in

பாதை தெரியாத பயணங்கள்!!! (சிறுகதை) – ✍ எஸ்.ராம்கபிலன்

பாதை தெரியாத பயணங்கள்!!! (சிறுகதை)

வாக்காளர் அடையாள அட்டை கணக்கெடுப்புக்காக நானும், நண்பர் காசியும் கையில் சில நோட்டுப் பைகளோடு சென்று கொண்டிருந்தோம்

மெயின் ரோட்டுக்கு எதிரே உள்ள, அந்த வறண்ட குளத்திற்கு அருகில் போகும் போதே முகம் சுளிக்கும் நாற்றமும் கூடவே மக்கள் சத்தமும் அதிகமாக இருந்தது

உள்ளே நடந்து சென்ற போது, சின்னஞ்சிறு குடிசைகள், அதில் நாலு நபர்கள் மட்டுமே உட்காரும் அளவுக்கான காங்கிரட் வீடுகள், இடிந்த ஆஸ்பட்டாஸின் கீழ் சகதியில் நிற்கும் ஆடுகள், சட்டை அணியாத சிறுவர்கள், ஒரேயொரு தண்ணீர் குழாய்க்கு நூற்றுக்கணக்கான வண்ண பிளாஸ்டிக் குடங்கள் என, வறுமையை பறைசற்றும் இடமாக இருந்தது அந்த அகதிகள் முகாம்.

கணக்கெடுத்துக் கொண்டிருந்த போது திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சிறிய தார்பாய் போர்த்தப்பட்ட ஒரு குடிசை வீட்டிற்குள் ஒதுங்கினோம். 

நேரத்தை வீணாக்க வேண்டாமென, அங்கிருந்தவர்களிடம் கணக்கெடுப்பைத் தொடங்கினோம். அந்த வீட்டில் உள்ள  பெரியவர், திடீரென எங்கள் பாதங்களை தொட்டார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை

“ஐயா எழுந்திரிங்க” என மெல்லமாக அவரைத் தூக்கினோம். ஆனால் அவருடைய அழுகையை எங்களால் நிறுத்த முடியவில்லை

அருகில் இருந்த செம்புத் தண்ணீரை கொடுத்து அமைதியாக கட்டிலில் உட்கார வைத்தோம். குழப்பத்தில் இருந்த நாங்கள் இருவரும், அருகில் நின்று கொண்டிருந்த அவருடைய மகளிடம் விசாரித்தோம்.  

“ஏம்மா! ஐயாவுக்கு என்னாச்சு?”

“அது வந்து சார், 32 வருஷமா அடையாளம் இல்லாத எங்களுக்கு, இந்த நாட்டோட வாக்குரிமை கிடைக்க போகுதே. அதான் சார், அப்பா உணர்ச்சி வசப்பட்டுடாங்க. இலங்கை அகதிகள் என்றாலே அதிகாரிகள் முகம் சுளிக்கிறாா்கள். என்ன சார் பண்றது? 20 வருசமா வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தோம் வரல” என்றாள் அவள் பெருமூச்சுடன் 

“20 வருஷமா? இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து வருகிற அளவுக்கு இலங்கையில் உங்களுக்கு அப்படி என்ன நேர்ந்தது?” என காசி கேட்டதும்

“எனக்கு அப்ப பத்து வயதிருக்கும் சார், நாங்கள் யாழ்பாணத்தில் வசித்து வந்தோம். எப்போதும் போல அன்றிரவும் அமைதியாகவே உறங்கிக் கொண்டிருந்தோம். திடீரென நடுச்சாமத்தில் வெளியில் அதிகமான சத்தங்கள் கேட்டது. வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து மெதுவாக வெளியே வந்து பார்த்த போது, எங்கள் ஊர் முழுவதும் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.  

மக்களின் சாவு ஓலங்களும், துப்பாக்கிச் சத்தங்களுக்கும் மட்டுமே அங்கு கேட்டது. தூரத்திலிருந்து வரும் பீரங்கி குண்டுகள் ஒவ்வொரு வீடுகளாக தகர்த்துக் கொண்டிருந்தது. உயிருக்கு பயந்து ஜனங்கள்  எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே நின்று கொண்டிருந்த அதிகாரிகள், இருபது நிமிடத்தில் நாட்டை விட்டுச் சொல்லாவிட்டால் இலங்கையின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாவீர்கள் என அதிகாரிகள் மிரட்டினார்கள்.

என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருந்த கொஞ்ச நகைகளையும், பணத்தையும் எடுத்துக் கொண்டு எங்கள் ஜனங்களோடு அந்த ரத்த ஆற்றில் நீந்தி கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம். இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு சில படகுகள் தயாராக இருந்தது. எங்கள் நால்வருக்கும், சேர்த்து 45,000 ரூபாய் கேட்டார் அந்த இரக்கமில்லாத படகு ஓட்டுநர். உயிர் பிழைத்தால் போதுமென்று, எங்களிடம் இருந்த அனைத்து நகைகளையும் கொடுத்தும் பணம் சேரவில்லை 

கடைசியாக, அப்பா கண் முன்னே அம்மாவின் தாலியை கழட்டி கொடுத்து விட்டு அங்கிருந்து படகேறினோம். தாய் பாலுக்கு ஏங்கும் குழந்தைகளாக எம்மக்கள் பணமில்லாமல் இலங்கைக் கரையில் முள்வேலிகளுக்கு பின் நின்று கொண்டு இந்தியா செல்லும் படகுகளை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களிடம் கூடுதல் நகை இருந்திருந்தால் ஒரு சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம்.  

இலங்கை எல்லையைத் தாண்டும் வரை, அனைவரும் தலை குனிந்தபடியே இருக்குமாறு படகு ஓட்டுநர் கூறினார். அப்போது காற்று அதிகமாக வீசியது. ராட்சத அலைகள் படகை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் என் தங்கைக்கு காய்ச்சல் அதிகமானதால் வலிப்பு ஏற்பட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் இலங்கைக்கே சென்று விடலாமென நினைத்தோம். அந்த ராட்சத அலைகளுக்கு நடுவில் படகு இன்ஜினும் பழுதாகியதால், இரண்டு மணி நேரம் அந்த இடத்திலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அப்போதிருந்த நிமிடங்களை நினைத்தால் இன்னும் ஈரக்குலை நடுங்குகிறது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பழுது நீங்கி படகு நகர ஆரம்பித்தது.  

இலங்கை கடற்படையினரிடம் மாட்டி விடக் கூடாதென்று அன்று வணங்காத தெய்வங்கள் இல்லை. படகு  இராமேஸ்வரம் அருகில் வந்ததும், படகை நிறுத்தினார் ஓட்டுநர். இதற்கு மேல் படகு வராது, அங்கு தெரியும் கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தை பார்த்துச் செல்லுங்கள் என்று கூறி விட்டு படகோட்டி கிளம்பினார்.

படகை விட்டு கீழே இறங்கியதும் முட்டியளவுக்கு தண்ணீர். அதில் நடக்கும் போது, ஊசி போன்ற கடல் சங்குகளும், சிப்பிகளும் கால் பாதங்களைக் குத்திக் கிழித்தது. எங்களுக்கு வலிக்க கூடாதென்று அப்பா முதலில் கால் வைத்து நடந்தார். அவருடைய பாதத்தின் தடத்தில் நாங்கள் கால் பதித்துக் கொண்டே கரை சேர்ந்தோம்.  

அங்கு கரையோரங்களில் பல மீனவ குடிசைகள் இருந்தது. வந்த மயக்கத்தில் சற்று மணலில் உட்கார்ந்திருந்தோம். அப்பாவின் பாதங்கள் முழுவதும் கடல் சங்குகள் குத்தியதால், ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது . நாங்கள் அனைவரும் உப்புத் தண்ணீரில் நனைந்ததால் உடல்கள் எரிந்தது, கணகணத்தது

அங்கிருந்த ஒரு குடிசை வீட்டின் கதவை தட்டினோம். சிறிது நேரம் கழித்து மெல்லமாக கதவு திறந்து ஒரு பாட்டி வெளியே வந்து எட்டிப் பார்த்தாள், இலங்கை அகதிகள் என்று தெரிந்ததும், மெளனமாக எங்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவுகளை பூட்டினாள்.  

முகத்தை பார்த்தே எங்களின் பசியறிந்த அந்த பாட்டி சுக்கு காபியும், மீன் குழம்பு சாப்பாடும் கொடுத்தாங்க. வீட்டில் எரிந்து கொண்டிருந்த அரிக்கன் விளக்கு வெளிச்சத்தில் எங்களுடைய நினைவுகளை பாட்டியிடம் கரைத்துக் கொண்டிருந்தோம்.  

மறுநாள் காலை அந்த மீனவ கிராமத்திற்கு வந்த பால் வண்டியில் எங்களை ஏற்றி விட்டாள் பாட்டி. பின், இராமேஸ்வரம் அருகே உள்ள  அகதிகள் முகாமிற்குள் தஞ்சம் புகுந்தோம். வாழ்வதற்கு வழி தெரியாமல் நின்ற எங்களை போன்றோருக்கு அரசாங்கப் பள்ளியில் அகதிகளுக்கான  இட ஒதுக்கீட்டில் நானும், தங்கையும் சேர்ந்தோம்

முகாமில், இருந்தவர்களோடு சேர்ந்து அப்பாவும் கட்டடங்களுக்கு பெயிண்டிங் வேலைக்குச் சென்றார். 25 வருடங்களாக பெயிண்டராக பணி புரிந்ததாலோ என்னவோ, அதனையே சுவாசித்து, சுவாசித்து  அப்பாவுக்கு சுவாசப் புற்றுநோய் வந்து விட்டது.  இனி ஆப்ரேஷன் செய்தாலும் இரண்டு வருடங்கள் தான்” என அந்த பெண் கூறிக் கொண்டிருக்கும் போதே

கட்டிலில் படுத்திருந்த ஐயா எழுந்து, உட்கார்ந்து கொண்டு வரட்டு இருமலுடனும், “எம்மக இப்போ டாக்டருக்கு படிச்சிட்டுருக்கா, இவ படிப்பு முடிச்ச பிறகு தான் நான் ஆப்ரேஷன்  பண்ணிப்பேன். அதுவும் எம்மக தான் எனக்கு ஆப்ரேஷன் செய்யணும். அதன்பிறகு, நான் இறந்து போனாலும் சந்தோஷமாக போவேன்” என்றார் பெருமிதத்துடன் 

“சும்மா இருங்கப்பா, உங்களுக்கு எதுவும் ஆகாது” என கண்ணீருடன் கூறினாள் மகள் 

“வாழ வழியில்லாமல் சொந்த நாடே துரத்திய எங்களுக்கு, இந்திய நாடும், தமிழ் மக்களும் காட்டிய பாசமும், அன்பும் தான் சார் உயிரோட வைத்திருக்கிறது. இப்போது நான் டாக்டருக்கு படித்துக் கொண்டு இருக்கிறேன். இந்த அகதிகள் முகாமிலையே நான் தான் சார் முதல் பட்டதாரி ஆகப் போகிறேன்” என்றாள் கர்வமாய் 

அங்கு, அடைமழை நின்ற பின்னும், இவர்களின் கண்ணீர் மழை நிற்கவில்லை

#ad

         

         

#ad 

              

          

(முற்றும்)   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நோசோபோபியா (கொரோனா கால விழிப்புணர்வு பதிவு) -✍ திருமதி.ராஜதிலகம் பாலாஜி

    கவிதை வடிவில் ஒரு கரிசல் காட்டுக் கதை (பகுதி 2) – ✍ சசிகலா எத்திராஜ்