இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுரேஷும் அவனது அப்பா மற்றும் அம்மா மூவரும் வாழை தோட்டத்திற்கு வந்து பார்த்தனர். மறைத்து வைக்கப்பட்ட சென்பகத்தின் உடல் அங்கு இல்லை, மூவரையும் பயம் தொற்றிக் கொண்டது.
வாழைத்தோட்டம் முழுவதும் தேடி விட்டனர். வீட்டை சுற்றியும் தேடினர், எங்கு தேடியும் செண்பகம் இல்லை. வீட்டின் பின் கேட்டை திறந்து வெளியே சென்று பார்த்தான் சுரேஷ். அங்கேயும் செண்பகம் தென்படவில்லை.
செத்துப்போன அவள் உடல் எங்கு இருக்கும், ஒருவேளை நாய் ஏதாவது இழுத்துக் கொண்டு போயிருக்குமோ, அது எப்படி சாத்தப்பட்ட வீட்டுக்குள் நாய் வரும். இல்லன்னா அவ உயிரோட தான் இருக்காளோ, நாம் தான் அவள் செத்துட்டான்னு பொய் கணக்கு போட்டுவிட்டோமோ.
ஒருவேளை அவள் உயிரோடு இருந்து இங்கு நடந்தது எல்லாத்தையும் வெளிய போய் சொன்னா என்ன ஆகுறது. ஐயோ! கடவுளே… அப்புறம் நான் கம்பி என்ன வேண்டியது தான் என்று தன் மனதிற்குள் புலம்பினான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் வீட்டிற்குள் சென்றனர்.
தன் அம்மா அப்பா இருவரிடமும் சுரேஷ் பேச ஆரம்பித்தான்.
“நடந்தது நடந்து விட்டது இனி அவளைப் பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது யாராவது கேட்டால் அவள் விடியற்காலையில் இருந்து காணும் வீட்டிலிருந்து பத்து சவர நகையையும் காணும். எங்க போனாள், எதுக்கு போனாள் என்றே தெரியவில்லை என்று சொல்லணும். இப்போ நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி பத்து சவரன் நகையை எடுத்துக்கிட்டு எங்கேயோ ஓடிப் போய்விட்டாள் என்று புகார் சொல்லிட்டு வரேன். அதுவரை நீங்க இங்கயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றான்.
போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தன் வாகனத்தை நிறுத்தி விட்டு பயம் கலந்த மரியாதையோடு உள்ளே சென்றான். நாற்காலியில் அமர்ந்தபடி மேசையின் துணையோடு எதையும் வேகமாக எழுதிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் அருகில் சென்றான்.
“வணக்கம் ஐயா”
“வணக்கம் சொல்லுங்க”
“ஐயா என் பொண்டாட்டி இன்னைக்கு காலையிலிருந்து காணோம்”
“நீ குடிச்சுபுட்டு வந்து உன் பொண்டாட்டியை அடிச்சிருப்ப அவள் கோச்சிக்கிட்டு அவள் அம்மா வீட்டிற்கு போயிருப்பாள்” என்றான் கான்ஸ்டபிள்.
“இல்ல ஐயா.. எல்லா இடத்திலையும் தேடி பார்த்து விட்டோம். அவள் அம்மா வீட்டில் கூட இல்லை, கூடவே 10 சவரன் நகையும் காணோம் நீங்கதான் கண்டுபிடித்து தரணும்”
“10 சவரன் நகையை கண்டுபிடித்து தரணுமா இல்ல, உன் பொண்டாட்டியை கண்டுபிடித்து தரணுமா”
“நகை போனா போது சார் என் பொண்டாட்டிய கண்டுபிடிச்சு தாங்க” என்று பாசம் இருப்பது போல் நடித்தான் சுரேஷ்.
“உன் பேரு என்ன?”
“சுரேஷ்”
“உன் பொண்டாட்டி பேரு என்ன? எங்கிருந்து வர?” என்று அவன் பற்றிய சுய விவரத்தை கேட்டு தெரிந்து கொண்டான் கான்ஸ்டபிள்.
“சரி அங்கே போய் உட்கார்” என்று ஒரு மரத்தால் செய்யப்பட்ட அமரும் மேசையை கைகாட்டி விட்டு ஒரு அறைக்குள் சென்றார்.
அவர் நுழைந்த அறைக்கும் மேல் துணை காவல் ஆய்வாளர் அறை என்று எழுதப்பட்டிருந்தது. கான்ஸ்டபிள் உள்ளே சென்று பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.
15 நிமிடங்கள் கழித்து “சுரேஷ் உள்ளே வா” என்ற கான்ஸ்டபிள் குரல் கேட்டது. இவன் உள்ளே சென்றான்.
அங்கு பெரிய மேசையின் மீது நேர்த்தியாக அடுக்கப்பட்ட கோப்புக்கள், ஆவணங்கள் இருந்தது. மேசைக்கு உள்பக்கம் சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்தவரை பார்த்தான் சுரேஷ்.
அவரை பார்ப்பதற்கு நேர்மையான அதிகாரி போல தெரிந்தது. அவர் நெஞ்சு பகுதியின் சட்டையில் ஒரு பெயர் பேட்ச் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் வசந்தகுமார் S.I என்று பொறிக்கப்பட்டிருந்தது. வசந்தகுமார் பேச ஆரம்பித்தார்.
“கான்ஸ்டபிள் உங்களை பற்றி எல்லாத்தையும் என்னிடம் சொல்லிட்டாரு. உங்க மனைவி கடைசியா எப்ப பார்த்தீங்க? அவங்க கடைசியா அறிந்திருந்த துணி என்ன? உங்களுக்குள்ள ஏதாவது சண்டை இருக்கா?”
இது போன்ற கேள்விகள் எல்லாம் கேட்டுவிட்டு சுரேஷிடம் ஒரு புகார் கடிதத்தையும் வாங்கிக் கொண்டு, “சரிங்க ஐயா.. நீங்க வீட்டுக்கு போங்க உங்க மனைவி பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் உங்களுக்கு தெரிவிக்கிறோம்” என்று சொல்லி சுரேஷை அனுப்பி வைத்தார் வசந்தகுமார்.
மதியம் 2 மணி இருக்கும் மெல்ல தன் கண்களை திறந்து பார்த்தாள் செண்பகம். எதிரே ஒரு பெண் தென்பட்டாள். அந்த பெண்ணை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள். பச்சை நிறத்தில் உடுத்தப்பட்ட புடவை, எண்ணெய் தேய்த்து இறுக்கி கட்டப்பட்ட தலைமுடி, தலைமுடியை அலங்கரித்த மல்லிகை பூ.
இரண்டு புருவங்களுக்கு இடையில் வைக்கப்பட்ட கோபுர பொட்டு, மூக்கில் அணிந்திருந்த சிறிய மூக்குத்தி, இவை எல்லாம் இவளை செண்பகத்திற்கு தேவதை போல காட்சி தந்தது.
‘ஐயோ நான் செத்து விட்டேனோ! அதான் சொர்க்கத்தில் இருக்கேனோ! இவள் தான் ரம்பையோ’ என்றெல்லாம் செண்பகத்தின் மன எண்ணங்கள் நீண்டு கொண்டே போனது. அந்த பெண் பார்ப்பதற்கு 25 வயது மதிக்கத்தக்கவள் போல் இருந்தாள்.
அவள் ஏதோ ஒரு வேலையை மும்முரமாக செய்து கொண்டிருந்தாள். பக்கத்தில் உள்ள அறையிலிருந்து அருமையான சாப்பாடு வாசனை வந்தது. அந்த வாசனை வரும் அறைக்கும், செண்பகம் இருக்கும் அறைக்கும் அடிக்கடி அந்த இளம் பெண் சென்று வந்தாள்.
அந்த அறையிலிருந்து வரும் பாத்திர சத்தம், வாசனை இவையெல்லாம் வைத்து அவள் சமைக்கிறாள் என்று யூகித்தாள் செண்பகம்.
அந்த பெண்ணை பார்த்ததும் தன் நிலைமையை மறந்து விட்டாள் போலும் செண்பகம், ‘பிறகு தான் எப்படி இங்கு வந்தோம்? இது என்ன இடம்? இதற்கு முன்பு என்ன நடந்தது?’ என்றெல்லாம் யோசிக்க தொடங்கினாள்.
சமையல் அறையிலிருந்து வெளியே வந்த இளம் பெண், செண்பகம் கண் விழித்ததை பார்த்து புன்முறுவலுடன் செண்பகம் அருகில் வந்தமர்ந்தவள் செண்பகத்திடம் பேச ஆரம்பித்தாள்.
“பயப்படாதீங்க நீங்க நல்லா இருக்கீங்க, உங்க பேரு என்ன? நீங்க எந்த ஊரு?” என்று விசாரித்தாள் அந்தப் பெண்.
“என் பேரு செண்பகம்” என்று ஆரம்பித்தவள் தன் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் கூறினாள்.
