in

ஸங்ஷேபம் – குறுநாவல் (Part 1 of 4) – ✍ சத்யா.G.P, சென்னை

ஸங்ஷேபம் (Part 1 of 4)

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ற்றைக் கண்ணன் கடைக்கு வந்த போது, ரகுவுக்கு அவனை முதன் முதலில் கண்ட போது உண்டான ஆச்சர்யம் நாளடைவில் வடிந்து போய் விட்டதால் “என்ன வேணும்?” என்று இயல்பாகக் கேட்டான். எண்ணை சட்டியில் மெதுவடை ரெண்டாவது முறையாக பொரிக்கும் சடங்கிற்கு கட்டுப்பட்டு வெந்து கொண்டிருந்தது.

வந்தவனுக்கு இரண்டு கண்களும் உண்டு, ஆனால் இடது கண் கொஞ்சம் பெரிதாகவும், வலது கண் சற்று சிறிதாகவும் காணப்படும். ஒற்றைக் கண்ணன் என்று யாரோ ஒருவன் அழைக்க, அவனுடைய அடையாளமாக அது நிலைத்து விட்டது. நல்லவேளை, சிவராசன் என்று யாரும் அழைக்கவில்லை.

“ஆறு இட்லி கட்டுங்க”  அவன் யோசனையைக் கலைத்தான்.

“இட்லி மட்டும் போதுமா? மெதுவடை ரெண்டு நிமிஷத்துல ரெடி ஆகிடும், சூடா ரெண்டு சேர்த்து பார்ஸல் கட்டவாங்க?”

ரகுவின் வியாபார புத்தி பலித்தது, “நாலு வடை தனியா கட்டிடுங்க, சட்னி கொஞ்சம் அதிகமா”  

“ஆறு இட்லி, நாலு வடை அறுபது ரூபாய் தாங்க”

பார்ஸலை வாங்கிக் கொண்டு அவன் போய் விட்டான். காலை ஏழு மணி தாண்டியாகி விட்டது. கடைக்கு யாரும் இன்னும் வரவில்லை.

ரகுவின் கடையிலிருந்து சற்று தொலைவில் சாலையின் திருப்பத்தில் தள்ளு வண்டியில் காய் கனிகள் வியாபாரம் செய்யும் மூர்த்தி மகளிடம் ஏதோ சொல்லிவிட்டு கடையை நோக்கி வர ஆரம்பித்தார். அவர் கடை முன்பு திணறத் திணற ஜனத்திரள்.  

“நேரா சமைச்சுடறேன்னு வீட்டுக்காரம்மா சொல்லிருச்சு, வியாபார கூட்டம் குறைய பத்து பதினோரு மணி ஆவும். சமையல் முடிய எப்படியும் ரெண்டு மணி ஆகிடும். ரெண்டு பேரும் ஒத்தாசைக்கு தினமும் வராங்க. நீ என்ன செய்யற, நாலு நாலு இட்லியா மூனு பொட்டலம், அப்புறம் ரெண்டு ரெண்டு வடையா மூனு பொட்டலம், கட்டிடு”

“பன்னிரெண்டு இட்லி, ஆறு வடை சரியா காய் கடைக்காரரே?”

“ஆமா, இந்தா” சட்டைப் பையில் இருந்து ஒரு நூறு ரூபாய் தாளும், பத்து ரூபாய் நாணயமும் ரகுவின் கல்லாவில் ஐக்கியமாக, இரண்டு ரூபாய் நாணயமொன்று காய் கடைக்காரரிடம் இடம் மாறியது.  

“உடனே கட்றேன்”  

ரகுவின் அம்மா இட்லியை அலுமினியம் பேப்பர் உள்ளே வைத்து மடிக்கத் துவங்கினார். ரகுவின் மனைவி அலுமினியத் தாள் கவர்களில் சாம்பார், சட்னியை ஊற்றி நூல் கொண்டு திருகினாள். ரகு மசால் வடை தருவிக்க ஆயத்தமானான்.

மெட்ராஸில் புது வேலை, அதுவும் முதல் நாள் காரியாலயத்துக்கு செல்வது ராமுக்கு படபடப்பையும் உற்சாகத்தையும் ஒரு சேர அள்ளி வார்த்தபடி இருந்தது. உறக்கம் முடித்து காலை ஐந்தரை மணிக்கு விழித்ததிலிருந்து ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை நான்கு முறை துடைத்தது, வாளியில் நீர் நிரப்பி ஒரு இடுக்கு கூட விடுபடாது ஈரமாக்கியது, ஈரம் காய்ந்தபின் பளபளப்பு மங்கியுள்ளதா என்று உறுதி செய்து காய்ந்த துணி கொண்டு பலமாக அழுந்தித் துடைத்தது, அம்மா தலையில் அடித்துக் கொண்டது…

அனைத்தையும் துரித கதியில் ரீவைண்ட் செய்து கொண்டவன், அம்மா நெற்றியில் திருநீறு பூசியவுடன், நமஸ்கரித்து பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு கும்பிட்டு எழுந்தவன், “வரேன் மா” உற்சாகமாக குரல் தந்து புறப்பட்டான்.

அரசமரத்தடி வரை நேராக சென்ற இருசக்கர வாகனம் இடது திரும்பி சிறிது தொலைவு நேரே சென்று மீண்டும் வலமாய் சாய்ந்து வளைந்து கொஞ்ச தூரத்தில் மீண்டும் இடதாகி சென்றது. தன்வந்திரி மருத்துவமனைக்கு அருகே தள்ளி இருந்த பெட்டிக் கடையில் தானாக நின்றது.

ராமின் வழமையான பெட்டிக் கடை அது. ரிப்போர்ட்டர், துக்ளக், குமுதம் வாங்க, லாகிரிப் புகைய அவனுக்கு அதுவே பிரதானம்.

புதன்கிழமை என்பதால் ரிப்போர்ட்டர் எடுத்தவன் எப்போதும் போல் லைட்ஸ் என்று சொல்வதற்கு முன்பாக எப்போதும் போல் கடைக்காரர் லைட்ஸ் ஆன் ஆகி இருந்தார்.         

ஒரு கையில் ரிப்போர்ட்டர் மற்றொரு கையில்… அரசியல் சமாச்சாரங்களைத் தாண்டி மீண்டும் நினைவுகள் ததும்பத் துவங்கின.

பிறந்து, வளர்ந்து இந்த இருபத்தி இரண்டு வயது வரை ராம் என்ற எழுத்து பெயராகி, பலர் மனிதன் என்று முடிவு செய்து அழைத்துப் பேச, மதிக்க, சிரிக்க, கோபம் காட்ட, வருத்தம் பகிர என சகலமுமாக உருவாக்கியது அம்மா தான்!

முதல் வேலை கிடைத்த தகவலைச் சொன்னவுடன் நோக்கியா 1108 மொபைல் ஃபோன் இனி வேண்டாம் என்று அழுத்தந்திருத்தமாக சொல்லி நோக்கியா 6600 அலைபேசி வாங்கித் தந்தார்.

தமிழ்நாடு துணிக்கடைக்கு கண்டிப்போடு அழைத்துப் போய் இரண்டு பேண்ட், இரண்டு முழுக்கை சட்டைகள், ஆறு பெரிய கைக்குட்டைகள் (வண்டி ஓட்டும் போது தலையில கட்டிக்கிட்டு ஹெல்மெட் போட்டா முடி கொட்டாது என்றொரு நம்பிக்கை ராமுக்கு உண்டு!), மூன்று செட் உள்ளாடைகள் என்று உடுப்புகளில் புதியதொரு தன்னிறைவை அம்மா ஏற்படுத்தினார்.

தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை ராம் அடியோடு பகிஷ்கரிப்பதை பழக்கமாகக் கொண்டவன் என்பதால் ரெக்ஸின் பெல்ட், ரெக்ஸின் பர்ஸ் என்று தேடித் தேடி வாங்கித் தந்தார். யார் யாரிடமோ சொல்லி ரெக்ஸின் சிந்தெடிக் வஸ்துக்கள் கலந்த சப்பாத்துகள் வாங்கினார். அவனுக்குப் பிடித்தமான லெஸ் கட்டவேண்டிய அவசியமற்ற காலணிகள். அதற்கு தோதாக ஆறு ஜோடி சாக்ஸ்கள் வேறு!

டைட்டன் ஷோ ரூமுக்கு அழைத்துப் போய் அவனுக்குப் பிடித்தமான கோல்ட் ஸ்ட்ராப் வாட்ச் வாங்கினார்.

ஒரு பைஸா கூட ஊதியம் என்று சம்பாதிக்கவில்லை, ஆனால் வயிற்றில் இருந்த கருவைப் பெற்றெடுத்து ராம் என்று நாமகரணம் சூட்டி இருபத்தி இரண்டுகள் ஆண்டுகளுக்கும் மேலாக அணு அளவு கூட குறையின்றி உருவாக்கி இருக்கிறார்.

“அம்மா என்பதை எல்லாம் ஏற்க முடியாது அது பெண்களை அடக்க கண்டுபிடித்த எமோஷனல் செக் மேட். சுத்த காவாலித்தனமானது. பெண்களின் சுதந்திரத்தை காவு வாங்கும் டயனமைட்” – கொளப்பாக்கம் சிவன் கோயில் சென்று திரும்பி சாலையோரம் கதைத்துக் கொண்டிருந்த போது மெள்ள மெள்ள சூடேற செல்வி கோபத்தில் உதிர்த்த ரோம சொல்லாடங்கள் அவை.

அன்று தான் அனைத்தும் ஆரம்பானது. அதற்கான காரணம் என்ன? எதனால் பிளவு? இன்று வரை காரணம் விளங்கவில்லை. கோயில் அருகே என்பதால் பதிலடி தர முடியவில்லை. அமைதி தான் அப்போது பதிலானது. கையில் புகைந்து கொண்டிருந்ததைப் போல் மனமும் புகைய கொதிப்பு அதரங்களில் வார்த்தையாக வெளிப்பட்டது. சொல்லிய பிறகே கொதிப்பு அடங்கியது.

முதல் நாள், முதல் பணி, வாகனத்தில் பணி நிமித்தமாக முதல் பயணம் அதுவும் பூந்தமல்லி ட்ரங்க் ரோட்டிலிருந்து கிண்டி வரைக்கும் ஒரு ஸ்டேஜ் அடுத்து அங்கிருந்து ஜிஎஸ்டி சாலை தானாக மவுண்ட் ரோடாக மாறிச் செல்ல தேனாம்பேட்டை வரை அதே சாலையில் தான் இனி காலை மாலை இருவேளைக்கு இருசக்கர வாகன பயணம்.

கடந்து போனவற்றை கடந்து விட வேண்டும். சகதி மேலே விழுந்து ஆடையை அசுத்தமாக்கினால், ஆடையைச் சலவை செய்ய வேண்டும், தேகம் மீண்டு வர ஸ்நானம் செய்ய வேண்டும். மனம் அமைதி கொள்ள பிடித்தமானவற்றை புனிதமானவற்றை நினைத்து சாந்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சகதியையே மீண்டும் மீண்டும் நினைக்க கூடாது. ராம் மீண்டும் அம்மாவில் நின்றான். தெளியத் துவங்கினான்.

மாத சம்பாத்தியம், டேபிள் டாப் கிரைண்டர், நாலு ஜார் மிக்ஸி, பெரிய பஸூக்கா டிவி, மியூஸிக் சிஸ்டம், கம்ப்யூட்டர், டபுள் டோர் ஃப்ரிட்ஜ், ஸ்ப்ளிட் ஏசி என்று வீட்டின் த்வனியை மாற்ற வேண்டும்.

