ஆன்மீகம் நவராத்திரி

சிந்தூ அருண விக்ரஹாம் (நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நாமம் – விளக்கத்துடன்) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)

நாமரூபா

லலிதா ஸ்ஹஸ்ர நாமம் அம்பாளுக்கு ஆயிரம் நாமங்கள் மட்டும்தானா என்ன ! அவள் தானே நாமரூபா. எல்லா வார்த்தைகளும் அவளிடமிருந்து தான் உருவாகின

காளிதாசன் கூறும் போது, வாகர்த்தாவி வசம் விருக்த்தவ் வாகர்த்த பிரபத்தியே,

வார்த்தைகளும் அதிலிருந்து வரும் பொருளும் நீதான் என்கிறார். உதயத்பானு ஸ்கஸ்ராபா என்ற நாமத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அம்பாளுடைய முகாரவிந்தம்

அம்பிகையின் முகத்தை வர்ணிக்கும் எல்லோரும் இதை கையாண்டு இருக்கிறார்கள்.

அம்பாளுடைய முகாரவிந்தம் எப்படி இருக்கும் தெரியுமா?

ஆயிரம் சூரியர்கள் விடிகாலையில் உதிக்கும் போது, அதன் கிரணங்கள் எப்படி சிவப்பு வர்ணமாக இருக்குமோ அப்படி இருக்குமாம்.

பின்னர் வேறு ஒரு இடத்தில், அவளது முகம் சரஸ் சந்திர நிபானனா சரத்காலத்தில் உதிக்கும் குளுமை பொருந்திய சந்திரனைப் போல் இருக்குமாம்.

இதென்ன, எப்படி சூரியனைப் போலும் சந்திரனைப் போலும் இருக்குமா ஒருவரது முகம்? முரன்பாடாக இருக்கிறதே என்கிறீர்களா?

மகிஷாசுரன், மதுகைடபன், போன்ற அசுரர்களை வதைக்கும் போது உக்கிரமாக சிவந்து உத்யத்பானு ஸ்காஸ்ராபாவாக இருக்கும்.

அபிராமி பட்டர் போன்ற அடியார்களை காக்கும் போது ஸ்ரஸ்ச்ந்திர நிபானனாவாக இருக்கும்.

ஒரு புலி காட்டில் தன் உணவுக்காக இரையை வேட்டையாடும் போது அதனுடைய முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? வெங்கண் சிவந்து வடிவால் முறுக்கி தன் கோரப் பற்களினால் கடித்து குதறி உக்கிரமாக உதயசூரியன் போல இருக்கும்.

அதுவே பிறந்து 2 நாட்களே ஆன தன் குட்டிகளை காப்பதற்காக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு தூக்கிக் கொண்டு போகும் போது அதே பற்களைத் தான் உப்யோகித்து அதற்கு வலியில்லாமல் வாயில் கவ்விக் கொண்டு போகும்.

ஒரு சாதரண மிருகத்திற்கே வித்தியாசமான மறுபட்ட முகத் தோற்றம் கொண்டு வரும் போது, அகிலாண்ட நாயகிக்கு இது ஒரு பெரிய விஷயமா?

இந்த உதயத்பானு ஸகஸ்ராபாவைத் தான் ஆதிசங்கரரும் மதுரை மீனாக்ஷியம்மனின் முகத்தை வர்ணிக்கும் போதும் உப்யோகப் படுத்துகிறார்

“உத்யத்பானு ஸஹ்ஸ்ர கோடி ஸதிர்ஸாம்””.

மீனாக்ஷியம்மனின் முகம் எப்படி இருக்கிறதாம்… ஆயிரம் உதயசூரியன் உதிக்கும் போது ஏற்படும் பிராகாசமாக இருக்குமோ அப்படி.

அபிராமபட்டரும் லேசுபாட்டவரா?

அம்பிகையின் மீது அந்ததாதி பாடும் போது, முதல் பாடலின் முதல் வரியே, “உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகமுடையாய்”

அபிராமியின் முகத்தில் இருக்கும் திலகம் எப்படி இருக்கிறதாம் தெரியுமா?

காலையில் உதிக்கின்ற கதிரவன் எப்படி சிவந்து சிவப்பாக இருக்குமோ அதுபோன்று அவளுடைய திலகம் ஒளிர்விடுகிறதாம் அப்படியென்றால் அம்பாளின் முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்

நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நாமம்

இன்றைய நாமம் “சிந்தூ அருண விக்ரஹாம்”

 இந்த நாமம், லலிதா சஹஸ்ரநாமம் தியானஸ்லோகத்தில் வருகிறது.

சிகப்பான ஒளி பொருந்திய உருவம் கொண்டவள் என்ற அர்த்தம்.

இந்த உலகம் சூரியனின் ஒரு பகுதியாக வெடித்துச் சிதறியாதால் உண்டானது.

அதனால் உலகம் தோன்றிய போது முதலில் உண்டான நிறம் சூரியனின் கிரணமான சிகப்பு நிறம் தான்.

அப்பொழுதே அம்பாள் செம்மைத் திருமேனி உடைய உருவமாகத் தோன்றினாள்.

என்ன உருவத்தோடு தோன்றினாள்? அகிலமெங்கும் வியாபித்திருக்கும் அம்பிகைக்கு உருவம் என்ன என்றால் சொல்லுவது அரிதாகும்.

அம்பிகை என்று சொன்னவுடனே அவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்கக் கூடும் என்று நினைப்பது இயல்பு.

ஆனால் முப்பெரும் தெய்வத்தையும் உள்ளடக்கிய அந்த பெரிய தெய்வத்துக்கு எந்த வர்ணம் எந்த உருவும் தர முடியும் ?

அவள் எப்படியிருப்பாள்? “தாம் அக்னி வர்ணாம் தபஸா ஜ்வலந்தீம்” என்கிறது துர்கா ஸூக்தம்.

அக்னி சிகப்பாகத் தான் இருக்கும். அவள் தான் பெரிய தெய்வம் என்று எப்படிச் சொல்ல முடியும்.

மீசைக்கவி சொல்லுகிறான் ஒரு இடத்தில், “பெண் விடுதலை வேண்டும் பெரிய தெய்வம் காக்க வேண்டும்”

அவனுக்கு பராசக்தி தானே பெரிய தெய்வம்

நல்ல சிகப்பு இல்லாமல் சிந்துர வண்ணம் போல உள்ள இளம் சிகப்பு நிறத்தில் தோன்றினாள்.

அபிராமி பட்டரும், “சிந்தூர வர்ணத்தினாள்” என்று கூறுகிறார்

லலிதா ஸ்கஸ்ர நாமம் முழுவதிலும் அவள் சிகப்பு வர்ணத்தில் தான் வர்ணிக்கப்படுகிறாள். “ரக்தவர்ணா சிதக்னிகுண்டத்திலிருந்து உருவானவள்” – தோற்றதிற்கான நிறம் கொண்டாள்.

ஆதி சங்கரரும் சௌந்தர்யலகிரியில்,” ஜகத்தாத்ரிம் கருணாசித் அருணா” என்கிறார்

இந்த உலகத்தின் மீது கொண்ட கருணையினால் சிகப்பு வடிவம் கொண்டாள்.

அபிராமபட்டர் நீலி என்று கூறி விட்டு கடைசியில் சிந்தூர வர்ணத்தினாள் என்று முடிக்கிறார்.

இதன் அர்த்தம் என்ன? நிறங்களை வரிசைப் படுத்தும் போது ஊதாவில் V(நீலீ) ஆரம்பித்து சிகப்பில் Rல் (VIBYOR) முடிக்கிறோம்

பட்டரும், எல்லா நிறங்களும் முடிவது சிகப்பில் தான், அதுதான் நீ என்கிறார் (சிந்து அருண விக்ரஹம்)

#ad

(தொடரும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: