2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப் போற்கு…. டேப் ரெகார்டரில் கந்த சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சுந்தரேசன் பூஜை செய்து கொண்டிருந்தார்.
அவர் மனைவி மீனாட்சி சமையலறையில் மும்முரமாக இருந்தார். பூஜையை முடித்து வெளிவந்த சுந்தரேசன் ஹாலிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்ததும் மீனாட்சி காபி கொண்டு வந்து கொடுத்தார். கணவர் வாய் திறந்து பேசுவதற்கு முன்னே குறிப்பறிந்து நடக்கும் குணவதி. இருவருக்கும் ஒரே மகள் காயத்ரி.நல்ல புத்திசாலி பெண். டிகிரி முடித்து வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறாள்.
சுந்தரேசன் மஞ்சள் மாநகரமான ஈரோட்டில் தன் மனைவி, மகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். தந்தையார் சிறுவயதிலேயே இறந்து விட்டார். அவர் தாயார் கமலாம்பாள் தனி மனுஷியாக சுந்தரேசனை வளர்த்து ஆளாக்கினார். படிப்பு முடித்த பின், தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்து ஒரு மஞ்சள் மண்டியில் குமாஸ்தா வேலையில் சேர்த்து விட்டார். சுந்தரேசனது அறிவையும் நேர்மையையும் கண்ட முதலாளி அவரை அந்த மஞ்சள் மண்டி மட்டுமல்லாது தனது 15 மண்டிக்கும் அவரை மேனேஜராக்கி விட்டார்.அதனால் சுந்தரேசனுக்கு தன் தாயார் மீது பாசமும் மரியாதையும் அதிகம். தாய் சொல்லை தட்டாதவர்.
சமைத்துக் கொண்டிருந்த மீனாட்சியிடம், “அம்மாவும் காயத்ரியும் எங்கே?” என வினவினார்.
“இரண்டு பேரும் கோவிலுக்கு போயிருக்கா. வர நேரந்தான்.” அந்த சூடான காபி மார்கழி காலை நேர குளிருக்கு இதமாயிருந்தது.
“இந்த தைல காயத்ரிக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சுடலாம்ணா. இவ கூட படிச்ச பொண்ணுங்களுக்கெல்லாம் வரிசையா கல்யாணம் ஆயாச்சு. இதோ பாருங்கோ, இவ சினேகிதி பக்கத்தாத்து சுதாவ பிள்ளைபேத்துக்கே அழைச்சிண்டு வந்தாச்சு. நாம இன்னும் இவ ஜாதகத்தையே வெளில எடுக்கல. என்னவோ போங்கோ, ஒரு கோவிலுக்கு போ முடில, கடை கண்ணிக்கு போக முடில. எங்க போனாலும் என்ன மீனாட்சி உன் பொண்ணுக்கு எப்பதான் கல்யாணம்னு கேக்கறா?”
“போதாக்குறைக்கு நீங்கள் அவளுக்கு நிறைய செல்லம் கொடுக்கறேள். அதான் படிப்பு முடிஞ்சிருச்சில்ல , ஆத்துலயே இருந்து சமையல் கத்துக்கலாம்லே. நீங்கதான் அவள வேலைக்கு அனுப்பிருக்கீங்க. அவளும் இதான் சாக்குனு டான்னு எட்டு மணி ஆனாக்கா ஆத்த விட்டு கிளம்பி போய்டறா.5 மணிக்கே வேலை முடிஞ்சாலும் டைப் கிளாஸ், ஹிந்தி கிளாஸ் முடிஞ்சி 7 மணிக்கு வரா.சாப்டுட்டு தூங்க போய்டறா. ஒரு வேலை செய்றதில்லை. ஏதாவது வேலை சொன்னாக்கா, உங்கம்மா வரிஞ்சு கட்டிண்டு வந்துடறா” என மீனாட்சி புலம்பிக் கொண்டிருந்தார்.
சுந்தரேசன், “சரி சரி விடு. இந்த தைல ஜாதகம் எடுத்து பார்த்திடலாம். நானும் நாலு எடத்துல சொல்லி வெச்சிருக்கேன். பாக்கலாம் எல்லாம் பகவான் கைல” என்றார்.
கோவிலுக்கு போன கமலாம்பாளும் காயத்ரியும் சுட சுட சர்க்கரை பொங்கலும் வெண் பொங்கலும் கொண்டு வந்தனர்.
“என்ன தான் இருந்தாலும் கோவில்ல குடுக்கற பொங்கல் டேஸ்டே தனி பாட்டி. ஆத்துல அம்மா பண்றத பொங்கல்னு சொன்னா தான் தெரியும் பாட்டி” என காயத்ரி அம்மாவை வம்பிக்கிழுத்தாள்.