முதற்கட்டமாக எழவெடுத்த கேபிள் டிவிக்கு சமாதி எழுப்பிவிட்டு ஸீ டிஷ் டிவியினைப் பொருத்த வேண்டும். மோதிரம், செயின், வளையல், தோடு, ஜிமிக்கி என்று நாமும் ஜிஆர்டி போய் அம்மாவுக்கு தங்க ஆபரணங்கள் வாங்க வேண்டும்.

“முதல் நாளே தாமதம் கூடாது” சிந்தனை கலவரப்படுத்த வண்டியை ஸ்டார்ட் செய்தான். ஆக்டிவா கூட அம்மா செலெக்ஷன் தான்.

“ஃபைல்ஸ், வீட்டுக்கு சாமான்கள் வாங்கினா அந்தப் பைன்னு சகலமும் உள்ள வெச்சுக்க முடியும். வண்டியை ஸ்ட்ரெஸ் இல்லாம ஓட்ட முடியும்” வாகனத்தின் உள்ளே அவனுக்குப் பிடித்தமான தக்காளி சாதம் & பேபி ஆலூ ரோஸ்ட். நெஞ்சைக் கரிக்காமல் இருக்க தனியாக ஒரு சின்ன ஏனத்தில் தாளித்த நீர் மோர், புளிக்காமல் இருக்க அதன் மேலே கொஞ்சம் பால். சிரமப்பட்டு அம்மா சிந்தனைகளைத் தவிர்த்து வண்டியை ஓட்டினான்.

நேரே செல்லாமல் மீண்டும் வலது, இடது என நெளிந்து முகலிவாக்கம் ஐயப்பன் சந்நிதி அருகே இருந்த ஐயப்பா மெஸ் அண்ணனிடம் முதல் நாள் பணிக்கு செல்வது தொடர்பாக எடுத்து சொல்லி வாழ்த்துகள் பெற்றான். நின்ற வண்டி மீண்டும் புறப்பட்டது. இப்போது ராம் காதுகளில் ஹெட் செட். ரேடியோ மிர்ச்சி படர ஆரம்பித்தது.

ராமின் வாகனம் மீண்டும் வலது திரும்பியது. இம்முறை பெரிய சாலை. இனி கிண்டி செல்லும் வரை எங்கும் வாகனம் வளையாது, நிற்காது… அது பாட்டுக்கு பாட்டுடன் செல்லும்.       

ஜாக்கி பேசி முடிக்க ராமுக்கு பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர், பிடித்த பாடலாசிரியர், பிடித்த நடிகர்… என பல பிடித்தமான விஷயங்களை ஒரு சேர கொண்ட பாடல் செவிகளை நிறைத்தது.

… உலகத்தின் கடைசி நாள்

இன்று தானோ என்பது போல்

பேசிப் பேசித் தீர்த்த பின்னும்

ஏனோ ஒன்று குறையுதே

உள்ளே ஒரு சின்னஞ்சிறு

மரகத மாற்றம் வந்து

குறுகுறு மின்னல் என

குறுக்கே ஓடுதே …        

சாலையில் செல்லும் வாகனங்கள், நடந்து போகும் மனிதர்கள், அங்காடிகள், முந்திச் செல்லும் ஊர்திகள் எல்லாம் பிரயாணத்தின் பொருட்டு பார்வை வசம் மட்டுமே ஆனால் செவி வழியான இசை முழுவதுமாக ராம் மனம் வசம் போய் கொண்டே இருந்தது. ராமால் அதை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று தெரி(ளி)ந்திருந்தது. சிக்கல்களின்றி சுகானுபவத்தை அனுபவித்தான்.

இந்தப் பாடலை முதன் முதலில் கேட்ட அன்று கிடைத்த சிகர பரவசத்தை செல்வியிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க மாலை தர்க்கம் வலுக்க… 

ரண்டாம் அலை தொடர்பான லாக் டவுன் தொடர்பான தளர்வுகளை அரசு அறிவித்தும், தொழிலில் முன்னேற்றம் எதுவும் இல்லை. ஈ பாஸ், பெர்மிட் போன்ற ஒப்புதல்கள் பெற்று வந்த பிறகும் வாடிக்கையாளர்கள் யாரும் சவாரிக்கு ரகுவின் ஸ்தாபனத்தை அணுகவில்லை.

பெருவாரியான தொழில் தளர்வுக்குப் பின்பும் முடக்கப்பட்ட நிலையில் மக்களுக்கு பிரயாணம் செய்ய காரணங்கள் என்ன இருக்க முடியும். பெரிய பெரிய கோயில்களின் நடை திறக்கப்படவில்லை. சுற்றுலா ஸ்தலங்கள் முடங்கித் தான் இருக்கின்றன.

ஸ்விஃப்ட், இண்டிகா, இன்னோவா என மூன்று வாகனங்களும் அசைவற்று தான் இருக்கின்றன. முதலாம் லாக் டவுனில் சுதாரித்து இட்லி, தோசை, பொங்கல், மெது வடை, மசால் வடை, இடியாப்பம், சாம்பார், சட்னி, வடை கறி என்று முடிவெடுத்து தடலாடியாக தனியார் கேஸ் இணைப்பு, பாத்திர பண்டங்கள் என்று வாங்கித் துணிந்து இன்னொரு வியாபாரத்தை பிடித்துக் கொண்டது சில மாதங்கள் கழித்து பலனைத் தந்தது.

“ஏழு மணிக்கு ஏரியாவே ஜில்லோன்னு ஆகிடும், பக்கத்துல பிரியாணி கடை இருக்கு. ஆனால் சைவ ஹோட்டலுக்கு எம்ஜிஆர் ரோடு போகணும், இல்லைன்னா கூட் ரோடு. நைட் ஒன்பது மணி வரைக்கும் இட்லி பார்ஸல் உண்டுன்னு நம்பி போறதுக்கு வசதியா, மூவரசம்பேட் குளத்துக்குப் பக்கமா ரகு கடை போட்டது ரொம்ப வசதியா போய்டுச்சு”

மெடிக்கல்காரர், காய் கனி கடை வைத்திருப்பவர், காலை நேரத்தில் பால் பாக்கெட் விற்க பங்க் கடையைத் திறப்பவர், கொலை குற்றம் செய்வது போல அஞ்சி நடுங்கி ரகசியமாக கேனில் நிரப்பி தம் டி விற்பவர் என பல சாமானியர்களுக்கு ரகுவின் இட்லிக் கடை வரப்ரஸாதமாகிப் போனது, ஏதோ ஒரு தெய்வ சங்கல்பம் என்று சொல்லலாம்! மேற்கொண்டு பிரஸ்தாபிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.

காலையும் மாலையும் டிஃபன் என்றிருந்ததை ரகு, “மதியம் சித்ரான்னங்கள் கிடைக்கும்” என்ற அறிவிப்புப் பலகை மூலம் விரிவுபடுத்தினான்.

தக்காளி சாதம்

சாம்பார் சாதம் 

எலுமிச்சை சாதம்

தேங்காய் சாதம்

தயிர் சாதம்

ஐந்து வித சாத கலவைகள். ஒரு பாக்கெட்டின் விலை ரூபாய் 25/-. இணைக்கு வத்தல் & ஊறுகாய். மதியம் ஒரு மணிக்கு சூடாக தயார் செய்து கொண்டு வரும் சாதங்களும் சில நாட்களுக்குப் பின் விற்பனையில் சூடு பிடித்தது.

அன்று மதியம் இரண்டு மணியளவில் இரண்டு பேர் வாகனத்தில் வந்து வெரைட்டி ரைஸ் என்று விசாரித்தார்கள். தங்களுக்குள் ஐந்து நிமிடங்களுக்கு பலமாக பேசிக் கொண்ட பிறகு, அஞ்சு தயிர் சாதம், ரெண்டு தக்காளி சாதம், எலுமிச்சை, தேங்காய், சாம்பார் ஒவ்வொன்னும் ஒன்னு என்றார்கள்.

ஒத்த க்ரூப் வந்து 250 ரூபாய்க்கு வியாபாரத்தை உர்ஜிதம் செய்தது சந்தோஷமாக இருந்தது. கூடுமானவரை மூன்று மூன்றரை மணிக்குள் சாத வகைகள் விற்றுவிடும். இருந்தாலும் 1, 2 அதிகபட்சம் 3 அல்லது 4 பாக்கெட்களே பார்ஸல் என்ற அன்றாட வியாபாரத்தில் இது போல் 10, 20 என்பது பதட்டத்தை வெகுவாக குறைக்கிறது என்பது ரகுவின் அபிப்ராயம். அது உண்மையும் கூட!

வத்தல், ஊறுகாய், சாம்பார் போன்ற சேர்மானங்களை கொஞ்சம் தாராளமாகவே வைத்து பார்ஸல் கட்டித் தந்தான்.

“கடைக்கு இப்போ தான் புதுசா வரீங்க போல?” ரகு மெதுவாக பிள்ளையார் சுழியாய் துவக்கினான்

“ஆமாங்க, லக்ஷ்மி நகர் உள்ள இருந்து வரோம். நாங்க மெட்ராஸ் ஆளுங்க கிடையாது, இந்த ஏரியால அதிகம் பழக்கமும் கிடையாது. போரூர், குன்றத்தூர், பாய் கடை நல்லா தெரியும். மெடிக்கல்காரர்கிட்ட விசாரிச்சோம், சாப்பாட்டுக்கு உங்க கடைக்கு அவர் தான் போக சொன்னார்.”

“என்ன வேலை பாக்கறீங்க?”   

“பெயிண்டிங் வொர்க், லக்ஷ்மி நகர்ல ஒரு அப்பார்ட்மென்ட்க்கு பெயின்ட் அடிக்க எங்க ஓனருக்கு ஆர்டர் வந்துச்சு, எங்களை இங்க அனுப்பினார். முதல் நாள் வந்த உடனே எல்லாத்தையும் பார்த்து வெச்சுக்கிட்டு மறுநாள் வேலையை ஆரம்பிச்சோம். ரெண்டு நாள் நல்லா போச்சு, பக்கத்துலயே தங்க எடம் தந்துட்டாங்க. மளிகை ஜாமான், அடுப்பு, தண்ணீன்னு எல்லாம் செட் பண்ணி ஸ்மூத்தா போகும் போது லாக் டவுன்னு தலைல இடி விழுந்துது. எப்படியோ இவ்வளவு நாள் ஓட்டியாச்சு, மளிகை ஜாமான் எல்லாம் தீர்ந்து போற நிலைமை. வெளிய சாப்பிடலாம்னு, காலைல கல்யாண மண்டபம் பக்கத்துல இருக்கற இட்லி கடைல டிஃபன், மதியம் அங்க சாப்பாடு இல்லை”

“அவங்ககிட்ட காலைல மட்டும் தான், நம்மகிட்ட மூனு வேளையும் உண்டு, இங்க வந்து பார்ஸல் வாங்கிக்குங்க. ஈவ்னிங் ஆறு மணிக்கெல்லாம் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி உண்டு. தமிழ் நல்லா பேசறீங்க ஆனா தமிழ் ஆளுங்க மாதிரி தெரியலியே?”

“இந்த ஊருல ஆறு வருஷமா இருக்கோம், பாஷையைக் கத்துக்காம பிழைக்க முடியுமா?”

“உங்களுக்கு நேடிவ் எது?”

“கோபிந்த்பூர், சிங்பம் ஜில்லா, ஜார்கண்ட்”

“கஷ்டம் தான், வேலை வேற இப்போ இல்லை”

“அடுத்த மாசமும் இப்படியே போனா சம்பளமும், பிரயாணத்துக்கு செலவு காசும் தரேன், ஊருக்குப் போயிடுங்க, நிலைமை சரியான உடனே திரும்ப வேலைக்கு கூப்பிடறேன்னு முதலாளி ஏற்கனவே சொல்லிட்டார். ஃபர்ஸ்ட் லாக் டவுன்ல காய் கடை, மளிகைக் கடைக்கு எல்லாம் சங்கடம் வரல, ஆனால் இந்த லாக் டவுன்ல அதையும் மூடி சாப்பாட்டுக்கு அலைய விட்டாங்க. வண்டியில சப்ஜி எல்லாம் தாராளமா கிடைச்சுது, ஆனா கிரானா கிடைக்காம பட்டுட்டோம். ஹோட்டல் திறக்க அனுமதின்னு சொன்னாங்க, ஆட்டா, சாவல், தால், தேல் எல்லாம் எப்படி வாங்குவாங்கன்னு கவர்மெண்ட் யோசிக்கவே இல்லை. ஹோட்டலுக்கு நீங்க எப்படி மளிகை எல்லாம் வாங்குனீங்க?”

“தெரிஞ்ச கடைக்காரர்கிட்ட வாட்ஸப்ல தினமும் என்ன தேவையோ அதை லிஸ்ட் அனுப்பிடுவேன், அவரு லேட் நைட் அல்லது விடிகாலைல கடையைத் திறந்து எடுத்து தன் வீட்ல வைச்சுக்குவார். நான் போய் வண்டியில கொண்டு வந்துருவேன்”

“அப்பாவி ஜனத்துக்கு இது சாத்தியமான்னு யோசிங்க. அடுத்த மாசம் கிளம்பிடுவோம். இருக்கற வரைக்கும் நம்ம கடைக்கு வரோம்”

வந்த இரண்டு பேரும் பார்சலைப் பெற்றுக் கொண்டு போய் விட்டார்கள். இது எத்தனை நாளைக்கு தொடரும்? கேப்ஸ் என்ற தொழிலே இனி கிடையாதா? கார்களை எல்லாம் விற்றுவிட்டு ஹோட்டல் தொழிலை விரிவுபடுத்த வேண்டுமா? முதல் லாக் டவுன் தளர்வின் போது டீ, காபிக்காக அமர்த்திய மாஸ்டரை வேலை இல்லை என்று சொல்லி சம்பளம் தந்து கொண்டிருப்பது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? டீக்கடைகளைத் திறக்க எப்போது அனுமதிப்பார்கள்?

அடுக்கடுக்காய் ரகுவுக்குள் கேள்விகள் எழும்பிக் கொண்டே இருந்தன! விடைகள் தான் எதற்கும் வசப்படவில்லை!

ட்வின்ஸ் சுரேஷ் / ரமேஷ் வீடு

பல்லு சரவணா வீடு

வி. ரமேஷ் வீடு

வேல்முருகன் வீடு

யூ.கே. ராதாக்ருஷ்ணன் வீடு

என எல்லார் வீட்டிலும் வெள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்பா இல்லாத இரண்டாவது பொங்கலுக்கும் வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்க மாட்டார்களா?

அம்மாவிடம் விசாரிக்கவும் ராமுக்கு தயக்கமாக இருந்தது. ஸ்கூல் விட்டு வீடு திரும்பிய அந்த சாயரட்சை சமயத்தில் தயக்கங்களை எல்லாம் பரணுக்கு அனுப்பி அம்மாவிடம் கேட்டே விட்டான்.

“இதுக்கா சோகம், நாளைக்கே வீட்ல வெள்ளை அடிக்க ஆள் வராங்க! சந்தோஷமா?”

“ரொம்ப தேங்க்ஸ் மா”

“அக்கா செண்பகத்திடம் அம்மா ஏதேதோ பேசியபடி சமையற்கட்டுக்குள் சென்று விட்டார்”

ராமுக்கு இனம் புரியாத குதூகலம், இதை உடனே போய் நாலு பேரிடமாவது சொல்லி ஆர்ப்பரிக்க வேண்டும். ‘குப்புசாமி ஓவரா நக்கல் அடிச்சான். அவன்கிட்ட முதல்ல சொல்லி அவனை உண்டு இல்லைன்னு ஆக்கணும்’ வேக வேகமாக திட்டங்களை வகுக்க ஆரம்பித்தான்.  

“குப்புசாமி என் சைன்ஸ் நோட்டை வெச்சுருக்கான் மா, அவன்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்துடறேன்”

“டேய் ஏழு மணிக்குள்ள வந்துடு, பூரி உருளைக்கிழங்கு கத்திரிக்காய் போட்டு மசாலா பண்றேன். சூடா சட்னு சாப்டுடு. ராத்திரி சாப்பாட்டுக் கடையை சீக்கிரம் முடிக்கணும். அம்மாக்கு கொஞ்சம் ஆஃபீஸ் ஃபைல் வேலை இருக்கு, சரியா?”

“சரிம்மா” ராம் ஓட்டமும் நடையுமாக குப்புசாமியைப் பார்க்க ஓடினான். பென் ஜான்ஸனின் வேகம் ஓட்டத்தில் மிளிர்ந்தது.

 

… ஏலேலோ

அம்மம்மா அடி அம்மம்மா

ஆனந்தம் இது என்னம்மா

வீடெங்கும் புது வண்ணம்

நாளெங்கும் இனி எங்கும்

 

இந்நாள் பொன்னாளென்று

பொங்கலிடும் வண்ணம்

பூமியில் வந்து தங்கிவிடும்

 

வண்ணமும் எண்ணமும்

ஒன்றாய் கலந்தன

வாசலில் இன்பங்கள்

பூத்துக் குலுங்கின

 

சொந்தமும் பந்தமும்

வந்தன ; மகிழ்ந்தன

 

மண் பார்த்து பொங்கியது

பொங்கல் வண்ண

நிறம் பார்த்து

பொங்கியது

மனசு…

ஏஷியன் பெயிண்ட்ஸ் விளம்பரப் பாடலை சுற்றம் பற்றி கவலை கொள்ளாது, நாணமின்றி உரக்கப் பாடியபடி ஓடினான் ராம். (மலேசியா வாசுதேவன் சிறுவனை மன்னிப்பார் என்றொரு நம்பிக்கை), பாடல் இடையே வரும் இசை சங்கதிகளையும் தவறவிடவில்லை. குறிப்பாக அந்த புல்லாங்குழல் ரீங்காரமிடுவதைக் டொடடோ டொடடொய்ன் என்று இசைத்தான் ராம்.

(தொடரும் – இன்று தொடங்கி நான்கு நாட்கள் தொடர் எபிசோட்களாக வெளிவரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. ‘SangkshEbam’ oru alla viRuviRuppaana thodar thaan. Aarambam ithai1ch cholluGinRathu. Kathaiyin aasiriyarukku evvaaRu vaazhththukaLaith therivippathu?

    “Gudiyaththam Mani”.

  2. ‘SangkshEbam’ oru alla viRuviRuppaana thodar thaan. Aarambam ithai1ch cholluGinRathu. Kathaiyin aasiriyarukku evvaaRu vaazhththukaLaith therivippathu? Chollavum.

    “Gudiyaththam Mani”.

  3. ‘SangkshEbam’ oru nalla, viRuviRuppaana thodar thaan. AarambamE ithaich cholluGinRathu. Kathaiyin aasiriyarukku evvaaRu vaazhththukaLaith therivippathu? Chollavum.

    “Gudiyaththam Mani”.

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 10) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

ஸங்ஷேபம் – குறுநாவல் (Part 2 of 4) – ✍ சத்யா.G.P, சென்னை