இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காயத்ரியின் பிறந்தநாள் அன்று காலை . வழக்கத்தை விட சீக்கிரம் எழுந்து தலை குளித்து தலையை துவட்டிக் கொண்டிருந்தாள். அடர்த்தியான கூந்தல். தலைக்கு குளித்தால் எப்படியும் முழுதும் உலர இரண்டு மணி நேரம் ஆகும். எனவே சீக்கிரமே எழுந்து விட்டாள்.
“அம்மா! காபி கொடு” என்றவாறே அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“எத்தனை முறை சொல்றது அமாவாசை அன்னிக்கு தலை குளிக்காத னு?” கோபமாக கேட்டார் மீனாட்சி.
“அப்பா அம்மா இல்லாதவா தான் அமாவாசை அன்னிக்கு தலைக்கு குளிப்பா”
“அம்மா! மத்த நாள்ல அமாவாசை வந்தா நான் தலை குளிச்சிருக்கேனா? இன்னிக்கு பிறந்த நாள். புது டிரஸ் போடும் போது மூஞ்சில எண்ணெய் வழிஞ்சுண்டு இருந்தா நன்னாவா இருக்கும் நீயே சொல்லு?”
“என்னவோ போ! என்னிக்கு நீ என் பேச்சை கேட்ருக்க?. ஏற்கனவே அடம், பிடிவாதம் பத்தாக்குறைக்கு அப்பாவும் பாட்டியும் ஏக செல்லம்.”
“இதுக்கே நீ இப்படிங்கிறே, இன்னும் இரண்டு விஷயம் தெரிஞ்சா, கோபத்துல இன்னும் நீ என்னை திட்டுவ. அப்பாட்ட பர்மிஷன் வாங்கிட்டேனே!”
“என்ன இரண்டு விஷயம்?”
“ஒன்னு இன்னிக்கு நான் ஃப்ரெண்ட்சோட சென்னிமலை முருகன் கோவில் போகிறேன்”
“அவ்ளோ தூரம் தனியாவா?”
“டைப் கிளாஸ் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் போறோம். அதுவுமில்லாமல் நேக்கு நன்னா தெரிஞ்ச இடந்தானே?”
” உங்க அப்பாதான் உன்னை கெடுக்கறதே இன்னோரு விஷயம் என்ன?”
“அதை நீயே கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சுப்பே” என்றவாறு காபியை உறிஞ்சியவாறே அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் பின்னேயே வந்த மீனாட்சி, சுந்தரத்திடம் ” ஏண்ணா! அவ சென்னிமலை தனியா போறாளாம். நீங்களும் சரினு சொல்லிட்டீங்களாம்? “
“ஆமாம். போய்ட்டு வரட்டுமே அவ என்ன குழந்தையா?”
“நேக்கு இதெல்லாம் சரியாப் படலை. அவ்ளோதான் சொல்வேன்” என்றவாறு மீனாட்சி அடுப்பை கவனிக்க போனார்.
” என் பொண்ணை பத்தி நேக்கு நன்னாவே தெரியும் அவ பிடிவாதக்காரிதான். ஆனா அவளுக்கு சமயோசித புத்தி ஜாஸ்தி. எப்பவும் எங்கேயும் என் தலை குனியற காரியத்தை செஞ்சிட்டு வந்து நிக்க மாட்டா. நான் அவளை அப்படி வளர்க்கலை”
இதை அறையிலிருந்து கேட்ட காயத்ரி ஒரு நொடி முதன் முதலில் தான் செய்யப் போகும் காரியத்தை நினைத்து மனம் வருந்தினாள். அப்பா சொன்ன வார்த்தைகள் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.
மனதிற்குள் முருகா! எனக்கு நவநீதனை பிடிச்சிருக்கு. அதனால உனக்கும் அவனை புடிக்கும். நீ தான் எங்களை சேர்த்து வெக்கனும். அவனை உன் சன்னதிக்கு கூட்டிட்டு வரேன். நீ தான் யார் மனசும் நோகாதபடிக்கு எல்லாத்தையும் நல்லபடியா முடிச்சு தரனும் என்று முருகனிடம் பேசிக் கொண்டாள்.
கடிகாரத்தை பார்த்ததும் பரபரப்பானாள். அச்சோ! மணி எட்டாச்சு. இந்த முறை பிறந்த நாளுக்கு புடவை எடுத்திருந்தாள். இது தான் அவள் அணியப் போகும் முதல் புடவை. கடையில் பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடித்து விட்டது. முதல் தரமான பருத்தி ஆடை. பூக்கள், பொம்மைகள் என எந்த வேலைப்பாடுமின்றி அடர் கருப்பில் ப்ளைன் புடவை. அதை சரிக்கட்டும் வகையில் அடர் சிவப்பு ஜரிகை பார்டர். ஐந்தடிக்கும் குறைவான உயரம். அதற்கேற்ற பருமன். கருப்பான களையான வட்ட முகம். அர்ஜுனனின் காண்டீபமோ என சந்தேகிக்கும்படியான நீண்ட புருவங்கள்.
அறையிலிருந்து வெளியே வந்த காயத்ரி சுவாமிக்கும் அப்பா அம்மா பாட்டிக்கும் நமஸ்காரம் செய்தாள்.
“மகராஜியா இரு” என பாட்டி ஆசிர்வதித்தார்.
“அப்பா! சுதா ஆத்துக்கு போயிட்டு அப்படியே பஸ் ஏறிக்கிறேன் ” என்றபடி நெஞ்சம் படபடக்க கிளம்பினாள்.
சுதா வீட்டிற்குள் நுழையும் போதே பால், ஜான்சன் பவுடர் என ஒரு கலவை வாசனை.
“வா காயத்ரி! என்ன இன்னிக்கு ஆபிஸ் போகலயா?” என்றபடி மாதவன் வரவேற்றான்.
சுற்றியும் பார்வையை சுழல விட்டபடி,
“இன்னிக்கு நவநீதனை நேரில் பார்க்க கிளம்பிட்டு இருக்கேன் மாதவா “
“ஐ விஷ் யூ ஆல் த பெஸ்ட் காயூ”
“தேங்க்ஸ் மாதவா “
“சுதா எங்கே?”
“சின்னவன் ராத்திரி பூரா ஓயாம அழுதுட்டே இருந்தான். இப்பதான் ரெண்டு பேரும் தூங்கறா”
” அவ எந்திரிச்சதும் மறக்காம சொல்லிடு. நான் சாயந்திரமா வரேன்”
“இன்னிக்கி என்ன பிளான்?”
“முதல்ல, நேர்ல பார்க்கிறோம்.சென்னிமலை போறோம். மத்ததெல்லாம் அப்பறம் தான்.”
“பார்த்து போய்ட்டு வா காயத்ரி. மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் த டே “
“தேங்க்ஸ்”
காலை ஒன்பது மணி. ஈரோடு மத்திய பேருந்து நிலையம்.
நவநீதனின் உடை அடையாளத்தைப் பற்றி கேட்டுக் கொண்ட காயத்ரி, தன்னை பற்றி எதுவும் கூறவில்லை ஒரு சுவாரசியத்துக்காக. சட்டென அவன் முன் தான் போய் நின்றால், அவன் முகம் அடையும் பாவத்தை பார்ப்பதற்காகவே தன்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. காயத்ரி கூறாமலேயே அவளின் மன ஓட்டத்தை அறிந்த நவநீதன், அவளை எதுவும் வற்புறுத்தவுமில்லை.
சரியாக எட்டு நாற்பத்தைந்து மணிக்கே காயத்ரி பேருந்து நிலையம் வந்து விட்டாள். அவனிடம் டைம் ஆபிஸ் அருகே நிற்க சொன்னாள் அல்லவா, இவள் பஸ் நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே இருந்த சிமெண்ட் திட்டில் அமர்ந்தாள். அங்கிருந்து பார்த்தால், டைம் ஆபிஸ் நன்றாக தெரியும்
நவநீதன் முன்னமே வந்திருப்பானோ என யோசித்தபடி அவனை தேடினாள். சரியாக எட்டு ஐம்பதுக்கு ஒயிட் ஜீன்ஸ் ஸ்கை ப்ளூ ஸ்டிரைப் ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டில் நவநீதன் அங்கு வந்தான். அவனை இங்கிருந்தே கண்களால் அளந்தாள். ஆறடி இருப்பான். நல்ல சிவந்த நிறம். அதை விட சிவந்த உதடுகள் அவனுக்கு புகைப்பழக்கம் இல்லை என்று கட்டியம் கூறின. முழுக் கை சட்டையை மணிக்கட்டுக்கு சற்று மேலே வரை மடித்து வைத்திருந்தான். அதுவும் ஒரு வசீகரத்தை தந்தது.
தன் இரு நீண்ட கைகளையும் முன்புறமாக மடித்து கால்களை அங்கொன்று இங்கொன்றுமாக வைக்காமல் சீரான இடைவெளி விட்டு நிமிர்ந்து நின்றான். இவன் சரியான அழுத்தக் காரன் மற்றும் தனக்கென சில ஒழுங்கு முறைகளை பின்பற்றுபவன் போல என காயத்ரி யோசித்தாள்.விழிகள் யாரையோ தேடுவது போல் இருந்தாலும், அலைபாயவில்லை. தீர்க்கமான பார்வை.
அவனின் முக ஜாடை சிறிது அம்மாவை ஒத்திருக்கிறது என நினைத்தாள். சிமெண்ட் திட்டிலிருந்து எழுந்த அவள், அவனை நோக்கி நடந்தாள். இதை கவனித்த நவநீதன் இவள் தான் காயத்ரி என ஊகித்தவாறு சிரித்தபடி நின்றான். கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தான். இருந்தாலும் வெளியில் தெரியாமல் இருக்க சமாளித்த முயற்சிகள் யாவும் அவனை காட்டிக் கொடுத்து விட்டன. அதற்குள் காயத்ரியும் அருகில் வந்து விட்டாள்.
“நீங்க தானே நவநீதன்?” என கம்பீரமாக வினவினாள்.
“ஆமாம் மின்னல்”
மின்னல் என்ற வார்த்தையை கேட்டதும் அவளின் முகம் சொல்லொனா வெட்கத்தில் ஆழ்ந்தது.
” வந்து ரொம்ப நேரம் ஆச்சா மின்னல்?”
“இல்லை. இப்பதான் கால் மணி நேரம் இருக்கும்”
“அடுத்து?”
“நீங்க சாப்பிட்டீங்களா?”
” இல்லை. நேத்து நைட்ல இருந்தே பசிக்கலை. நீ சாப்டியா?”
“எனக்கு ஒரு வாரமாவே அப்படிதான்”
“எல்லாம் காதல் படுத்தும் பாடு” என்றவாறு கட கடவென சிரித்தான்.
“வாங்களேன் காபி சாப்பிடலாம். பிருந்தாவன் போலாமா? அங்க காபி நல்லாருக்கும் ” என்றாள் காயத்ரி.
” உனக்காகத் தான் வத்திராயிருப்புல இருந்து இவ்ளோ தூரம் வந்துருக்கேன். நீ கூப்பிட்டா இங்க இருக்க பிருந்தாவன் வர மாட்டேனா மின்னல்?” என்றபடி அவளை கண்களால் ஊடுருவினான். அவனின் பார்வை தீட்சண்யத்தை தாள முடியாத காயத்ரி சட்டென தலை கவிழ்ந்தாள்.
“மின்னல் !நீ ரொம்ப வெட்கபடற . உன் நல்லதுக்குதான் சொல்றேன். இப்படி அடிக்கடி வெட்கபடாத .
“ஏன்?”
நவநீதன் பேச வாயெடுக்கும் முன் ஒரு அரசு நகரப் பேருந்து, நிலையத்திற்குள் உள் நுழையவே காயத்ரி பரபரப்ப னாள்.
” அதோ , பதினொன்னு வந்திடுச்சு. அதுல தான் போகனும் வாங்க என்றாள்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்……………………
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings