in

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 8) -✍ விபா விஷா – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு                                

நீரினைத் தேடிடும்... ❤ (பகுதி 8)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ந்த லாரி விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, லாரி ஓட்டுனரின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என கூறியிருந்தான் குகன்

ஆனால் அன்றிரவே அந்த ஆள் இறந்து விட்டான், அதுவும் கொலை செய்யப்பட்டு இறந்து விட்டான் என குகன் கூறியதும், ஏற்கனவே இருந்த மர்மத்தின் முடிச்சுகள் மேலும் இறுகிவிட்டது போல தோன்றியது யாதவிற்கு

உடனே அரசு மருத்துவமனைக்கு விரைந்தவன், அங்கு இருந்த அந்த ஓட்டுனரின் உடலைப் பார்வையிட்டான்

அவன் கழுத்து அறுக்கப்பட்டு இறந்துக் கிடக்க, அவனைச் சுற்றி தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துக் கொண்டிருந்தனர்

பின்னர் அவ்வறையை விட்டு வெளியே  வந்த யாதவ், குகனை நோக்கிச் சென்றான்

அவன் வருவதைக் கண்ட குகன், “சார்… அந்த டிரைவருக்கு காவலா நம்ம கான்ஸ்டபிள்ஸ் ரெண்டு பேர் இருந்துருக்காங்க. ஆனா அந்த கொலைகாரன் டாக்டர் மாதிரி வந்து கொலை செஞ்சுட்டு போயிருக்கான்” என்றான் 

அதைக் கேட்ட யாதவ், சிறு நக்கலுடன், “எல்லாரும் நிறைய சினிமா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கு. ஆதி சார் காணாம போனதுல இருந்து, எல்லாமே சினிமால வர்ற மாதிரி மர்மமா நடக்குதுல்ல?” என்றான்

“ஆமா சார்… ஆனா யாருக்கோ நடக்கறப்ப, அத நாம ஒரு கேசா பாக்கறோம், அப்ப நம்ம மனசு இவ்வளவு பலவீனப்படாது. ஆனா இதுல சம்பந்தப்பட்டிருக்கறது நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்கனு நினைக்கறப்போ, என்னால முழுசா கான்சன்ட்ரேட் பண்ண முடியல சார்” என சிறு கலக்கத்துடன் குகன் கூறவும்

அவன் முதுகை மெல்லத் தட்டிக் கொடுத்த யாதவ், “ஹ்ம்ம்… நானும் அப்பாவும் நாளைக்கு காலைல வீட்டுக்கு வரோம். ரெடியா இருங்க சரியா? அப்பறம் இந்த கேஸ் உன் அசிஸ்டன்ஸ்’கிட்ட குடு. கொஞ்ச நாள் கழிச்சு நீ டேக் ஓவர் பண்ணிக்கலாம். இப்பவே அவங்ககிட்ட சொல்லிட்டு, உடனே வீட்டுக்கு போய் நல்லா தூங்கு. ஏன்னா நாளையில இருந்து நாம ரொம்ப பிசி ஆகிடுவோம்”  என, ஏற்கனவே குழம்பி இருந்தவனின் மனதை, மேலும் நன்றாகக் குழப்பி விட்டு விட்டுச் சென்றான் யாதவ்

குகனும் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதவனாய், தனது சகாக்களிடம் மற்ற வேலைகளை ஒப்படைத்து விட்டு, சில பல ஆணைகளும் பிறப்பித்து விட்டு வீடு போய் சேர்ந்தான்

மறுநாள் தனது குடும்பத்தினருடன் யாதவ் வருகிறானென்று வீட்டில் அறிவித்து விட்டு, அதன் பின்பே தனதறைக்கு சென்றான் குகன்

மறுநாள் காலையில் தனது குடும்பத்தினருடன் மட்டுமல்லாது, தனது நண்பர்கள் புடைசூழ ஜானவியின் வீட்டிற்கு வந்த யாதவை, ஜானவியின் வீட்டினர் அனைவரும் குழப்பத்துடன் ஏறிட்டனர்

ஆனால் அதிரடியாக வீட்டினுள் நுழைந்த அவனோ, “கிளம்பும் கிளம்புங்க… ஒரு ரெண்டு செட் துணி  மட்டும் எடுத்துக்கோங்க. அப்பறம் கல்யாணத்துக்கு தேவையான மத்த சாமான் எல்லாம் உடனே எடுத்துக்கோங்க. கல்யாணத் துணி மட்டும் இன்னும் ரெடி ஆகலையா? அப்போ அது நாளைக்கு காலையில உங்களுக்கு கிடைக்கும். அதனால இருக்கற நகை துணிமணி மட்டும் போதும் கிளம்புங்க” என எல்லோரையும் கிளப்பினான்

ஜானவியின் வீட்டினர் புரியாமல் அதிர்ந்து நிற்க, “என்ன பாத்துட்டே இருக்கீங்க? சொன்னது கேக்கலையா? கிளம்புங்க சீக்கிரம். விவரம் எல்லாம் நான் அப்பறம் சொல்றேன்” என்ற யாதவ், சற்று நேரத்தில் அனைவரையும் தான் கொண்டு வந்திருந்த ஒரு அரசுப் பேருந்தில் ஏற்றினான்

அதைக் கண்டு மற்றவர்கள் திகைக்க, அவர்களை சமாதானப்படுத்தும் எண்ணத்துடன், “இப்போ அவசரத்துல எனக்கு வேற எந்த வண்டியும் கிடைக்கல. அது மட்டுமில்லாம, நாம யாருக்கும் தெரியாம போகணும்னா இது தான் ஒரே வழி” என சிறு விளக்கம் மட்டுமே அளித்தவன், அவர்களை மேலும் எந்தக் கேள்வியும் கேட்க விடாது பார்த்துக் கொண்டான்.

நடப்பது என்னவென்று புரியாத போதும், யாதவின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தான் குகன்

அவர்கள் அனைவரும் சென்ற இடம், சேலத்திற்கு வெகு தொலைவில் இருந்த ஒரு கிராமத்தின் பாழடைந்த காவல் நிலையம்

அதுவரை எதுவுமே பேசாமல் இருந்த ஜானவி, “ஹ்ம்ம்.. போலீஸ்காரருக்கு கல்யாண மண்டபம் போலீஸ் ஸ்டேஷனா? அதுவும் தும்மினா கூட இடிஞ்சி விழற போலீஸ் ஸ்டேஷன், அருமை.. மிக அருமை” என கலாய்த்தாள்

அதைக் கேட்ட யாதவ், “மேடம் தான் பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆச்சே… அவங்களுக்கு தகுந்த மாதிரி இருக்கணும்ல?” என பதிலுக்கு கேலி செய்ய

“ஹ்ம்ம்” என்று நொடித்து விட்டு சென்றாள் ஜானவி

அங்கிருந்த மற்ற அனைவரும், யாதவின் நண்பர்கள் உட்பட, ஜானவியின் கேலிக்கு பயந்தே, அவளை அணுகாமல் இருந்தனர்

மறுநாள் காலை அந்த பாழடைந்த போலீஸ் ஸ்டேஷன் பரபரப்பாகக் காணப்பட்டது

எல்லோரும் எதிர்பார்த்தது போல, கெட்டி மேளம் முழங்க நாத ஒலியில் அது மிதக்கவில்லை. மாறாக, யாதவ், ஜானவி, விபின் குடும்பத்தினரின் கலகல ஒலியும், அவர்களின் நண்பர்களின் கலாட்டாக்களுமே அங்கு அரங்கேறின

ஏனென்றால் அவர்கள் அனைவரும் கிளம்பி அந்தக் கிராமத்திற்கு அருகிலுள்ள யாதவின் குலதெய்வ கோவிலில், திருமணத்திற்காகச் சென்றிருந்தனர்

ஆம்… அங்கு தான் யாதவ்-ஜானவி திருமணமும், விபின்-சாதனா திருமணமும் அரங்கேறுவதாய் இருந்தது

அந்தச் சிறு கோவிலில் போடப்பட்டிருந்த ஒரே மேடையில் இரு ஜோடிகளும் வெவ்வேறு மனநிலையில் அமர்ந்திருந்தனர்

அய்யர் மாங்கல்ய தாரணம் செய்ய திருமாங்கல்யத்தை நீட்டிய போது, விபின் சட்டென எடுத்து, “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று கூறுவதற்கு முன்பே சாதனாவின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட, அங்கிருந்தோருக்கு சிரிப்பு பீறிட்டு வந்தது

ஆனால் மறுபுறம் அய்யர் நீட்டிய தாலியை வாங்காமல், யாதவ் ஏதோ யோசனையில் இருந்தவன், இறுதியில் ஒரு பெருமூச்சுடன் ஜானவியின் கழுத்தில் தாலியை அணிவித்தான். அதன் பின் தனது மனைவியின் திருமுகத்தைப் பார்த்தவன் அதிர்ந்தான்

ஏனென்றால் அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்

“ஹ்ம்ம்.. கல்யாணம் பண்றப்போ எவ்ளோ அழகா மூஞ்சிய வச்சிருக்கா பாரு. இத அடுத்தவங்க  பார்த்தா, என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? நான் என்னமோ இவளை கைய கால கட்டி கட்டாயக் கல்யாணம்  பண்றதா இல்ல நினைப்பாங்க?” என்று எண்ணிய யாதவ்

ஜானவியைப் பார்த்து, “என்ன?” என புருவத்தை உயர்த்தினான்

அதற்கு ஜானவியும், “என்ன?” என அவனைப் போலவே கேட்க

குழம்பியவன் “புரியலையே” என்று கேட்டான்

அதற்கு அவன் மனைவி, “எதுக்கு அவ்வளவு பெரிய பெருமூச்சு? என்னை கல்யாணம் பண்றது உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா? வீடு போய் சேர்ந்ததும் மவனே உனக்கு இருக்கு” எனவும், அவளது பேச்சில் அப்படியே ஆடிப் போய் விட்டான் நம் நாயகன்

பின்னே இருக்காதா? “இவ்வளவு நாட்கள் ஏதோ சோகமே உருவாகி இருந்தவள், இப்பொழுது தன்னை இவ்வளவு அதிகாரம் செய்கிறாளே?” என்று எண்ணியவனின் மனம், அவனையும் அறியாது ஒரு ஓரத்தில் இனிக்கத் தான் செய்தது.

இவர்களது இந்த நாடகத்தை கண்டும் காணாது இருந்த யாதவின் நண்பர் பட்டாளம், யாருக்கும் அறியாமல் ரகசிய திட்டம் ஒன்றைத் தீட்டியது. அதில் மிக முக்கியமாகக் கலந்து கொண்டவர்கள், விபினும் சாதனாவும் தான்

யாதவின் திட்டப்படி, குகன் FACEBOOK LIVE சென்று, யாதவ்-ஜானவி திருமணத்தை உலகுக்கு அறிவித்தான்

தாலி கட்டிய பின், அந்த கைபேசியை வாங்கிய யாதவ், “ஹாய் பிரண்ட்ஸ்… எனக்கும் ஜானவிக்கும் இதோ இப்போ தான் கல்யாணம் நடந்துச்சு. இந்தக் கல்யாணத்தை ஊரையே கூட்டி செய்யணும்னு தான் நாங்க ரொம்ப ஆசைப்பட்டோம். ஆனா சிலரோட நிர்பந்தத்தினால எங்க கல்யாணம் இப்படி நடக்கற மாதிரி ஆகிடுச்சு. எங்களை இவ்வளவு சீக்கிரம் இணைச்சு வச்ச சில நல்லுள்ளங்களுக்கு நன்றிகள். சீக்கிரமே உங்கள நேர்ல சந்திக்க ஆவலா இருக்கறோம். இப்போ நாங்க எங்களையே கொஞ்சம் கவனிக்க வேண்டி இருக்கு. அதனால உங்ககிட்ட இருந்து விடை பெறுகிறோம். இப்படிக்கு மிஸ்டர்.ஜானவி, மிஸஸ்.யாதவ்” என்றதோடு, LIVEவை நிறுத்தினான்

அவனை ஆச்சர்யமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானவி

என்னவென்று வினவியவனிடம், “கல்யாணம் யாருக்கும் தெரியக் கூடாதுனு தான் இப்படி இங்க ரகசியமா கூட்டிட்டு வந்து பண்ணினீங்க. ஆனா இப்போ இப்படி சோசியல் மீடியால நம்ம கல்யாணத்தை லைவா போட்டுடீங்க? எனக்கு எதுவுமே புரியல?” எனக் கேட்கவும்

“நான் நம்ம கல்யாணம் யாருக்கு தெரியக் கூடாதுனு இப்படி பண்ணல ஜானவி. நம்ம கல்யாணம் நடந்து முடியற வரைக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுனு நினைச்சேன். நம்ம கல்யாணம் எந்த ஒரு மன சஞ்சலமும் இல்லாம நடக்கணும்னு நினைச்சதால தான் இவ்வளவு முன் ஏற்பாடு. அப்பறம் நம்மள தொரத்துறவனுக்கு நான் பயப்படலைனு சொல்லி சீண்டி விட்டு, அவனை நம்ம முன்னாடி வரவைக்கறதுக்காகத் தான் இந்த லைவ், அவ்ளோ தான்” என்றவனை அவள் பார்த்த பார்வையில்  இருந்தது பெருமிதமா? காதலா? என யாதவ் அறியவில்லை

அதன் பின்பு அவர்கள் அனைவரும் கிளம்பி சேலத்திற்கு வந்துவிட, அந்த இரண்டு தம்பதியின் முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன

இறுதியாக, அனைவரும் விடைபெறும் வேளையில், விபின் மற்றவர்களிடம், “டேய் நான் சொன்ன திட்டத்தை எனக்கே செயல்படுத்திடாதீங்க   டா…” என பரிதாபமாகச் சொல்ல

கவினும், மகிழவனும், “ச்சே ச்சே… உனக்கெல்லாம் நாளைக்கு காலையில தான் இருக்கு, இப்ப போய் என்ஜோய் பண்ணு டா…” என வழியனுப்பினர்

அவனும்  அவர்களிடம் சிரித்துக் கொண்டே தனதறைக்குச் செல்ல, பின்பு  அவர்கள் யாதவையும் ஜானவியையும் தேடிக் கொண்டிருந்தார்கள்

அவர்கள் எப்பொழுதோ தங்களது அறைக்குள் சென்று விட்டதை பெரியவர்கள் மூலம் அறிந்தவர்கள், “அடப்பாவிகளா, என்னமோ தாலி கட்டினப்ப அப்படி மொறச்சுட்டு இருந்தாங்க, இப்ப இப்படியா…” என்றெண்ணி வாயைப் பிளந்தார்கள்

அங்கே யாதவின் அறையில், ஜானவி பெட்டில் சாய்ந்தவாறு அமர்ந்திருக்க, யாதவ் கீழே நின்றிருந்தான்

“ஏய்… என்ன நீ என்னமோ மகாராணி மாதிரி ஜம்பமா பெட்டுல உட்காந்துட்டு இருக்க? எனக்குத் தூக்கம் வருது, நான் தூங்கணும்” என்றான் யாதவ்

அதற்கு ஜானவியோ, “தூக்கம் வந்தா தூங்குங்க, அதுக்கெல்லாம் என்கிட்ட அனுமதி வாங்கத் தேவையில்ல. அப்பறம், எனக்கு பயமா இல்ல. உங்களுக்கு பயமா இருந்தா நீங்க தரையில படுத்துக்கோங்க” என சட்டமாக கூறவும்

கடுப்பான யாதவ், “அடிங்க மவளே.. என் வீட்டுல வந்து என் பெட்டுல உட்காந்துட்டு என்னையே கலாய்ச்சுட்டு இருக்கியா?” என்றவன்,  ஒரு கையால் அவளது கையைப் பற்றி இழுத்து, அவளை படுக்கையை விட்டு எழுப்பி விட்டு, ஜானவியை கிண்டல் செய்யும் பொருட்டு, அவனே படுக்கையில் எகிறி குதித்தான்

அவன் படுக்கையியல் குதித்தது தான் தாமதம், கட்டிலின் மரச்சட்டங்கள் முறிந்து விழ, சேலம் மாநகரத்தின் D.C.P தரையில் கவிழ்ந்தடித்து விழுந்து கிடந்தார்

அதை பார்த்த ஜானவி, வயிற்றைப் பிடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டிருந்தாள்

அவளது சிரிப்புச் சத்தம், வெளியே இருந்த கவினுக்கும், மகிழவனுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

Contact admin@sahanamag.com for your advertisement needs.

We do promotion ads for books on behalf of writers / publications, small business ads, home based business ads at reasonable cost. We not only promote in our website, but also in our Facebook Status,other relevant Facebook groups, Whatspp, YouTube, Instagram, Twitter, Pinterest, LinkedIn etc…

Advertise with us to increase your customer base

Take a look at the Promo Video we did for a client recently, it speaks for itself

👇

(தொடரும்…வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்

    கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் 🙏 (✍ அனுபிரேம்) – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு