இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதுவரை:
ரகுவின் அண்ணன் மகளின் ஆண்டு நிறைவு விழாவிற்கு ரகுவின் அலுவலக நண்பர்கள் அனைவரும் சென்றனர். ரகு தன் குடும்பத்தினருக்கு அனுவை தனித்தனியே அறிமுகப்படுத்துகிறான். இதை சுபாஷிணி கவனித்தார்.
இனி :
சாப்பிட்ட பின் அனைவரும் கிளம்ப தயாரானார்கள். அதற்குள் மழை பெய்ய ஆரம்பித்தது. சண்முகம் சார், வடிவேல் சார் மற்றும் குகன் எல்லாம் மழைக்கு முன்னரே கிளம்பி விட்டனர். பெண்கள் மூவரும் மழை நிற்க காத்திருந்தனர்.
சனிக்கிழமையானதால் அரை நாள் லீவ் தான். சுபாஷிணி என்ன நினைத்தாரோ, பெண்களிடம் சரி வாங்க நான் உங்களை ட்ராப் பண்ணிடறேன். மழை நிக்கற மாதிரி தெரில என்றார். அதன்படி ராதா மேடமும் பிரியாவும் பேருந்து நிலையத்தில் இறங்கி கொண்டனர்
அனுவின் வீடு அலுவலகத்திற்கு அடுத்த தெருதான். எனவே அவளை வீட்டில் இறக்கி விட்டார். வாசலில் அமர்ந்திருந்த பாட்டி, வாங்கோ மேடம் ! காபி குடிச்சிட்டு போங்கோ என அழைத்தார். அவரின் அன்பை தட்ட முடியாமல் வீட்டிற்குள் சென்றார். பாட்டி கண்ணில் சைகை காட்டியவுடன் காயத்ரி தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அதை கவனியாத மாதிரி இருந்த சுபாஷிணி வீட்டை பார்வையிட்டார். ஒரே ரூம். அதில் தான் ஒரத்தில் கேஸ் அடுப்பு. அதுவும் தரையில் தான் வைக்கப்பட்டு இருந்தது.
அடுத்த வீட்டில் தனக்கு நாற்காலி வாங்க தான் பாட்டி பேத்திக்கு கண் சாடை காட்டினார் என சுபாஷிணி ஊகித்தார். அதற்குள் அவர் தரையிலேயே அமர்ந்தார். பதறிய அம்புஜம் பாட்டி, “மேடம் இருங்கோ சேர் வந்துடும். “
“பரவால்ல மாமி”
சிறிய வீடாக இருந்தாலும் அழகாக இருந்தது. ஃபேன் காற்றில் அங்கிருந்த புத்தகங்கள் படபடக்க அதில் ஒரு புத்தகத்தை எடுத்தார். முதல் பக்கத்தில் ஏக அனேக காதலுடன் ரகு என்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தான் நினைத்தது சரி என ஊர்ஜிதப்படுத்தினார். எடுத்த இடத்தில் புத்தகத்தை திரும்ப வைத்தார். சேர் எடுத்துக் கொண்டு அனு வர, வற்புறுத்தலின் பேரில் சேரில் அமர்ந்தார்.
பாட்டி கொடுத்த காபியை குடித்தபடி, “அன்னபூரணிக்கு வரன் பார்க்கறேளா மாமி?”
“நல்ல இடம் வந்தால், பண்ணிடுவேன் மேடம். ஆனால் எதிர்பார்ப்பு குறைவா இருக்கணும். எல்லாம் பகவான் கைல” என்றார்.
“ஜாதகம் இருந்தா கொடுங்க. எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன் சென்னைல இருக்கான். தூரத்து சொந்தம். அம்மா அப்பா மட்டுந்தான். ஒத்து வந்தால் பேசலாம். இல்லைனா வேற இடம் பார்க்கலாம். அவ கல்யாணத்துக்கு நான் பொறுப்பு என்றார் ஓரக்கண்ணில் அனுவை பார்த்தபடி. ரொம்ப சந்தோஷம் என்றபடி பாட்டி ஜாதகத்தை சுபாஷிணியிடம் கொடுத்தார்.
எல்லாவற்றையும் முகத்தில் கவலை ரேகையுடன் எதையும் தடுக்க முடியாமல் அனு பார்த்துக் கொண்டிருந்தாள்.
கம்ப்யூட்டர் ஜாதகத்தை வாங்கி பார்த்த சுபாஷிணிக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. என்ன நடக்க கூடாதுனு நினைச்சேனோ அது நடந்துடுச்சே என வேதனைப்பட்டார்.
“சரி மாமி நான் கிளம்பறேன்”
“மேடம் குங்குமம் எடுத்துக்கோங்க” என்றாள் அனு.
அவளை பார்க்க பாவமாக இருந்தது. குங்குமம் இட்டுக் கொண்டு நிமிர்ந்தால், சுவரில் யாமிருக்க பயமேன் என்று ராஜ அலங்கார முருகன் சிரித்தான்.
ஒரு நொடி சிந்தித்த சுபாஷிணி, “மாமி நாளைக்கு அனுக்கு கல்யாணம்னா யார் மனைல உட்கார்ந்து தாரை வார்த்து கொடுப்பா?”
“எனக்கும் அதே கவலைதான் மேடம். அவா அப்பா ஆத்துப் பக்கம் யாரும் எங்களோட பேச்சு வார்த்தைல இல்லை”
“கவலைப்படாதேள் மாமி. நான் இருக்கேன். இவள நான் ஸ்வீகாரம் பண்ணிக்கிறேன். நானும் என் ஆத்துக்காரரும் இவளை தாரை வார்த்து தரோம்.”
‘’எங்காத்து வாத்யார கலந்துணுட்டு, எங்காத்துக்காரரையும் பிள்ளையாத்துக் காராளையும் அழைச்சிண்டு வந்து பேசறேன் மாமி” என்று விடை பெற்றார்.
“மேடம்” என அம்புஜம் மாமி சுபாஷினியை கட்டிபிடித்துக் கொண்டார். அவர்களிடம் விடைபெறும் போது அனுவிடம் காதில் “நீ நினைச்சவன் கூடயே உனக்கு கல்யாணம் ஆகும்” என்றபடி காரை ஸ்டார்ட் செய்தார்.
உடனே மாதவனுக்கு போன் செய்து மாலை அவர் வீட்டிற்கு வருவதாக தகவல் கூறினாள்.
சொன்னபடி அவள் மட்டும் சுதா – மாதவனை அவர்கள் வீட்டில் சந்தித்தாள். ரகுவும் அனுவும் காதலிப்பது தொடங்கி இருவரும் ஒரே கோத்திரம் என்பது வரை முழுவதும் கூறினாள்.
“சொல்லு காயத்ரி, அடுத்து என்ன பண்ணலான்றதை?”
“நீ தான் சொல்லனும் மாதவா! பையனுக்கு நீ தான் அப்பா”
“போதும் காயத்ரி, ஒரு வாட்டி பட்டதே. அடிபட்டது உனக்கு தான்னாலும் வேதனைய இத்தனை வருஷமா நாங்களுந்தான் அனுபவிக்கிறோம். ரகு வயசு ஆச்சு எல்லாம் நடந்து. நீ ஒரு முடிவு எடுக்காம எங்ககிட்ட இத பத்தி பேசியிருக்க மாட்ட.ஸோ நீ சொல்ல வந்ததை சொல்லு”
“என்னை மாதிரி இன்னொருத்தி இரட்டை வாழ்க்கை வாழ வேண்டாம். மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம துப்பவும் முடியாம பூமியிலேயே நரக சித்ரவதை இது. அதுவும் அவ அப்பா அம்மா இல்லாத பொண்ணு. இதே வயசுதான் அப்போ எனக்கு . பாட்டி தான் அவ உலகம். “
“நான் செய்றது தப்பா சரியானு எனக்கு தெரியல. அந்த சென்னிமலை முருகன் மேல பாரத்தை ஏத்திட்டு தான் இத செய்ய போறேன். அனுவ நான் ஸ்வீகாரம் செய்ய போறேன். அப்போ அனு எங்க பொண்ணு. இப்போ ரகுவும் அவளும் ஒரே கோத்திரம் இல்லை” நீங்க என்ன சொல்றீங்க என்பது போல் பார்த்தாள்.
மாதவன்,” இதுக்கு மூர்த்தி ஒத்துக்குவாரா?”
“உன் பையனுக்காக ஒத்துக்குவார். ஏன்னா அவர் பிரசவம் பார்த்து பிறந்த முதல் குழந்தைங்கிறதால எங்க பையன் ஷ்யாம விட ரகுதான் அவருக்கு உசத்தி. இந்த விஷயம் நம்ம மூனு பேர தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம் மாதவா! மூர்த்தி உட்பட”
சுதா – மாதவன் இருவரும் அதை தலையாட்டி ஆமோதித்தனர்.
“எனக்கு தெரிஞ்சு அந்த குழந்தை சந்தோஷம்னா என்னனே பார்த்துருக்க மாட்டா. நல்ல மார்க் எடுத்திருந்தும் மேல படிக்க ஆசையிருந்தும் பாட்டி பேச்சை மீறாம வேலைக்கு வராடா மாதவா. முதல் நாள் அவளை பாக்கும் போதே அவளுக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சேன். மனசுல நினைச்சவனோட கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்றதுல கிடைக்கிற சந்தோஷத்தை விடவா இந்த ஆடிட்டர்ன்ற பட்டமும் தைரியசாலி புத்திசாலின்ற பட்டமும் அதிக சந்தோஷத்த கொடுக்க போகுது? அதெல்லாம் வெளிவேஷம். அந்த உண்மையான சந்தோஷத்த அனுவுக்கு நாம தரலாம் மாதவா!”
“இதுல ரகு சந்தோஷமும் இருக்கு காயத்ரி. நான் எப்பவும் உன் சீனியர் தான். இவ எப்பவும் அதே சுதாதான்”
முடிவு எடுத்தது மின்னலாயிற்றே. அதனால் அடுத்தடுத்த வேலைகள் உடனே மின்னல் வேகத்தில் நடந்தன.
ஒரு நல்ல நாளில் கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் அனுவை தங்கள் புத்திரியாக ஸ்வீகரித்துக் கொண்டனர். நடப்பவையெல்லாம் நிஜமா கனவா என குழப்பமான நிலை பாட்டிக்கும் பேத்திக்கும். அன்றைய தினமே காயத்ரி அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு அனுவையும் பாட்டியையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்.
ரகு பிரசாத் – அன்னபூரணியின் திருமணத்தன்று காலை.
நகரின் மையத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற சென்ட்ரலைஸ்டு ஏசி திருமண மண்டபம். ரகு பிரசாத் லெட்ஸ் அன்ன பூரணி என பெரிய ப்ளக்ஸ் போர்டு.
வாசலில் பெரிய மாக்கோலம். அதை தொடர்ந்து மண்டபத்தின் உள்வாயிலுக்கு வெளியே ஒரு டேபிளில் மஞ்சள், குங்குமம், சுகர் ப்ரீ கற்கண்டு வைத்திருந்தனர்.
சுற்றிலும் மல்லிகை வாசம். எல்லா திருமண வீடுகளை போலவும் சிறுவர்கள் சம்பந்தமேயில்லாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். கல்யாணமான ஆண்கள் அவரவர்களது குழந்தைகளை கவனித்து கொண்டிருந்தனர்.
“என்னடி ராதிகா உன் பொண்ணு கல்யாணத்துக்கு என்ன கூப்பிடவேயில்லை” என்று ஒரு பெண்மணி கேட்க, “அவ என்னையே கூப்பிடலடி”னு அந்த ராதிகா யாரிடமோ குறைபட்டுக் கொண்டிருந்தாள்.
வாசலில் ரகுவின் அண்ணாவும் அண்ணியும் வந்தவரை வரவேற்றுக் கொண்டிருந்தனர். நவநீதனும் திருமணத்திற்கு வந்திருந்தார்.
காயத்ரியும் “வாங்க! வாங்க!” என வணக்கம் கூறினாள்.
பதிலுக்கு அவர் வணங்கிய போது கையிலிருந்த HMT வாட்சை கவனிக்காத மாதிரி இருந்தாள்.
“அன்னிக்கு பிறகு உனக்கு என்ட்ட பேசனும்னே தோணலியா?”
கையிலிருந்த HMT வாட்சை காட்டி “உங்களுக்கு என்ன தோணுச்சோ அதே தான், எனக்கும் தோணிச்சு” என்றபடி அங்கிருந்து நகர்த்தாள்.
பஞ்சக்கச்சம் கட்டி, கண்ணுக்கு மை இட்டுக் கொண்டு கையில் புத்தகம் சகிதமாக காசியாத்திரை முடித்த ரகு மேடையை நோக்கி வந்தான். கௌரி பூஜை முடித்த அனுவும் மஞ்சள் புடவையில் மேடைக்கு வந்தாள்.
சுபயோக நேரத்தில் பெரியவர்கள் வாழ்த்த கெட்டிமேளம் கொட்ட ரகு அனுவை அக்னி சாட்சியாக மாங்கல்யம் கட்டி தன் தர்ம பத்தினியாக்கிக் கொண்டான்.
ரிஜிஸ்ட்ரர் வந்து திருமணப் பதிவையும் முடித்து விட்டார். சாட்சி கையெழுத்து போடும் போதுதான் நவநீதன் காயத்ரி கையிலிருந்த பார்க்கர் பேனாவை பார்த்தான்
அன்று இரு ஜோடிகள் பிரியும் போது மெளன சாட்சியாக இருந்த பார்க்கர் பேனா, இன்று இரு ஜோடிகளை இணைத்து விட்டது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுபம்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings