எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மொபைல் அடித்தது. அம்மாதான் கூப்பிட்டார்கள். அதே நேரம் பியூன் அவன் முன் வந்து நின்றான்.
‘ சார்…உங்களை ஜி.எம்.கூப்பிடறார் ‘
அம்மாவிடம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று அவளது காலைக் கட்பண்ணிவிட்டு ஓடினான்.
புன்னகைத்தபடி, ’ வாழ்த்துக்கள் மாறன்… ப்ரோமோஷன் லிஸ்ட் வந்தாச்சு. நீங்க மேனேஜர் ஆகிட்டீங்க… ‘ என்று கைகொடுத்தார்.
‘ ஆனா ஒன்னு… உங்களை சென்னைக்கு மாத்தியிருக்காங்க… சொந்த ஊரை விட்டுப் போகணுமேன்னு பார்க்காதீங்க… நாம வாழ்க்கைல உயரனு. மேலே மேலே போய்க்கிட்டே இருக்கணும்… ’
பரவசத்துடன் திரும்பினான். எல்லோரும் வந்து பாராட்டிவிட்டு சென்றனர்.
அப்பாவுக்கு போன் போட்டான். ரொம்பவும் சந்தோஷப்பட்டார் அவர். ஏற்கனவே அம்மாவின் போன்காலை கட்டி பண்ணியிருந்ததால், அம்மாவிடம் போனை கொடுக்கச்சொல்லி பேசினான். அவளும் மிகவும் சந்தோஷப்பட்டாள்.
சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பத் தயாராகும்போது அம்மாவின் போன் கால் திரும்பவும் வந்தது.
‘ தம்பி… காலைல நான் பண்ணினேன். லைன் கிடைக்கலை. அப்புறம் நீ பேசும்போதும் சொல்ல மறந்துட்டேன். நான் எதுக்குக் கூப்பிட்டேன்னா… தரகர் ஒரு ஜாதகம் கொண்டு வந் கொடுத்திருக்கார்ப்பா. ஊரு கும்பகோணம், பொண்ணு பார்க்க லச்சணமா இருக்கா… நட்சத்திரமும் பொருந்தி வருது… டிகிரி முடிச்சிருக்கா… வேலையில இருக்கா… குடும்பத்துல எல்லாருமே படிச்சிருக்காங்க, வேலையில இருக்காங்க…’
‘ சரிம்மா… வீட்டுக்குத்தான் வர்றேனே…பேசிக்கலாம்மா…’ போனைத் துண்டித்தான்.
அப்பா அவனுக்கு ஸ்வீட் ஊட்டிவிட்டார். அம்மாவும் ஊட்டிவிட்டாள்.
‘ ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா… என்ன, நீ சென்னைக்கு போயிடுவே… அதான் கஷ்டமா இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் பார்த்தா முடியுமா… வாழ்க்கையில மேலே மேலே போய்கிட்டே இருக்கணும்… ‘
ஜி.எம்.மும் அதையேதான் சொல்லியிருந்தார்.
அம்மாதான் டிரான்ஸ்பார் என்றதும் கொஞ்சம் கண்கலங்கினாள். அப்பா அவளை சமாதானப் படுத்தினார்.
கொஞ்சம் நார்மலானதும் ஜாதகத்துடன் வந்திருந்த போட்டோவை எடுத்துக் காட்டினாள். ‘ பாருப்பா… உனக்குப் பிடிச்சிருந்தா பேசலாம்… ‘ என்றாள். பார்க்க நன்றாகத்தான் இருந்தாள்.
‘ பொண்ணு பி.ஸி.ஏ. முடிச்சிருக்காளாம். ஒரு கம்பெனில வேலை பண்றாளாம்., கூட பிறந்தது ஒரு பையன் மட்டும்… கல்யாணத்துக்கப்புறம் நாம சரி சொன்னா வேலைக்குப் போவாளாம், இல்லைன்னா நின்னுக்குவாளாம்….‘
எங்கிருந்தோ ஓடிவந்த ராஜி…’ அண்ணா…நீ ஆபீஸராயிட்டியாமே…வாழ்த்துக்கள் ‘ என்று கைகொடுத்தாள்.
அப்போது மொபைல் அடித்தது. ‘ அண்ணா உன் போன்தான் ‘ என்று எடுத்துக் கொடுத்தாள்.
‘ மாலை வணக்கம்…உங்க ஹவுசிங் லோன் அப்ரூவல் ஆகிடுச்சு… இதை உங்களுக்கு சொல்ல நிறைய தடவை கூப்பிட்டோம்…உங்க போன் என்கேஜ்டாவே இருந்தது… மண்டே அன்னிக்கு வாங்க, டாகுமேண்ட்டேஷன் முடிச்சுடலாம் ‘ என்றார் பேங்க் மேனேஜர்.
லோன் அப்ரூவல் விஷயம் கேள்விபட்டு அப்பா அம்மாவும் இருவருமே சந்தோஷமானார்கள்.
‘ கூம்…உங்கப்பா ரிட்டையர் ஆனவுடனே வீடு வாங்கலாம்னு சொன்னேன்…நீதான் இடம் வாங்கி நமக்கு பிடிச்சாப்புல கட்டிக்கலாம்னு சொன்னே… பில்டிங் அப்ரூவலும் கிடைச்சு, லோன் அப்ரூவலும் ஆகிடுச்சு… ரொம்ப சந்தோஷம்பா…’ என்றாள் அம்மா.
‘ வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பாரும்பாங்க… முதல்ல வீட்டை ஆரம்பிக்கறோம்… அப்படியே பொண்ணை பேசி முடிக்கறோம்… கிருகப்பிரவேசம் முடிச்சக் கையோட கல்யாணம்… ‘ என்றார் அப்பா.
xxxxxx
ஊரை விட்டுக் கொஞ்சம் வெளியேதான் இடம் கிடைத்தது. அப்பாவின் ரிடையர்மென்ட் பணத்தில் இடத்தை வாங்கிப் போட்டு. லோன் பணம் கைக்கு வந்து, வீட்டு வேலைகளையும் ஆரம்பித்தாகிவிட்டது.
‘ சரிப்பா… வீட்டு வேலை ஒரு பக்கம் நடக்கட்டும். நாம கும்பகோணத்துக்கு பொண்ணைப் பார்க்க போகலாம்…’ என்றாள் அம்மா…
உடனே காலடண்டரை எடுத்து பார்த்தார் அப்பா. ‘ ஞாயிற்றுக் கிழமை நாள் நல்லாருக்கு, அன்னிக்கே போய்டலாம் ‘ என்றார்.
டாக்ஸி புக் பண்ணிக்கலாம் என்றதும், ’ நம்ம குடும்பம் பெரிசாகப் போகுது… நாம ஒரு கார் வாங்கலாமே… ‘ என்றார் அப்பா.
‘ சரிப்பா… ‘ என்றான் இவன்.
ராஜி சொன்னாள், ‘ அப்பா… ஒரு ஆபீஸருக்கு பொண்ணைக் கொடுக்கறவங்க கார் வாங்கித் தரமாட்டாங்களா, என்ன…? நாம ஏன் செலவு பண்ணி காரு வாங்கணும்…’
‘ ஹை… உன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளைக்கு கார் வாங்கித் தரனும்னு மறைமுகமா சொல்றே… ‘ சிரித்தான் மாறன்.
‘ போண்ணா…’ சிணுங்கினாள் அவள்.
ஞாயிறன்று காலையில் கிளம்பிவிட்டார்கள். கொஞ்ச தூரம் போனவுடன்… டாக்ஸி தள்ளாடி நின்றது. திகைத்தனர் எல்லோரும்.
‘ டயர் பஞ்சர்… ‘ என்றார் டிரைவர்.
கமலத்திற்கு முகம் சுண்டிவிட்டது. அதைக் கவனித்த மணியன், ‘என்னாச்சு மங்களம்,…ஏன் ஒருமாதிரியா இருக்கே ‘ என்றார்…
‘ நல்ல விஷயமா போயிட்டிருக்கோம்…ஏறி பத்து நிமிஷத்துல டயர் பஞ்சர்… ’ என்றாள்.
அவளை சமாதானப் படுத்தினார் மணியன்…’ கார்ல டயர்னு ஒன்னு இருந்தா அது பஞ்சராகத்தான் செய்யும்… அதுக்காக செண்டிமென்டெல்லாம் பார்த்துக்கிட்டிருப்பியா…? ‘
ஒருவழியாக பங்க்சர் சரி செய்து கிளம்பிவிட்டனர். பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் போய்க்கொண்டிருக்கும்போது, அப்பா லேசாய் மேல் வயிற்றைப் பிடித்தார்… பதறிப் போனாள் மங்களம்…
‘ ஒண்ணுமில்ல லேசா வலி… நெஞ்சுக்கு கொஞ்சம் கீழே ’ என்றார்.
உடனே உடன் கொண்டுவந்திருந்த வெந்நீர் பாட்டிலை எடுத்து குடிக்கக் கொடுத்த மாறன், ’ டிரைவர், எங்காவது ஆஸ்பத்திரி கண்ணுல பட்டா நிறுத்துங்க…’ என்றான்.
‘ அப்பா…நைட்டுல சிக்கன் சாப்பிட்டீங்கதானே…அதான் ஏதோ பண்ணுதுபோல…’ என்றாள் ராஜி.
‘ இருக்கும்…’ என்றாள் மங்களம்…
வெண்ணீரை குடித்துவிட்டு இரண்டு முறை ஏப்பம் விட்டார். கொஞ்ச நேரத்திலேயே, ‘ இப்போ நல்லாருக்குப்பா…ஆஸ்பத்திரிக்கெல்லாம் வேண்டாம்…’ என்றார். ஆனாலும் மாறன் விடாமல் ஒரு ஆஸ்பத்திரி பார்த்து டாக்சியை நிறுத்தினான். ‘ ஒன்றும் பயப்படும்படி இல்லை… கேஸ்ட்ரபுள்தான்… சரியாகிடும்…’ என்று மாத்திரை கொடுத்தார் டாக்டர்.
இப்போதுதான் அம்மாவுக்கு நிம்மதி வந்தது. ஆனாலும் உள்ளுக்குள் கவலை இருக்கத்தான் செய்தது. முதலில் டயர் பஞ்சர். பின்னாடியே இவருக்கு இப்படி. அவள் முனுமுனுப்பதை கவனித்த மணியன், ‘மண்டு…மண்டு…நீ ஏன் இப்படி இருக்கே… எதையெதை எதெதுக்கு முடிச்சு போடறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா… பேசாம வா…’ என்றார்.
‘ என்னப்பா ஆச்சு…’ என்றான் மாறன்…
‘ புலம்பிக்கிட்டே வர்றா… இதோட ரெண்டு தடங்கல் வந்துடுச்சாம்…’
குறுக்கிட்ட அம்மா ’ சிரிக்காதீங்க…’ என்றுவிட்டு ‘ தம்பி…ஏதாவது கோவில் கண்ணுல பட்டா டாக்ஸியை நிறுத்தச் சொல்லு… ‘ என்றாள்.
ஒரு கோவில் தெரிய, இறங்கி சாமி தரிசனம் முடித்து பிரகாரத்தை சுற்றி வந்து ஒரு ஓரமாய் உட்கார்ந்தார்கள்.
அம்மா கண்ணைத் துடைத்துக் கொண்டாள். மாறன் பார்த்துவிட்டான்.
‘ அம்மா…இன்னுமா…அதையே நீ நினைச்சிக்கிட்டிருக்கே…’ என்று முறைத்தான்.
‘ முதல் முதல்லா பொண்ணு பார்க்கப் போயிட்டிருக்கோம்…இப்படி தடங்கல் தடங்கலா வருதேன்னுதான்பா… சகுனம் பார்க்காம கிளம்பிட்டோமோனு… ’ இழுத்தாள்.
அவளது தோளைத் தட்டி சொன்னான் மாறன்… ’ அம்மா… அது ரொம்ப பழைய டயர்மா, பஞ்சராகத்தான் செய்யும்… சரி அதை விடு…அப்பாவுக்கு வயசாகுது…நீ எதுக்கு ராத்திரில அவருக்கு சிக்கன் கொடுக்கறே… ’ என்றான்.
‘ ராஜி..அம்மாவுக்கு தண்ணீர் கொடு…குடிக்கட்டும்..அப்போதான் பதட்டம் கொஞ்சம் குறையும் ‘ என்றான் சிரித்துக் கொண்டே.
மறுபடியும் சொன்னான். ‘ பாரம்மா…ஜாதகம் வந்திருக்குன்னு நீ போன் பண்ணின அதே நேரம்தான் எனக்கு ப்ரோமோஷன் வந்திச்சு. வீட்டுக்கு வந்ததும் லோன் அப்ரூவல் வந்துச்சு… அப்பாவும் திடீர்னு கார் வாங்கலாம்னார்… இப்படி எல்லாம் நல்ல விதமா நடந்திக்கிட்டிருக்கும்போது, நீ மட்டும் சகுனம் அது இதுங்கறே… விட்டா… இந்தப் பொண்ணு வேண்டாம்…வாங்க திரும்பிடலாம்னு சொல்லுவே போலிருக்கே…’ என்றான் கொஞ்சம் சீரியஸாக.
‘ எல்லாத்துக்கும் ஒரு பாஸிட்டிவ் சைடும் இருக்கும், நெகடிவ் சைடும் இருக்கும். நீ நேர்மறையாவே நினையேன்… ‘ என்றான்.
தண்ணீரைக் குடித்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள் மங்களம்.
‘ நீ சொன்னது சரிதான்ப்பா… நான்தான் தேவையில்லாமல் கொஞ்சம் குழம்பிப் போயிட்டேன்… இப்போ தெளிவாயிட்டேன்… வாங்க கிளம்பலாம்… அவங்களும் எதிர்பார்த்து காத்துக்கிட்டிருப்பாங்க இல்லியா… ’ என்றாள்.
கும்பகோணத்தை நோக்கி கார் பறக்க ஆரம்பித்தது.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
முற்றும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings