2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
என் ஒருத்தியால எத்தனை சுமைகளைத்தான் தாங்க முடியும்னு நினைக்கிறானோ கடவுள் தெரியலை. என்னால யாருக்கும் சுகமில்லை, வயசான காலத்தில அப்பா அம்மாவுக்கும் என்னால தான் ஏற்கெனவே நிம்மதி போயிடுச்சு.
இப்ப இந்த வாசு பண்ற சில்மிஷங்கள், சில்லறைத்தனங்களையும் சொன்னா எப்படித் தாங்குவாங்க. பயந்து நடுங்குவாங்களே. இந்தக் காமக் கொடியவனிடம் இருந்து எப்படி சாமர்த்தியமாகத் தப்பிக்கலாம் என மனதிற்குள் புழுங்கியபடி ஹாஸ்பிட்டலை விட்டு வெளியில் வந்தாள் பிரகதி.
பாவம்தான் அவளும். எவ்வளவோ கஷ்டப்பட்டு கடன் உடன் பட்டு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சாங்களே அவளைப் பெத்தவங்க அதுவாவது நல்லபடியா அமஞ்சுதா அவளுக்கு. பசுத்தோல் போர்த்தின புலின்னு படிச்சிருப்போம். நிசத்தில அவளோட புகுந்த வீட்டு மனிதர்களும்… குறிப்பா அவ புருஷனும் தான் அதற்கு சரியான நடமாடும் உதாரணங்களா இருந்தாங்க.
நல்லவங்க மாதிரி இனிக்க இனிக்கப் பேசறதும், எப்போதும் சிரிச்ச முகமா இருக்கறதும் பார்க்கிறவங்க எல்லாம் ‘பிரகதி கொடுத்து வச்சவதான்னு’ சொல்ற அளவுக்கு திறமையா நடிச்சிட்டு, திரை மறைவில் அவங்க படுத்தின பாடு கொஞ்ச நஞ்சமில்லை.
பெண் வீட்டில்தான் கல்யாணம் என்பதால், சாப்பாடு ஏற்பாடு செய்வதற்கு முன் “எத்தனை பேர் உங்களுடன் வருவார்கள்” என பிரகதியின் அப்பா சம்மந்தியிடம் முன்னெச்சரிக்கையாக கேட்டபோது
“நாம இனிமே ஒரே குடும்பம் அநாவசிய செலவு வைக்க மாட்டேன் உங்களுக்கு இருநூறு பேருக்கு மேல் ஒருத்தர் கூட வர மாட்டார்கள். அளவோடு தான் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு முன்னூறு பேருக்கு மேல் கூட்டி வந்து விட்டார்கள்.
அங்கு ஆரம்பித்த பிரச்சனை எப்படி எப்படியோ சிரமப்பட்டு சமாளித்தும் வந்தவர்களுக்கு சரிவர சாப்பாடு போடவில்லை என சொல்லிக் காட்டியே பிரச்சனையை வளர்த்து வளர்த்து ஒரு நாள் பிரகதியை பிறந்த வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டார்கள்.
இழந்த வாழ்க்கையை நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்காமல், பெத்தவங்களுக்கு பாரமா இல்லாமல் இருக்கனுங்கறதை விட கல்யாணக் கடனை அடைக்கவாவது உதவுமேன்னுதான் இந்த ஹாஸ்பிட்டல் ரிஸப்ஷனிஸ்ட் வேலைக்கு வந்தாள் பிரகதி.
வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் பார்க்கிறவங்களும் பலதும் பேசி நோகடிப்பாங்க அப்பா அம்மாவும் பார்த்துப் பார்த்து அழுதுகிட்டே இருப்பாங்க, வெளியில வந்தா நமக்கும் கொஞ்சம் மாற்றமா இருக்கும் என்று பலவிதமாக யோசிச்சுதான் வேலைக்குப் போகத் தொடங்கினாள்.
கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஓடிய நிலையில், அவள் கணவன் தேடி வந்தான். ஆஹா தொலைந்தது கிடைக்கப் போகிறதோ என குடும்பமே குதூகலிக்க, அவன் இந்த இரண்டு வருடமா சம்பாத்தித்ததை முழுசும் எங்கிட்ட கொடுத்திடனும். கல்யாணத்துக்கு பிறகு சம்பாதித்தது என்னைத்தானே சேரனும் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டான்.
அதை என்ன சேமித்தா வைத்திருக்கிறார்கள் கேட்டதும் எடுத்துக் கொடுக்க. பிரகதியின் அப்பா கெஞ்சினார் “கொஞ்சம் அவகாசம் கொடுங்க மாப்பிள்ளை” என்று.
இனியும் பிரகதி சம்பாதிப்பதையும், இதுவரை வந்ததையும் மொத்தமா எடுத்துக் கொண்டு என்னைக்கு வேண்டுமானாலும் வரலாம்னு பெருந்தன்மையா சொல்லிவிட்டுப் போய் விட்டான் அவள் கணவன்.
பிரகதி இத்தனை அவமானப்பட்டு கெஞ்சி காலில் விழுந்து இந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொடுத்தாலும் அது நிலைக்கும் என்று என்ன உத்தரவாதம் இருக்கிறது என வெகுவாக யோசித்தாள்.
அப்பா அம்மாவுடன் வாழ்வதே நிம்மதியாக இருக்கும் எனத் தோன்றியது. இதைப்பற்றி தெளிவாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும் இவர்களுக்கு என சமயம் பார்த்துக் கொண்டிருந்த போது தான் வாசுவின் காமப் பார்வையில் மாட்டிக் கொண்டு தவிக்கும்படி ஆகி விட்டது.
வாசு குழந்தைப் பருவத்து நண்பன்தான். இரண்டு குடும்பங்களுமே குழந்தைகளின் நட்பால் நண்பர்கள் ஆகி விட்டவர்கள்தான்.
பிரகதிக்கு ஷிப்ட் மாறி மாறி வரும் போது சில நாட்கள் இரவு தாமதமாக வர வேண்டி இருக்கும். அந்த ஏரியாவில் தான் வாசுவும் சொந்தமாக கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், அவன் கடையை மூடிக் கொண்டு வரும் போது அவனோடு சேர்ந்து வந்துவிடச் சொல்லி பிரகதியின் அப்பா சொல்லி இருந்தார்.
இந்த சந்தர்ப்பங்களில்தான் வாசு அத்து மீறத் தொடங்கி உள்ளான். இரட்டை அர்த்தம் வருவது போல் பேசுவது, அப்புறம் எந்த விவஸ்தையும் இல்லாமல் பெண்களின் அந்தரங்க விஷயங்களை பற்றி படு கேஷுவலாகப் பேசுவது என்று தொடர்ந்து, இப்போது தொட்டுப் பேசுவதும், காமப் பார்வையால் துளைப்பது போல் பார்ப்பதுமாக எல்லை மீறத் தொடங்கிவிட்டான்.
மிகவும் நல்லவன், சாது என்று ஊரே நம்பிக் கொண்டிருக்கும் இவனைப் பற்றி நாம என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. சின்ன வயசு வாழாம வந்திட்டாள்ல. அதான் மனசு அலை பாயுது போலன்னு நம்மையே தப்பா யோசிப்பாங்க.
ஊரே அப்படி யோசிக்கும் போது அவன் வீட்டிலேயோ ஏன் நம்ம வீட்டிலேயேக் கூட நம்பறதும் கஷ்டம்தான். கோயிலைக்கண்டா கும்பிடாம வர மாட்டான். வீட்டில தினமும் அரைமணி நேரமாவது பக்திப் பாடல்கள் பாடி சாமி கும்பிடாம வெளியில வரவே மாட்டான். நெத்தி நிறைய விபூதி வேற.
இதையெல்லாம் விட வீட்டுக்கு பிரகதியோ வேறு யாராவது பெண்களோ வந்தால், “அம்மா வசந்தி” என்று அம்மாவையோ மனைவியையோ அழைத்து இன்னார் வந்திருக்காங்கன்னு சொல்லிட்டு தன் வேலையைப் பார்க்கப் போயிடுவான்.
பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவனாம். இப்படிப்பட்டவனின் முகத்திரையை எப்படிக் கிழிக்கறது. முதல்ல இவனோட இந்த அருவருப்பான தொல்லையில இருந்து எப்படி தப்பிக்கறது. புரியாத மனப் போராட்டத்துடனே வீடு வந்து சேர்ந்தாள்.
இனிமே புருஷனோட சேர்ந்து வாழறது சாத்தியப் படாதுன்னு சொல்லிட்டு இந்தப் பிரச்சனையையும் சொன்னா அவ்வளவுதான் அப்பாவும் அம்மாவும் ஆடிப் போயிடுவாங்க.
“பணம்தானே பிரச்சனை எங்க உயிரைக் கொடுத்தாவது பணத்தைப் புரட்டிக் கொடுத்திடறோம். நீ உன் புருஷனோட வாழறதுதான் நல்லது. வேலியில்லாத பயிர்ன்னு தானே கண்டதுங்களும் மேய நினைக்குதுங்க”ம்பாங்க.
எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாப்பிட்டுப் படுத்து விட்டாள். தூக்கம் வெகு நேரம் வரை வரவேயில்லை. அப்பாவை துணைக்கு வரச் சொல்லலாமா, ம்ஹூம் ஏன் எதுக்குன்னு கேள்வி வரும். அத்தோட அவனைப் பாத்து பயப் படறோம்னு அவனுக்குத் தெரியக் கூடாது. பின்னே என்ன செய்யலாம்.
சாதாரணமாக சொல்றாப்பல அடுத்த மாசம் என் புருஷன் வந்து என்னை அழைச்சுக்கிட்டுப் போறேன்னு சொல்லிட்டாருன்னு சொல்லி வைக்கலாமா. வேலியில்லாத பயிர் இல்லைன்னு நினச்சு ஒதுங்கிடுவானா. ஆனா தொடர்ந்து நான் இங்க தான இருக்கப் போறேன் என பலவும் யோசித்து தூக்கத்தைத் தொலைத்தவள் கடைசியில் ஒரு தெளிவான முடிவுடன் தூங்கி விட்டாள்.
காலையில் ஹாஸ்பிட்டலுக்குக் கிளம்பும் போது, “அப்பா! என் ஃபோன் வொர்க் பண்ண மாட்டேங்குது இன்னிக்கு உங்க ஃபோனைக் கொஞ்சம் கொடுங்க” என்று கேட்டு வாங்கிப் போய் விட்டாள்.
வழக்கத்தை விட அதிக வழிசலுடன் நடக்கும் போதே உரசியபடி நடக்க வந்தவனிடம், “வாசு! ஒரு நிமிஷம் நில்லு இந்த ஊர் உன்னைப்பற்றி நினைக்கிறத விடு உன் அம்மாவும் வொய்ஃபும் கடவுள் ரேஞ்சுக்கு உயர்வா வச்சிருக்காங்க. நீ எங்கிட்ட நடந்துக்கிற கீழ்த்தரமான முறை பத்தி தெரிஞ்சா என்னாகும். எப்படித் தெரியும் நீ சொன்னாலும் நம்ப மாட்டாங்கன்னு சொல்லாத.
இதுநாள் வரை நீ பேசினது நடந்துகிட்டது எல்லாத்தையும் வீடியோவாவே என் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணி வீட்டில வச்சிட்டு வந்திருக்கேன். இதை நான் சொன்னா நீ எங்கிட்டே ஈஸியா பிடுங்கி டெலிட் பண்ணிடுவேன்னு தெரியும். அதான் வீட்டில பத்திரமா வச்சிட்டு அப்பா ஃபோனை வாங்கிட்டு வந்தேன். மாட்டிவிடாம ஏன் இப்படி சொல்லிட்டிருக்கேன்னா உன்மேல உள்ள அக்கறையில இல்லை.
உன் வொய்ஃப், குறிப்பா உன் அம்மா அவங்கல்லாம் இதைத் தாங்க மாட்டாங்களே குடும்பம் சிதஞ்சிடுமேன்னுதான். குடும்பம் சிதையறதோட வலி அவலம் எல்லாம் எனக்குப் புரியறதாலதான், என் நிலமை உன் மனைவிக்கோ உன் பொண்ணுக்கோ அதாவது என்னை மாதிரி வேலி இல்லாத பயிரா நிக்கிற நிலமை வந்தா, உன்னை மாதிரி எத்தனை மிருகங்கள் மேயக் காத்திருக்கும்னு யோசிக்கறதாலதான் உங்கிட்ட வார்ன் பண்ணிட்டிருக்கேன் ஆதாரத்தை வெளியில விடாம” என்றாள் மிகத் திடமாக தெளிவான குரலில்.
அந்தப் பசுத்தோல் போர்த்திய புலி, ஒரு பசு புலியாக மாறியதைக்கண்டு விதிர் விதிர்த்து நின்று விட்டது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை மா! இப்படிப் பெண்கள் துணிந்து செயலில் இறங்கினால் தான் வழி பிறக்கும்.
நல்ல சமயோஜிதமான செயல்பாடு தான். அருமையான கதைங்க மா 👌👌👌👌
அருமை