சுந்தரேசனும் காயத்ரியும் அலுவலகம் கிளம்பிய பின் மீனா துணி துவைக்க கொல்லைக்கு போனார். நாராயணீயம் படித்துக் கொண்டிருந்த கமலாம்மாள், தபால் என்ற சத்தம் கேட்டு, வாசலுக்கு வந்தார். கீழே வீசப்பட்டிருந்த தபால்களையும் பத்திரிகைகளையும் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தார். மீனா யாருடனோ டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தார்.
“தோ அத்தை வந்துட்டார். அவாள்ட்ட தரேன்.” மீனா மாமியாரிடம், “வைத்தி மாமா உங்களண்ட பேசணுமாம்” என்றபடி போனைக் கொடுத்தார்.
“நான் நன்னாருக்கேன். உங்காத்துல எல்லாம் செளக்கியமா?”
“……..”
“ரொம்ப சந்தோஷம். இவாள அனுப்பிச்சி வெக்கறேன். என்னால அவ்ளோ தூரம் வர முடியாது. தப்பா எடுத்துக்காதேள்”.
“………..”
“என் ஆசிர்வாதம் என்னைக்கும் உண்டு. சுந்தரத்துக்கிட்ட நான் சொல்லிக்கறேன். அதான் பத்திரிகையும் வந்துடுச்சே. நீங்க கல்யாண வேலையை பாருங்கோ”.
இரவு சாப்பாட்டு நேரம்.
“டேய் சுந்தரம்! மீனாவோட மாமா வைத்தி இன்னைக்கு போன்ல பேசினார்டா. அவர் பொண்ணுக்கு வத்திராயிருப்புல கல்யாணமாம். எல்லாரையும் வர சொல்லிருக்கார். நீங்க மட்டும் போய்ட்டு வந்துடுங்கோ. இந்த முழங்கால் வலிய வெச்சுண்டு என்னால வீட்டுக்கும் வாசலுக்குமே நடக்க முடில” என்றார்.
“போ பாட்டி! நான் இப்பதான் வேலைல சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள லீவெல்லாம் போட முடியாது” என்றாள் காயத்ரி.
“ஆமாண்ணா நீங்க மட்டும் போய்ட்டு வந்துடுங்கோ. இவா இங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா? நான் மாமாவ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்” என்றார் மீனா.
“அதில்லை மீனா, வைத்தி மாமா நமக்கு எவ்வளவோ நல்லது பண்ணிருக்கார். அவர் மட்டும் இல்லைனா நம்ம கல்யாணம் நடந்திருக்குமா?” என்றார்.
“பரவாயில்லண்ணா நான் பேசிக்கிறேன்” என்று அழுத்தமாக அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
பின் ஏக மனதாக சுந்தரேசன் மட்டும் திருமணத்திற்கு செல்வதாக முடிவானது. பொங்கல் கழித்து திருமணத்திற்கு சென்று திரும்பி வரும்போது கை நிறைய திருமண பட்சணங்களும் வைத்துக் கொடுத்த துணிகளையும் எடுத்துக் கொண்டு வந்தார்.
கமலா அம்மாவிடம், “அம்மா கல்யாணத்தை நன்னா ஜாம் ஜாம்னு நடத்திட்டா. பையன் வீடு நல்ல வசதி போல. நமக்கெல்லாம் துணி வெச்சு கொடுத்திருக்கா. ஏன் காயத்ரியை அழைச்சிண்டு வரலனு வைத்தி மாமா கேட்டார்.”
“மீனாட்சி! மாமா ஒன்னு சொல்ல சொன்னார். மறந்துட்டேன். நவநீதன்னு உங்க சொந்தக்கார பையனாம். நம்மூரு சிப்காட்லதான் வேல கிடைச்சிருக்காம். கம்பெனியே வீடு, சாப்பாடு வசதி பண்ணி தந்துருச்சாம். அப்பப்போ பையன போய் பார்த்துட்டு வந்துட்டு இருக்க சொல்றார். உனக்கு யாருனு தெரியுமா?” என்றார்.
“தெரியாதுண்ணா. நான் அந்தப் பக்கமே போக்குவரத்து இல்லாம இருக்கேன். நேக்கு எப்படி தெரியும் ?”
“எப்போ வரானாம்?”
“இன்னும் இரண்டு நாள்ல வரானாம். நானும் பையன நேர்ல பார்த்து பேசி போன் நம்பர் கொடுத்துருக்கேன். கிளம்பறப்போ போன் பண்றேனு சொல்லிருக்கான்.”
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings