இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்னாச்சு இன்னும் கதவு திறக்கலையே, செண்பகம் வெளியே போயிட்டாலோ என்னவோ” என்றார் செண்பகம் அப்பா.
“அவள் எங்க போக போற உள்ளே தான் ஏதாவது வேலை செஞ்சுட்டு இருப்பாள் மறுபடியும் கதவை தட்டுங்கள்” என்றாள் பூமாரி.
செண்பகத்தின் அப்பா கதவு திறக்க முற்படும்போது, உள்ளிருந்து கதவு திறக்கப்பட்டது. வீட்டிற்குள் செண்பகத்தின் கணவர், மாமனார், மாமியார் என்று எல்லோரும் நின்று கொண்டிருந்தனர் செண்பகத்தை தவிர. ஆனால் பூமாரியின் கண்களோ செண்பகத்தை தான் தேடியது.
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ள? சௌக்கியமா இருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தார் செண்பகத்தின் அப்பா. இவர் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான் சுரேஷ்.
‘எதுக்கு மாப்பிள்ள அமைதியா இருக்காரு செண்பகத்திற்கு ஏதாவது ஆகியிருக்குமோ?’ என்ற பயம் பூமாரியின் மனதில் தோன்றியது.
வீட்டிற்குள் நின்றிருந்த அவர்கள் மூவரின் முகமும் ஒருவித பதட்டத்துடனே இருந்தது. இதை கவனித்த பூமாரி எதுக்கு நம்மை உள்ளே கூப்பிடாம வெளியே நிக்க வச்சு பேசுறாங்க என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
“செண்பகம் எங்கே இருக்கா? உள்ளே இருக்காளோ” என்று கூறியபடியே உள்ளே நுழைய முற்பட்டாள் பூமாரி. இதை பார்த்ததும் தன் நடிப்பை தொடங்க ஆரம்பித்தான் சுரேஷ்.
“செண்பகமா யாரு அவள்? நீங்க எதுக்கு இங்க நிக்கிறீங்க? இடத்தை முதல காலி பண்ணுங்க?”
“என்ன மாப்பிள்ள இப்படி பேசுறீங்க, செண்பகம் எங்க இருக்கா சொல்லுங்க” என்று வருத்தத்துடன் கேட்டாள் பூமாரி.
“செண்பகம் எனக்கு யாருன்னு தெரியாது எனக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல”
“மாப்ள புருஷன் பொண்டாட்டிக்குள்ள சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும் அதுக்குன்னு நாலு சுவத்துக்குள்ள நடக்க வேண்டியதை மேடை போட்டு காட்டுறீங்களே, அவ என்னதான் தப்பு செஞ்சாலும் நீங்க தான் பொறுத்துக்கணும்” என்று பாவமாக பேசினாள் பூமாரி.
“அவள மன்னிக்கிற அளவுக்கு கொஞ்சமாவா தப்பு பண்ணி இருக்காள்” என்று கோபத்தில் கத்தினான் சுரேஷ்.
தன் மகளைப் பற்றி இவ்வாறு பேசுவதை பொறுத்துக் கொள்ளாத செண்பகத்தின் அப்பா, “என் பொண்ணு எங்க இருக்கிறாள் அவளை கூப்பிடுங்க முதல்ல” என்று கனத்த குரலில் கோபமாக கர்ச்சித்தார்.
“அவள் எங்க இங்க இருக்கா காலையில் இருந்து காணோம், எங்க போனாலோ யார் கூட ஓடிப் போனாலோ”
“மாப்பிள்ள… நிறுத்துங்க, வாய் இருக்குன்னு எதை வேணுமானாலும் பேசலாமா, என் பொண்ண பத்தி எங்களுக்கு நல்லா தெரியும் அவ மேல இப்படி அபாண்டமா பழி போடாதீங்க” என்றாள் பூமாரி.
சுரேஷ் செண்பகத்தை பற்றி இப்படி சொல்லியதும் ஏதோ புரிந்தது போல் சுரேஷின் அம்மா தன் பங்கிற்கு நடிக்க தொடங்கினாள்.
