in

நீரினைத் தேடிடும் வேரென நான்❤ (அத்தியாயம் 2) – விபா விஷா

நீரினைத் தேடிடும்... ❤ (பகுதி 2)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ராயிரம் ஆண்டுகள் பின்பு… அதே மழவர் நாடு… இன்று மலையூராக…

அற்றைத் திங்கள் அந்நிலவில்

நெற்றித் தரள நீர் வடிய

கொற்ற பொய்கை ஆடியவள் நீயா ?

ஆ.. நீயா…

ஆ.. நீயா…

இந்த பாடல் வரிகளுக்கு பதிலுரைப்பது போல..

ஆ.. நானே..

ஆ.. நானே..

என்றவாறே அந்தப் பாடல் வரிகளுக்குத் தகுந்தாற் போல காலில் ஜதி செய்து கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் ஜானவி

பிறை நுதல் நறுக்கி வைத்த வானவில் புருவங்கள் அவள் மீன் விழிகளுக்குப் பேரெழில் சேர்க்க, சிறு கடுகு மூக்குத்தியும், குறுமிளகு பொட்டும் கட்டியம் காட்ட, இயற்கையாய்ச் சிவந்திருந்த அவளது கன்னங்கள் அந்த மாலை நேரத்து வெயில்பட்டு சற்று வாடி இருக்க, அவளது அந்த இள மதுரக் குரலிலோ சிறிதும் சோர்வு வெளிப்படவில்லை

கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம் போல அவள் தோள் தொட்டுப் புரளும் கருங்கூந்தல், அவளது மெல்லிடை அசைவுக்கு இணை தாளம் இட்டபடியே சென்றது.

அவள் – நம்பி ராஜன், நிர்மலாவின் மகள் ஜானவி

செல்ல மகள் என்று கூற வேண்டுமோ? அதுவும் சரிதான்

அவள் பெற்றோருக்கு மட்டும் செல்லமல்ல, அண்ணன் குகனுக்கும் தான்

குகன் I.P.S – சேலம் மாவட்டத்தின் துணை கமிஷனர்

மகளது உல்லாசக் குரல் கேட்டுத் தனதறையில் இருந்து வெளியே வந்தார் நிர்மலா.

“என்ன ஜானு மா… குரலிலேயே குத்தாட்டம் போட்டுட்டு வர? என்ன விஷயம்?” என்று கேட்டவரை, இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள் ஜானவி.

“ஏன்மா நான் கால்ல ஜதி சொல்லிட்டு வந்தா, உங்களுக்கு டப்பாங்குத்து ஆடுற மாதிரி தெரியுதா?” என்று கேட்டவளுக்கு, சிரிப்பையே பதிலாகத் தந்தார் அவர்.

“என்னமா நான் கேட்டுட்டே இருக்கேன், நீங்க பாட்டுக்கு சிரிச்சுட்டு இருக்கீங்க?” என்று விடாக்கண்ணியாக வினவினாள் ஜானவி.

“அதெல்லாம் இல்லடா, நீ சொல்லு. ஏன் உனக்குக் கடையிலிருந்து வரும் போதே இவ்வளவு சந்தோசம்?” என்று தனது மகளின் மகிழ்ச்சியை அறியும் ஆவலுடன் சிறு பிள்ளை போல மீண்டும் அவர் கேட்க, அதுவே ஜானவிக்குப் பிகு செய்ய ஏதுவாய் இருந்தது

“ஹ்ம்ம்.. அது வந்து என்னனா.. மா.. அது.. சொல்ல மாட்டேனே.. நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம். நான் அதுக்குள்ள முகம் கழுவிட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு தனதறைக்கு ஓடிவிட்டாள் அவள்

“அதென்ன அப்படி ஒரு சந்தோசமான விஷயமா இருக்கும்?” என்று யோசித்தபடியே மகளுக்குக் காபி கலக்கச் சென்றாள் அன்னை.

“என்ன மா உங்க குட்டி மூளையைக் கசக்கி பிழிஞ்சு காப்பியா கலக்கிட்டு இருக்கீங்க போல?” என்று மீண்டும் தனது தாயிடம் வம்பிழுத்தபடியே வந்தாள் ஜானவி.

“ஏய் வாலு.. ரொம்ப ஆர்வத்தைத் தூண்டாத, ஒழுங்கா சொல்லிடு. இல்ல குடிக்கற காபியில உப்பள்ளி போட்டுடுவேன் பார்த்துக்கோ” என்று அவர் பயம் காட்டியதும், பணிவது போல நடித்தாள் மகள்

“அச்சச்சோ அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க அம்மா.. ஜானு குட்டி பாவம்ல, நானே சொல்லிடறேன்” என்றவள்

“டொட்டொடொய்ங்…” என்று கூறியவாறே, தனது கைப்பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் காண்பித்தாள்

அதைப் பார்த்ததும் நிர்மலாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிய, “ஹே ஜானு குட்டி அப்பாயின்மென்ட் ஆர்டரா? வந்துடுச்சா?” என்று சந்தோசமாகக் கூவியவாறே மகளைக் கட்டிக் கொண்டார் அவர்.

பின்னே இருக்காதா? மகள் மிகுந்த ஆசையுடன் தேர்ந்தெடுத்துப் படித்த படிப்பு, அதே துறையில் அரசாங்க வேலை கிடைக்கவும், மகளுடன் சேர்ந்து தாய் மனமும் குதித்தாடியது

“வெளியூர்ல எங்கயாவது போஸ்ட் போட்ருக்காங்களா? நிறையத் தூரமா?” என்று அடுக்கடுக்காய் அடுத்தடுத்து வினவவும், தாயின் மகிழ்ச்சியில் மூச்சடைத்தது ஜானவிக்கு

“ஹையோ அம்மா, எதுக்கு இப்படி மூச்சு விடாமப் பேசறீங்க? காபி எடுத்துட்டு வாங்க, நாம ரெண்டு பேரும் வெளியே போய்க் குடிக்கலாம். அப்போ சொல்றேன் முழு விவரத்தையும்” என்று கூறிவிட்டு, தாயையும் அழைத்துக் கொண்டு வெளியே கூடத்திற்கு வந்தாள் ஜானு.

வெளியே வந்ததும் காபியைப் பருகாது, தனது தாயின் மடியிலே படுத்துக் கொண்டு கதை கூற ஆரம்பித்தாள்

“அம்மா நான் முதல்ல இருந்து சொல்லுவனாம் நீங்க அமைதியா கேப்பீங்களாம்” என்று அவள் கூறியதும்

“அட ஆமாமா, உனக்குத் தான் ‘ஆறுமணி மேனி’யா இருக்குல்ல? நீ ‘அன்னைக்குக் காலையில் ஆறுமணியில இருந்து’னு இல்ல ஆரம்பிப்ப? சீக்கிரம் சொல்லணும். இல்லாட்டி ‘இன்னைக்கு நைட் டின்னர் என்னாச்சுனு’ உங்க அப்பாவும் அண்ணனும் வந்துடுவாங்க. சரியா?” என்று நிர்மலா ஜானவியை கேலி செய்யவும்

“அம்மா இப்படி எல்லாம் குறுக்கப் பேசினா, நான் மறுபடியும் இன்னைக்குக் காலையில இருந்துனு ஆரம்பிச்சுடுவேன்” என மிரட்டியவள், தன் தாயார் அலறியதையும் பொருட்படுத்தாமல் முதலிலிருந்து ஆரம்பித்தாள்

“அம்மா… நானும் அண்ணாவும் கடையில இருந்தோமா, அப்போ ஒருத்தர் உள்ளே வந்தார். அண்ணா அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு நம்ம கடை ஆளுங்ககிட்டச் சொல்லி அவருக்குத் தேவையானதை எடுத்துக் காண்பிக்கச் சொன்னாங்களா? அப்போ இன்னொருத்தர் உள்ள வந்தாரு. அவரு யாரு தெரியுமா?” என்று அவள் சஸ்பென்ஸ் வைக்கவும்

“யாரு போஸ்ட் மாஸ்டர் தான?” என்று நிர்மலா கூறினார்

“ஹையோ அம்மா உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது? அண்ணா சொல்லிட்டானா?” என்று ஆச்சரியமாக ஜானவி வினவியதும்

கடுப்பான முகத்துடன், “ஆமா நீ என்னமோ தங்க மலை ரகசியம் சொல்ற பாரு.. நான் என்னனு தெரியாம திரு திருனு முழிக்க. கையில வச்சிருக்கறது அப்பாயின்மென்ட் ஆர்டரு. இதுல இவ வைக்கற சஸ்பென்ஸ்ஸ எனக்குக் கண்டுபுடுச்சு குடுக்கறதுக்கு ஆள் வேணுமாம்.

உன் அண்ணன் போலீஸ் தான். அதுக்காக இப்டி சின்ன விஷயத்தெல்லாம் கண்டுபிடிக்க அவன் எனக்கு உதவி பண்ணுவானா? அப்பா வெளியூர் போய் இருக்கறதால ஏதோ மனசு வச்சு ஆபீசுக்கு லீவ் போட்டு உன்கூட கடைக்கு வந்துருக்கான். இதுல இது வேறயா?” என்று அவர் மீண்டும் நக்கல் அடித்திட

“போங்க நான் கதை சொல்ல மாட்டேன்” என்று சிறு பிள்ளை போல முகத்தைத் திருப்பிக் கொண்டு, அம்மாவுக்கு முதுகைக் காண்பித்து அமர்ந்து கொண்டாள்

“சரிடா செல்லக்குட்டி.. சாரி.. நீ முழுக் கதையும் சொல்ல வேண்டாம். உனக்கு எங்க போஸ்டிங்? எவ்வளவு நாள் ட்ரைனிங்னு இத மட்டும் சீக்கிரமா சொல்லு பார்க்கலாம்” என்று நிர்மலா ஜானவியின் கதை கூறுதலுக்கு மூடு விழா நடத்திட, மீண்டும் அவரை முறைத்தவள்

“இப்போ எனக்கு நம்ம சேலத்துல தான் மா முதல் நாள் வரச் சொல்லிருக்காங்க. அங்க போனதுக்கு பின்னாடி தான் போஸ்டிங் எங்கனு தெரியும். அடுத்த வாரத்துல டூட்டில சேரணுமாம்”

ஆம்.. ஜானவிக்குச் சிறு வயதிலிருந்தே வரலாற்றுத் துறையில் ஆர்வம் அதிகம்.. ஆர்வம் என்பதை விட, தேடல் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

அதிலும் தனது இருப்பிடமான மலையூர் பற்றிய பழைய கதைகளைப் பாட்டி கூறக் கேட்டு வளர்ந்தவள், தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்று விட்டாள்

இதோ இப்பொழுது தனது ஆசைப்படியே தமிழ்நாடு அரசாங்கத்தின் தொல்லியல் துறையில் வேலைக்கும் சேரப் போகிறாள்

அன்றிரவே வெளியூர் சென்ற தந்தை நம்பி ராஜனும் வந்து விட, அவரிடமும் விஷயம் பகிரப்பட்டது

பேரானந்தத்தில் திளைத்த அவர், இரவு ஹோட்டலுக்கு அழைத்துப் போய் விருந்து வைத்தார். அந்த வாரம் முழுவதும் ஜானவி என்னவெல்லாம் ஆசைப்படுகிறாளோ அவை அனைத்தும் கிடைத்தது

ஷாப்பிங் ஷாப்பிங் என்று சுற்றி இருக்கும் எட்டு ஊரையும் அடிப்ரதக்ஷணம் செய்து விட்டாள் ஜானவி.

#ad

Gift your better half for Valentines day – End of Season Sale In Amazon – Mens Collection

இதோ இன்று தான் வேலைக்குச் செல்லப் போகும் முதல் நாள். நம்பி ராஜன் தன் காரில் அழைத்துப் போய் விடுவதாய் எவ்வளவோ கூறியும், “இன்னைக்கு ஒரே ஒரு நாள் தானப்பா, அதுவும் 40 நிமிஷம் தான். நான் பத்திரமா போயிட்டு வந்துடுவனாம்” என்று தன் தந்தையைக் கொஞ்சிக் கொஞ்சியே சமாதானப்படுத்தி விட்டுக் கிளம்பினாள் ஜானவி.

வீட்டிலிருந்து 8 மணிக்கெல்லாம் கிளம்பியவள், சொன்னது போல 8.40க்கெல்லாம் தலைமை அலுவலகத்தின் அருகிலிருக்கும் சிக்னலை வந்தடைந்து விட்டாள்

ஆனால், இன்னைக்குள்ள வேலையில் சேர்ந்துடுவோமா? என்று அவளுக்கே சந்தேகம் கிளம்பும்படியான சம்பவம் ஒன்று அப்பொழுது நடந்தது

ஏனென்றால், ஏதோ அமைச்சரின் வாகனம் செல்லவிருப்பதால், அவ்வழியே வரும் மற்ற வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

ஒன்பது மணிக்கெல்லாம் வேலையில் சேர்ந்து விடலாம் என்று எண்ணி இருந்த ஜானவிக்கோ, நேரம் ஆக ஆகப் பொறுமை பறந்து கொண்டிருந்தது

சிக்னலில் அவர்கள் நின்றிருக்கும் வெள்ளைக் கோட்டிற்கு முன் பாரிகேட் (Baricade) போட்டு பாதையை மட்டும் அடைத்து விட்டு, அந்தப் போக்குவரத்து காவலர் அங்கிருந்து சென்று விட்டார்

அதனால் அமைச்சரின் கார் சென்று வெகு நேரம் ஆகியும் கூட, வாகனங்கள் அங்கிருந்து செல்லும் வகையறியாது மிகுந்த நெரிசலாகி விட்டிருந்தது.

இதில் சிலர் அந்தப் பாரிகேட்டை தள்ளி ஓரம் வைத்து விட்டுக் கிளம்ப எத்தனிக்க, சிலர் அவ்வாறு செய்யக் கூடாதெனத் தடுக்க, எதிர் புறமிருந்து வாகனங்கள் வந்து விட, அந்த இடமே ரங்கநாதன் தெரு போலக் கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்தது.

தன் அண்ணனுக்காவது போன் செய்து கூப்பிட்டு யாரவது அனுப்பச் சொல்லலாம் என்று நினைத்து அவனுக்கு ஜானவி அழைக்க, அவனும் போன் எடுக்கவே இல்லை.

தன் தமையன் மீதிருந்த கோபத்தை ஒட்டு மொத்த காவல்துறை துறையின் மீது காட்டியபடி, தன்னால் இயன்ற வரை ட்ராபிக்கை சரி செய்ய முயன்று கொண்டிருந்தாள் ஜானவி

அப்பொழுது அங்கு போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கினான் அவன். ஆறடிக்குக் குறைவில்லாத உயரத்துடன், கண்களில் கூலர்ஸ், கையில் காப்பு என வந்திறங்கினான்.

ஆனால் ஜானவிக்கோ, அவன் அவ்வளவு போக்குவரத்து நெரிசலைக் கண்டும், மிக அசால்டாக நடந்து வருவது போலப் படவே, இருந்த எரிச்சலில் அவனிடம் எகிற ஆரம்பித்தாள்.

“என்ன சார்? என்ன நடக்குது இங்க? ஏதோ மினிஸ்டர் வராருனு இந்தப் பாதையை க்ளோஸ் பண்ணினீங்க. ரூட் க்ளோஸ் பண்ணினதோட கடமை முடுஞ்சுதுனு அந்தப் போலீஸ்காரர் போய்ட்டார். அரை மணி நேரமா நிக்கறோம் சார். நாங்க எல்லாம் வேலைக்குப் போறதா? இல்ல சாயந்தரம் வரைக்கும் அப்படியே நின்னுட்டு திரும்பி வீட்டுக்கு போறதா?” என்று அத்தனை பேர் முன்னிலையில் அவள் கத்த, தன் கூலர்ஸை இறக்கி அவளைப் பார்த்தவன்

“சாரி மேடம், அந்த டிராபிக் கான்ஸ்டபிளுக்கு ஏதோ எமெர்ஜென்சினு போன் வரவும் அவர் உடனடியா கிளம்ப வேண்டியதா போய்டுச்சு. மறுபடி ட்ராபிக் ஒழுங்குபடுத்த அடுத்தப் போலீஸ் உடனடியாக வர முடியல. எங்க மிஸ்டேக் தான். வெரி சாரி மேடம். இப்போ கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுங்க” என்று தன்மையாகவே அவன் கூறினான்

ஆனாலும் விடுவாளா ராணி மங்கம்மா?

“ஆமா போலீஸ்காரங்க தான் பொறுப்பே இல்லாம நடந்துக்கறது. இன்னைக்கு நான் முதல் நாள் வேலையில சேரணும், அரை மணி நேரம் லேட். இதுல ஆடி அசஞ்சு வந்துட்டு நல்லா வக்கணையா பேசுங்க. இந்தப் போலீஸ்காரங்கன்னாலே இப்படித் தான் இருப்பீங்களா?” என்று பட படவெனப் பட்டாசாய் பொரியவும், பச்சை மிளகாய்க் கடித்தது போல உச்சந்தலை முடி சிலிர்த்துக் கொண்டு நிற்கக் கோபம் தலைக்கேறியது அவனுக்கு

அங்கிருப்பவர்கள் தங்களைப் பார்க்கிறார்கள் என்பதை உணராதவன், “ஹேய் வாய மூடு, நானும் பார்த்துகிட்டே இருக்கேன் சும்ம நொய் நொய்னு கத்திட்டு இருக்க? நான் ட்ராபிக் க்ளியர் பண்ணட்டுமா? இல்ல உன்ன கொஞ்சிகிட்டு இருக்கட்டுமா?” என்று அவளை அடிப்பது போல் கையை ஓங்கிச் சொல்லவும், அவமானமாகி விட்டது ஜானவிக்கு

இதில் பக்கத்து பைக்காரன் வேறு பின்புறமிருந்த தன் நண்பனிடம், “ச்ச… இது பேசின வாய்க்கு பளார்னு ஒண்ணு வாங்கும்னு நினச்சேன் மச்சி, மிஸ் ஆகிடுச்சு” என்று சிரித்துக் கொண்டே கூறவும், சாமி வந்துவிட்டது ஜானவிக்கு. கையில் வேப்பிலை கொடுக்காதது தான் பாக்கி.

“இத்தனை பேர் முன்னாடி என்ன அடிக்கக் கை ஓங்கிட்டல்ல? உன்ன என்ன செய்றேன் பாரு.. உன் பேர் என்ன? சொல்லு.. கேக்கறேன்ல? உன் பேர் என்ன? “என்று மீண்டும் அவள் கத்தவும்

“என் பேர் யாதவ், உன்னால முடுஞ்சத பார்த்துக்க போடி” என கூறி விட்டு, அதன் பிறகு அவளை மதியாது தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் அவன்

“உன்ன என்ன செய்றேன் பாரு…” என்று மனதுள் கறுவிக் கொண்டே, நெரிசல் விலகியதும் தனது அலுவலகத்தை நோக்கி விரைந்தாள் அவள்

அங்கு அலுவலகத்திலோ வாயில் காப்பான், “என்னம்மா யார் வேணும்?” என்று கேட்ட கேள்விக்கு, தான் இன்று தான் வேலையில் சேர வந்திருக்கும் விவரம் கூறியதும்

“என்னம்மா முதல் நாளே லேட்டா?” என்று அவன் கிண்டலாகக் கேட்டிட, யாதவ் மேல் இருந்த கோபம் இன்னும் பெருகிற்று ஜானவிக்கு

பின்பு அலுவலகத்திற்குள் நுழைந்தவள், தலைமை அதிகாரி ஆதித்தியனிடம் சென்றாள். அவர் ஏதாவது கூறுவாரோ என்று பயந்து கொண்டே உள்ளே நுழைந்தாள் ஜானவி.

ஆனால் அவரோ, மிகவும் கலகலப்பானவராக இருந்தார். தனது தாமதத்தைப் பற்றி அவள் விளக்க முனைய, மிகச் சாதாரணமாக “பரவா இல்லமா” என்று விட்டார்

அதே சமயம், வேலையில் மிகக் கண்டிப்பானவராக இருந்தார்.

“இங்க பாரு ஜானவி, நமக்கு மலையூர்ல இருக்கற மலைக்கோட்டையில் தான் வேலை. நீ அந்த ஊர் பொண்ணுன்றதால தான் முக்கியமா உன்ன வேலைக்கு எடுத்தோம். மத்தவங்க அடுத்த வாரத்துல இருந்து தான் வேலையில் சேருறாங்க. அதுக்குள்ள நான் உனக்கு அந்த டீடெயில்ஸ் எல்லாம் சொல்லிடறேன். அடுத்த வாரத்துல இருந்து நீ தான் அவங்கள எல்லாம் கைட் பண்ணனும். புரியுதா?” என்று கூறவும்

சிறிது பயத்துடனே, “இல்ல சார் நான் இன்னைக்குத் தான் வேலையிலேயே சேர்ந்துருக்கேன். அதுக்குள்ள எப்படி மத்தவங்கள நான் வழி நடத்த முடியும்?” என்று கேட்டாள் அவள்

“உன் திறமை எனக்குத் தெரியும் ஜானவி. அதுமட்டுமில்லாம உனக்கு இந்த வேலை மேல எவ்வளவு ஈடுபாடு இருக்குன்னும் எனக்குத் தெரியும். அதனால நீ பயப்பட அவசியமே இல்ல. இதுல இன்னொரு காரணமும் இருக்கு.

அது என்னன்னா, எனக்கு வேலை சீக்கிரமா நடக்கணும். உனக்கு இந்த வாரம் முழுக்க நான் எல்லாத்தையும் விளக்கி சொல்லிட்டு மறுபடி அடுத்த வாரம் வரவங்களுக்கும் கிளாஸ் எடுக்க முடியாது சரியா? அதனால தான் உனக்கு இந்த வேலை

அப்பறம் நீ நாளையில் இருந்து இங்க வரத் தேவை இல்ல , மலையூர் சைட்டுக்கே நேரடியா வந்துடு. வேற ஏதாவது டௌட் இருக்கா?” என்று அவர் வினவவும்

“இன்னும் ஒரே ஒரு டௌட் தான் சார், கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்க இல்ல?” என்று சிறிது தயங்கியபடியே அவள் கேட்கவும்

“கேளு மா” என்றார் ஆதித்யன்

“அது இல்ல சார். எனக்கு வாட்ச்னா ரொம்பப்  பிடிக்கும் நிறையக் கலெக்ஷன்ஸ் வச்சுருக்கேன். ஆனா உங்க வாட்ச் மாதிரி நான் பார்த்தது இல்ல. அதான் அது எங்க வாங்குனீங்கனு…” என்று ஜானவி இழுக்கவும்

ஆதித்யன் சத்தமாகச் சிரித்தபடியே, “இது கடையில் வாங்கின வாட்ச் தான் மா…. ஆனா ரீமாடல் செய்தது. அதுவும் செல்ஃப் மேடா செய்தது” என்று அவர் கூறியதும், ஆச்சரியமாகிப் போனது அவளுக்கு

“அருமை சார், நீங்க ஒரு சகலகலா வல்லவர்” என்று அவள் பாராட்டியதும்

“யாருக்குத் தெரியும், இந்த வாட்ச் உன் கைக்குத் தான் வருமோ என்னவோ?” என்று முணுமுணுத்தவாறு அங்கிருந்து சென்று விட்டார் அவர்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

(தொடரும்… வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

5 Comments

  1. காத்திருக்கேன். அடுத்த வெள்ளிக்கு! கதாநாயகன்/கதாநாயகி வழக்கம்போல் மோதலில் சந்தித்திருக்கிறார்கள் போல!

  2. அதிக எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் உருவாக்கியது உங்கள் கதையின் முதல் அத்தியாயம்… விபா உங்களுக்கு வாழ்த்துக்கள்… உங்களின் கதை மிக அருமை…

முருகா உன் திருவருள் வேண்டும் 🙏(கவிதை) ராணி பாலகிருஷ்ணன் – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

காந்திஜி (M.முஹம்மது மரியம் பயாஸா – நான்காம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு