in

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 10) -✍ விபா விஷா – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு                                

நீரினைத் தேடிடும்... ❤ (பகுதி 10)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஜானவி தான், தான் தேடும் ஜானகி என ஜானவியின் தலையசைப்பில் உணர்ந்த யாதவுக்கு, இனி இந்த உலகத்தில் வேறெதுவும் தேவையில்லை என்ற மன நிறைவு ஏற்பட்டது 

ஆமாம்… அவள் ஜானகி தான் என்பதில் யாதவுக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால், அவர்களது பள்ளிப் பருவத்தில், பள்ளி ஆண்டு விழாவின் போது சிறுமியாக இருந்த ஜானகி பாடிய பாடல் தான், இன்று ஜானவி பாடிய பாடல்

இதுவே அவன் மனதில் அவளது நினைவுகள் நீங்காதிருக்கக் காரணம் ஆனது

அந்தப் பாடல், சுதந்திரத்திற்கு முன்னால் வெளிவந்த, ‘மீரா’ என்ற திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய பாடல்

மீரா, கண்ணனை நினைத்து பாடுவது போல அமைந்திருந்த அப்பாடலை, ஜானவியின் மூலமாக அறிந்தவன், தானே மீராவாக மாறி, தான் விரும்பு கண்ணனாக அந்த ஜானகியை விரும்பத் துவங்கினான்

சந்தர்ப்ப சூழ்நிலையால் ஜானவியை மணம்முடிக்க நேர்ந்த போது, மாங்கல்ய நாண் பூட்டும் அந்த வினாடியிலும் கூட, அவன் மனதில் நிலைகொண்டிருந்த ஜானகியின் உருவம் கண்முன் வந்து போனது. அதைத் தனது பெருமூச்சில் ஊதித் தள்ளிய பின்பே, இவளின் கழுத்தில் தாலியைக் கட்டினான்

ஆனால் இப்பொழுது,  ஜானவி தான் இத்தனை நாட்களாக தான் விரும்பிய ஜானகி என அறிந்ததும், ஜானவியைத் தவிரச் சுற்றி இருந்த அனைவரும் அவன் கண்களில் இருந்து மறைந்துவிட்டது போலாகினர்

சுற்றி இருந்தவர்கள் என்ன, அவன் தன்னையே மறந்து அவள் கண்களில் தொலைந்து கொண்டிருந்தான்

அதை உணர்ந்தவளாய் அவனருகே வந்த ஜானவி, அவன் வலக்கரத்தைப் பற்றி, “வாங்க யாதவ் கேக் கட் பண்ணலாம்” என அழைத்துச் சென்ற போது கூட, அவளை விட்டு அவனது விழிகள் அகலவில்லை

அனைவரின் வாழ்த்து ஒலியில், அவளது கை பற்றியபடியே கேக்கை வெட்டினான் யாதவ். ஆனால் அவை யாவும் அவனது கண்ணில் பட்டதே அன்றி, கருத்தில் பதியவில்லை.

அவன் மனம் உணர்ந்ததெல்லாம், அவனுடைய ஜானு அவனுக்குக் கிடைத்து விட்டாள் என்பது மட்டுமே

பின்பு வெகுநேரம் கழித்துத் தனிமை கிடைத்ததும், “நீ ஜானகி தான? நிஜமா சொல்லு” என சிறு தவிப்புடன் யாதவ் வினவ, அவளும் மென்சிரிப்போடு அவன் தேடும் பெண் தான் தான் என்பதை ஒப்புக் கொண்டாள்

அதன் பிறகே ஆசுவாசமடைத்தவன், “ஜானகி எப்படி ஜானவி ஆன?” என் ஒரு பெருங்குழப்பத்திற்கு விடை கேட்டான்

“நான் எப்பவும் ஜானவியா தான் இருந்தேன், நம்ம ஸ்கூல்ல என் பேர் சரியா புரியாம நிறைய பேர் ஜானகினு கூப்பிட்டு இருக்காங்க. அப்படித் தான் நீங்களும் இவ்வளவு நாளா குழம்பியிருக்கணும்” என்றாள் ஜானவி சிரிப்புடன்

“அப்போ நீ தான் நான் தேடற ஜானகினு ஏன் நீ என்கிட்ட முதல்லயே சொல்லல?” என யாதவ் கேட்க, அதற்கு இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவனை முறைத்தாள் அவள்

“நீங்க உங்க ஜானகிகிட்ட எப்போவாவது உங்களுக்கு அவளைப் பிடிக்கும்னு சொல்லியிருக்கீங்களா? அப்பறம் எப்படி எனக்கு நீங்க என்னை விரும்பறது தெரியும்?” என எதிர் கேள்வி கேட்டாள்

“ஹோ… சரி நான் உன்ன விரும்பினது, உன்ன தேடிட்டு இருக்கறது உனக்கு ஏற்கனவே தெரியாம இருந்திருக்கலாம். ஆனா நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உன்கிட்ட இந்த மாதிரி ஜானகினு ஒரு பொண்ண தேடறேன்னு சொன்னேன் தான? அப்போ ஏன் நீ என்கிட்ட எதுவும் சொல்லல?” என விடாமல் கேள்விக் கணை தொடுத்தான் யாதவ்

“நீங்க நம்ம ஸ்கூல் பியூப்பில் லீடர்ல? சோ… அந்த சின்ன வயசுலயே உங்கள எனக்குப் பிடிக்கும். ஆனா நீங்க சொல்ற மாதிரி காதல், தேடல் எல்லாம் இல்ல. அப்போ என்னோட வயசுல எனக்கு இதெல்லாம் தெரியவும் தெரியாது தான. ஆனா எனக்கு உங்கள சும்மாவே பிடிக்கும், அவ்ளோ தான். ஆனா நீங்க அன்னைக்கு வந்து நான் என் ஸ்கூல்ல பார்த்த ஒரு பொண்ண காதலிக்கறேன், அவளைத் தான் இவ்வளவு நாளா தேடிட்டு இருக்கேன்னு சொன்னப்ப தான், எனக்கு மறுபடியும் உங்க ஞாபகமே வந்துச்சு. நான் தான் அவனு சொல்ல அன்னக்கி என்னமோ தடுத்துடுச்சு” என்று கூறி நிறுத்தினாள் ஜானவி

சட்டென அவளை அணைத்துக் கொண்ட யாதவ்,  “எனக்கு எந்த விளக்கமும் தேவையில்ல ஜானு, நீ எனக்கு கிடைச்சுட்ட. அது போதும்.. வேற எதுவும் எனக்கு வேணாம்” என்றான் மகிழ்வுடன்

இருவரும் காதலால் கட்டுண்டு இருக்க, அவர்களது மோன நிலையைக் கலைத்தே தீரவேண்டுமென சபதமிட்டாற் போல், கதவு தட்டப்படும் ஓசை கேட்டது

விலகிய இருவரும் அறைக்கதவை திறக்க, அங்கு நின்றிருந்த சாதனா, “அண்ணி உங்கள தேடி யாரோ வந்திருக்காங்க” என்றாள்

உடனே ஜானவி திரும்பி யாதவைப் பார்க்க, “போயிட்டு வாங்க ஆபிசர் மேடம்” என்று சிறு கேலியுடன் கூறியவன்

சாதனாவிற்குக் கேட்காத வண்ணம் மெதுவாக, “சீக்கிரம் வந்துடு…” என ரகசியம் பேசினான்

வெட்கச் சிரிப்புடன் வெளியே வந்தவள், அங்கிருந்த புதியவனைக் கண்டு விழித்தாள்

இவளை முந்திக் கொண்டு அவன், “வணக்கம் ஜானவி மேடம்.. நான் ஆனந்தன். ஆதி சாரோட ஸ்டூடெண்ட். வெளிநாட்டுல இருக்கறதா சொல்லியிருந்தாரே, அது நான் தான்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்

அதைக் கேட்டு மிகுந்த ஆச்சர்யத்துக்குள்ளான ஜானவி, “ஹோ மிஸ்டர்.ஆனந்தன், அது நீங்க தானா? என் கணவர் நீங்க இந்தியா வந்ததும்  உடனே பார்க்கணும்னு சொன்னாரு. நீங்க இப்ப தான் பாரின்ல இருந்து வந்தீங்களா?” என பேசிக் கொண்டே, அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்

அவர்கள் உள்ளே வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த யாதவுக்கோ, உடலெல்லாம் பற்றி எரிய, அந்த ஆனந்தனைப் பார்த்து “அநங்கா…” என தனக்குள்ளாக உறுமினான்

பின்பு சற்று யோசித்தவன், அவனுக்கு வழி காட்டிக் கொண்டு முன்னே வந்து கொண்டிருந்த ஜானவியைப் பார்த்து “ஞமலி…” என்று ஆச்சர்யமும், பெரும் அதிர்ச்சியுமாய் விளித்தான் யாதவ்

அதற்குள் அவனருகே அவர்கள் இருவரும் வந்துவிட்டதை உணர்ந்தவன், சிரமப்பட்டுத் தனது முக பாவனையை மாற்றிக் கொண்டான்

ஆனாலும், தன் கணவனின் சிறு கண்ணசைவில் அவனது மனநிலையை அறிந்து கொள்ளக் கூடியவளான ஜானவி, “ஏதோ சரியில்லையே…” என எண்ணினாள்

இருப்பினும் மூன்றாம் மனிதன் முன்னிலையில் எதையும் காட்டிக் கொள்ளாதவளாக, ஆனந்தனை யாதவிடம் அறிமுகம் செய்து வைத்தாள்

ஆனந்தன் எந்த விவரமும் கூறும் முன்பாகவே, யாதவ் அவனிடம், “இன்னைக்கு என் பர்த்டே பார்ட்டி மிஸ்டர் ஆனந்தன். அதனால நீங்க நாளைக்கு நேரா ஆபிஸ் வந்துடுங்களேன்” என்று சாதாரணமாக கூறினான்

அதற்குச் சரியென்று சம்மதித்த ஆனந்தனும், யாதவிற்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு கிளம்பினான் 

ஆனந்தனை வழியனுப்பிவிட்டு வந்த ஜானவி, அவர்கள் அறைக்குள் நுழைந்ததுமே, ஆவலாய் அவளை பார்த்த யாதவ், “ஞமலி” என மெதுவாக விளித்தான்

அவனுக்கு முதுகுகாட்டி நின்றிருந்த ஜானவி, விழிகளில் நீருடன் திரும்பி அவனது முகத்தை ஏறிட்டாள். பின்பு ஏதோ சொல்ல வந்தவள், அப்படியே மயங்கி விழுந்தாள்

மயங்கியவளை தெளியவைக்கக் கூட விழையாமல், யாதவ் தனது மனக் குழப்பங்களைத் தெளிய வைக்க முயன்று கொண்டிருந்தான்

“ஜானு… நீ தான் நான் தேடின ஜானகினு நினைக்கறதா? இல்ல ஞமலினு நினைக்கறதா? போலீஸான யாதவா யோசிக்கறதா? இல்ல அருஞ்சுனையனா யோசிக்கறதா?” எனக் குழம்பியவன்

இறுதியாக, இந்தச் சூழ்நிலையில், நான் ஞமலியோட காதலனாவோ, இல்ல ஜானுவோட கணவனாவோ யோசிக்கறத விட, ஒரு போலீசா யோசிச்சா தான், என் மனசுல இருக்கற குழப்பங்களுக்கு விடை தெரியும் என்ற முடிவுக்கு வந்தவன், தனது முன் ஜென்ம நினைவுகளைக் கஷ்டப்பட்டுக் கண்முன் கொண்டு வர முனைந்தான்

ஆனால் சரியாக அதே நேரம் ஜானவி மயக்கத்திலிருந்து எழ, அவனால் தனது சிந்தனையை மீட்க இயலவில்லை

மேலும் ஜானவி எழுந்தவுடன், “நீங்க என்கிட்ட ஏதாவது சொன்னீங்களா? அதுக்குள்ள நான் தூங்கிட்டனா?” என சந்தேகத்துடன் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்

அவளுக்கும் முன் ஜென்மத்தின் நினைவுகள் முழுதாக வந்துவிடவில்லை என்றுணர்ந்த யாதவோ, அவளைச் சமாதானப்படுத்தி உறங்க வைக்க முனைந்தான்

அந்த நேரம் கதவு மீண்டும் தட்டப்பட, பெருமூச்சுடன் சென்று கதவைத் திறந்தான் அவன்

அங்கு யாதவின் பிறந்தநாள் விழாவிற்காக வந்து, அன்றிரவு அங்கேயே தங்கிவிட்ட குகன் நின்றிருந்தான்

“யாதவ் ஒரு முக்கியமான விஷயம், அது.. இப்போ இங்க வந்தான்ல ஆனந்தன். அவனை… அவனை யாரோ சுட்டுட்டாங்களாம். ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கானாம்” என கண்களில் மரணபயத்துடன், குகன் கூற, தூக்கி வாரிப் போட்டது யாதவிற்கு

அந்தச் செய்தியைக் கேட்ட ஜானவியும் பதறி அடித்துக் கொண்டு முன்னறைக்கு வர, அதே சமயம் கூடத்திலிருந்த ஜன்னல் வழியே அதிவேகத்தில் வந்த துப்பாக்கி குண்டு, யாதவுக்கும் ஜானவிக்கும் இடையே புகுந்து, அவர்களிருவரின் பின்னே இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை முத்தமிட்டு, அதை சுக்கு நூறாக சிதறச் செய்தது

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    புரோட்டீன் லட்டு – 👩‍🍳 Deepa PK – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு 

    நரபலி (சிறுகதை) – ✍ கார்த்திக் கிருபாகரன்- மார்ச் 2021 போட்டிக்கான பதிவு