‘எப்படிங்க உங்கூருக்கு வர்றது?’ன்னு யாராவது கேட்டுருப்பாங்களோ?
‘அப்படியே ரோட்டோரமா வா’ ன்னு பதில் கிடைச்சுருக்கும் போல, அதான் இந்த இடத்துக்கே ரோட்டோருஆ’ன்னு பெயரே வந்துருக்கு 😃
உண்மையில் இது மவொரிச் சொல். ரோட்டோ என்றால் ஏரி, ரு என்றால் ரெண்டு, ரெண்டாவது ஏரி
இந்த ஊருக்கு ஒரு மவொரி பெயரும் இருக்கு, Te Rotorua-nui-a-Kahumatamomoe. சொல்லிப் பாருங்க, பல் சுளுக்கிக்கும் இல்லே?
மவொரி இனமக்கள் தான் நியூஸியின் ஆரம்ப கால மக்கள். இங்கேயே இருந்த பழங்குடிகளா? ஊஹூம்…… இவங்களும் இந்த கலியுக பாஷையில் வந்தேறிகள்தான்
என்ன ஒண்ணு, கேப்டன் குக் இந்த வழியாப் போனப்ப ஏதோ தீவு மாதிரி ஒண்ணு இருக்கேனு பார்த்து வச்சுக்கிட்டு, அப்புறம் ஒருக்கா இங்கே வந்து காலு குத்தின நாளுக்கு, ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே இங்கே வந்து குடியேறுன மக்கள்
பஸிஃபிக் கடலின் பாலிநேஷியாத் தீவுகளில் இருந்து இங்கே புலம் பெயர்ந்த மக்கள் தான் இவங்க
இவங்க இனம் பெருகி, அரசர், மக்கள்னு ஆரம்பிச்சு, அப்புறம் இவுங்களுக்குள்ளேயே குழுக்கள் பிரிஞ்சு சிற்றரசர்களா அங்கங்கே அவரவர் குழுக்களுடன் தீவின் பல இடங்களில் போய்த் தங்கிட்டாங்க
இந்த ரோட்டோருஆ பகுதிக்கும் இப்படி ஒரு தலைவரின் மாமனோ மச்சானோ வந்து, இடத்தைப் பார்த்துப் பிடிச்சுப் போய் தன்னுடைய குழுவோடு இங்கே குடி வந்துட்டார்
ஊரோட முழுப்பெயர் இருக்கு பாருங்க…. அதுலே பின்பகுதி இவருடைய பெயர்தான். Kahumatamomoe கஹுமாட்டாமொமு ( சரியான உச்சரிப்புதானானு தெரியல)
மவொரி மொழிக்கு எழுத்துரு கிடையாது, பேச்சு மட்டும்தான். வெள்ளையர் வந்தாட்டு, அவங்க இங்கிலீஷ் எழுத்துகளைப் பயன்படுத்திக்கிட்டாங்க
ரொம்பப் பெரிய ஊருனு சொல்ல முடியாது, ஜனத்தொகை சுமார் 76 ஆயிரம் மட்டுமே. மவொரிகளின் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாத்திக்கிட்டு இருக்கும் ஒரு ஊர்
அச்சு அசலா இவங்க வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்னு நாம் பார்த்துத் தெரிஞ்சுக்கும் வகையில், லிவிங் மவொரி வில்லேஜ் இருக்குமிடம் இது !
வெந்நீர் ஊற்றுகள்( Geothermal) நிறைந்த பகுதி! இதையொட்டியே மவொரி கிராமங்கள் ! சுற்றுலாப் பயணிகளுக்கு ரொம்பவே முக்கியமான ஊர் இது. நியூஸியின் வடக்குத்தீவில் இருக்கு!
நியூஸிலாந்து நாடுன்னா மூணு தீவுகளைச் சேர்த்து தான். சின்னச் சின்னக் குட்டித் தீவுகளைக் கணக்கில் நான் சேர்க்கலைப்பா. இந்த மூணு தீவுகளிலும் பெருசுன்ற கணக்கில் வடக்குத்தீவு, தெற்குத்தீவு, அப்புறம் ஸ்டூவர்ட் தீவு ஒண்ணு இருக்கு.
வடக்குத் தீவை விடத் தெற்குத்தீவு 36708 சதுர கிமீ பெருசு. நாங்க வசிப்பது தெற்குத்தீவில்! மவொரிகள் வந்து இறங்கியது வடக்குத்தீவில், வெள்ளைக்காரர்கள் வந்திறங்கியது தெற்குத்தீவில்! ( ஆளாளுக்குத் துண்டு போட்டு இடம் புடிச்சுட்டாங்கபா ! )
நியூஸியில் ரொம்பவே இயற்கை அழகோடு ஏராளமான இடங்கள் இருக்கு. சுற்றுலா வர்றவங்க அதிகபட்சமா ரெண்டு வாரம் தங்கி, (முக்கியமான இடங்கள்னு சுற்றுலாத்துறை சொல்லும் இடங்களைப் பார்த்துட்டுப் போயிருவாங்க. நாமோ உள்ளூர் மக்கள்( இங்கே வந்து 33 வருஷமாச்சு! )
இங்கதானே இருக்கோம்னு ஒரு மெத்தனம் வந்துருது பாருங்க….. தெற்குத் தீவை ஓரளவு சுத்திப் பார்த்துட்டோம். வடக்குத்தீவிலும் பெரிய நகரங்களான ஆக்லாந்து, வெலிங்டன் (தலைநகர்) சிலமுறை போய்ப் பார்த்துட்டு வந்துருக்கோம்.
இன்னும் பார்க்காத இடங்களுக்கு ஒரு முறையாவது போகணும் என்ற ஆசையில் ரோட்டோருஆ போக முடிவு செஞ்சோம். நினைச்சவுடனே சட்னு கிளம்ப முடியுதா ? முதலில் ரஜ்ஜூவுக்கு (எங்கள் செல்லப்பூனை) ஹாஸ்டலில் இடம் இருக்கானு தெரிஞ்சுக்கிட்டுத் தானே ஏர்லைன்ஸ் டிக்கெட்டே புக் பண்ணனும் இல்லையோ !
அப்புறம் அங்கே போய் இறங்கினதும் ஊர்சுத்த ஒரு வாடகைக் கார், தங்கற இடங்கள்னு ஒவ்வொண்ணா வலை போட்டுப் பிடிச்சு எல்லாம் சரியாச்சு.
சுபயோக சுபதினத்தில் காலையில் ரஜ்ஜுவைக் கொண்டு போய் கேட்டரியில் விட்டுட்டு, வீட்டுக்கு வந்து சின்னதா ரெண்டு பொட்டிகளை எடுத்துக்கிட்டு எங்கூர் விமான நிலையத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்
சுமார் இருபது மொழிகளில் நம்மை வரவேற்றது ஏர் நியூஸிலாந்து! இதுலே ‘நமஸ்தே’ இருக்கு 🙂 பகல் ஒரு மணிக்கு நம்ம ஃப்ளைட், சுமார் ரெண்டு மணி நேரப் பயணம், 900 கிமீ தூரம்.
சின்ன சைஸ் விமானம் என்பதால், ஆடி ஆடிப் பறந்து, பகல் மூணு மணிக்குத் தரையைத் தொட்டது. ரொம்ப ஆடம்பரம் இல்லாத சுமாரான ஏர்ப்போர்ட் தான்
த்ரிஃப்டி கம்பெனியின் வாடகைக் கார் புக் பண்ணி இருந்தோம். திரும்ப நாம் வண்டியை ஒப்படைக்கப் போவது வேற ஊரில். இங்கே செல்ஃப் ட்ரைவிங் என்பதால் எந்த ஊரிலாவது வாடகை வண்டி எடுத்துக்கிட்டு அப்படியே ஊர்களைப் பார்த்துக்கிட்டே போய் வேற எந்த ஊரிலும் அந்தந்தக் கம்பெனி வச்சுருக்கும் இடத்தில் வண்டியை விட்டுடலாம்
எல்லோரும் சாலைவிதிகளை மீறாமல் கடைப்பிடிப்பதாலும், நாடு முழுசுக்குமான சாலைகளை நல்லபடியாகப் பராமரிக்கும் அரசு இருப்பதாலும், எந்த ஒரு பிரச்சினையும் இல்லை.
கார் சாவியை வாங்கிக்கிட்டு இந்த ஊரில் நாங்க தங்கப்போகும் ஸீடர்வுட் லேக் ஸைட் மோட்டலுக்குப் போய்ச் சேர்ந்தோம். அதிக தூரமில்லை, ஒரு மூணு கிமீதான், இது ரோட்டோருஆ ஏரிக்கரையாண்டை இருக்கு
வரவேற்பில் போய் நாங்கள் தங்கப் போகும் யூனிட் சாவியை வாங்கினதும், ஒரு முன்னூறு மில்லி பால் எடுத்துக் கொடுத்தார் வரவேற்பில் இருந்தவர்
கிச்சனோடு இருக்கும் யூனிட்கள் தான் மோட்டலில் என்பதால் நமக்கு ஒரு காஃபி, டீ போட்டுக்கப் பாலுக்கு ஓட வேணாம். சக்கரை, காஃபிப்பொடி, டீத்தூள் எல்லாம் அடுக்களையிலே இருக்கும். தினமும் கொண்டு வந்து அடுக்கி வச்சுருவாங்க. இன்னும் தேவையானா ஃபோன் பண்ணிச் சொன்னால் போதும். நல்ல வசதியான அறைகள் தான் பொதுவாகவே !
பத்து விநாடி நடையில் ஏரிக்கரைக்குப் போயிடலாம். ஒரு 80 சதுர கி மீ அளவுலே பரந்து கிடக்கு, நல்ல ஆழம் தானாம். பத்து மீட்டர்னு சொன்னாங்க, எனக்குப் பார்த்தவுடனே பிடிச்சுப் போச்சு !
நம்ம யூனிட் எண் 14. இங்கே மொத்தமே 17 யூனிட்கள்தான். டீ போட்டுக் குடிச்சுட்டு கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு, ஏரியை ஒரு நோட்டம் விட்ட கையோடு ரோட்டோருஆ ஊருக்குள் போய்ப் பார்க்கலாம்னு கிளம்பினோம்
சுமார் ஒன்பது கிமீ தூரத்தில் ஊர் இருக்கு. வர்ற வழியெல்லாம் மக்காச்சோளம் பயிரிட்டு இருக்காங்க
புது இடம் என்பதால் வேடிக்கை பார்த்துக்கிட்டே ஊருக்குள் போய்ச் சேர ஒரு இருபது நிமிட் ஆச்சு. முதலில் பார்க்கப் போனது கவர்மென்ட் கார்டன்னு ஒரு இடம். அட்டகாசமான பழைய ஸ்டைல் கட்டடம். இதுக்குள்ளே ம்யூஸியம் இருக்கு
வார் மெமோரியல், ரோஜாத் தோட்டம், சீரான புல்தரைகளோடு கோல்ஃப், Croquet மைதானங்கள், ஈவன்ட் சென்டர்னு பெரிய இடம்தான். ஏரிக்கரையையொட்டியேதான் இருக்கு இதுவும்!
எக்கச்சக்கமான கடல் புறாக்கள், கருப்பு அன்னங்கள், கூஸ் ரக வாத்துகள்னு நமக்குத் துணையா நடை போட்டுக்கிட்டு இருக்காங்க.
அந்தக் காலத்துலே இங்கே மவொரிகள் வந்த படகைப் போல ஒண்ணு செஞ்சு பார்வைக்கு வச்சுருக்காங்க, இதுக்கு Wakaனு பெயர். 20 மீட்டர் நீளமும், ரெண்டரை டன் எடையிலுமா இருக்கும், இதை 1989ம் ஆண்டு தான் செஞ்சாங்களாம்.
ஏரியை விட்டுக் கிளம்பி டவுனுக்குள்ளே போய் ஒரு சுத்து. பெரிய கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் எல்லாம் செயின் ஸ்டோர்ஸ் என்றபடியால் பழக்கப்பட்ட பெயர்கள் தான் அதிகம்
திரும்ப மோட்டலுக்கு வர்ற வழியில், ஒரு ஷாப்பிங் சென்டரில் இருக்கும் இந்திய உணவுக் கடையில் நான் & வெஜ் கறி பார்ஸல் ஆச்சு.
அறைக்குப் போய் கொஞ்சம் ஓய்வு (அதான் ஃப்ரீ வைஃபை இருக்கே! ) அதன் பின் ராச்சாப்பாடுனு முடிச்சுக்கிட்டோம்.
ஒருநாள் போச்சு! காலையில் சீக்கிரம் கிளம்பலாமா ? அதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…
தொடரும்… 🙂
துளசி கோபால் பற்றி:-
துளசி கோபால் 17 வருடங்களாக எழுத்துலகில் இருக்கிறார். துளசிதளம் என்னும் வலைப்பூவில் (Blog) அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் இணைய உலகில் மிகப் பிரசித்தம். இதுவரை 2430 பதிவுகள், அந்த வலைப்பூவில் எழுதி இருக்கிறார்
பெரும்பாலும் பயணக்கதைகள் தான், அதோடு கொஞ்சம் சரித்திரமும் அங்கு படிக்கக் கிடைக்கும். 33 வருடங்களாக நியூஸிலாந்து வாசியான இவரின் எழுத்தில், நியூசிலாந்து நடப்புகள் அதிகம் பகிரப்பட்டிருக்கும்
“இணையத்துக்கு வந்தபின் முகமறியாத ஏராளமான நட்புகளை அடைந்திருப்பதாகவும், எல்லாம் இணையமும் தமிழும் தந்த கொடை” என்கிறார் துளசி கோபால். இவர் நான்கு புத்தகங்களை பிரசுரித்து இருக்கிறார், புத்தகங்கள் சென்னை சந்தியா பதிப்பகத்தில் கிடைக்கும். மற்ற ஊர்களிலும் பிரபல புத்தகக் கடைகளில் கிடைக்கும். புத்தகங்களின் படங்களை கீழே பகிர்ந்து இருக்கிறேன்
சஹானா இணைய இதழுக்கு உங்கள் பயணக் கட்டுரையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி துளசி மேடம்🙏🌷❤
Click here to get notification email of new posts from Sahana Magazine
Like this:
Like Loading...
Super post. Tried this article to read via mobile. Got it successfully.
Thanks a lot
Read this post via mobile. Easy to access. Nice post. Already gave a comment and it didn’t work Trying for the second time.
That comment as well received and posted. Thanks again