“என் கணவனும் மாமியாரும் என்னை மாத்தி மாத்தி அடித்தார்கள், எனக்கு தலைசுற்றலும் மயக்கமும் வந்தது. அப்புறம் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்ல. கண் திறந்து பார்த்தால் நான் வாழை மர தோட்டத்தில் இருந்தேன். என் உடம்பெல்லாம் புடவையால் சுற்றப்பட்டு இருந்தது. என் அருகில் மண்வெட்டியும் இருந்தது. இதெல்லாம் பார்த்ததும் எனக்கு பயம் வந்துவிட்டது. நான் செத்துவிட்டேன் என்று நினைத்து புதைக்க பார்த்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். வேகமாக பின் வாசல் கேட் வழியாக தப்பித்து வேகமாக நடந்து வந்தேன், நடக்க நடக்க எனக்கு தலை சுற்றிலும் மயக்கமும் சேர்ந்து வந்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியல”
“இதுக்கு அப்புறம் என்ன நடந்தது என்று நான் சொல்கிறேன்” என்று அந்த இளம் பெண் சொல்ல ஆரம்பித்தாள்.
“நானும் என் அண்ணாவும் காலையில் கோவிலுக்கு போயிட்டு திரும்பி வரும்போது, நீங்க ரோட்டு ஓரமா மயக்கம் போட்டு இருந்தீங்க. உங்கள நாங்க எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தோம். டாக்டர் உங்கள பரிசோதித்து பார்த்து நீங்க நல்லா இருக்கீங்க என்றும் சில நேரம் கழித்து கண் திறப்பிங்க என்றும் சொன்னாரு. நானும் நீங்க எப்ப கண் திறப்பீங்கன்னு காத்திருந்தேன், எப்படியோ இப்ப கண்ண திறந்துட்டீங்க” என்று சொல்லி முடித்தாள்.
“உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்லுவது என்று தெரியல, நீங்க நல்லா இருக்கணும்” என்று கைகூப்பி நன்றி சொல்லிய செண்பகம் தொடர்ந்து பேசினாள்.
“உங்க பேரு என்ன?” என்று கேட்டாள் செண்பகம்.
அந்தப் பெண் “என் பேரு பூங்குழலி” என்று சொன்னதும் அந்தப் பெயர் செண்பகத்தின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவளின் முகத்தையே பார்த்து பார்த்து புன்னகைத்தாள்.
“நீங்க மட்டும் தான் இந்த வீட்டில் இருக்கீங்களா?” என்று கேட்டாள் செம்பகம்.
“என் அப்பாவும் அம்மாவும் கொரோனாவில் இறந்து விட்டாங்க நானும் எங்க அண்ணனும் தான் இருக்கோம்” என்றாள் பூங்குழலி.
“உங்க அண்ணன் எங்க இருக்காரு?” என்று கேட்டாள் செண்பகம்.
“எங்க அண்ணன் வேலைக்கு போயிருக்காரு மாலை நேரம் 05:00 மணிக்கு தான் வீட்டுக்கு வருவாரு” என்று ஏதோ ஒரு வித சோகத்துடன் கூறினாள்.
பூங்குழலியின் குரலில் விரத்தியை கண்ட செண்பகம் “என்னாச்சு பூங்குழலி உங்க அண்ணாவை பற்றி கேட்டதும் சோகமாயிட்டியே” என்றாள்.
“எங்க அப்பாவும், அம்மாவும் இருக்கும் பொழுது ஒரு பொண்ண பார்த்து எங்க அண்ணாவுக்கு திருமணம் பண்ணி வச்சாங்க கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல எங்க அண்ணி இறந்துட்டாங்க. இறக்கும்போது அவங்க அஞ்சு மாசம் கர்ப்பம். அதுக்கு அப்புறம் எங்க அண்ணன் யாரையும் கல்யாணம் பண்ணிக்கல அதை நினைச்சு தான் எனக்கு கஷ்டம். இன்னைக்கு கூட, கருமாரியம்மன் கோவிலுக்கு போய் என் அண்ணன் வாழ்க்கையில் ஒளி ஏத்த எனக்கு ஒரு அண்ணியை கொடு என்று வேண்டிக்கிட்டு வந்தேன். எதுவும் என் கையில் இல்லை எல்லாம் அந்த கடவுள் கிட்ட தான் இருக்கு” என்று பூங்குழலி கூறி முடித்ததும் செண்பகம் பேச ஆரம்பித்தாள்.
“கவலைப்படாதம்மா உங்க அண்ணன் வாழ்க்கை இனிமேல் நல்லா இருக்கும், நீங்க வணங்குற அந்த, கருமாரியம்மன் கண்ணை திறப்பாள்”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings