மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“வாங்கோ… வாங்கோ… உக்காருங்கோ. ஆத்துல கல்யாணம் வர்றதா? சந்தோஷம்” கிட்டு மாமா வரவேற்புலயே சந்தோஷப் படுத்தினார்.
“காஃபி சாப்டறேளா?”
அவா வேண்டாம்னு சொல்லுவான்னு தெரிஞ்சு ஒரு ஒப்புக்குக் கேட்டு வைத்தார். ஏன்னா உள்ள அவருக்கே ரெண்டாம் காஃபி இல்லைன்னுட்டா பட்டு மாமி… இவாளுக்கு வேற எங்கேர்ந்து கொடுக்கறது?
“பட்டு… இங்க வாயேன். யாரு வந்திருக்கா பாரு”.
“வேற யாரு வந்திருப்பா? பத்திரிகைய எடுத்துண்டு கோயிலுக்கு கூழ் ஊத்தறோம்னு டொனேஷன் கேட்டு வந்திருப்பா. வேறென்ன உங்களப் பாக்க குபேரனா வருவான்?”
பட்டு மாமி ஹால நோக்கி நடந்து வந்துண்டே புலம்ப, வந்தவர்களப் பார்த்து, “வாங்கோ… வாங்கோ, கல்யாணமா?”ன்னு கேட்டுண்டே அசடு வழிந்தாள்.
பத்திரிகை கொடுக்கறச்சயே பல்லவி ஆரம்பமாயிடுத்து! வந்தவா கிட்டு மாமா கைல ரிசப்ஷன் பத்திரிகைய கொடுத்துட்டு, கண்டிப்பா ரிசப்ஷனுக்கு வரணும்னு கேட்டுண்டா.
‘அட… போச்சுடா! வெறும் வாய்க்கு மெல்ல இன்னிப்போதுக்கு அவல் கெடச்சாச்சுடா! இனிமே இவர ஸ்டாப் பண்ண முடியாதுடா சாமி…’
பட்டு மாமி மைண்ட் வாய்ஸ்.
“பட்டு… கல்யாணம் சொல்ல வந்தவா முகூர்த்தத்துக்குத் தான் அழைக்கலை… சரி, ரிசப்ஷனுக்கு அழைக்கறது தான் அழைக்கறா! எப்படி அழைக்கறான்னு பாத்தியோன்னோ?”
ஸ்டார்ட் பண்ணிட்டார், கிட்டு மாமா.
“எங்க குலதெய்வம் திருப்பதி வெங்கடாசலபதி சார். எங்க ஃபேமிலி வழக்கப்படி மேரேஜ கோவில்ல வெச்சிருக்கோம் சார்! முஹூர்த்தம், எர்லி மார்னிங் 4 ½ to 6 மணி சார்! உங்களுக்கு மேரேஜுக்கு வர்றதுக்கு சௌகர்யப்படாதுன்னு தெரியும்! அதனால, மொத நாளே ரிசப்ஷன் ஏற்பாடெல்லாம் பண்ணிட்டோம்!
நம்ம எத்திராஜ் காலேஜ் ரோட், ராணி சீதை ஹால் கல்யாண மண்டபத்துல ரிசப்ஷன் வெச்சிருக்கேன், ரிசப்ஷன் ஈவ்னிங்தான் சார்! நீங்க, ஆஃபீஸ் முடிஞ்சு, அப்டியே நேரா வந்துடலாம், கட்டாயம், ஃபேமிலியக் கூட்டிண்டு வந்துடுங்கோ”ன்னு அழைச்சுட்டு கெளம்பிப் போய்ட்டா.
“ஏண்டி பட்டு… இந்தக் கூத்தக் கேட்டியோ? எனக்கென்னடி எங்க ஆஃபீஸ்லயா நேக்கு ஃபேமிலியெல்லாம் இருக்கு? ரிசப்ஷனுக்கு ஆஃபீஸ்லேர்ந்து ஃபேமிலியக் கூட்டிண்டு வந்துடுங்கறான்” கிட்டு மாமா.
“யார் கண்டது? ஆஃபீஸ்ல ஃபேமிலி கீமிலி இருக்கோ என்னவோ?” பட்டு மாமி.
“இப்போ திடீர்னு உனக்கேண்டி சக்களத்தி ஆசையெல்லாம் வந்துடுத்து? ஏண்டி இப்டில்லாம் பேசற…”
ஆசைய வெளில காட்டிக்காம ஸர்வ ஜாக்கிரதையா பேசினார் கிட்டு மாமா.
ஆமாம்! இப்பல்லாம் யாரும், கல்யாணத்துக்கு – முஹூர்த்தத்துக்கு வரச்சொல்லி, அழைக்கறதில்லை! கல்யாணம் கோவில்ல பண்ணிடறா. ரிசப்ஷனுக்குன்னே, தனியா பத்திரிகை ப்ரிண்ட் பண்றா! அதுவே, ரொம்ப எளிமையா, ஒவ்வொண்ணும் கொறஞ்சது இருநூறு, முன்னூறு ரூபாய் இருக்கும்!
அந்த ரிசப்ஷன் பத்திரிகைய பாத்த உடனே, என் அருமை மாமனார் ஞாபகம் வந்து, என்னை வெறுப்பேத்தறது. எனக்கெல்லாம், கல்யாணத்தும் போது மிட்டாய் கலர், மஞ்சள் கலர் காம்பினேஷன்ல இருக்கற ஸ்டாண்டர்ட் ‘உபயகுசலோபரி…’ சம்ப்ரதாயப் பத்திரிகை தான்!
அதுக்கும் நான் வற்புறுத்தலேன்னா எல்லாருக்கும் என் மாமனார் கல்யாணப் பத்திரிகைய, அலுக்காம சலிக்காம அஞ்சு பைசா போஸ்ட் கார்டுல எழுதிப் போட்டிருப்பார். அவ்வளவு சிக்கனம்.
சாஸ்த்ரம், சம்ப்ரதாயம்னு வம்சாவளியா ஊறிப்போன நமக்கு, மாங்கல்யதாரணம் ஆன உடனே, பாணிக்ரஹணம் முடிஞ்சு, அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து, ஸப்தபதியும் முடிஞ்சாத்தான், கன்யகாதானம் முடிஞ்சு, கல்யாணம் ஆனதா அர்த்தம்”னு ஒவ்வொரு கல்யாணத்திலயும் நம்மளோட வைதீக சிரோன்மணிகள் சொன்னதெல்லாம் பளிச்சுன்னு ஞாபகத்துக்கு வர்றதால, இந்தக் கல்யாணத்துக்கு முன்னாலயே ரிசப்ஷன்ங்கறத நம்மால ஏத்துக்க முடியறதில்லை!
இப்பல்லாம் சொல்லிக்கறாளே, ‘லிவ் டுகெதர்’னு! அந்த கான்ஸப்ட் மாதிரின்னா இருக்கு? என்ன பண்றது? ஆனா, ‘உலகத்தோடு ஒட்டி வாழ்’னும்மோன்னோ? அதனால விட்டுக் கொடுக்காம போக வேண்டியதாயிருக்கு!
இதுல, பத்திரிகையக் குடுத்துட்டு சாஷ்ட்டாங்கமா கால்ல வேற விழுந்து, நமக்கு வயசாச்சுன்னு வேற ஞாபகப்படுத்தி விட்டுட்டுப் போயிடறானுங்க!
அந்த நாளும் வந்திடாதோங்கறாப்ல… ரிசப்ஷன் போக வேண்டிய நாளும் வந்தது. பட்டு மாமி ரிசப்ஷனுக்குத் தயாராகிண்டிருந்தாள்.
பட்டு சாரில்லாம் வெச்சிருந்த பீரோவ, திருப்பிப் போட்ட கரப்பான்பூச்சி போல தலகீழ கவுத்துக்கொட்டி, இந்தப் புடவ நன்னாருக்குமா? அந்தப் புடவ நன்னாருக்குமான்னு பாத்து, பாத்து பட்டுப் பொடவைகள பட்டு மாமி பொரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள்.
என்னடாது… புடவை நன்னாருந்தா ப்ளவுஸு மேச்சாக மாட்டேங்கறது?
“ப்ளவுஸ் கெடச்சா… புடவைக்கு சூட்டாகல… என்ன மனுஷனோ இவர்? ஒரு புடவைக்கு மேச்சா நாலு ப்ளவுஸ் வாங்கிக் கொடுத்தா என்னவாம்?”ன்னு பொலம்பிண்டே, ஒரு புடவையையும் ப்ளவுஸையும் கண்டுபிடிச்சு கட்டிக்க ஆரம்பிச்சா.
கிட்டு மாமா ஆஃபீஸ்லேர்ந்து வந்தாச்சு.
“கூடவே ஆஃபீஸ் ஃபேமிலியெல்லாம் கூட்டிண்டு வரலையோன்னோ?” புடவைய சரி செஞ்சுண்டே பட்டு மாமி கிண்டலா கேட்க, உனக்கே இவ்வளவு கொழுப்பா? இரு வரேன்னு மனசுக்குள்ள சொல்லிண்ட கிட்டு மாமா, “அதெல்லாத்தையும் ஆஃபீஸ்லயே விட்டுட்டு, உன்ன ரிசப்ஷனுக்கு அழைச்சுண்டு போறதுக்காக தனியா நான் மட்டும் வந்துட்டேன்டி பட்டு” என்று பேசினார்.
பட்டு மாமி கப் சிப்!
“பட்டு… நீ ரெடியாயிட்டேன்ன கெளம்பிட வேண்டியதுதான். ரெடியாயிட்டயா? போலாமா?” கிட்டு மாமா.
பட்டுமாமிக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்பாடி… ராத்திரி சமையல்லேர்ந்து விடுதலை!
சர்ர்ருன்னு அந்த பெரிய கல்யாண மண்டபத்து வாசல்ல காரக் கொண்டு நிறுத்தினார்.
மிலிட்டரில ஆர்ம்டு பேரேட்ல முன்னாடி பேண்ட் வாசிச்சிண்டு போற கோஷ்டி தலைவனுங்க மாதிரி விசிறி மடிப்பு டர்பன் கட்டிண்டு, பேக்பைப்பர் யூனிஃபார்ம்ல இருந்த ஆஜனுபாகுவான ரெண்டு ஜவானுங்க கார் கதவ திறந்து விட்டு, பெருசா பட்டுன்னு ஒரு சல்யூட் அடிக்க, பயந்து போய் காரை விட்டு இறங்கினர் கிட்டு மாமாவும் பட்டுமாமியும்.
கார் சாவிய கைலேர்ந்து புடுங்காத கொறையா வாங்கிண்டு, “சார் நம்ம கார வாலட் பார்க்கிங்ல பத்திரமா நாங்களே பார்க் பண்ணிடுவோம்”னு சொல்லி ஒரு டோக்கன கைல திணிச்சுட்டு மீண்டும் ஒரு முறை சல்யூட் அடித்தான்.
பெங்களூர் போன புதுசுல மிலிட்டரி ட்ரஸ்ஸோட கோட்டு போட்டுண்டு, தலைல தொப்பி போட்டிருந்த வாட்ச்மேன் கூர்க்காவுக்கு பயத்துல சல்யூட் அடிச்ச ஞாபகம் சட்டுன்னு இப்ப ஏன் வர்றதுன்னே தெரில. திரும்பிப் பார்க்கறத்துக்குள்ள காரை பார்க் பண்ணிட்டு வந்திண்டிருந்தான் இன்னொரு விசிறி மடிப்புத் தொப்பி!
பத்து பெரிய படியேறி மண்டபத்துல கால் வெக்கறத்துக்குள்ள கோட், டை சகிதம் அங்கிருந்த ரெண்டு ஆபீஸரும், “வாங்க சார்… டின்னர் சாப்பிட்டுட்டு ரிசப்ஷன் நடக்கற ஃப்ளோருக்குப் போகலாம்”னு சொல்லி, தூக்கிண்டு போகாத கொறையா கிட்டு மாமாவ கைத்தாங்கலாக டின்னர் ரூமுல கொண்டு போய் தள்ளி விட்டாங்க.
‘அடடே… பட்டு எங்க காணும்?’னு கிட்டு மாமா யோசிக்கறத்துக்குள்ள, பட்டுப் புடவை சரசரக்க ரெண்டு இளசுகள் பட்டு மாமிய அலுங்காம குலுங்காம தூக்காத கொறையா டின்னர் ரூம்ல கொண்டு ஜோடி சேர்த்துட்டுப் போயிடுத்துகள்.
நாலு படி எறங்கி டின்னர் ரூமுக்குள்ள கால் எடுத்து வெச்சதுமே, அந்த கண்ணாடிக் கதவுகள் ஆட்டோமேட்டிக்கா ஓபனாயிடுத்து! உள்ள ஒரே களேபரம்!
“ரிசப்ஷன் ஏற்பாடு செஞ்சிருந்த நம்ம ஃப்ரெண்ட் ரொம்ப புத்திசாலிடி பட்டு! மார்கழி சீசன் கச்சேரிகள் நடக்கற எடத்துல கேன்டீன் வெச்சு வியாபாரம் பண்ணுவாளே… அது மாதிரி தன் பொண்ணோட ரிசப்ஷன்ல அவன் ஸ்டேடஸுக்குத் தகுந்தா மாதிரி ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுல ஒரு பெரிய கேன்டீன ஓப்பன் பண்ணி வியாபாரத்த ஆரம்பிச்சுட்டான் பாரு! எல்லாத்துலயும் காசு பாக்கற பெரிய மனுஷன்!”
கிட்டு மாமா அங்கலாய்த்தார்.
“வாய மூடிண்டு சித்த சும்மா இருக்கேளா? கேக்கறவா தப்பா நெனச்சுக்கப் போறா? அங்க நடக்கறது பஃபே ஸிஷ்டம் டின்னர். நேக்குத் தெரிஞ்சதுகூட ஒங்களுக்குத் தெரியலையே? ஹுக்கூம்…”னு தன் தோளாள தாவாங்கட்டைல இடிச்சுண்டு பட்டு மாமி பட்டுன்னு சொன்னா.
“ஏண்டி பட்டு, ஜானவாசம்னா, சாயங்காலம் ஒரு அசோகா அல்வாவோ கோதுமை அல்வாவோ போட்டு, போண்டா, கிச்சடி, பூரியோ சின்னதா தோசை, கொத்ஸு, சட்னி, சாம்பார்லாம் போட்டு, டிகிரி காப்பி கொடுப்பா. ஜானவாச ஊர்வலம் முடிஞ்சு ராத்திரி ஆமவடை, போளி, பால்பாயஸத்தோட ஜானவாச சாப்பாடு போடுவான்னு பேரு? இங்க என்னடான்னா வசதியானவா எல்லாரும் ஒரு தட்டத் தூக்கிண்டு சோத்துக்கு அலையறா? இதுக்குப் பேர்தான் பஃபே ஸிஷ்டமா?”
“சரி வா… கிட்ட போய் என்னன்னு தான் பார்க்கலாம் வா..”
‘இதென்ன… ஸ்வீட் ஸ்டால் மாதிரி ஸ்வீட்டா அடுக்கியிருக்கா? ட்ரை ஜாமூன், மைசூர் பா, கேஷு கத்லி, பாதாம் பர்ஃபி, சாக்லேட் பர்ஃபி. அதென்ன? விரத அப்பத்த ஜீரால போட்டு வெச்சுருக்கா? அதுக்கு என்ன பேருன்னே தெரிலியே?’
கிட்டு மாமா தயங்கினத பார்த்த வெள்ளை தொப்பி சர்வர், “சார், அது மால்பூவா ஸ்வீட் சார்!” அப்டீன்னான்.
“அதென்னமோ போப்பா? மால்பூவோ வாழப்பூவோ ஏதோ ஓண்ணு… ஹும்.” பெருமூச்சு விட்டுண்டார் கிட்டு மாமா!
அப்படியே, பட்டுமாமியோட கொஞ்சம் முன்னாடி நகர்ந்து பார்த்தார்.
“இதப் பாத்தியா பட்டு… இங்க எல்லாத்துலயும் வடநாட்டான் வந்து பூந்துட்டான் பாரு! ரொட்டி, சப்பாத்தி, ஃபுல்கா, நான், பட்டர் நான், ருமாலி ரொட்டி, பராத்தா, ஆலு பராத்தா, ஸ்டஃப்டு முல்லி பராத்தா குல்ச்சா, ஸ்டஃப்டு குல்ச்சான்னு எல்லாம் குல்லா போட்ட வடநாட்டு சேட்டு ஐட்டமா இருக்குடி?
வெஜ் பிரியாணி, வெஜ் புலாவ், கேஷு புலாவ், காஷ்மீரி புலாவ், வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ், கீ ரைஸ், ஜீரா ரைஸ்…. இதெல்லாம் ஒரு பக்கம். அங்க பாரு ஸைடு டிஷ் வெரைட்டிய…
க்ரீன் பீஸ் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர், தம் ஆலு, கடாய் வெஜ்.க்ரேவி, ஆலு க்ரேவி மசாலா, ஆலு ஃப்ரை, ஆலு-கோபி மசாலா, ஆலு-கோபி மசாலா ஃப்ரை… தல சுத்துதடா சாமி…
இதத் தவிர இங்க வெஜ்.ரோல், கோபி 65, பனீர் ஃப்ரை, ஸ்டஃப்டு பிண்டி, ஃபிங்கர் சிப்ஸுன்னு ஸ்டார்டர் ஐட்டங்கள்; வெஜிடபிள் சாலட் வெரைட்டீஸ். எல்லாத்துக்கும் கடைசில வெச்சிருக்கான் பாரு
பாயஸம், சாம்பார் சாதம், உருளை பொடிமாஸ், பீன்ஸ் பருப்பு உசிலியல், அவியல், சிப்ஸ், வெஜிடபிள் வடை, ஒயிட் ரைஸ், கல்யாண ரசம், பகாளா பாத், மணத்தக்காளி வத்தக்குழம்பு, லெமன் ஊறுகாய், ஆவக்கா ஊறுகாய், மாங்காய் தொக்கு,, மாவடு, புளிஇஞ்சி. அந்தப் பக்கம் ஃப்ரூட் சாலடோட ஒரு பெரிய ஐஸ்கிரீம் ஷாப்!
பக்கத்துலயே ராஜஸ்தான் ட்ரெஸ்ல ரெண்டு மார்வாடி பீடா ஸ்டால். அடேங்கப்பா…. இதெல்லாம் மனுஷா சாப்டறத்துக்கா? இல்ல எக்ஸிபிஷன் மாதிரி பாத்துட்டு வாங்கிண்டு போறதுக்கா? நாராயணா… ஒண்ணுமே புரியலயே?
எல்லாத்தையும் ஒரு ரவுண்டு பாத்துட்டு வந்தாலே வயிறு நெறஞ்சுடும் போலருக்கே? பட்டு… நான் அப்பவே சொல்லல. அந்தப் பெரிய மனுஷன் தன் ஸ்டேட்ஸ்ஸ காட்றத்துக்கு ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுல ஒரு ஃபுட் கோர்ட்டே உருவாக்கிட்டான் பாரு!”
‘சரியா போச்சு போ… இத்த சுத்தி வர்றத்துக்கே ஒன்றரை மணி சாவகாசம் ஆச்சு… இனி ஏதாவது சாப்ட வேண்டியது தான்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே, வரிசைல நின்னு டிஷ்யூ பேப்பர், ஸ்பூன், ஃபோர்க் சகிதம் ஒயிட் யூனிஃபார்ம் கொடுத்த ஒரு ப்ளேட்டை வாங்கிக் கொண்டு முன்னால் நகர்ந்தார் கிட்டு மாமா. பட்டு மாமி அவரை ஃபாலோ பண்ணினாள்
ஸ்வீட் உள்பட சில மார்வாடி வடநாட்டான் ஐட்டங்கள லைட்டா டேஸ்ட் பண்ணிட்டு, வழக்கம் போல சாம்பார், ரசம் இருப்பிடம் தேடி வந்து வெய்ட்டா கவனிக்க ஆரம்பிச்சா பட்டு மாமியும் கிட்டு மாமாவும்
என்ன இருந்தாலும் நம்ம தயிர்சாதம், மணத்தக்காளி வத்தக்குழம்பு, புளிஇஞ்சி காம்போ சூப்பர் தான? விட்ட கொறை தொட்ட கொறைக்கு, கொஞ்சம் ஃப்ரூட் சாலட உள்ள தள்ளிட்டு, சூடா குலோப்ஜாமுனோட பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ரெண்டு ஸ்கூப்பையும் காலி பண்ணினார் கிட்டு மாமா.
‘அழகா ரெண்டு கும்பகோணம் வெற்றிலை, வறுத்த நெய்சீவல் போட்டுக்கலாம்னா… அதெல்லாம் அங்க அவுட் ஆஃப் டேட் போல! ஒண்ணுத்தையும் காணல்லை…ஹும்… வேறென்ன பண்றது?’
கிட்டு மாமா மைண்ட் வாய்ஸ்!
ஒரு ஸ்வீட் பீடாவ அந்த மார்வாடிட்டேர்ந்து வாங்கி வாயில போட்டுண்டார்.
பட்டு மாமியோ உதட்டுல இருக்கற லிப்ஸ்டிக்ல பட்டுடாம, நாசூக்கா கொஞ்சம் ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம சாப்டுட்டு, ஒரு ஸ்வீட் பீடாவ வாயில அடக்கிண்டாள். அப்டீ இப்டீன்னு ரெண்டு பேரும் ஒருவழியா டின்னர முடிச்சுண்டு, லிஃப்ட் ஏறி ரிசப்ஷன் ஹாலுக்கு என்ட்ரி ஆனார்கள்.
ரிசப்ஷன் ஹால்… ரொம்ப பெரிசு. ஹால் கோடில அரசியல் கட்சி மாநாட்டு மேடை மாதிரி பெரிய அளவில் மண்டபம்! நடுநாயகமாக மணமக்களுக்கு…..
சாரி, மணமக்கள் ஆகப் போகிறவங்களுக்கு ராஜ தர்பார் சிம்மாசனம் போல, ரெண்டு அலங்கார இருக்கைகள்! மாப்பிள்ளை, கல்யாணப் பெண் இருவரும் இணைந்து அமர்ந்திருந்தார்கள்.
ரிசப்ஷன் ஹால் என்ட்ரிலேர்ந்து இடதுபுறமாக அலங்கார மேடையை நோக்கி சுமார் ரெண்டு ஃபர்லாங் நீளத்துக்கு ஒரு பெரிய, ஊர் ஜனங்கள் வரிசைல நிக்கறா மாதிரி, கிஃப்ட்டும் மொய்க் கவரும் கொடுக்க ரிசப்ஷனுக்கு வந்தவர்கள் கூட்டம் வரிசைல நின்னுண்டிருந்தது.
அதற்கு எதிர்ப்பக்கம் வலதுபுறமும் ரெண்டு ஃபர்லாங் நீளத்துக்கு மேடைக்குப் போய் கிஃப்ட் கொடுத்துட்டு திரும்பி வந்து கொண்டிருப்பவர்கள் க்யூ,…. ஹால் என்ட்ரியைக் கடந்துவிட அவசரப்பட்டுக்கொண்டிருந்தது.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த கிட்டு மாமாவுக்கும் பட்டு மாமிக்கும் தலைசுற்ற, நடுவில் போடப்பட்டிருந்த குஷன் சேர்களில் அமர்ந்து கொண்டனர். அதே நேரத்துல கிட்டு மாமாவோட ஃப்ரெண்ட் சங்கரன் மற்றும் அவர் மனைவி கற்பகம் ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து சேர்ல வந்து உட்கார்ந்தா.
“சங்கரா… எப்போ வந்தே? உங்கள டின்னர் ஹால்லகூட பாக்கல்லையே? எப்படி இருக்கேள்? சௌக்கியமா இருக்கேளா?”ன்னு குசலம் விசாரித்தார் கிட்டு மாமா.
ரிசப்ஷன் மேடைலேர்ந்து கிட்டு மாமா, சங்கரன் ஃபேமிலியப் பார்த்த பொண்ணோட அப்பா, வயசானவங்களை சிரமப்படுத்தக் கூடாதுன்னு மாப்பிள்ளை, பெண்ணை கீழையே அழைச்சுண்டு வந்து நமஸ்காரம் பண்ண வெச்சார்.
கிட்டு மாமா, சங்கரன் தம்பதிகள் மணமக்களாகப் போகிற வரனையும் வதுவையும் க்ஷேமமா இருக்கணும்னு ஆசீர்வாதம் பண்ணி தாங்கள் வாங்கி வந்த கிஃப்டுகளைக் கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
வாசல் வரை வந்து அவர்களுக்கு தாம்பூலப் பைகளைக் கொடுத்து வழியனுப்பி வைத்து மரியாதை செய்தார், பெண்ணோட அப்பா!
“சங்கரா… நீங்க இப்போ என்னோட நம்மாத்துக்கு வந்து, ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு அப்புறமா ஊருக்கு கெளம்பிப் போகலாம்”னு கிட்டு மாமா சொல்ல, அவர் பேச்சை தட்ட முடியாம சங்கரனும் கற்பகமும் கார்ல ஏறி கிட்டு மாமாவாத்துக்கு வந்து சேர்ந்தனர்.
“ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் சேர்ந்துட்டாளோன்னோ? இனிமே அவா பாட்டுக்கு பேசிண்டிருப்பா… கற்பகம் நீ வா, நாம ரெண்டு பேரும் தூங்கப் போயிடலாம்…”
பட்டு மாமி கற்பகத்த அழைச்சிண்டு தூங்கப் போய்ட்டா.
கிட்டு மாமாவும் சங்கரனும் அவங்க போயிட்டு வந்த ரிசப்ஷன் பத்தி அசை போட ஆரம்பிச்சுட்டாங்க…
“கிட்டு… அதென்ன டின்னர் ஹால்ல மதுரை, தமுக்கம் மைதானத்துல நடக்கற எக்ஸிபிஷன்ல கூடற கூட்டம் மாதிரி ஒரு ஆயிரம் பேருக்கு மேல… அதுல யார எங்கேர்ந்து தேடறது? சாப்டுட்டு வெளில வந்தா போறும்னு ஆயிடுத்து” சங்கரன் அங்கலாய்த்தார்!
“அங்க மட்டுமா? இங்க ரிசப்ஷன் ஃப்ளோர்ல மேடைக்கு ரெண்டு பக்கத்துலயும் பாத்தியோன்னோ…? அரசியல் மாநாடு ஊர்வலம் போயிண்டிருக்கறா மாதிரி? ஏன் சங்கரா… பொண்ணு வீட்டுக்காரன், அவனோட சொந்த பந்தங்களுக்கும் ஃப்ரண்ஸ்களுக்கும் பத்திரிகை கொடுத்தாரா?
இல்ல ரோட்ல போறவா வரவாளையெல்லாம் தேடித் தேடி பத்திரிகை கொடுத்தாரா? இல்ல அரசியல் கூட்டத்துக்கு ஆட்கள அரேஞ்ச் பண்ற ஏஜெண்ட்டுகிட்ட சொல்லி கூட்டத்த கூட்டினாரான்னே தெரியல?
இந்தக் கூட்டத்துல பொண்ணு வீட்டுக்காரங்க யாரு? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க யாரு? அவங்களோட ஃப்ரெண்ட்ஸுங்க யாருன்னே அவங்களுக்கே தெரியாத கூட்டமான்ன இருக்கு? இதான்யா பணக்காரனுங்க வீட்டுக் கல்யாணங்கறது…
இந்த பணக்காரன் வீட்டு ரிசப்ஷன்ல, ஆடம்பரமும் பணபலமும் தான் தெரியறதே ஒழிய உறவோ, பாசமோ, நட்போ இல்ல அன்போ ரவகூட தெரியறதா பாரு…?
எல்லாரும் கூட்டம் கூட்டமா வரான்; இவங்கள வரவேற்கறதெல்லாம் மேரேஜ் கான்ட்ராக்டரோட டை கட்டிண்டு, கோட்டு போட்டுக்கிட்டு இருக்கற ஆஃபீஸர்ஸும் லிப்ஸ்டிக்கும் கட்டிண்ட பட்டுப் புடவையும் கலையாம நுனிநாக்கு இங்கிலீஷ்ல பேசிண்டிருக்கற லேடி ரிஸப்ஷனிஸ்ட்களும் தான்!
கூட்டங் கூட்டமா ஏதேதோ சாப்பிடறான்… ரிசப்ஷன் மேடைக்குப் போய் மொய்யெழுதறான்… எவனும் எவனையும் சட்ட பண்றதில்ல…மெஷினாட்டமா எந்திர கதில ஒரு தாம்பூலப் பைய வாங்கிட்டு கம்பிய நீட்டறான்.
பொண்ணு வீட்டுக்காரனுக்கோ… மாப்பிள்ளை வீட்டுக்காரனுக்கோ அவனோட நெருக்கமான சொந்தக்காரங்களத் தவிர எவன் வந்தான் போனான்னு கூட கவனிக்கறத்துக்கு அவகாசமே இல்ல போயேன். இந்த மாதிரி ரிசப்ஷன்லாம் யந்திரத்தனமான ஒரு ‘ரிச்சி… ரிசப்ஷன் கலாட்டா’ தான்”
பொலம்பித் தள்ளிட்டார் கிட்டு மாமா…
“ஆயிரந்தான் சொல்லு சங்கரா…வேதமங்கலம் கிராமத்துல அஞ்சு நாள் நடந்த, உன் பிள்ளை ராகவனோட கல்யாணத்துக்கு ஈடாகுமா? உறவுகள், சொந்த பந்தங்கள், நண்பர்கள், கிராமத்து ஜனங்கள்னு ஊரே கூடி நின்னு நடத்தின அந்தக் கல்யாணத்துல அன்பு, பாசம், நேசத்தோட ஒரு அந்யோந்யம் இழையோடித்து.
அந்த வேதமங்கலம் கிராமத்துக்கு வந்திறங்கியதுலேர்ந்து, அஞ்சு நாள் கல்யாணம் முடிஞ்சு ஆத்துக்கு வர்றவரையிலும் உங்க சம்பந்தி மனுஷாளோட உபசரிப்பு ரொம்ப அபாரம்! கல்யாணம் மனசு பூரா நெறஞ்சிருந்தது. அந்த கிராமத்துக் கல்யாணம் மாதிரி இன்னொரு கல்யாணம் எப்ப வரும்னு காத்திண்டிருக்கோம்.”
கிட்டு மாமா சங்கரன் புள்ளையோட கல்யாணத்தப் பத்தி ரொம்ப ஸ்லாகிச்சுப் பேசினார்.
நெடுநாளைக்குப் பிறகு சந்திச்ச நண்பர்கள் இருவரும் மனந்திறந்து பேசி மகிழ்ந்தனர்.
ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு சுப மங்களம்!
ரவிகுல ஸோமனுக்கு சுப மங்களம்!
சுப மங்களம்! நித்ய ஜெய மங்களம்!
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
“KalyaaNa reception galaatta siRu kathai thamashuth thaan ! Ithu avaravar ThirumaNa Nigazhchchiyai nichchayam ninaivupaduththum.
“M.K. Subramanian.”
Thanks for your kind comments 🙏
கவிதா பாரதியின் ரிசப்ஷன் கலாட்டா அருமை. சாவி எழுதின வாஷிங்டனில் திருமணத்தை நினைவு படுத்தின வரிகள். சார் அதே மாதிரி ஒரு தொடர்கதையை எழுதிடுங்க சார். படிக்கப் படிக்க சிரிப்புதான். அந்த ரிசப்ஷன் சாப்பாடு அலப்பறைகளை அழகா விவரிச்சிருக்கார் ஆசிரியர். எல்லாமே உண்மைதானே. படாடோபம் இருக்கு ஆனா பாசமும் நேசமும் இல்லை. ரிசப்ஷனுக்கே ஒரு நாலைஞ்சி லட்சம் செலவு பண்ணிடுவாங்க போல இருக்கு. சரி பட்டு மாமியும், கற்பகமும் தூங்கட்டும். அவங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும். அருமையான ரிசப்ஷன் சாப்பாடு சாப்பிட்ட திருப்தி. வாழ்க
தங்கள் விரிவான விமர்சனம் எனக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் தருகின்றது. தங்கள் விருப்பம் போல்,
ஐந்து நாட்கள் நடைபெற்ற அந்தநாள் கல்யாணம் நினைவூட்டும் வகையில் விரைவில் ஒரு தொடர்கதை எழுத முயற்சி செய்கிறேன்.
நன்றி, வணக்கம்! 🙏