in

ரௌத்திரம் பழகு (சிறுகதை) – ✍ ப.சிவகாமி

ரௌத்திரம் பழகு

ரவு எட்டரை மணிக்கு திருச்சி ஜங்ஷனை வந்தடைந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலிருந்து நிதானமாக இறங்கிய சுமதி, சுற்றும் முற்றும் பரபரப்பாக இருந்த மக்களின் ஓட்டத்தைப் பார்த்துக் கொண்டே சில நிமிடங்கள் நின்றாள்

இன்னும் ஓர் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பயணித்தால், அம்மா வீட்டிற்குச் சென்று விடலாம் தான்

கணவனது டார்ச்சர் தாங்க முடியாமல் புறப்பட்டு வந்து விட்டாலும், ஏனோ அவளுக்கு தன் அம்மா வீட்டுக்குச் செல்ல விருப்பமில்லை

பெண்ணுக்குத் தாய் வீட்டு உரிமை உடைமையெல்லாம் மணமாகும் வரை தான். மணமான பின்பு விருந்தினர் போல் சென்று திரும்பினால் தான் கௌரவம். அப்படியின்றித் தொடர்ந்து அங்கேயே தங்க நேரிடுமானால், அவள் சந்திக்கும் அவமானங்களும் புறக்கணிப்புகளும் அவளை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடுகிறது.

பித்துப் பிடித்தவள் போல் தெளிவற்றுக் காணப்பட்ட சுமதி, என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் அங்கே நடைமேடையில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்தாள்.

“எத்திராசுக்கு அவங்க மாமியார் வீட்ல வீட்டு மனை வாங்கிக் கொடுத்திருக்காங்க. சாவடியாருக்கு அவங்க மாமியார் வீட்ல டிராக்டர் வாங்கி கொடுத்திருக்காங்க. பெருமாளுக்கு அவங்க மாமியார் வீட்டுல பத்து லட்ச ரூபாய் பணம் கொடுத்திருக்காங்க” 

இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லி அவளை விரட்டியடித்துக் கொண்டிருந்த அவள் கணவன், சமீபகாலமாக, தன் தம்பிக்கு அவளது தங்கையை மணமுடிக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருந்தான்.

‘அக்காவையும் தங்கையையும் ஒரே வீட்டில் மணம் செய்து கொடுப்பதாக இல்லை’ என்று அவளது பெற்றோர் சொல்லி விட்ட பிறகும் கூட, விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு அவளைப் பாடாய் படுத்துகிறான்.

எட்டு வருட மண வாழ்க்கையில் கணவன் என்ற அதிகாரத்தைப் பிரயோகித்ததைத் தவிர, அன்போஅனுசரணையோ காட்டியதில்லை. தனக்கும் உணர்விருக்கும், விருப்பு வெறுப்பிருக்கும் என்று எண்ணியதில்லை. தன் விருப்பத்தைச் சொல்லக் கூட அனுமதித்ததில்லை. எதற்குமே அருகதையற்றவள் போலவே நடத்தப்பட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

‘உன் அம்மா வீட்டுக்குப் போய் அதை வாங்கிவா, இதை வாங்கி வா’ என்று அடித்து விரட்டுவான்.

போனவள் திரும்ப வரவில்லையே என்று வருத்தப்பட மாட்டான். மாதங்கள் கடந்தாலும் வந்து பார்க்கவும் மாட்டான், அழைக்கவும் மாட்டான்.

இப்படிப்பட்ட நிலையில் ‘தன் வாழ்க்கையே இங்கு நிலைக்குமா என்பது தெரியவில்லை. தன் தங்கையையுமா….?’. இத்தனை ஆண்டுகால மணவாழ்க்கை ஏக்கங்களையும் துயரங்களையும் விரக்தியையும் அவமானங்களையுமே அவளுக்குப் பரிசாகத் தந்திருக்கிறது.

‘இதற்கு மேலும் என்ன கஷ்டம் தனக்கு நேர்ந்து விடப் போகிறது…?’ என்று எண்ணினாள்.யோசித்தாள், யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

பெற்றோர் உற்றாருக்காக வாழ்ந்தது போதும், இனி சுயமாகச் செயல்பட வேண்டியது தான் என தீர்மானம் செய்தாள்

முன்பே தொழில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியிருந்த அவளுக்கு, தன்னையும் தன் குழந்தையையும் நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கைத் தலையெடுத்தது

‘விட்ட வேலையை மீண்டும் தேடிக் கொண்டு, தனக்கென ஒரு வருமானத்தை நிலைநிறுத்திக் கொள்வது, கணவனோடு பேசிப் பார்ப்பது, சரிவரவில்லையெனில் அவனது பந்தத்தை வெட்டிக் கொண்டு குழந்தையுடன் விடைபெறுவது’ என்ற முடிவுக்கு வந்தவுடன், சற்றே மனம் சமாதானமானது 

அடுத்து செய்ய வேண்டியவைகளைப் பற்றிச் சிந்தித்த போது, ஒரு படபடப்பும் பயமும்  தலைதூக்கத் தான் செய்தது அவளுக்கு. குழந்தைக்காகவேணும் உயிர் வாழ்ந்தாக வேண்டுமே, அதனால் அவற்றை புறம் தள்ள முயன்றாள் 

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பயணச்சீட்டுப் பெற்றுக் கொண்டு விசாரித்ததில், ஒன்றரை மணிக்குத் தான் விழுப்புரத்திற்கு ரெயின் என்றார்கள்.

பல்லவன் எக்ஸ்பிரஸில் நான்கு பேர் தாராளமாக அமரக்கூடிய நீண்ட இருக்கையின் ஜன்னலோரத்தில், பெண்மணி ஒருவர் மடங்கி படுத்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள் சுமதி. 

இரவுப் பயணம் என்பதால் இருக்கைகள், மேல்பர்த், தரை என,  கிடைத்த அனைத்து இடத்திலும் பயணியர் கண்ணயர்ந்திருந்தனர். முதுகுவலியால் அவஸ்தைப்படும் சுமதிக்கு, உட்காரவே இடமில்லை. எங்கே படுக்க முடியும்?. 

சுமார் ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி ஒருவன் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து தூங்கித் தூங்கி சுமதியின் தோளில் சாய்ந்தான். நிமிர்ந்தான். சாய்ந்தான். நிமிர்ந்தான்.

சற்றேப் பொறுத்துப் பார்த்தவள், டிப்டாப் ஆசாமியை நோக்கி, “சார் நேரா உக்காருங்க” என்றாள். அந்த ஆசாமி நிமிர்ந்து நகர்ந்து அமர்ந்தான். ஆனால் இரண்டே நிமிடங்களில் மீண்டும் அவள் தோள் மீதே சாய்ந்தான். 

சகிக்காமல் அவளும் நெளிந்து நெளிந்து நகர்ந்து, பக்கத்தில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்த பெண்மணியை மேலும் நெருக்கினாள். அந்த டிப்டாப் ஆசாமியோ, தாராளமாக இருகால்களையும் பரப்பி அமர்ந்து, இருவர் அமரும் இடத்தை ஆக்கிரமிப்புச் செய்த பிறகும் தூங்கி(?) அவள் தோள் மீதே சாய்ந்தான்.

‘இருக்கிற மன உளைச்சலோடு இவன் தொல்லை வேறு’ என்று அரைமணி நேரத்திற்கும் மேல் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்தும் முடியாமல் 

“ஏங்க! என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? என் மேலேயே தூங்கி விழறீங்க! அந்தப் பக்கம் எவ்வளவு இடம் இருக்கிறது! நகந்து உக்காந்து யாருமில்லாத அந்தப் பக்கமா சாய வேண்டியது தான”என்றாள் கோபமாய் 

“சாரிங்க மேடம்” என்றவன், இருக்கையின் ஓரத்தில் நகர்ந்து அமர்ந்து கொண்டான். 

பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும்.“நீங்க படுத்துகிறதானா படுத்துக்கோங்க மேடம்” என்று நல்லவன் போல மேலும் இருக்கையின் ஓரத்திற்கு நகர்ந்து கொண்டு இடம் கொடுத்தான். 

பல மணி நேரம் அமர்ந்து கொண்டே இருந்த சுமதி, புடவைத் தலைப்பை இழுத்து போர்த்திக் கொண்டு இடது கையை தலைக்குக் கொடுத்து கால்களை மடக்கி கிடைத்த அந்தக் குறைந்த இடத்தில் சாய்ந்தாள். அப்படி படுப்பது அவளுக்குச் சிரமமாகத் தான் இருந்தது. ஆனால் என்ன செய்வது? இன்னும் இரண்டு மணி நேரம் பயணப்பட வேண்டுமே

கண்ணை மூடி படுத்துக் கொண்டாளே தவிர,  அவள் இருந்த மனநிலையில் தூங்கவா செய்வாள்? பதினைந்து இருபது நிமிடங்கள் கடந்திருக்கும்

லேசாக  அவனது வலதுகை இவள் மீது  உராய்ந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு முதுகுப்புறமாக இருக்கையில் ஊன்றியது. மேலும் சில நிமிடங்கள் கடக்க அவன் கையை இவள் மீதே வைத்துக் கொண்டான். 

அடுத்த சில நிமிடங்களில் அவனது கை மெல்ல ஊர்ந்து அவளது கை, தோள், கழுத்து, அதற்கும் கீழே நகர முயன்ற போது, மின்னலெனத் துள்ளி எழுந்தவள், இருக்கைக்குக் கீழே கிடந்த செருப்பை எடுத்து முடிந்த மட்டும் பலத்தைத் திரட்டிப் போட்டாள் ஒரு போடு அவன் கன்னத்தில் 

‘வெகுஜனங்கள் பயணிக்கும் ரயில் பெட்டியிலேயே பெண்ணிடம் கைவரிசையைக் காட்டும் இவனுக்கு என்ன துணிச்சல்?’

ஓரிரு வினாடிக்குள்  நிகழ்ந்துவிட்ட இந்நிகழ்வு, தூங்கிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, மற்ற பயணிகளிடத்தில் பெரிய சலனத்தை ஏற்படுத்தவில்லை

அதற்குப் பிறகு அவன் அமர்ந்த இடத்தை விட்டு அணுவளவும் அசைந்தானில்லை. ஆனால், குடும்பப் பிரச்சினைகளையெல்லாம் தற்காலிகமாக மறந்துவிட்ட சுமதி, ஒரு வித அகங்காரத்துடனே அமர்ந்திருந்தாள், அவனை ஒரு கை பார்த்து விட வேண்டுமென்று

அவனோ மெல்லிய குரலில்,“சாரிங்க மேடம்… மன்னிச்சிடுங்க. தப்பா நினைச்சுக்காதீங்க, மன்னிச்சுக்கோங்க… சாரிங்க” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கொண்டிருந்தான்

அவனதுக் குரல் கேட்டதே தவிர, வண்டி விழுப்புரம் சந்திப்பை அடையும் வரை, சுமதி அந்த நாயின் பக்கம் திரும்பவேயில்லை

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

10 Comments

  1. நல்ல விஷயம்.ஆனால் கதை சட்டென முடிந்து விட்டதாக ஓர் தாக்கம் என்னுள்.இது தொடராக எழுதி இருக்கலாம்.அருமையான தாட்…சூப்பர்..வாழ்த்துக்கள்.

  2. கதை மிகவும் அருமை. படம் எனக்கு பிடித்திருக்கிறது. பொருத்தமான தலைப்பு. அவள் அநியாயத்தை தட்டிக்கேட்க ஆரம்பித்து விட்டாள். இனி வாழ்க்கையில் ஜெயித்து விடுவாள்.

  3. பல்லவன் விரைவு வண்டி காரைக்குடியிலிருந்து காலை கிளம்பித் திருச்சி வழியே சென்னை செல்லும். மாலை எழும்பூரிலிருந்து கிளம்பி இரவு பதினோரு மணி போல் காரைக்குடி கிளம்பும். இந்தக் கதையில் வந்திருக்கிறாப்போல் இரவு நேர வண்டி அல்ல. அதே போல் கன்யாகுமரி விரைவு வண்டியும் நேரக்கணக்கில் பிசகு.

‘சஹானா’ தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் – பேச்சாளர்களுக்கான அழைப்பு – பதிவு செய்ய கடைசி நாள் : செப்டம்பர் 15, 2021

சூரியன் (கவிதை) – ✍ரோகிணி கனகராஜ்