2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அடுத்த நாள் வியாழக் கிழமை காலை அன்னபூரணி வேலையில் சேர்ந்து விட்டாள். மேனேஜர் வடிவேல் அவளை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி விட்டு, அவள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரகுவின் டேபிளுக்கு வந்தார்.
“ரகு! இவங்க அன்னபூரணி. புதுசா ஜாயின் பண்ணிருக்காங்க” என்று கூறிவிட்டு, அன்னபூரணியிடம் “இவர் ரகு. இங்க ஆர்ட்டிகிள்ஷிப் பண்றார். அதுவுமில்லாம, இவன் மேடமோட செல்ல பிள்ளை” என்றார்.அவன் ஒன்றுமே தெரியாதவன் போல முகத்தை மிக இயல்பாக வைத்திருந்தான்.
இவள் மட்டும் லேசுபட்டவளில்லை. பதிலுக்கு சிறு புன்னகையை உதிர்த்தாள். நேற்று அலுவலகத்தை விட்டு வெளியேறும் போதே இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென முடிவு செய்து விட்டாள்.
இயல்பிலேயே அவள் துடுக்குத்தனமாக இருந்தாலும், புத்தி சாதுர்யம் மிக்கவள். இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததாலும் தனக்காக பாட்டி படும் கஷ்டத்தை உணர்ந்ததாலும் வயதுக்கு மீறிய முதிர்ச்சி அவளிடம் இருந்தது.
அவளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தவுடன், ஒரு பைலை எடுத்து வந்த வடிவேல் அதிலிருந்த பேப்பர்களையும் காடா துணியில் கட்டி வைத்திருந்த பெரிய லெட்ஜர்களையும் வைத்து எப்படி அக்கவுண்ட் செக் செய்ய வேண்டும் என விளக்கினார். மேலும் போன வருட லெட்ஜர்களையும் கொடுத்து பழையதில் எப்படி கணக்கு எழுதியுள்ளனரோ அப்படியே இந்த வருடமும் செய்ய வேண்டும் என்றார்.
இவள் புரிந்தும் புரியாமலும் தலையாட்டினாள்.இவள் விழிப்பதை பார்த்த வடிவேல், “டேய் ரகு! அப்படியே பார்த்துக்க” என்று விட்டு தன் இருக்கைக்கு திரும்பினார்.
அவனும் பார்த்துக்கிறேன் என்று கூறி விட்டு இவளிடம், “எந்த ஸ்டேட்மென்ட் போடறதுக்கு முன்னாடியும் முதல்ல ஓபனிங் செக் செய்யனும் அப்புறம் போஸ்டிங் பார்க்கனும் என்றான்”.
“போஸ்டிங்னா? ஸ்டேட்மென்ட்னா ?”என்று கேட்டாள் அன்னபூரணி.
அவளை கூர்ந்து நோக்கிய ரகு அவளின் கண்களில் இருந்த கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் கண்டவுடன் எல்லாவற்றையும் பொறுமையாக விளக்கினான். அவனை ஏறெடுத்து பார்க்காமல் தலை குனிந்தவாறே தேங்க்ஸ் சொன்னாள்.
அவன் மேலும் ஏதோ கூற வாயெடுக்க, அதற்குள் “குகன் சார் டேய் சீக்கிரம் வாடா!அந்த கமிஷனர் ட்ரான்ஸ்பர் ஆகி போறதுக்குள்ள இந்த கேச முடிக்கணும். நல்ல காலத்துலயே எனக்கும் அவனுக்கும் ஆகாது. லேட்டா போனா கத்துவான்டா” என்று முடிப்பதற்குள் “வாங்க சார் போகலாம்” என்று வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
அதற்கு முன் இவளிடம் “அப்படியே என் பேன் ஸ்விட்ச் ஆப் பண்ணிடுங்க” என்று கூறிவிட்டு அவசரமாக கிளம்பினான்.
அன்னபூரணியின் இருக்கை அலுவலகத்தின் உள் பகுதியில் இருந்தது. அதற்கடுத்து ரெக்கார்ட் ரூம். ரகுவின் இருக்கையை கடந்து தான் அவளிடத்திற்கு போக வேண்டும். ரகுவிற்கான பேன் மற்றும் லைட் சுவிட்சுகள் இவளிடத்திற்கு அருகில் தான் இருக்கும். அதனால் இவள் எழுந்து போய் பேனை நிறுத்தினாள். ஆடிட்டர் வந்தவுடன் இவளை அழைத்தார்.
“வாம்மா! என்ன வேலை கொடுத்திருக்காங்க உனக்கு?” என்று விசாரித்தார்.
அருகிலிருந்த வடிவேல், “ரோகிணி ப்ளீச்சர்ஸ் கணக்கு கொடுத்திருக்கேன். ரகுவை மானிட்டர் பண்ண சொல்லிருக்கேன் மேடம்.”
“ரகு எங்கே?”
“இன்னைக்கு ராஜா கார்மென்ட்ஸ் ஸ்கூருட்னி கேஸ் பைனல் ஹியரிங். அந்த கமிஷனர் ஒரு வாரத்தில் ட்ரான்ஸ்பர்ல போறார். அதான் காலைலயே ஆயக்கர் பவன் போயிருக்கான்.”
“சரிம்மா. எதாவது டவுட்னா அப்பவே கேட்டு க்ளியர் பண்ணிக்க. ஆல் த பெஸ்ட் “என்றார்.
அக்கவுண்ட்ஸ் பிடித்த சப்ஜெக்ட் என்பதால் போன வருடத்தை வைத்து லாப நட்ட கணக்கு தயாரித்து விட்டாள். பேலன்ஸ் ஷீட்தான் டேலி ஆகவில்லை. எப்படி கூட்டி கழித்தாலும் ஒரே தொகைதான் வித்தியாசமாக வந்தது.
வடிவேல் சாரிடம் டவுட் கேட்டால், “இருங்க, ரகு வந்துடட்டும், அவன்கிட்டயே கேளுங்க” என்றார்.
அவன்ட்டயே கோர்த்து விடறாங்களே, இங்க எல்லார்ட்டையும் சகஜமாக பேசறேன். அவன்ட்ட மட்டும் ஏதோ ஒண்ணு தடுக்குதே. இத்தனைக்கும் நாம கோ- எட்ல தான் படிச்சோம். அத்தனை பசங்களையும் உண்டு இல்லைனு பண்ணிடுவோம். சரி பார்க்கலாம். இன்னிக்கு தான் முதல் நாள் எதயும் மண்டைல ஏத்திக்க வேணாம் என தனக்குள்ளே பேசிக் கொண்டாள்.
“ஹல்லோ! பேன் சுவிட்ச போடுங்க. விஜிண்ணா! தண்ணி கொண்டு வாங்க” என்ற சத்தம் கேட்டது.
தன் இடத்திலிருந்து எழுந்து வந்த ரகு, காற்றாடியை சுழல விட்டான்.
இவள் அவனின் டேபிளுக்கு சென்று “பேலன்ஸ் ஷீட் டேலியாகைல” என்றாள்.
அவனை என்னவென்று விளிப்பது என யோசித்தாள். தப்பி தவறி கூட அண்ணானு கூப்பிட்டறாத என உள் மனம் எச்சரித்தது. சார் தான் கரெக்டா இருக்கும் என ஒரு முடிவுக்கு வந்தாள்.
ஸ்டேட்மென்ட்டை செக் செய்த அவன், சிறு முறுவலுடன், “டிப்ரிசிசேஷன் போட்டா, அதை அஸெட்ல குறைக்கனும்ல? இலாபத்தை முதல் கணக்குல ஏத்தனும்ல? அதான் டேலி ஆகல” என்றான்.
” சரி மாத்திடறேன்” என்று தன் இடத்திற்கு வந்தாள்.
” சே எவ்ளோ சின்ன மிஸ்டேக், சொதப்பிட்டேனே, அசிங்கமா போச்சே. அதுவும் அவன்ட்ட” என்றவாறே விட்டத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
” ஹலோ! இது தான் உங்க முதல் ஸ்டேட்மெண்ட். இது மைனர் மிஸ்டேக்தான். தப்பு பண்ணாம எதையும் கத்துக்க முடியாது. ஸோ விட்டத்தை பார்த்து யோசிக்காம வேலையை பாருங்க” என்றான். அப்போது அவன் கண்களில் ஒரு அனுசரணை தெரிந்தது.
சரி என்பது போல் தலையாட்டினாள்.
நாம் என்ன நினைத்தாலும் இவனுக்கு எப்படி தெரியுது? பேசாம இவன் ஆடிட்டர்க்கு பதிலா சைக்கியாடிரிஸ்ட்க்கு படிக்கலாம் என்று அன்னபூரணி நினைத்தாள்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings