இரண்டு வருட சபதம்
மகள் பிளஸ் டூ முடிக்கும் வரை எங்கேயும் வெளியூர்ப் பயணம் போகக் கூடாது என்று எங்களுக்கு நாங்களே போட்டுக் கொண்ட இரண்டு வருட சபதத்தை நிறைவேற்றி விட்டோம்.
குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் அனைவரும், பிள்ளைகளுக்காக விட்டுக் கொடுப்பது, போன தலைமுறையை விட, இந்த தலைமுறையில் அதிகரித்து விட்டது நிதர்சனமான உண்மை.
மகளை கல்லூரியில் சேர்த்த பின் நிம்மதி பெருமூச்சு விட்ட எங்களுக்கு, இதோ வந்து விட்டது கிறிஸ்துமஸ் விடுமுறை.
வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ். திங்கட்கிழமை அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால், நான்கு நாட்கள் சேர்ந்தாற் போல விடுமுறை என நினைக்கும் போதே, மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஒரிசா
எங்கேயாவது தூரமா போகணும்னு பிளான் பண்ணியாச்சு. இமயமலை ட்ரிப் பெண்டிங். ஆனா, நிறைய நாள் தேவைப்படும். அதனால டக்குனு மனசுலபட்ட இடம், ஒடியா என்னும் ஒரிசா மாநிலம் தான்.
நானும் என் கணவரும் ரொம்ப பிளான் பண்ற டைப் இல்ல. மனசுக்கு எது சரினுபடுதோ அதை செய்து விடுவோம். பத்து நிமிடத்தில் போகிற இடத்தை முடிவு பண்ணியாச்சு. இந்த முறை மனதில் பட்ட இடம், கலைகள் கொட்டிக் கிடக்கும் ஒரிசா.
உடனே, முதல் வேலையாக ஒரிசா மாநில ஆபீசுக்கு போன் போட்டு ஹாலிடே ஹோம் புக் செய்து விட்டு, பிறகு விமான நிலையத்தில் நாலு பேருக்கான டிக்கெட்டையும் புக்கிங் செய்து விட்டோம்.
பயணம் ஆரம்பம்
சென்னை விமான நிலையத்தில் மாலை 3.40 மணிக்கு புறப்பட்ட நாங்கள், ஒரிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் சரியாக மாலை 5 மணிக்கு தரை இறங்கினோம்.
10 நிமிட டாக்ஸி பயணத்தில் ஹோட்டலை அடைந்தோம்.
எடுத்துச் சென்ற எல்லா பெட்டிகளையும் ஹோட்டல் அறையின் அலமாரிகளில் அடுக்கி வைத்து விட்டு, குளித்த பின் தேநீர் அருந்த வெளியில் சென்றோம்.
மிதமான வெயிலில் சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள், ஒரிசாவின் குளிர் காலத்திற்குத் தயாராக ஷால், ஜெர்க்கின் சகிதம் சென்றிருந்தோம். அதனால் ஒரிசாவின் குளிர்ந்த சீதோஷ்ண நிலை உடலுக்கும், மனதிற்கும் மிகவும் இனிமையாக இருந்தது.
புவனேஸ்வர்
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர். இங்கு ஒரியா மொழி பேசப்படுகிறது.
பண்டைக்காலத்தில் கலிங்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்ட இந்த ராஜ்ஜியம், சந்திரகுப்தமௌரிய பேரரசர் அசோகரரால் தோற்கடிக்கப்பட்டு, மௌரிய பேரரசுடன் இணைக்கப்பட்டது.
கடற்படையிலும், ராணுவ படையிலும், வாணிபத்திலும் தன்னிகரற்று விளங்கியது கலிங்க ராஜ்ஜியம்.
ஆங்கிலேயர் காலம் முன்பு வரை, கட்டாக் ஒரிசாவின் தலைநகராக செயல்பட்டு வந்திருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வராக மாற்றப்பட்டது.
சுற்றுலாவுக்கு தகுந்த மாதங்கள்
மார்ச் முதல் ஜூன் வரை வெயில் காலமும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழைக் காலமும், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை குளிர் காலமும் இருக்கும்.
எனவே ஒரிசாவிற்கு பயணம் செல்ல விரும்புவோர் அக்டோபர் மாதத்திற்கு பிறகு சென்றால் வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல் பனிக்காலத்தின் தொடக்கத்தினை நன்றாக அனுபவித்து, எல்லா இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வருவதற்கு ஏற்றதாக இருக்கும்.
பூரி
பூரி நகரைப் பார்க்கும் பொழுது, புவனேஸ்வர் பெரிய நகரமாக இருப்பதால் தங்குவதற்கு ஏற்ற பல நல்ல ஹோட்டல்கள் வசதியாக கிடைக்கின்றன. புவனேஸ்வரிலிருந்து தினமும் பூரி சென்று வர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பூரி மற்றும் புவனேஸ்வரில் உள்ளூரை சுற்றிப் பார்ப்பதற்கு, நாம் வண்டிகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
எல்லா விவரங்களையும் விசாரித்து விட்டோம். இரவு 9 மணி. வெளியில் எங்கும் கும்மிருட்டு. குளிர் பதினோரு டிகிரியை தொட்டிருந்தது.
உணவு
பானிபூரிக்கும், சாட் மசாலா வகைகளுக்கும் சொத்தையே எழுதிக் கொடுக்கும் அளவிற்கு பிரியமான எங்கள் குழந்தைகள், சாப்பிடுவதற்கு என தனி பட்டியலையே தயார் செய்திருந்தனர்.
பயணம் செல்ல விரும்புபவர்கள், எந்த ஊரில் எது கிடைக்குமோ, அதற்கேற்ற வகையில் சாப்பிடுவது உத்தமம். அதைவிட்டு இட்லி சாம்பார், ரசம், தயிர் என்றால் அவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
இந்தியாவின் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் சவுத் இந்தியன் என்றால் ரைஸ் தாலும், சப்ஜியும் (சாப்பாடும், பருப்பும், காய்கறி), ஃபிரைடுரைஸ் மற்றும் வெஜ்புலாவினைக் கொண்டு ஓரளவு சமாளிக்கலாம். மற்றவை ரொட்டி போன்ற வட இந்திய உணவுகளே.
புவனேஸ்வர் லெவிஸ் ரோட்டில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நாங்கள், வெளியில் சென்று மசாலா டீயை குடித்து விட்டு, சமோசா, காக்ரா (மைதா மாவில் தேங்காய் பூரணத்தை வைத்து செய்யும் ஒரு பலகாரம்), குலோப்ஜாமூன், ரசகுல்லா ஆகியவற்றையும் ஒரு கை பார்த்து விட்டு, ரூமிற்கு வந்து அசதியில் நன்றாக தூங்கி விட்டோம்.
முதல் நாள்
மறுநாள் காலை புவனேஸ்வரிலிருந்து பூரிக்கு சென்று சுற்றிப் பார்த்து வர டாக்ஸி புக் செய்து விட்டோம். டாக்சி டிரைவர் சொல்லியபடி காலை 5.30 மணிக்கெல்லாம் வந்துவிட, நாங்களும் ஜெர்க்கின் சகிதம் ரெடி ஆகிவிட்டோம்
கார் புறப்பட்டு 20 நிமிட இடைவெளியில், ஒரு தேநீர்கடையில் நின்றது. வண்டியை நிறுத்தி, தேநீர் அருந்தி விட்டு, சாப்பிடுவதற்கு தேவையான நொறுக்கு தீனிகளையும் வாங்கிக் கொண்டு, சரியாக காலை 7.15 மணிக்கு, பூரி கோனார்க் சூரியனார் கோயிலை அடைந்து விட்டோம்.
கோனார்க் சூரியனார் கோவில்
நரசிம்ம தேவர்
12-ஆம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம தேவரால், சூரியனுக்கு என்று பிரத்யேகமாக கட்டப்பட்ட கோவில் தான் கோனார்க் சூரியனார் கோவில். இதன் பழமையான வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்ட கோவில் சூரியனார் கோவில். காலப்போக்கில் கடல் உள்வாங்கிய காரணத்தால், கடலில் இருந்து சற்று தொலைவில் இக்கோவில் காணப்படுகிறது.
இரண்டு சிங்கங்கள் யானைகளின் மேல் உட்கார்ந்து கொண்டு, கர்ஜிக்கும் தோரணைச் சிற்பங்களுடன் கோவிலின் முகப்பு வாசல் அமைந்திருக்கிறது.
ஏழு குதிரைகள், 24 சக்கரங்களைக் கொண்டு ஓட்டக்கூடிய தேர் வடிவில் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு சக்கரமும் பத்தடி உயரம் உடையவை. சக்கரம் எட்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களாகவும், 24 சக்கரங்கள் ஒரு நாளின் 24 மணி நேரத்தையும், சக்கரத்தின் 8 பாகங்கள், ஒரு நாளின் காலை மாலை இரவு என மூன்று நேரங்கள் தலா 8 மணி நேரமாக பகிரப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
கோவில் சிகப்பு மணற்பாறைகளாலும், கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கோபுரம் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது.
காந்தத் துகள்கள்
கோவிலின் உட்பகுதிகள், தூண்கள் இல்லாமல் கற்களுக்கு இடையில் காந்தத் துகள்களின் கலவையைக் கொண்டு நிரப்பி அமைக்கப்பட்டுள்ளது, இக்கோயிலின் சிறப்பு.
மேற் கூரையில் இருந்த காந்தத்தின் காரணமாக, மூலவரானசூரியனார் காற்றில் மிதந்து கொண்டிருந்ததாக கூறுகின்றனர். ஒரு காலத்தில் இந்த இடம் துறைமுகமாக செயல்பட்டு வந்திருக்கிறது.
போர்ச்சுகீசியர்களின் கப்பல் நிறுத்துவதற்கு கோவில் விமானத்தில் இருந்த காந்த சக்தி இடையூறாக இருந்ததாகவும், சில கப்பல்கள் மூழ்குவதற்கு காரணமாக இருந்ததாலும், திட்டம் தீட்டி 17-ஆம் நூற்றாண்டில் கோவிலின் மேற்கூரையில் இருந்த 52 டன் எடையுள்ள காந்த சக்தியை தகர்த்து விட்டதாக வரலாறு கூறுகிறது.
அதன் பிறகு சூரியனின் மூலவர் விக்கிரகம், மிதக்கும் தன்மையை இழந்துவிட்டதாகவும், கோவிலின் ஒரு சில பாகங்கள் சிதிலம் அடைந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
229 அடி விமான கோபுரம்
கோவிலின் கருவறையை ஒட்டி 229 அடி விமான கோபுரம் ஒன்று இருந்ததாகவும் பதினெட்டாம் நூற்றாண்டில் அது இடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இன்றளவும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
நடமந்தர்
கோவிலின் ஒருபுறம் நடமந்தர் என்ற மேடை அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. நடன மங்கையர்கள் ஆடுவதற்காக கட்டப்பட்ட இடம் நடமந்திர். இன்றளவும் இக்கோவிலில் ஆண்டுதோறும் இந்திய அளவில் பிரம்மாண்டமான நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கோயில் சிற்பங்கள்
கோயில் சிற்பங்களில் கடவுள் சிற்பங்கள், நடன மங்கையர், யானைகள், குதிரைகள், நாக மனித சிற்பங்கள், காமசூத்திரா சிற்பங்கள் ஆகியவற்றினை அழகிய கலைநயத்துடன் காண முடிகிறது.
மொத்தத்தில் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகள், கலை நயங்கள், தொடர்ந்து ஏற்பட்ட பல அந்நிய படையெடுப்புகளால் அழிந்து போன நம் பொக்கிஷங்கள் ஆகியவற்றை நம்மால் உணர முடிகிறது.
கோவிலில் உள்ள சில முக்கியமான சிலைகள், தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோனார்க் கோவில் ஒரு இந்துக் கோவில் என்பதைத் தாண்டி, எல்லோரும் வந்து பார்க்க வேண்டிய இந்திய கட்டடக் கலையின் ஒரு பல்கலைக்கழகமாக விளங்குகிறது.
பல அடுக்களாய் சிற்பங்கள்
கோவிலின் கீழிருந்து மேலாக முதல் இரண்டு அடிக்கு முழுக்க முழுக்க யானைகளும் குதிரைகளும் மற்ற விலங்குகளின் சிற்பங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
அடுத்த இரண்டாம் நிலையில் பாடுபவர்களும், நடனமங்கையர்களும், வாத்தியம் வாசிப்பவர்களின் சிற்பங்களும் அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் மக்கள் எல்லோரும் சேர்ந்து கயிறு இழுக்கும் போட்டி, குத்துச்சண்டை என விளையாட்டு சிற்பங்களும் அடங்கும்.
அடுத்த நிலையில் மன்னன் மக்களிடம் உரையாடுவது போன்ற சிற்பங்கள், ராணியைப் பல்லக்கில் தூக்கி செல்லும் அரச பணியாளர்கள், மக்கள் யானைகளை பழக்கும் சிற்பங்கள்,சீன மனிதர்கள் கிரீஸ் நாட்டு மனிதர்கள் ஆகியவர்களிடம் இருந்த வணிக தொடர்பான சிற்பங்கள், யானை மேலிருந்து ஒட்டகச் சிவிங்கியோடு நிற்கும் மனிதர்களுடன் பேசும் சிற்பங்கள், வெளிநாட்டு வாழ் மனிதர்களுடன் நமக்கு இருந்த வாணிபத் தொடர்பினை உணர்த்துகின்றன.
அதன் மேல் அடுக்கில் காமசூத்திர சிற்பங்கள் அழகின் உச்சத்தில் தத்ரூபமாக நூற்றுக் கணக்கில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. குழந்தைப் பேறு இல்லாதவர்களை, இந்து மதத்தில் பெரியவர்கள் கோனார்க்கிற்கு சென்று 21 நாட்கள் தங்கி இருந்து, பரிகாரம் செய்து விட்டு வர சொல்லுகிறார்கள்.
இங்குள்ள காமசூத்ரா சிற்பங்களைக் காணும் தம்பதியினர், தங்களை அறியாமலேயே சிற்பங்களின் வாயிலாக காமத்தின் இன்பத்தை நுகர, இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.
கடைசி நிலை ஆன்மீகம். நூற்றுக்கணக்கான தெய்வ சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. குழந்தையிலிருந்து ஒரு மனிதன் மோட்ச நிலைக்கு மாற வேண்டும் என்பதைப் படிப்படியாக உணர்த்துகின்ற கோவிலாகவே கோனார்க் அமைந்துள்ளது
கோனார்க் சூரியனார் கோவிலைப் பார்த்து விட்டு, சந்திரபாகா கடற்கரை, சில்கா ஏரி, சாகர்மிலன், டால்ஃபின் பாயிண்ட், பூரி ஜெகந்நாதர் கோவில், உதயகிரி – கந்தகிரி குகைகள், தௌலி – சாந்தி ஸ்தூபம், நம்பர் ஒன் மார்க்கெட், முக்தேஸ்வரர் கோவில், ராஜா ராணி கோவில் ஆகிய இடங்களுக்கு சென்ற சுவாரஷ்யமான அனுபவங்களை அடுத்த பகுதியில் விரிவாக பகிர்கிறேன். நன்றி
(தொடரும்)
ஒரிசா பயணம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியம் ஆனது .புரி ஜகந்நாதர் கிருஷ்ணர் கோவில் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்று ஆகும் . .2017 ல் சென்று் வந்தோம் .புரி ஜகந்நாதர் இன்றும் நெஞ்சம் நிறைந்து நிற்கிறார் . புரி கிருஷ்ணர் பற்றி படிக்க ஆவலாக உள்ளது . அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் .
Thanks for sharing your experience Rani mma
நாங்களும் போயிருந்தோம். 2015 ஆம் ஆண்டில் என நினைக்கிறேன். ஆனால் எல்லா இடங்களும் பார்க்கவில்லை. நாத்தனார் அங்கே அங்குலில் இருந்ததால் பூரி, புவனேஸ்வர், கொனாரக் மட்டும் பார்த்துவிட்டு அங்கே சென்றுவிட்டோம். காய்களும் இளநீரும் தாராளமாய் விலை மலிவாய்க் கிடைக்கும். காய்களைப் பார்த்தாலே கண்களைப் பறிக்கும்.
சுபாவும் நீங்களும் சொல்வதை கேட்டால் ஒரிசா செல்ல திட்டம் போடலாம் போல… இந்த கொரோனா பை பை சொல்லட்டும், பிளான் போட்டுடலாம் 🙂