in ,

புத்தர் வந்தார் ஐயோ சாமி (நகைச்சுவை சிறுகதை) – எழுதியவர் : சஹானா கோவிந்த்

புத்தர் வந்தார் ஐயோ சாமி (நகைச்சுவை சிறுகதை)

இந்தக் கதை, ஒரு உண்மை சம்பவத்தை மையமாய் வைத்து எழுதப்பட்டது. சிரிக்க மட்டும், சீரியஸாக எடுத்துக் கொள்வோருக்கு,சிறப்புப் பரிசு (!?) அனுப்பப்படும்

இனி கதையை படிப்போம் வாங்க…

“நிகழ்ச்சில கலந்துகிட்டதுக்கு மிக்க நன்றி மேடம். உங்களுக்கு ஒரு நினைவுப் பரிசு அனுப்பனும், அட்ரஸ் தர முடியுமா?” என, பிரபல (!?) பத்திரிக்கையின் ஆசிரியர் பூஜா கேட்க 

“அதெல்லாம் எதுக்கும்மா? நோ பார்மாலிட்டீஸ்” என மறுத்தார், பிரபல எழுத்தாளர் சாரதா 

“இல்லீங் மேம்… I Insist. பெருசா ஒண்ணுமில்ல, ஜஸ்ட் எ மொமெண்ட்டோ” எனவும் 

‘இவள நம்பி அட்ரஸ் தரலாமா? இவ செய்யற கல்லு இட்லி உலக பிரசித்தம் ஆச்சே, இவ சுட்ட இட்லியே கிப்ட்டா அனுப்பிட்டா என்ன செய்யறது? சரி வரட்டும், நம்ப காம்பவுண்டு செவுத்துல ரொம்ப நாளா ஒரு விரிசல் என்ன சிமெண்ட் போட்டு அடைச்சாலும் நிக்கல, இவ இட்லிய வெச்சு பாப்போம்’ என மனதுக்குள் நினைத்தார் சாரதா 

“அட்ரஸ்?” என பூஜா நினைவூட்ட 

“இதோ அனுப்பறேன் ம்மா” என முகவரி பகிர்ந்தார் சாரதா. அதோடு வாட்ஸ்அப் பேச்சு முடிவுக்கு வந்தது 

‘எழுத்தாளருக்கு என்ன கிப்ட் வாங்கலாம்?’ என யோசிக்க ஆரம்பித்தாள் பூஜா

‘இவங்க தான் பால் பொங்க விடற ஸ்பெசலிஸ்ட் ஆச்சே. அதுவும் டிசைன் டிசைனா பொங்க விடுவாங்களே’

சமீப ரிலீஸ், ‘பால் அடை போல பால் பொங்க விடுவது எப்படி?’னு டெமோ காட்டி இருந்ததை, அவங்க Facebook பக்கத்தில் பார்த்த நினைவு வந்தது பூஜாவுக்கு  

அது மட்டுமின்றி, எழுத்தாளர் சாரதா, விரைவில் ‘300 வகையில் பால் பொங்க விடுவது எப்படி?’னு புத்தகம் போடப் போவதாக காற்று வழி செய்தி ஒன்றை, தோழி மூலம் அறிந்திருந்தாள் பூஜா

சமீபத்தில் கூட, “அலெக்சா பால் பொங்கறதை நிறுத்த ஹெல்ப் பண்ணுமா?”என சாரதா அவர்கள் கேட்க, அதை அந்த நிறுவன R&D பரிசீலனை செய்து, அம்பது கோடி மில்லியன் டாலர் ஓதுக்கி, ‘ஆபரேஷன் மில்க் பாய்லர்’ என அந்த ஆராய்ச்சிக்கு பெயர் சூட்டி இருப்பதாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள் 

அந்த ஆபரேஷன் சக்ஸஸ் ஆகி வரும்முன், 5000 லிட்டர் பால் சேதாரம் ஆக வாய்ப்பிருப்பதால், சாரதா அவர்களுக்கு பரிசாய் பால் குக்கர் வாங்குவதே சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள் பூஜா  

பால் பொங்குவதற்கு இரண்டு நிமிஷம் முன், சைரன் சத்தம் கேட்கணும். அதோடு, ‘Milk is about to Spill… stop me to avoid a spell’ என மொட்டை ராஜேந்திரன் குரலில் கர்ண கொடூரமாய் கத்துவது போல் ஸ்பீக்கர் அட்டேச்சுடு, கஸ்டமைசுடு பால் குக்கரை இணையத்தில் தேட ஆரம்பித்தாள் பூஜா 

ஆட்டோமேட்டிக், மேனுவல், எலக்ட்ரிக், டயபடிக் என வரிசை கட்டி காட்டியது கூகிள். இந்த 54 அருவாளில் எதை எடுக்க எதை விட என குழம்பினாள் பூஜா 

‘முன்ன பின்ன செத்திருந்தா இல்ல சுடுகாடு தெரியும்?’என பூஜாவின் அம்மா சொல்வது போல், அவள் என்னத்தை கண்டாள் பாவம். தலையும் புரியாமல் வாலும் புரியாமல், ஐ மீன் குக்கரும் புரியாமல் விசிலும் புரியாமல் விசும்பி விசும்பி அழுதாள் பூஜா 

எழுத்தாளர் சாரதாவுக்கு குக்கர் பரிசளிப்பதில் இன்னொரு சிக்கலும் இருந்தது 

பூஜா வசிக்கும் அதே ஊரில் வசிக்கும் ஒருவரான, அகில உலக பால் பொங்க விடுவோர் சங்கத் தலைவர், மதிப்பிற்குரிய மில்க் கண்ணன், “கூப்பிடற தூரத்துல இருக்கற எனக்கு பால் குக்கர் வாங்கித் தரணும்னு உனக்கு தோணுச்சா?” என கோபித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது 

மில்க் கண்ணன் அவர்கள், வருடத்தில் 465 நாள் பால் பொங்க விடும் ‘அதையும் தாண்டி புனிதமானவர்’. ஆமாம், அந்த வரலாற்று சிறப்பு மிக்க மனிதர், பூஜாவின் ஊர்க்காரர் தான் 

அதிகம் பால் பொங்க விட்டவர் என்ற தலைப்பின் கீழ், கின்னஸ் புக் ஆப் ரெகார்டில் கூட, இவர் பெயர் இடம்பெறும் நாள் தொலைவில் இல்லை என ஊருக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

அதோடு, பொங்க விட்ட சிங்கம், பொங்கல் கிங், பால் பாரிசாகன், மில்க் மிடாஸ் என நிறைய பட்டங்களும் பட்டயங்களும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2024 ஒலிம்பிக்கில், ‘பால் பொங்க விடும் போட்டி’ சேர்த்தே ஆக வேண்டுமென மிஸ்டர் மில்க் கண்ணன் ஒலிம்பிக் கமிட்டிக்கு மனு மேல் மனு அனுப்பிக் கொண்டிருப்பதாய், நம்பத் தகுந்த வட்டார செய்திகள் கூறுகின்றன 

“என்னிடம் என்ன குற்றம் கண்டாய்… நான் பால் பொங்க விடுவதில் ஆடை குற்றம் கண்டாயா அல்லது அடை பிரதமன் குற்றம் கண்டாயா?” என கண்ணன் அவர்கள் மனோகரா வசனம் பேச வாய்ப்பிருப்பதால், எழுத்தாளர் சாரதாவுக்கு பால் குக்கர் வாங்கும் எண்ணத்தை பொங்க விட்டாள் பூஜா, ஐ மீன், டிஸ்மிஸ் செய்தாள்  

‘வேறு என்ன தான் வாங்குவது? அவங்களே எழுத்தாளர், அதனால புத்தகங்கள் எக்கச்சக்கமா வெச்சுருப்பாங்க. ஓவியம் அவங்களே அழகா வரைவாங்க’ என மண்டையை உடைத்துக் கொண்டாள் பூஜா. உடைந்த மண்டையை, பெவிகுயிக் போட்டு ஓட்ட வைத்த கையோடு, மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள் 