“யாரை வந்து எங்க தேடுறீங்க அப்போவே சொன்னேன் இந்த குடும்பத்தில் பொண்ணு எடுக்க கூடாதுன்னு, இப்போ என் பையன் வாழ்க்கைய கெடுத்துட்டு எவன் கூடயோ ஓடிப் போயிட்டாளே” என்று கூறி நாடகமாடினாள் சுரேஷின் அம்மா.
“போதும் சம்மந்தி நிறுத்துங்க.. செண்பகத்தை பத்தி தப்பா இனிமேல் பேசினீங்க நடக்கிறதே வேற” என்று கோபத்தில் பொங்கினாள் பூமாரி.
“நீங்க எப்படியோ அப்படித்தான் அவளும் இருப்பாள், ஓடுகாலி குடும்பத்தில் பொண்ணு எடுத்தது பெரிய தப்பா போச்சு” என்று வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டே போனான் சுரேஷ்.
“ஐயோ… கடவுளே இதெல்லாம் நான் என் காதால கேட்கணுமா?” என்று தலையில் அடித்தபடி கதறி அழுதாள் பூமாரி.
சுரேஷ் இப்படி சொன்னதுமே செண்பகத்தின் அப்பாவின் முகம் இன்னும் கோபத்தில் பொங்கியது பலத்த குரலில் கத்திக் கொண்டே தனது கையில் வைத்திருந்த அறுந்து போன இடது கால் செறுப்பை எடுத்து சுரேஷின் கன்னத்தில் ஓங்கி அடித்தார். நிலைத்தடுமாறிய சுரேஷ் கீழே விழுந்தான். இதனால் சுரேஷுக்கு கோபம் அதிகரித்தது,
வெறிபிடித்தவன் போல் எழுந்தவன் செண்பகம் அப்பாவின் சட்டையைப் பிடித்து கன்னத்தில் ஓங்கி அடித்தான். மாப்பிள்ளை வீட்டார்கள் மூவருக்கும் பெண்வீட்டார் இருவருக்கும் சண்டை முட்டியது.
சுரேஷ் பூமாரியையும் அவனது கணவனையும் அடித்து தெருவில் தள்ளிவிட்டு உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்.
“அட பாவிங்களா நீங்கெல்லாம் நல்லா இருப்பீங்களா.. ஐயோ! மாரியாத்தா இதெல்லாம் நீ பார்த்துக்கிட்டு தான் இருக்கியா? உனக்கு கண்ணில்லையா.. அடப்பாவி என் பொண்ணு பத்தி தப்பா பேசுறீங்களே உங்க நாக்கு அழுகி போக.. என் பொண்ணு உசுரோட இப்ப இருக்காளோ இல்லையான்னு கூட தெரியவில்லையே” என்று அழுது தீர்த்தாள் பூமாரி.
நடந்ததை எல்லாம் சகிக்க முடியாத மனதுடன் தெருவெல்லாம் புலம்பி கொண்டே தங்கள் வீட்டிற்கு சென்றனர் செண்பகத்தின் அம்மாவும் அப்பாவும்.
பூமாரி தன் மகளுக்கு கொண்டு வந்த நகைகளையும் துணிகளையும் திருப்பி எடுத்துக் கொண்டு போனாலும், சுரேஷ் பூமாரியை தள்ளி விடும்போது பைக்குள் இருந்த பாத்திரத்தின் மூடி திறந்து உள்ளே இருந்த பலகாரங்கள் ஆங்காங்கே சிதறியது.
இங்கு நடந்ததை எல்லாம் மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்த அந்தப் பக்கத்து வீட்டு சிறுவன், எல்லோரும் சென்ற பின் யாராவது பார்க்கிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்தபடி சுரேஷின் வீட்டு வாசலுக்கு வந்தான்.
சிதறிய பலகாரத்தை எடுத்து வாயில் வைத்து கொண்டும் இரண்டு மூன்று பலகாரங்களை கையில் அள்ளி கொண்டும் வேகமாக ஓடினான் அந்த சிறுவன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings