுத்தடுத்து சவாரிகள் தகைந்தால் ட்ரைவர் ஏழுமலையை மீண்டும் வேலைக்கு அழைக்கலாம்  

அம்மாவிடம் மிகுதியான தயக்கத்துடன் விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான் ரகு. வார்த்தைகளை மிக கவனமாக, யோசித்து, சேகரித்த சொற்களை இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் வாக்கியம் போல் உதிர்த்தான். தெய்வாதீனமாக உதிர்ந்த சொற்கள் அனைத்தும் புரிந்து கொள்ளும் விதத்தில் இருந்தது.

அம்மா ரகுவை ஊடுருவிப் பார்த்தார். சில நிமிடங்களுக்கு மெளனமாக இருந்தாள். பார்வையை மேல்நோக்கி இருகரங்களைக் கூப்பினாள். மீண்டும் ரகுவைப் பார்த்தார். இம்முறை கண்களையே ஆழமாக கவனித்தாள். அலைபாயாது நிதானமாக நிலை நின்ற ரகுவின் கண்கள் அவர் மனதுக்கு திருப்தியைத் தந்தது.

“பணம் எப்ப வேணும்? நாளைக்கு பேங்க் போய் வித்ட்ரா பண்ணித் தரவா?”

சுஜாதாவின் ‘முதல் மனைவி’ சிறுகதையின் இறுதியில் “புனிதவல்லி எங்கே?” என்று கூரான ஆயுத வெட்டு போல் வாக்கியத்தை எழுதி கதையை நிறுத்தியதை நினைவு கொள்ளும் விதத்தில் அம்மாவின் சொல்லாடலும் வாத்தியாரின் உண்மையான இலக்கியம் போல அமைந்தது.

“கண்டேன் சீதையை” என்ற ஹனுமாரின் வாக்கியமும் நினைவுக்கு வந்தது.

ரெண்டு நாள் என்று சொல்ல ஒரே நாளில் பணம் ஏற்பாடானது அமைதியான சந்தோஷத்தைத் தந்தது.

மஹாதேவன் சாரிடம் பணத்தைத் தந்து ரதத்தை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் நிறுத்திய போது பெருமிதமாகத் தான் இருந்தது. தற்காலிக ஏற்பாட்டின் பேரில் தான் வோல்வோ இல்லத்தில் குடியேறி இருக்கிறது என்பதை மனம் ஏற்காது அலைபாய்ந்தது.

வாகனம் சீமாந்திரா செல்ல வேண்டிய நாளும் வந்து விட்டது.

“இன்னும் டீ போர்ட் மாத்தலங்க, சொந்தக்காரங்க வண்டில ஊருக்குப் போறோம்னு சொல்லிடுங்க, வண்டி ஓனர்கிட்டயும் சொல்லிட்டேன், அவர்கிட்ட யாராவது விசாரிச்சாலும் அதையே தான் சொல்வார்”

சவாரிக்கு வந்தவர்களைத் தயார் செய்து கொண்டு காலை உணவை முடித்து வண்டி புறப்பட்ட போது மணி எட்டு. “போய் சேர நைட் எட்டு மணி ஆகும் மா, மதியம் ஒரு மணிக்கு சாப்பாட்டுக்கு வண்டியை நிறுத்தறேன்”

விஜயவாடாவை நோக்கி ரதம் துரிதமாக சென்றது.

பத்து மணியளவில் ரகு தயங்கியபடி கேட்டான், “பாட்டு வைக்கலாமாங்க? ஏதாவது தொந்தரவுன்னா சொல்லுங்க வைக்கல”    

“நோ நோ தாராளமா, நானே சொல்லலாம்னு இருந்தேன்” அந்தப் பெண்மணி பென் ட்ரைவைக் கொடுத்தாள்

பாடல்கள் சுழல ஆரம்பித்தன, அனைத்தும் சுந்தரத் தெலுங்கு. புட்ட பொம்மா, டாப் டக்கர், பக்கா லோக்கல் போன்ற பரிச்சயமான பாடல்களையும் கேட்க முடிந்தது. மதியம் உணவருந்த வாகனத்தை நிறுத்திய போதும் பென் டிரைவ் தீர்ந்து போகவில்லை. பாடல்கள் மிச்சம் இருந்தன. இரவு எட்டேகால் மணிக்கு வண்டி ராஜமுந்திரி போய் சேர்ந்தது.

இரவு ஒன்பதரை மணிக்கு மெட்ராஸ் திரும்ப புறப்படலாம் என்று புத்தி நினைத்தாலும் தேகம் ஒத்துழைக்கவில்லை. வந்தவர்களிடம் வீட்டு வாசல் ஓரமாக வண்டியை நிறுத்தித் தங்கி கருக்கலில் கிளம்புவதாக சொல்லி அனுமதி கோரினான் ரகு.

“தாராளமா, இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேட்கணுமா? நைட் ஆகாரத்துக்கு ஹோட்டல் தேடி அலையாதீங்க. வீட்ல இருந்து தோசை கொண்டு வந்து தரேன்”

அந்தப் பெண்மணியோடு அதே முக சாயலில் வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு அம்மாவும் தலை அசைப்பது, “ஆமாம், வாஸ்தவம்” என்று அவ்வப்போது சொற்களையும் பகிர்ந்து தன் ஆமோதிப்பை வெளிப்படுத்தினார்.

நாற்பது நிமிடங்களில் வண்டியில் வந்த பையன் ஒரு பாக்ஸில் பலகாரத்தைத் தந்தான். இன்னொரு பாத்திரத்தில் சட்னி என்று சொன்னான். இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் பதமான குளிரூட்டப்பட்ட குடிநீர்.

“பாத்ரூம் போக வேண்டியிருந்தா யோசிக்காம வீட்டு ரெஸ்ட் ரூமை யூஸ் பண்ணிக்கலாம்னு சொன்னாங்க அங்கிள்”

“தேங்க்ஸ் பா, நீ என்ன படிக்கிற, உன் பேர் என்ன?”

“சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட், சுதர்சன் அங்கிள்”

“இந்தப் பாத்திரம்?”

“அரை மணி நேரம் கழிச்சு வந்து நானே எடுத்துக்கறேன் அங்கிள்”

வீட்டில் வார்க்கும் தோசை சைசில் ஐந்து போடி தோசைகள், கடலெண்ணெய் வாசம் ரம்மியமாக இருந்தது. சட்னியில் தாளித்த கருவேப்பில்லையின் மொறுமொறுப்பு அசத்தலாக இருந்தது. சொல்லி வைத்தது போல பத்தே கால் மணிக்கு சுதர்சன் பாத்திரத்தை வாங்கி கொண்டு போனான்.

“பாட்டி நாலு மணிக்கெல்லாம் எழுந்துடுவாங்க, கிளம்பும் போது கண்டிப்பா கூப்பிட சொன்னாங்க. காஃபி சாப்டு தான் போகணுமாம்”

“சரிப்பா, குட் நைட்”

“குட் நைட் அங்கிள்”

நாலரை மணிக்கு அலைபேசியில் அலாரத்தை வைத்துவிட்டு கண் முடினான். அவனே எதிர்பார்க்கவில்லை அப்படியொரு உறக்கம் ஆட்கொண்டது.

எழும்ப சற்று சோம்பேறித்தனமாகத் தான் இருந்தது. சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தவன், எழுந்து போய் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஓரமாகப் போய் பல் விளக்கி வாய் கொப்பளித்தான். முகத்தில் நீரைக் கொண்டு அடித்த போது சோம்பல் விலக ஆரம்பித்தது.

மணி 4.50, சுதர்சன் பாட்டி வீட்டில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. சங்கோஜத்துடன் அழைப்பு மணியை அழுத்தினான். அந்த அம்மா வந்தார்.

“வாப்பா டிகாக்ஷன் போட்டாச்சு, ரெண்டே நிமிஷம் வெயிட் பண்ணுப்பா, காபி குடிச்சுட்டு புறப்படலாம். காபி குடிச்சுட்டு கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாரு, பாத்ரூம் போகணும்னா போயிட்டு பிறகு கிளம்பு. தொலைவு போற, சிரமம் கூடாது”  

ஃபார்மாலிடிக்கு கூட எதுவும் பேசவில்லை. “சரிங்கம்மா” என்று ஒற்றை வரியில் பதிலில் முடித்தான் ரகு.

வோல்வோ நன்கு வேகத்தை எட்டிப் பிடித்து சில மணித்தியாலங்கள் கடந்த போதும் நாவில் ஃபில்டர் காபி ருசி, ஆறு மணி, ஒன்பது மணி என இருமுறை புகைத்தும் காஃபியின் ஆளுமை தொடர்ந்தது.

காலை எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் மதியம் பன்னிரெண்டரை மணிக்கே பசித்தது. போகும் போதும் சரி திரும்பும் போதும் சரி எங்கும் அமர்ந்து சாப்பிட முடியவில்லை, பார்ஸல் தான். சாம்பார் சாதமும், தயிர் சாதமும் முடித்து மீண்டும் வண்டியை எடுத்த போது பாட்டு கேட்கலாம் என்று ஆசை துளிர்த்தது.

கைவசமிருந்த பென் டிரைவ்களில் ஒன்றை எடுத்து ரகு ப்ளே செய்தான். அடுத்த மூன்று மணித்தியாலத்திற்கு தமிழ் பாடல்கள் மட்டுமே ஒலித்தது செவிகளை குளிர்வித்தது. 

“Old collection” பென் ட்ரைவ் நினைவுக்கு வந்தது. அதை எடுத்துப் பொருத்த, இதே இசையை இத்துனை நாட்களாக எங்கும் இவ்வளவு தரமாக கேட்டதில்லை என்பது விளங்க, ரகு பாடலுக்குள் மூழ்க ஆரம்பித்தான்.

… பகலில் மனிதர்க்கு மதியே துணை
இரவில் பலருக்கு மதுவே துணை
ஏன் என்றும் தெரியாது
ஏக்கங்கள் புரியாது
ஏற்றிய பாரம் தாங்காது
இறக்கிட நீயும் வா…

ஏங்கிய உள்ளம் தூங்காது
அமைதியை மீண்டும் தா
வா… பூவே… வா…
   

மலேசியா வாசுதேவனின் குரல் வழமையாக உருக்க ஏதோ ஒரு புது விதமான உணர்வு உள்ளுக்குள் ஒன்று சேரத் துவங்கியது. தொடர்ந்து வாகனத்தை செலுத்த முடியவில்லை. தட்டுத் தடுமாறி ஓரமாக வண்டியை நிறுத்த உடல் அதிகமாக வியர்க்க ஆரம்பித்தது.

அசையும் அசைவுகள் இசையின் நிழல்
அமைதி திருவிழி இறைவன் மடல்
பூவே நீ… சாமந்தி
பொழுதில் நீ… பொன் அந்தி

எனக்கொரு ராகம் நீ தானே
புதுப்புது கீதம் தா…
தனித்தனி வாழ்க்கை ஏதேது
இனி எதும் இனிமைதான்
வா… பூவே… வா…

ரகு பதறித் துடித்து பாடலை நிறுத்தினான்.

“ஹா ஹா” என்ற சிரிப்பொலி தொடர்ந்து ஏதேதோ வண்ணக் கலவைகள் நிரம்பிய சுவர். அது சுவர் தானா என்று சொல்ல முடியவில்லை… காட்சியில் தெளிவே இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பொலி விலகியது, வண்ணங்கள் சாயமிழக்க ஆரம்பித்து இயல்பாக நிலை பெற்றது.

“என்ன பாட்டு இது அஷ்வின்?”

“பூவிழி வாசலிலே படம் டா”

அஸ்வின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போதே ஒரு அம்மா வந்தார், அஷ்வினிடம் பேசிக் கொண்டிருந்த சிறுவனிடம் கண்கள் கலங்க ஏதோ சொல்லி அணைத்தபடி புறப்பட்டார்.

ஏதோ க்வார்ட்டர்ஸ் குடியிருப்பு போல காட்சி தந்த பகுதியில் சாலை ஓரமாக இருவரும் கொஞ்ச தூரம் நடந்தவர்கள் பெரிய சுவர் ஓரமாக இருந்த படிக்கட்டுகளில் ஏறி முதல் தளத்திற்கு வந்தார்கள். இடது புறம் வரிசையாக வீடுகள் எதிரே இருவர் ஒரே நேரத்தில் நடக்குமளவிற்கு தாராளமான இட அமைப்புடன் நடை பாதை, குறிப்பிட்ட வீட்டுக்கு செல்வதற்குள் இடது புறம் ஒன்பது வீடுகளைக் கடக்க வேண்டி இருந்தது பத்தாவதாக அந்த வீடு. மறுவரிசையில் ஒரு பெரிய சுவர் மற்றும் படிக்கட்டுகள். அந்தப் படிக்கட்டு வழியே மேலே ஏறினால் வலது புற வரிசையில் அது முதல் வீடு.

நிறைய பேர் அழுது கொண்டிருந்தார்கள். இறந்து போன ஒருவரின் உடல் வீட்டின் உள்ளே கிடத்தப்பட்டிருந்தது. பிணத்தின் முகத்தை நன்றாக பார்க்க முடிந்தது. அது அது… அருகே இன்னும் சற்று மெலிந்த, இன்னும் சற்று நீளமான அடர்த்தியான கூந்தலுடன், ஏராளமான கண்ணீர் பின்னால் பெரிய கண்களுடன், இதுவரை பார்த்திராத மூக்குத்தியுடன், நரை இல்லாத தலைக் கேசத்துடன் வயது குறைந்த அம்மா மிகத் தெளிவாக ரகுவுக்குத் தெரிந்தார். அதைப் பார்த்த சில நிமிடங்களில் பிறழ்வு நினைவுகளிலிருந்து சுயநினைவுக்கு வந்தடைந்தான் ரகு.

(தொடரும் – தினமும் தொடர் எபிசோட்களாக வெளிவரும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!