எழுத்தாளர் சாரதா அமைதி விரும்பி என கேள்விப்பட்டிருந்த பூஜா, அதற்கு தோதாய் பரிசுகளை தேட ஆரம்பித்தாள் 

ஆனால், அவள் அனுப்பும் பரிசே, சாரதா அவர்களின் மன அமைதியை குலைத்து, அவர் பொங்க விடும் பாலுக்கும் மேலாய் பொங்க வைக்கப் போகிறது என்பதை, பாவம் இந்த அப்பாவிப் பெண் பூஜா அறிந்திருக்கவில்லை 

ஒருவழியாய் அழகான ‘கைக்குள் புத்தர் சிலை’ ஒன்று கண்ணில் பட, அதையே பரிசாய் தேர்வு செய்தாள் பூஜா 

யார் அனுப்பியது என்ற இடத்தில், தன் பெயரை பூஜா சேர்க்க முயல, கொரோனா காரணமாய் பரிசாக அனுப்பும் வசதியை அந்த தளம் முடக்கி இருக்கக் கண்டாள்

‘அந்த பொருளில் வராத கொரோனா, கொண்டு கொடுக்கும் அந்த நபர் மூலம் வராத கொரோனா, நம்ம பேர் போடறதால வந்துடுமா என்ன? நாம அவ்ளோ டேஞ்சர்னு ஊர் பூரா தெரிஞ்சு போச்சா?’ என மனம் வருந்தினாள் பூஜா 

‘சரி பரிசு அனுப்பிட்டோம்னு அவங்களுக்கு சொல்லிடுவோம்’ என கைபேசியை எடுத்தவள், ‘உன் ஒன்னரை அனா கிப்ட்டுக்கு அலெர்ட் வேறயா?’என மைண்ட்வாய்ஸ் கத்த, சரி பிறகு பார்த்து கொள்ளலாம் என மௌனமானாள், பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் 

‘அதோடு, சொன்ன நாளுக்குள்ள போகுதானு தெரியலையே, இப்பவெல்லாம் முன்ன பின்ன ஆகுதே. சரி…  ‘Out for delivery’னு மெசேஜ் வரும் போது அவங்ககிட்ட சொல்லிப்போம்’ என நினைத்துக் கொண்டாள் பூஜா 

அன்றிலிருந்து, தூங்கி எழுந்ததும் பல் துலக்க மறந்தாலும், ஆர்டர் ஸ்டேட்டஸ்  பார்க்க தவறவில்லை. சோதனையாய், ஆர்டர் ஸ்டேட்ஸ் கிணற்றில் போட்ட இட்லியாய்…ச்சே… கிணற்றில் போட்ட கல்லாய் அப்படியே கிடந்தது 

காரணம் கேட்டு தகவல் அனுப்ப, ‘அமெரிக்கால புயல், ஆப்ரிக்கால மழை, சென்னைல பனிக்கட்டியா கொட்டுது, தாத்தா செத்துட்டார், பாட்டிக்கு பல் உடைஞ்சு போச்சு, எனக்கு நாளைக்கு காய்ச்சல் வந்துரும்’ என, பள்ளி பிள்ளைகள் லீவ் லெட்டரில் எழுதும் சாக்கு போல் சொல்லப்பட்டது 

‘ஹ்ம்ம்… சமையல் எக்ஸ்பெரிமெண்ட் எல்லாம் சமாளிக்க நாம கொஞ்சமா சாக்கு சொல்லி இருக்கோம். இட்லி கல்லு போல வந்தா, உளுந்து வித்தவருக்கு கல் மனசு, அதன் என் இட்லி கல்லா போச்சுனு வாய் கூசாம பொய் சொன்ன வாய் தானே இது. தன் வினை தன்னை சுடுது போல’ என கண்ணீர் மல்கினாள் பூஜா

இவளின் சமையல் அட்டகாசங்கள் பற்றி எழுத ஆரம்பித்தால், சாண்டில்யனின் கடல் புறாவை விட பெரிய புத்தகமாகி விடும் என்பதால், இதோடு விட்டு விடுவோம் 

அதற்குள் பூஜா வீட்டில் ஒரு விசேஷம் வந்தது

விசேஷம் என்றதும், “ஏய் கள்ளி, சொல்லவே இல்ல, ட்ரீட் எப்போ?” என கேட்டது ஒரு முந்திரிக்கொட்டை தோழி. அவளை அன்-பிரெண்ட் செய்ததோடு, இனி மெசேஜ் சாட் எதுவும் புழங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள் பூஜா 

அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் எனும் கல்யாண குணம் கொண்ட பூஜா, வீட்டு விஷேஷம் என்றதும், இது தான் சாக்கென  கட்டைப் பை மற்றும் கட்டு சாதம் சகிதமாய் களமிறங்கினாள் 

கடைக்காரர்கள் “இதுக்கு கொரோனாலயே நான் போய் இருக்கலாம்” என கதறும் வரை கடைமாறினாள். ஒருவழியாய் ஜவுளி எடுத்து முடிய, மேட்சிங் வளையல் தொடங்கி மேட்சிங் வடை வரை வாங்கி தான் ஓய்ந்தாள்

இவளை பற்றி அறிந்த கணவன், “எனக்கு ஐ.பி.எஸ் எக்ஸாம் இருக்கு” என நழுவினார் 

பூஜா ஷாப்பிங் மோடில் இருந்ததால், ‘மெக்கானிக்கல் என்ஜினியருக்கு ஏது ஐ.பி.எஸ் எக்ஸாம்?’ என்று கூட யோசிக்காமல், தலையாட்டினாள். தலை தப்பியது ஷாப்பிங் புண்ணியம் என அந்த மனிதர் நிம்மதியானார் 

இப்படி ஷாப்பிங், ஸ்டிச்சிங், மெஹந்தி பங்க்சன், மேக்கப் கலாட்டா என மூழ்கி முத்தெடுத்ததில், தான் பரிசு அனுப்பிய விவரத்தை முற்றிலும் மறந்தாள் பூஜா 

இவளின் கெட்ட நேரம், அந்த சமயம் பார்த்து, எழுத்தாளர் சாரதாவுக்கு பரிசுப் பொருள் சென்று சேர்ந்தது. அனுப்பியது யாரென தெரியாததால், சற்று தயக்கத்துடன் பரிசை பெற்றுக் கொண்டார் சாரதா 

இதைப் பற்றி Facebookல் பதிவிட்டால், ‘நான் தான் அனுப்பினேன்’ என யாரேனும் முன் வரக் கூடும் என பதிவிட்டார் சாரதா 

எந்த பதிலும் வராமல் போனதோடு, ஆளாளுக்கு “அதில் பாம் எதுனா இருக்கப் போவுது, ஸ்பை கேமரா எதுனா இருக்கானு தேடுங்க, கொரோனா வைரஸ் உள்ள வெச்சு பேக் பண்ணி இருந்தாலும் இருப்பாங்க பத்திரம்”னு பீதிய கிளப்பி விட, மிரண்டு போனார் சாரதா 

“தசாவதாரம் படத்துல வந்த மாதிரி ஏதோ வைரஸ் அதுக்குள்ள இருக்க வாய்ப்பிருக்கு, பேசாம எனக்கு அனுப்பிருங்க, நான் பாத்துக்கறேன்” என, இதான் சாக்கென பரிசை அபகரிக்க சதித்திட்டமெல்லாம் தீட்ட ஆரம்பித்தார்கள் சிலர்

இரண்டு நாள் இப்படியே ஓட, விசேஷம் எல்லாம் முடிந்து, பனிப்பிரதேசத்தில் குளிர் காலம் முடிந்து வெளியே வரும் Groundhog போல், மெல்ல தலையை தூக்கிப் பார்த்தாள் பூஜா 

“ஏண்டி… அவங்களுக்கு கிப்ட் எதுனா அனுப்பினயா?” என பூஜாவின் உற்ற கோழி… சாரி உற்ற தோழி நந்தினி கேட்க 

“ஆமாமாம்… ஏன் என்னை பாராட்டி விழா எடுக்க போறாங்களா?” என முகமெல்லாம் பல்லாய், புளங்காகிதத்துடன் பூஜா கேட்க, நந்தினி சொன்ன பதிலில் எல்லாம் வெறும் காகிதம் ஆனது 

“போய் பாரு… யாருனு தெரியாம டென்ஷன் ஆகி இருக்காங்க. போலீஸ் கீலிஸ்னு போறதுக்குள்ள போய் பேசு” என நந்தினி பயம் காட்ட 

“ஐயோ அவங்க குடும்பத்துல வக்கீல் எல்லாம் வேற இருக்காங்க” என பதறிய பூஜா, விரைந்து சென்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் முன்னே, ‘இவ தான் அந்த கல்பிரிட்’என பூஜாவை கோர்த்து விட்டாள் நந்தினி 

“தூப்ரதண்டி…” என தோழியை சாடினாள் பூஜா. பெற்றவரிடம் அடிக்கடி அந்த வசவைக் கேட்டுப் பழகியிருந்த நந்தினியை, அது சுத்தமாய் பாதிக்கவில்லை 

ஒருவழியாய் சுவர் சுவராய் தாவும் மந்தியாய், அந்த பரிசு பற்றி பகிரப்பட்ட அனைத்துப் பதிவிலும், “நான் தான் நான் தான், பரிசை அனுப்பியது நான் தான்” என,  திருவிளையாடல் தருமியாய் பரபரவென தகவல் பகிர்ந்தாள் பூஜா 

உடனே, “அப்பவே நெனச்சேன்” என சிலரும், “இல்லையே நான் தான அனுப்பினேன்” என சிலரும் களமாடினர் 

ஒரு வழியாய் ஆரவாரமெல்லாம் ஓய்ந்து அமர்ந்த பூஜா, “இனிமே ஒரு பின்னூசி அனுப்பினா கூட, முன்னூறு மெசேஜ் அனுப்பிடணும்” என சபதம் எடுத்தாள் 

“இதுவும் நல்லதுக்கு தான்” என்றது அவளின் மைண்ட்வாய்ஸ் 

“என்னடா இன்னும் உன்னை காணோமேனு பாத்தேன், வந்துட்டியா? இது எப்படி நல்லதுனு ஒன்று இரண்டு என வரிசைபடுத்தி பாடு பாப்போம்” என பல்லைக் கடித்தாள் பூஜா 

“பாடினா கேக்கத் தான் முடியும், பாக்க முடியாது” என நேரம் காலம் தெரியாமல் மைண்ட்வாய்ஸ் நக்கல் விட, அதை குத்தவா வெட்டவா என்பது போல் பார்த்தாள் பூஜா 

“சரி சரி டென்ஷன் ஆவாத. நான் ஏன் நல்லதுனு சொன்னேன்னா, நீ முன்னாடியே சொல்லிருந்தா ஒரு ‘தேங்க்ஸ்’ உடன் முடிஞ்சு போய் இருக்கும். இப்ப நெகடிவ் பப்ளிசிட்டி ஆனாலும், புதுசா நாலு பேருக்கு உன்னை தெரிஞ்சுருக்கு பாரு” என இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டது மைண்ட்வாய்ஸ் 

ஏதோ நினைவு வந்தவளாய், “ஐயையோ…” என பூஜா பதறி எழ

“என்னாச்சு? அதான் எல்லாம் சரியா போச்சே” எனக் கேட்டது மைண்ட்வாய்ஸ் 

“இன்னொரு பிரபலத்துக்கு கூட கிப்ட் அனுப்பினேன், அது என்னாச்சுனு தெரியல. இவங்க எழுத்தாளர்’ங்கறதால மூணு போஸ்ட்டோட போச்சு. அந்தம்மா ஒரு டாக்டர், மூணு ஊசி எடுத்துட்டு வந்தா என் கதி” என, ஓடினாள் ஓடினாள், பூமியின் எல்லைக்கே ஓடினாள் பூஜா 

(முற்றும்)

#ad

      

        

#ad

       

             

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

காமராசர் வழியில் நான் (கவிதை) – ✍ கலைவாணி சுரேஷ்பாபு, துபாய்

கடந்தேன் காதலை ❤ (சிறுகதை) – ✍ ஜா. ரிஜ்வானா