in

சகுனம் (சிறுகதை) – ✍ கண்மணி

சகுனம் (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள், சின்ன சின்னத் தோப்புகள், சலசலக்கும் காவிரி, ஒரு அழகான தாமரைக்குளம், ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களில் தெரியும் பஞ்ச வர்ணேஸ்வரர், சௌந்தராம்பிகை, இதெல்லாம் தான் அந்த கிராமத்தின் அழகு.

அந்த தெருவில் ராகவியின் வீடு தான் கொஞ்சம் பெரிசு. பெரிசுன்னா, மாடி இருக்கும். மாடியிலேர்ந்து பார்த்தா கோவில் தெரியும்.

ஸ்வாமி புறப்பாடு மாடியிலேர்ந்து நல்லா பார்க்கலாம். தேர் சமயத்துல எல்லா ஜனங்களும் அந்த மாடியில் நின்று கண் குளிர பார்த்து தரிசனம் பண்ணி விட்டு போவார்கள்.

அங்க ஒரு ரூமும் இருக்கும், அதற்கு ஹெட் ரூம் என்று பெயர். விலக்கானா, அங்க தான் மூணு நாள் வாசம். கதவை திறந்தா மொட்டை மாடி காத்து நல்லா ஜில்லுனு இருக்கும்.

சொல்லப் போனா எப்படா வாய்ப்பு வரும்னு வலியையும் மீறி ஒரு எதிர்பார்ப்பு அவளுக்கு இருக்கும். மாடிக்கு போகவும் வரவும், மாடியில் இருந்து தெருவைப் பார்ப்பதும், ராகவிக்கு முக்கிய பொழுதுபோக்கு, டவுனில் வேலை கிடைப்பது வரை

“பெரிய ஆஃபீஸ்ல உத்யோகமாமே” என்றவாரே கமலம் வந்து ராகவியின் அம்மாவிடம் நீட்டி முழக்கிவிட்டு, எங்க ஆஃபீஸ் என்னன்னு எல்லா விவரமும் கேட்டுக் கொண்டு, தனக்கு தூக்கம் வரும் வழியைப் பார்த்துக் கொண்டாள்

கமலம் பக்கத்து வீடு. அவர்கள் வீட்டிற்கு மாடியெல்லாம் இல்லை. ஆனால் மூன்றடுக்கு மித்தம். ஒரு மித்தம் எல்லார் வீட்லயும் இருக்கும். சில வீட்ல ரெண்டு.

கொஞ்சம் நிறைய நிலம் புலம் எல்லாம் இருந்தா தான் மூணு. அப்படி இருந்தும் இவள் வீட்டு மாடிக்கு காய்வாள் அவள். இவள் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்த்து பொறாமைப்படுவதே வாழ்க்கையின் லட்சியம்.

டவுனில் வேலை கிடைத்து பஸ்ஸில் போய் வந்து கொண்டிருந்தாள் ராகவி. ஒரு ஆறு மாதம் ஆகியிருக்க, அவளுக்கு ஏற்ற வரன் வந்து, நன்றாக திருமணமும் நடந்தது.

பக்கத்து ஊர் தான். வாழப்போன இடமும் நல்ல இடம் தான். வாழ்க்கை ரொம்ப இனிமையாக போய்க் கொண்டிருந்தது. அவள் கணவரும் அவளும் அதே டவுனில் வேறு வேறு அலுவலகத்தில் வேலை.

அன்று வழக்கம் போல அலுவலகம் விட்டு அவள் பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றாள், அவள் கணவன் கார்த்திக்கின் வருகைக்காக. நேரம் ஆகிக்கொண்டே போனது, ஆனால் கார்த்திக் வரவில்லை.

ஏன் என்று பார்க்க அவன் அலுவலகம் சென்றாள், அங்கும் இல்லை

“அவர் போய் அரை மணி நேரம் ஆகிறதே” என்றார் வாட்ச்மேன்.

எப்படி எங்கு இருக்கிறார் என்று தெரிந்து கொள்வது என்ற குழப்பத்துடன் அவன் அலைபேசிக்கு அழைத்தாள், அழைப்பு ஏற்கப்படவில்லை.

அழைத்து, களைத்து, கனத்து, அழுது, வீடு வந்து சேர்ந்தாள். அல்லோ கல்லப்பட்டது வீடு. அவன் இருக்கும் இடம் தெரியவில்லை. ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதமும் ஆனது.

போலீஸிலும் புகார் கொடுத்தாச்சு, ஒன்றும் முன்னேற்றம் இல்லை. இடையில் ஒருவர், ஒரு வயக்காட்டுக் கிணற்றில் மிதப்பதை வந்து அடையாளம் காட்டச் சொன்னார்.

போனாள், அவனில்லை. அவன் இருக்கிறான், எங்கே என்று தெரியவில்லை. மனம் சமாதானம் ஆகவில்லை. ஒரு மாறுதல் வேண்டும் என்று அம்மா வீட்டுக்கு வந்தாள்.

அலுவலகம் போய் வந்து கொண்டிருந்தாள், ஒரு இயந்திரம் போல. பத்து மாதம் முன் இதே வீடு சொர்க்கமாயிருந்தது. இதே மாடி… அழகிய காட்சிகள் காண ஒரு வரமாயிருந்தது.

இப்போது கால்கள் பின்னுகிறது. தன் வீட்டிலேயே நடக்கக் கூசுகிறது. கையில் வைத்திருக்கும் எதையோ தொலைத்தால் அது கிடைக்கும் வரை ஒரு இயலாமை வந்து ஆட்டுமே, அது போல மனம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

கமலம்… வெந்த புண்ணில் பாய்ச்சுவதற்காகவே வார்த்தை வேலைத் தயாராக வைத்திருப்பாளே.

இவளையும் குத்திக் கிழித்து கேள்விகள் கேட்டு, அவன் ஏன் போனான்? யாரெல்லாம் நட்பு, உறவு, பகை என்று போலீஸ் விசாரணை போல துளைத்து எடுத்தாள்.

பதிலும் சொல்ல முடியாமல், காயப்படுத்த மனமும் இல்லாமல், அவள் தவிப்பதைக் காண்பது கமலத்துக்கு செலவில்லாத பொழுதுபோக்கு.

“இதோ பார் ராகவி, முன்ன மாதிரி மாடியிலேர்ந்தெல்லாம் பார்க்காதே. தெருவில போறவங்களுக்கு என்ன வேலையோ, உன்னைப் பார்த்தாலே சகுனத் தடையா தோன்றும். உன் வீட்டுக்காரர் கிடைக்கற வரைக்கும் பார்த்து சூதானமா இருந்துக்கோ” என்று பெரிய ஈட்டியாக குத்திக் கிழித்துச் சென்றாள்.

வரும் வாரம் தேர். ஸ்வாமி புறப்பாடு ஆனதும் முதலில் நிற்பது இவர்கள் வீட்டுத் திண்ணையில் தான். அவள் அப்பா தான் முன்சீஃப். அதற்கென்று ஒரு மரியாதை.

அவள் தாத்தா காலத்தில் இருந்தே அவர்கள் மண்டகப்படி. ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அன்று விமர்சையாய்த் திண்ணையில் வைத்து பூஜைகள், அதற்கென்று நெய்வேத்யங்கள் அன்னதானம் எல்லாம் இவர்கள் வீட்டுச் செலவு.

ஒரே மகளின் வாழ்க்கையில் ஒரு பேரிடி வந்திருந்தாலும், அது கோவில் காரியத்தைப் பாதிக்கக் கூடாது, தலைமுறையாக செய்து வரும் மண்டகப்படி தடைபடக்கூடாது என்று ஸ்வாமியை சந்தோஷமாக வரவேற்க வாசலில் மாவிலை, தோரணம் எல்லாம் கட்டி திண்ணை மாக்கோலத்தோடு வீடு தயாரானது.

ராமசாமி, கோவில் தர்மகர்த்தா வந்தார்.

“என்ன ராகவி எப்டி இருக்கே?” என்று கேட்டு விட்டு, “அப்பாவைப் பார்க்கணும்” என்றார்.

ராகவியின் அப்பா நீலகண்டன், கொல்லையில் வேலையாய் இருந்தார்.

“இருங்க, பின்னால இருக்கார், கூப்பிடறேன்” என்று உள்ளே ஓடினாள். அப்பாவிடம் ராமசாமி வந்ததைக் கூறினாள்.

“வாங்க வாங்க… சொல்லியனுப்பியிருந்தா நானே வந்திருப்பேனே” என்றார் ராகவியின் அப்பா

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் வந்தா என்ன?” என்று சொல்லிவிட்டு, “ஸ்வாமி வரும் போது இன்னின்ன செய்யணும்ங்கறதையெல்லாம் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன். உங்க பக்கத்து வீட்ல, அந்த கமலம்மா இருக்காங்களே… அவுங்க வந்து, இந்த வருஷம் அவுங்க வீட்டு திண்ணையில தான் ஸ்வாமியை இறைப்பாறணும்னு சொல்லி ஒரே அடம்.

அதுக்கு, நம்ம ராகவி புருஷன் காணாம போனது நல்ல சகுனமா படல, அவுங்க வீட்டுத் திண்ணையில நடத்தினா கிராமத்துக்கே அந்த கெட்ட சகுனம் தொத்திக்கும் அப்படி இப்படின்னு ரொம்ப பேசினாங்க.

நான் ஒரே வார்த்தையில சொல்லிட்டேன். மண்டகப்படிகாரவுங்க அவுங்க. அவுங்க சொல்லட்டும், எங்களுக்கு மனசு சரியில்ல… அதனால வேற எங்கயாவது வெச்சுக்குங்கன்னு, அப்புறம் நான் அதை பற்றி யோசிக்கிறேன். நீங்க உங்க கற்பனையெல்லாம் வந்து சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்

ஊர்வாய் அப்படித் தான் ஏதாவது பேசும். ஒரு தப்பும் பண்ணாத சின்னப்பொண்ணு. ஏதோ சோதனை. ஸ்வாமி வர சகுனம், நல்ல விதமா காணாமப் போன மாப்பிள்ளை கிடைக்கவும் செய்யலாமில்ல? அப்படின்னும் கேட்டேன். அந்தம்மா வாய அடைச்சிட்டு போயிட்டா

நீலகண்டன், உங்க வீட்டுத் திண்ணையில் தான் ஸ்வாமி வருவார். உங்க வீட்டு மாடியில தான் வழக்கம் போல பால்கனி டிக்கட், தேருக்கு. நீங்க பாட்டுக்கு ஆக வேண்டியதைப் பண்ணுங்க.  நான் இதைச் சொல்ல வந்ததே, அவங்க உங்ககிட்ட வந்து மனசு சங்கடப்படறா மாதிரி பேசினாலும் கண்டுக்காதீங்கன்னு சொல்லத்தான்.

வரேம்மா ராகவி… எல்லாம் நன்மையாத் தான் நடக்கும். நல்லதே நினைப்போம்” என்று சொல்லிச் சென்றார்

அந்த பஞ்சவர்ணேஸ்வரரே வந்தது போல் இருந்தது. பழையபடி துள்ளிக் கொண்டு மாடிக்கு ஓடினாள் ராகவி, கோபுரத்தைக் காண

திருவிழா அமர்க்களமாக ஆரம்பித்தது. காப்பு கட்டி, கொடியேற்றம் எல்லாம் மிக விமர்சையாக நடந்தது.

ராகவி எப்போதும், ஒவ்வொரு வருடமும், அம்பாள் சந்நதிக்கும் ஸ்வாமி சந்நதிக்கும் அழகான இழைகோலம் போட்டு, காவி இட்டு, விதம் விதமாக சின்ன சின்ன சங்கிலி கோலங்களால் பார்டர் கட்டி பிரமாதமாக அலங்காரம் செய்வாள்.

மாலை கட்ட ஒரு 10 பெண்கள் கூட்டாக உட்கார்ந்து, கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் எல்லா வகை பூக்களையும் நந்தவனத்தில் இருந்து பறித்துக் கொண்டு வந்து கொட்டி, வகை பிரித்து, பத்தாததற்கு, பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் வரும் கூடை கூடையான பூக்களை எடுத்து, கட்டி, அழகாக, தேருக்கு, பஞ்ச மூர்த்திகளுக்கு, வாஹனங்களுக்கு என்று மாலைகள் கட்டுவார்கள். அதிலும் ராகவி ஆசையோடு ஈடுபடுவாள்.

இந்த முறை கமலம் முறைத்து முறைத்துப் பார்க்க, அவளுக்கு அங்கு போகவே கூச்சமாயிருந்தது.

விஷயம் தெரியாதவர்கள் கூட, அவள் ஏன் வரவில்லை என்பதைக் கேட்க, கமலத்தின் முழு நீள ஒன்றுமில்லாத விஷயத்து வர்ணனை ராகவியை அங்கு போவதையே வெறுக்க வைத்தது.

கார்த்திக்கின் அலுவலகத்தில் இருந்து ராகவிக்கு ஒரு கடிதம் வந்தது. அவள் விரும்பினால், கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு போட்டுப் பார்க்கலாம் என்று அதில் பரிந்துரைத்திருந்தார்கள். மற்றபடி, அவன் இருக்கும் இடம் தெரிய வந்தால் உடனே தெரியப்படுத்தும்படியும் சொல்லியிருந்தார்கள்.

பத்து வீடு தள்ளி, கிருஷ்ணஸ்வாமி வக்கீலுக்குப் படித்து, டவுனில் ஒரு பெரிய வக்கீலிடம் சிஷ்யனாக இருந்து தொழில் கற்று வருகிறான். அவனிடம் அந்த கடிதத்தைக் கொண்டு காட்டினாள்.

அவன், “செய்யலாம் ராகவி, அதுக்குக் கொஞ்சம் செலவாகும். நீ செலவு பண்ண முடியுமா? நான் ஃப்ரீயா பண்ணற அளவுக்கு பெரிய ஆள் இல்லை. எனக்கு குடும்பம் இருக்கு, இது தான் சம்பாத்யம்” என்றான்

“நீ செலவு எவ்வளவு ஆகும்னு சொல்லு, அப்பாகிட்ட பேசிட்டு அவங்க வீட்லயும் பேசிட்டு வந்து சொல்றேன்” என்றாள் ராகவி

“சரி திருவிழா முடியட்டும், அப்புறம் பார்க்கலாம்” என்றான்.

பணம் இல்லாமல் இம்மி கூட அசைய மாட்டான் அவன், இத்தனைக்கும் உடன் படித்தவன் தான்.

ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், அங்கு தேருக்கு பந்தோபஸ்துக்காக வந்திருந்தார். ராகவியின் வீட்டில் தான் இப்படி யார் வந்தாலும், காபி, டீ, இளநீர், மோர் என்று உபசாரம் நடக்கும்

ராகவியின் தாத்தா காலத்தில் இருந்தே தர்மம் ஒன்று தான் நம்மைக் காக்கும் என்று சொல்லி சொல்லி வளர்ந்த்தால், அவள் அப்பாவுக்கு பணத்தை விட தர்மம் தான் முக்கியம்.

இன்ஸ்பெக்டர், ராகவியிடம், “ஏதாவது தகவல் வந்துச்சா மா?” எனக் கேட்டார்

“ஒன்றும் வரலை சார், அவங்க அலுவலகத்தில் இருந்து இந்த கடிதம் வந்தது” என்று கிருஷ்ணஸ்வாமியிடம் காட்டிய கடிதத்தைக் காட்டி, அவனிடம் பேசிவிட்டு வந்ததையும் சொன்னாள்.

“ம்ம் சரி… அதையும் முயற்சி பண்ணு. என்ன, எங்களுக்குத் தான் ட்யூட்டி வரும், தேடணும். எப்படியும் தேடித் தானே ஆகணும். நாங்களும் தேடிக்கிட்டு தாம்மா இருக்கோம், ஆனா உருப்படியா ஒரு தகவலும் வரலை.

அன்னிக்கு அலுவலகம் விட்டு, வெளிய வந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்து வரதைப் பார்த்திருக்காங்க. அதுக்கப்புறம் எங்க மிஸ் ஆனார்னு தான் தெரியலை. அந்த ஒரு தெருவைக் கடக்கும் போது தான் ஏதோ நடந்திருக்கு. அது தான் எல்லா கடைக்காரங்க்கிட்டயும் கேட்டுக்கிட்டு இருக்கோம். ஒருத்தன் பார்த்தேங்கறான், ஒருத்தன் பார்க்கலைங்கறான். குழப்பமா இருக்கு. சரி எப்படியும் முயற்சி பண்ணுவோம் மா” என்று ஆறுதல் சொல்லிவிட்டு, பந்தோபஸ்த்து ட்யூட்டிக்கு விரைந்தார்.

பஞ்சவர்ணேஸ்வர்ர், அதியற்புதமாக அலங்காரம் செய்து கொண்டு, அம்பாளுடன், புறப்பட்டார். வீதி முழுவதும், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், தெருவை அடைத்து கோலமும், தட்டு நிறைய புஷ்பங்களும், மனது நிறைய ஆசையுடனும், ஒவ்வொருவரும் நின்றிருந்தார்கள்.

வழக்கம் போல, ராகவி வீட்டு மாடியில் சரியான கூட்டம். ரதத்தின் அசைவைப் பார்க்கவென்றே கூட்டம். ஸ்வாமியும், அம்பாளும் பல்லக்கில் முதலில் வந்து, ராகவியின் வீட்டு திண்ணையில் இளைபாறி, மரியாதைகள், பூஜைகள் பெற்று, அதன் பின் தான் ரதத்தில் ஏறுவது தொன்று தொட்டு வரும் வழக்கம்.

பல்லக்கு வந்து, பஞ்சவர்ணேஸ்வரரும், அம்பாளும், இறங்கி, ஏதோ ஒரு அழகான வயதான தம்பதிகள் போல, நன்றாக இருத்தி வைக்கப்பட்டு, வெற்றிலை, தாம்பூலம், பட்சணங்கள் என்று சகல உபசரிப்பும் ஏற்றார்கள்.

ஒரு மணி நேரம் இந்த சடங்குகள் நடக்கும். பாவம் ராகவி தலை உள்ளே ஜன்னலுக்குள் வைத்து, ஊருக்கு பயந்து, அவர்கள் பஞ்சவர்ணேஸ்வர்ரை விட்டு விட்டு, அவளை விசாரிக்க ஆரம்பித்து விடுவார்களே என்று கண்ணில் படாமல், ஓரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பூஜைகளும் மரியாதைகளும் நிறைவாக முடிந்ததும், பல்லக்கை தேர் நோக்கி எடுத்துச் சென்று விடுவது வழக்கம். பல்லக்கு, சற்று திரும்பியதும், “அப்பா…” என்று கத்திக் கொண்டு ராகவி வாயில் வார்த்தை வராது திணறி, அப்பாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போய், அந்த பல்லக்குத்தூக்கிகள் பக்கத்தில் ஓடிச்சென்று நின்றாள்.

நீலகண்டன், “மஹேஸ்வரா, உன் கருணையே கருணையப்பா” என்றபடி, பல்லக்குத் தூக்கிகளுள் ஒருவனாக நின்றிருந்த கார்த்திக்கின் கரம் பிடித்து,” மாப்ளே!” என்றார்.

ஒன்றும் புரியவில்லை யாருக்கும், எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி அனைவருக்கும்.

பக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர், “இவர எங்கேயிருந்து கூட்டிட்டு வந்தீங்க?” என்று மற்ற மூவரிடம் கேட்க

அவர்கள், “சார், எங்களோட இன்னொரு பையன் உண்டு, அவனுக்கு அவசரமா ஏதோ ஒரு வேலைக்கு இன்னிக்கு இண்டர்வ்யூ போகணும்னான். சரி நாலாவது ஆளா யாரைப் பார்க்கறதுன்னு தேடிட்டே இருந்தோம். இவர் கோவில்ல, மண்டபத்தில் ஒரு ஓரத்தில் பேசாம உட்கார்ந்திருந்தார்.

நாங்க கேட்டதுக்கு பதிலே சொல்லல. அப்புறம் செய்கை பண்ணி காமிச்சதும், தூக்க வரேன்னார். பேச தெரியாது போல இருக்குன்னு, நாங்க இந்த வேல முடிஞ்சதும் கோவில்ல விட்டுடறோம் நீங்க எங்க போகணுமோ போங்கன்னுட்டோம்.

நாங்க அசலூரு. சமய ஆன்மீக மன்றத்துல இருக்கோம். எந்த ஊர்ல திருவிழான்னாலும், இந்த மாதிரி உதவிகள் பண்ண போவோம். அப்படி வந்ததால, இந்த ஊர் ஆளுன்னு தெரியாது” என்றார்கள் இன்ஸ்பெக்டரிடம்.

ராகவியின் அப்பாவும் அவளும் கார்த்திக்கை பத்திரமாகக் கொண்டு சேர்த்த அந்த பஞ்சவர்ணேஸ்வரரின் கருணையை நினைத்து அழுது கொண்டே, கார்த்திக்கை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

இனிமேல் தான் அவனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டி, அவனுக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

“ராமசாமி சொன்ன மாதிரி, ஸ்வாமி வந்த சகுனத்தால, தொலைந்தது கிடைச்சுடுத்து. அதே ஸ்வாமியின் துணையால, இவரை பழையபடி ஆக்கிடலாம்பா” என்றாள் ராகவி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே

பிப்ரவரி 2022 சிறந்த படைப்பு போட்டிக்கு தேர்வாகி பிரசுரிக்கப்பட்ட படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. Visual treat. The author’s vivid explanation makes one get into the story as if it is seen live. The picturesque location can be truly visualized. Within a short story, the author has brought in many facets,especially what a woman goes through. The rise and fall,the trials and trauma which every woman pass,the pain that is inflicted on her by the society and ultimately as per the divine will, she is able to overcome. Also good positive end ,this too shall pass… Apt as we march onto March 8th, international women’s day. Best wishes to all.

கருப்பனும் கலெக்டர் துரையும்!! (சிறுகதை) – ✍ Dr. K. Balasubramanian, Chennai

காகிதக் கப்பல் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை