சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 74)
என் மனைவி மங்களா, தினமும் விடிகாலை எழுந்து, பிரம்ம முகூர்த்தத்தில், ராமகிருஷ்ணா என்று பொழுது விடியும் வரை வேண்டி. விளக்கேற்றி பூஜை செய்த பிறகே அடுப்பங்கரைக்குப் போவாள்.
அதே நேரம், நானும் விடிகாலை எழுந்து, என் வேலைகளை கவனித்தாலும், ஒரு டம்ளர் காபி அவள் பூஜை முடியும் வரை கிடைக்காது.
தினமும் அவள் மொட்டை மாடிக்குப் போய், அங்கு எங்கேயோ இருந்து வரும் காக்காய்களுக்கும், புறாக்களுக்கும், அணில்களுக்கும் சாதம், அரிசி, கோதுமை, நவதான்யம் என்று போட்டு, அவைகள் கொத்தித் திண்பதை ரசித்தபடி இருப்பாள்.
அங்கு தனியாக ஒரு நொண்டிக்காக்காய் நிற்கும். அது மற்ற காக்காய்கள் போல, அரிசி, நவதானியத்தை சாப்பிடாது. அதற்காகவே என் மனைவி, தினமும் சிப்ஸ், மிக்சர், சப்பாத்தி என்று போடுவாள்.
அதை மற்ற காக்காய்கள் கொத்தி எடுத்துச் செல்லாமல், பார்த்துக் கொள்வாள். அது சாப்பிட்டு முடித்ததும் தான், மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி வீட்டிற்கு வருவாள்.
“என்ன மங்களா, உன் நொண்டிக்காக்காயை ஸ்பெஷலா கவனிச்சிட்டியா?” நான் கேட்டேன். அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள்.
“அதுங்க எல்லாம் எங்கே இருந்து வருதுன்னு தெரியுமா?”
அவள் தெரியாது என்று தலையாட்டினாள்.
“அதுங்க, கோயில், சர்ச், மசூதியில இருந்து பறந்து வருதுங்க. ஆனா ஒன்னா நின்னு கொத்திச் சாப்பிடுதுங்க. காரணம் என்ன தெரியுமா?. மனுஷங்க மாதிரி, அதுங்களுக்கு மதம் பிடிக்கலே. சரி காபி கொடு”
நான் குளித்து முடித்து, டிபன் சாப்பிட்டு, ஆபீசுக்கு பஸ்சில் புறப்பட்டேன்.
பஸ்சில், என் மூத்த அண்ணன் தியாகராஜனுக்காக, அவள் காசிக்குப் போனபோது, கயாவில் தெவசம் செய்து, அந்தப் புகைப்படத்தை என்னிடம் காட்டியதை நினைத்துப் பார்த்தேன்.
என் குடும்பத்துக்காக பல தியாகங்களைச் செய்த, தியாகராஜனைப் போன்ற யோக்கியமான பிறவிகளைப் படைத்த கடவுள், ஏன் அவர்களுக்கு ஊனத்தைக் கொடுத்தான் என்று தான் புரியவில்லை.
அண்ணன் தியாகராஜன் என் தாயிடம் சொன்னதை நினைத்துப் பார்த்தேன்.
“அம்மா, அப்பா இறந்திட்டாரு. எனக்கு படிப்பு வரலே. எனக்கு அரசாங்க வேலை கிடைக்காது. அதோட என் ஒரு கையும் காலும் ஊனம். எனக்கு கல்யாணம் வேண்டாம். என் தம்பி, தங்கைகளுக்கு கல்யாணம் பண்ணிடுங்க.
ஒரு வட்டிக் கடையில எனக்கு வேலை தர்றேங்குறாரு. அந்த முதலாளி நல்லவரு. நம்ம குடும்பத்தோட நல்லது கெட்டதுக்கு உதவுவாரு. உன்னை யாரு வச்சு பராமரிச்சாலும் சரி, பாராமுகமாப் போனாலும் சரி. கடைசி வரை உங்களை நான் காப்பாத்துவேன்”
பெற்றவள் நலமே பெரிது என்று நினைத்த, தியாகராஜனை நினைத்து, அந்த விதவைத்தாய் பெருமைப்பட்டாலும், அவனுக்கு ஒரு திருமணம் செய்துபார்க்க முடியவில்லையே என்று மனதிற்குள் ரத்தக் கண்ணீர் வடித்தாள் அம்மா
பக்கத்து ஊரில், தெரிந்த் உறவினர் மூலம், தங்கை தாரணிக்கு மாப்பிள்ளை இருப்பதாகக் கேள்விப்பட்ட தியாகராஜன், அங்கும் இங்கும் கடன் வாங்கி, அவள் திருமணத்தை நடத்தி முடித்தான்.
அவள் கணவனோ எங்கும் வேலைக்குப் போகாமல், வாய்ச் சவடாலில் காலத்தைத் தள்ளினான். அவள் கணவன் பேர் தான் ராஜா. அவன் மனைவியை ஒரு பிச்சைக்காரியாக வைத்திருந்தான். இந்த லட்சணத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து விட்டன.
தாரணிக்கு தாய்ப்பால் இல்லாத நிலையில், தியாகராஜன் மாதா மாதம், அவள் குடும்பச் செலவோடு, பேபி ஃபுட்ஸ்சையும் வாங்கிக் கொடுத்தான்.
இதற்கும் மேல், தாரணி ஒரு நாள் அவள் இரண்டு குழந்தைகளுடன், பிறந்த வீட்டிற்கே வந்து விட்டாள். கணவனை இழந்த விதவைத் தாய், கணவனிருந்தும் புகுந்த வீட்டை விட்டு, பிள்ளைகளோடு வந்து நின்ற தாரணிக்கு, வேண்டியதை எல்லாம் தியாகராஜனைச் செய்யச் சொன்னாள்.
இந்த நிலையில், அரசாங்கத்திலிருந்து வீட்டை ஏலம் விடும் நோட்டிஸ், என் இரண்டாவது அண்ணன் அருணாசலத்துக்கு வந்தது.
அருணாசலம் பாவம். எடுப்பார் கைப்பிள்ளை. வாயில்லாப் பூச்சி.
“அருணாசலம், என்னப்பா இது? கவர்மெண்ட்ல இருந்து நோட்டீஸ் வந்திருக்கு”
“அண்ணே, எனக்குத் தெரிஞ்சவரு என் பேர்ல ஒரு சினிமா தியேட்டர் நடத்துனாரு. அவரு சேல்ஸ் டேக்ஸ் கட்டாம, சினிமா டிக்கெட்டை வித்து, அரசாங்கத்தை ஏமாத்திட்டாரு”
“அவரு ஏமாத்துனதுக்கு உனக்கு ஏன் நோட்டீஸ் வரணும்? “
“என்ன பண்றது?. தியேட்டர் என் பேர்ல இல்ல இருக்கு. எல்லாத்துலேயும் நான்ல கையெழுத்து போட்டிருக்கேன்”
“அவருட்ட இந்த நோட்டீசைக் காட்டி, என்ன செய்யணுமோ செய்யச் சொல்லு”
“அவரு உயிரோட இல்லை. நான் தான் ஏதாவது பண்ணியாகணும்”
தியாகராஜன் இடிந்து போனான். குடியிருக்கும் வீடும் போய் விட்டால்,
என்ன செய்வது என்று மனம் போராடினான். வட்டிக்கடை முதலாளியிடம் சென்று யோசனை கேட்டான்.
அவர் சில யோசனைகள் சொன்னார். அதன்படி, பல பேரை அரசாங்க ஆபீசுக்குக் கூட்டிச் சென்று, அந்த வீட்டின் மதிப்புக்கும் குறைவாக, ஏலம் கேட்கச் செய்தான்
அரும்பாடு பட்டு, அந்த வீட்டை மீட்டு, நிம்மதி அடைந்தான். ஒரு சுமை முடிந்தது என்றால், இன்னொருசுமை வந்தது.
பெற்ற தாய், நடக்க முடியாமல் படுத்த படுக்கையானாள். ஒரு பக்கம் தாரணியின் இரண்டு பெண் குழந்தைகளையும் படிக்க வைத்துக் காப்பாற்ற வேண்டும்.
இன்னொரு பக்கம், பெற்ற தாயின் மரணம், மேலும் துன்பப்படாமல் இருக்கவேண்டும். இதைத் தவிர தியாகராஜனுக்கு அவனைப் பற்றிய எந்தக் கனவுகளும், பிரார்த்தனைகளும் கிடையாது.
இந்த நிலையில் என்னால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை, என் தாய்க்கும், தாரணிக்கும் செய்து வந்தேன். துன்பத்திலும் ஒரு சிறு இன்பம் போல, அடுத்தடுத்து தாரணியின் இரண்டு பெண்களும் வயதுக்கு வந்தார்கள்
படுக்கையிலிருக்கும் தாயின் மகிழ்ச்சிக்காக, சடங்கு சம்பிரதாயத்தை, தியாகராஜனே செய்து முடித்தான். அவ்வப்போது தாரணியின் கணவன் ராஜா வந்து, அவன் குடும்பத்தை, கூத்தில் வரும் கோமாளி போல பார்த்துப் போவான்.
கட்டிய மனைவிக்கும், பெற்ற பிள்ளைகளுக்கும் அவன் எதுவும் செய்யா விட்டாலும், வீட்டு மாப்பிள்ளை இல்லையா. அந்த மரியாதையை, என் தாயும், தியாகராஜனும் அவனுக்குக் கொடுத்தார்கள்.
அவன் பேசும் சவடால், எனக்கு அவன் மேல் நிரந்தரமாக வெறுப்பை ஏற்படுத்தியது.
தாரணியின் இரண்டு பெண்களையும் படிக்க வைத்து பட்டம் பெற வைத்தான் தியாகராஜன். நல்ல சம்பளத்துக்கு சென்னையில் இரண்டு பெண்களுக்கும் வேலை கிடைத்தது
இது தெரிந்த சவடால் ராஜா, அவன் குடும்பம், அவன் மனைவி, அவன் பெண்கள் என்று பெருமை கூறி, ஒட்டிக் கொண்டான்.
நேர்மையானவன் நாணயமானவன் என்ற செல்வாக்கில், தெரிந்தவர்களிடம் எல்லாம் இனாமாகப் பணம் பெற்று, தங்கையின் இரண்டு பெண்களின் திருமணத்தை முடித்தான் தியாகராஜன்
அந்த மகிழ்ச்சியில், பெற்ற தாய், கண்களை மூடிக் கொண்டாள்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தை, என் தாய் மாமன் மனைவி அன்னபூரணி தராமல் வம்பு செய்தார்.
அதைப் பற்றிக் கவலைப்படாமல், அந்தத் தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் யாரிடமும் பத்து பைசா கேட்காமல், ஈமச்சடங்கு செலவுகளை எல்லாம் செய்து முடித்தான் தியாகராஜன்
அந்த நல்ல தாய்க்கு, தியாகராஜன் மட்டுமே நல்ல மகனாக இருந்தான்.
கவலைகள் வயதுக்கு வந்தது. காலம் கன்னி கழிந்தது. என் அண்ணன் சொன்னபடி, தாய்க்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்தார்
இப்போது அந்தத் தியாகி தியாகராஜனுக்கு, பெற்ற தாயும் இல்லை. அவன் வளர்த்து ஆளாக்கிய தாரணி குடும்பம், சென்னையில் நிரந்தரமாகி விட்டது.
இந்த நிலையிலும், தங்கை தாரணியின் மகள்கள் சம்பாதிக்கும் பணத்தை வீணாக்கி விடாமல், சொத்து சுகங்களை வாங்கிக் கொடுத்த தியாகராஜனுக்கு, பாவம் வந்தது காசநோய்
எப்பொழுது பார்த்தாலும் இருமல், சளி. வயதோ எழுபதுக்கு மேலாகி விட்டது. தியாகராஜன் தன்னுடன் இருக்கட்டும் என்று அருணாசலம் நினைத்தான். அவனால் ஏலம் போக இருந்த வீட்டை, மீட்டுத் தந்தானே என்று, அருணாசலத்தின் மனைவி கஸ்தூரி நினைக்கவில்லை. அவள் கணவனிடம் தினமும் சண்டை போட்டான்.
“உங்க அண்ணனோட கூடப் பொறந்தது நீங்க மட்டுமா? சென்னையில ஒரு தம்பி, தங்கச்சி இருக்காங்கள்ல, அங்கே போய் இருக்கச் சொல்லுங்க” என்றாள்
அருணாசலத்தின் மனைவி கஸ்தூரிக்கு, பிள்ளையும் இல்லை, குட்டியுமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு பத்து பைசா உதவமாட்டாள். கணவன் வயிற்றுக்கே ருசியாக சமைத்துப் போட மாட்டாள்.
கொழுந்தனுக்கா சமைத்துப் போடுவாள். பாவம் தியாகராஜன். பாலுக்காக இரவில் காத்திருந்தான். கஸ்தூரி எங்கேயோ ஊர் சுற்றிவிட்டு வந்தாள்.
அவளுக்கு ஊர் சுற்றுவதைத் தவிர வேறு வேலை இல்லை. வீட்டு பூஜை அறையில் வெள்ளிக்கிழமை, நல்ல நாள், பெரிய நாளில் அவள் விளக்கேற்றிக் கும்பிட்டதை, யாருமே பார்த்தது இல்லை.
கஸ்தூரி, உனக்காகத் தான் தூங்காம உக்காந்திருக்கேன். ஒரு டம்ளர் பால் கொடு.
தியாகராஜன் அறைக்குள் இருந்து சொன்னான். வேண்டா வெறுப்பாக, ஒரு டம்ளர் பாலைக் கஸ்தூரி கொடுத்து விட்டுப் போனாள்.
அது பாலா?. பாதி வெந்நீர். பாவம். வேறு வழியில்லாமல் குடித்து விட்டுத் தூங்கினார் தியாகராஜன். ஆனால் அவருக்குத் தூக்கம் வரவில்லை.
உடல்நிலை சரியில்லாத நிலையிலும், அவன் தாய் அவனை எப்படி எல்லாம் கவனித்துக் கொண்டாள் என்று நினைத்துப் பார்த்துக் கண் கலங்கினார். ஒரு முடிவுக்கு வந்தார்.
அன்றிலிருந்து அவர் தானே சமைத்துக் கொள்ள ஆரம்பித்தார். அவ்வப்போது ஹோட்டலில் எடுத்து வந்து சாப்பிட்டார்.
இது தெரிந்த என் மனைவி, தியாகராஜனை சென்னைக் கூட்டி வரச் சொன்னாள். நான் சென்று அவரை அழைத்தேன். என்னிடம் அவர் சொன்னார்.
“மாணிக்கம் உன் குடும்பத்துக்கு நான் எதுவுமே செய்யலே. காரணம் செய்யக் கூடாதுங்குறதில்லே, செய்ய முடியல. இதை உன் மனைவி மங்களா புரிஞ்சுகிட்டதால தான், என்னைக் கூப்பிடுறா. நான் தங்கை தாரணி வீட்டுல கொஞ்ச நாள் இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீயும் சென்னையில இருக்குறது நல்லதாப் போச்சு. நேரம் கெடைக்குற போது நீ வந்து என்னை பாத்துட்டுப் போ” என்றவர் கூற
“சரி, அப்போ நீங்க ரெண்டு மூனு நாள் என் வீட்ல வந்து இருங்க. அப்புறம் நானே தாரணி வீட்ல கொண்டு போய் விடுறேன்” என்றேன்
அண்ணன் தியாகராஜன், என் விருப்பப்படி, என் சென்னை வீட்டில் வந்து இரண்டு நாட்கள் தங்கினார். அவர் ஆசைப்படுவதை, என் மனைவி வாய்க்கு ருசியாக, நேரா நேரம் செய்து கொடுத்தாள்.
ஆனால் அவரால் தான், அந்த ருசியை ருசித்துச் சாப்பிட முடியவில்லை. சின்னக் குழந்தை கூட, அவரை விட அதிகமாகச் சாப்பிடும். அவன் உடம்பில் ஏதோ தோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று, அவரைப் பற்றி என் தாய் சொன்னது நினைவுக்கு வந்தது.
அவர் விருப்பப்படி, அவரை தாரணி வீட்டில் விட்டு வந்தேன். தாயின் அரவணைப்பும் இல்லை. இல்லற வாழ்வும் இல்லை. குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாகிய ஒரு ஜீவன், மூன்று வேளைச் சோற்றுக்கு இப்படி வீடு வீடாய், ஒரு பிச்சைக்காரனைப் போல அலைய வேண்டிய நிலைமை வந்து விட்டதே என்று வருந்தினேன்
அவர் விருப்பப்பட்டு போன தங்கை தாரணி, நாள் போகப் போக அவரை ஒரு மனிதனாக நினைக்காமல், ஒரு விறகாக நினைத்து, மூலையில் போட்டு வைத்திருந்தார்கள்.
இது எனக்குத் தெரியாமல் என் மனைவியுடன் ஒருநாள் அவரைப் பார்க்கப் போனேன். அப்போது எங்கள் காதில் விழுந்ததைக் கேட்டு துடித்துப் போனேன்.
தங்கை தாரணியில் கணவன் வாய்ச்சவடால், தாரணியிடம் சொன்னான்.
“தாரணி, உங்க அண்ணன் எப்போ பாரு இருமல், சளி. வீட்டுக்குள்ள இருக்கவே அருவருப்பா இருக்கு. வர வர பத்து தெருவுக்கு கேக்குறாப் போல சத்தம் போட்டுக் கத்த வேண்டியிருக்கு. நொண்டி உடமெல்லாம் வீட்ல வச்சு, பாதுகாக்க முடியுமா?
அதுல தினமும் சத்தமா டி.வி பாக்கணும். கேக்கணும்னா அக்கம் பக்கம் தொல்லையா நெனைக்க மாட்டாங்க. கரண்ட் பில் எவன் கட்டுறது? டாக்டர் ஃபீஸ், மருந்து வேற. ரொம்ப தொல்லையா இருக்கு. அவரை ஊருக்கே அனுப்பிடு. அவரு தலையெழுத்து, நம்ம என்ன பண்ண முடியும்?” என்றது அந்த உதவாக்கரை
நானும் என் மனைவியும் வேதனையுடன் பார்த்துக் கொண்டோம்.
கைவிடப்பட்ட குடும்பத்தை தோளில் சுமந்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தவரை பற்றி தன் கணவன் பேசியதற்கு, நன்றியுள்ள தங்கை என்ன சொல்லி இருக்க வேண்டும்?.
“என் அண்ணன் இல்லேன்னா, நம்ம பொண்ணுங்க ரெண்டு பேரும் படிச்சிருக்க முடியுமா? நல்ல வேலைக்குப் போயிருக்க முடியுமா?. அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்குமா? இல்ல வீடு வாசல் வாங்கி இருக்க முடியுமா? இப்போ வெளிநாட்டுக்குப் போய் லட்ச லட்சமா சம்பாதிச்சிருக்க முடியுமா? டி.வி தான, பாத்திட்டுப் போறாரு. அந்த இருமலும், சளியும் நமக்கு வந்திருந்தா, என்ன பண்ணப் போறோம்?” இப்படி சொல்வாள் நாங்கள் எதிர்பார்த்திருக்க, அவள் வேறு மாதிரி பேசினாள்
அந்த நன்றி கெட்டவள் சொன்னதைக் கேட்டு, என் மனம் வெறுப்படைந்தது.
“நம்ம வீட்ல வந்து உக்காந்துட்டு நாலு மாசமா உயிரெடுக்குறாரு. அந்த டி.வி, ஃபேன், லைட்டு, எல்லாத்தையும் கட் பண்ணுங்க. அவரு இருட்டுல கெடக்கட்டும். அப்படியாவது ஊருக்குப் போய்த் தொலையட்டும்” என்றாள் தாட்சண்யமின்றி
என்னால் அதற்கு மேல் அங்கு நின்று கொண்டு கேட்க முடியவில்லை. எதுவும் தெரியாதது போல உள்ளே சென்றேன். இத்தனை நேரம் எரிந்து விழுந்த வாய்ச்சவடாலும் தாரணியும், எங்களைத் தேனில் குளிப்பாட்டி வரவேற்றார்கள்.
எங்கள் அண்ணன் இருந்த இருட்டறையில் ஒரு சின்ன நைட் லேம்ப்பைத் தட்டி விட்டார்கள். என் அண்ணன் என்ற எலும்புக்கூட்டை நலம் விசாரித்தேன்.
ஊரில் கெட்டிக்காரன் என பேரெடுத்தவர், முட்டாளாகி விட்டதை என்னிடம் கூறினார்
“மாணிக்கம், என் நம்பிக்கை எல்லாம் இந்த நாலு மாசத்துல நரகமாப் போச்சு. என்கிட்ட இருந்த, செயின், மோதிரம், பல ஆயிரம் பணம் எல்லாத்தையும் தாரிணிட்ட வந்த அன்னைக்கே கொடுத்திட்டேன். இருபது வருஷமா அவ குடும்பத்துக்கு பாடுபட்டேன். ஆனா அவ என்னை ரெண்டு நாள் கூட சந்தோஷமா வச்சுக்கலே. ரொம்ப அவமானப்படுத்துறாங்க, ஊருக்குப் போயிடலாம்னு நெனைக்குறேன். ஊர்லேயும் இதே பிரச்னை தானே. இங்கே தங்கச்சி. ஊர்ல தம்பி பொண்டாட்டி” என்றார் வேதனையாய்
“பேசாம என் வீட்டுக்கே வந்திடுங்க” என நான் அழைக்க
“யார் வீட்டுக்கும் நான் வரலே. ஏதாவது முதியோர் இல்லத்துல போய் சேந்திடலாம்னு நெனைக்குறேன். பொங்கல் முடிஞ்சதும் என்னை ஊருக்கு ரயிலேத்தி விடு”
என் மனம் பாடாய் பட்டது. நானும் மங்களாவும் என் வீட்டுக்கு வந்து விட்டோம். பகலும் இரவும் அவர் நினைவாகவே இருந்தது
தைப்பொங்கல் காலையில் முடிந்தது. அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மொபைல் அடித்தது. அவர் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது
ஊருக்குப் போவதாகச் சொன்னவர், உலகத்தை விட்டே போய் விட்டார்.
நல்லவேளை இந்த வயதில், இருந்து மேலும் வதை படாமல் போனார் என்று நினைத்துக் கொண்டேன்.
குடும்ப உறவுகளுக்கு மட்டும் தகவல் சொன்னேன். என் அண்ணன் மேல் உள்ள நல்ல அபிப்பிராயத்தில் எல்லோரும் தாரணி வீட்டிற்கு வந்தார்கள். வந்தவர்களிடம் எல்லாம், தாரணியும் வாய்ச்சவடாலும் கண்ணீரைப் பிழிந்து கொட்டினார்கள்.
வாய்ச்சவடால் தனியாக வந்து, என்னிடம் ஒரு காகிதத்தைத் தந்தான். அது என் அண்ணனின் ஈமச்சடங்கு செலவு.
“வர்ற செலவை நான், நீங்க, உங்க இன்னொரு அண்ணன் மூவருமா பங்கு போட்டு செலவழிக்கலாம்” என்றது அந்த மனிதாபிமானமற்ற ஜென்மம்
சாவிலும் கணக்கு. அண்ணனிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்ட செயின், மோதிரம், பணத்துக்கு கணக்கு இல்லையா?
எங்கே ஈமச்சடங்குக்கு பணம் கேட்டு விடுவேனோ என்ற பயத்தில், இல்லாத கஷ்டங்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தாள், என் இன்னொரு அண்ணனின் மனைவி கஸ்தூரி
எனக்கு ஆத்திரம் பொங்கி வந்தது.
“யாரும் என் அண்ணனோட ஈமச்சடங்குக்கு எந்த செலவும் பண்ண வேண்டாம், எல்லாச் செலவையும் நானே பாத்துக்கறேன்” என நான் கத்தியதில் எல்லாரும் அமைதியானார்கள்
அவருடைய காரியத்தைச் செய்து முடித்தேன். அந்த ஆண்டிலிருந்து அவருக்குக் குடும்பம் இல்லாதலால், யாரும் தெவசம் கொடுப்பதில்லை. ஆனால் என் மனைவி மங்களா, என் அப்பா, அம்மாவுக்கு ஆண்டுதோறும் தெவசம் கொடுப்பதோடு, என் அண்ணன் தியாகராஜனுக்கும் கொடுக்கச் செய்தாள்
அன்று தை அமாவாசைக்கு குருக்கள் மாமா வந்து, தியாகராஜனுக்கு பிண்டம் வைத்துக் காரியங்கள் செய்து முடித்துப் போனார்.
அவருக்குப் பிடித்த காய்கறிகளைச் சமைத்து, அன்னம் வைத்து ஒரு இலையில், மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்றாள்.
சூரிய பகவானைக் கும்பிட்டுக் காத்திருந்தாள். நல்ல வெயில் அடித்தது. அவள் எதிர்பார்த்தபடி ஒரு காக்காயும் வரவில்லை. நொண்டிக் காக்காயை எதிர்பார்த்தாள், அதையும் காணோம்.
காக்காய் எடுத்த பிறகு தான், வீட்டில் சாப்பிட வேண்டும் என்று என்னிடம் கூறி விட்டாள். எனக்குப் பசியெடுத்தும் நான் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
மொட்டை மாடியில் இப்போது வந்த சில காக்காய்கள், நொண்டிக் காக்காயை விரட்டின. அது என் வீட்டு பால்கனியில் வந்து கத்தியது. அதைப் பார்த்த என் மனைவி, மகிழ்ச்சியுடன் ஒரு இலையில் சாதம், காய்கறி எல்லாம் வைத்தாள்
என்ன ஆச்சர்யம். சாதாரண நாட்களில் மிக்சர், சிப்ஸ், பிஸ்கட்டை மட்டுமே எடுத்துச் செல்லும் நொண்டிக்காக்கா, இன்று இலையில் வைத்த எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டுப் பறந்தது.
“அது நொண்டிக் காக்கா இல்லை, உங்க அண்ணன் தியாகராஜன்” என்றாள் என் மனைவி
அன்றிலிருந்து என் வீட்டில், அந்த நொண்டிக்காக்கா சாப்பிட்ட பிறகே, நாங்கள் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டோம்.
ஒருவர் வாழும் போது, அவர்களின் பாசம் தியாகத்தை மறந்து விடும் மனிதர்களை விட, காக்காய்கள் எவ்வளவோ மேல் என்று நினைக்கத் தோன்றுகிறது
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
Good story