சைல புத்ரி
நவராத்திரி இரண்டாம் நாளின் நாயகி, சைல புத்ரி. சைலம் என்றால் மலை. மலையரசன் மகளான அம்பிகையையே இது குறிக்கும்.
பார்வதி, பர்வத ராஜகுமாரி, பவானி என்றெல்லாம் அழைக்கப்படும் தேவி இவளே! தேவர், பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகிய மூவர் என அனைவரிலும் நிறைந்து நிற்கும் சக்தியானவள் இவளே! இவளன்றி ஓரணுவும் அசையாது.
தமிழில் இவள் மலைமகள் என அழைக்கப்படுகிறாள்
மஹாமேருவை தினந்தோறும் வலம் வந்து கொண்டிருக்கும் சூரியன், இவளின் பக்தர்களுக்கு அருள் புரிவான்.
நவராத்திரி இரண்டாம் நாள் ஆகையால், சைலபுத்ரியை வணங்குதல் சிறப்பானது.
இந்த தேவியைத் துதிப்பதால் மனம் மகிழ்வுறும், ஆரோக்கியம் பெருகி மனம் விசாலமடையும்
ஈசன் வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி ஆடிய ஆனந்தத் தாண்டவத்தின் ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவள் இந்த சைலபுத்ரி ஆவாள்
இரண்டாம் நாள் வழிபாடு (அலங்காரம் – பூமாலை – பாமலை – நிவேதனம்)
அலங்காரம்
- நவராத்திரியின் இரண்டாம் நாள், அம்பிகையை சைலபுத்ரியாக ஆராதிக்கலாம்
- இன்றைய தினம் மூன்று வயதுப் பெண் குழந்தையை திரிபுரை/திரி மூர்த்தி என பாவித்து வணங்கி வழிபடுதல் வேண்டும். கொலுவில் அம்பிகையை இன்று ராஜராஜேஸ்வரியாக அலங்கரிக்கலாம்.
- அரிசிமாவினால் பூக்கள் வரைந்து போடும் கோலம் சிறப்பானது
பூமாலை
இன்றும் மஞ்சள் நிறம் உகந்தது என்றாலும் சிவப்புக் கொன்றையும், துளசியும், முல்லையும் கூட ஏற்றது
பாமலை
இன்றைய தினம், லலிதா நவரத்னமாலையும், லலிதா சஹஸ்ரநாமமும் சொல்லலாம்.
நிவேதனம்
மஞ்சள் நிறத்தில் ஆடைகளும், சிறு குழந்தைக்கு ஏற்ற தின்பண்டங்களும் கொடுக்கலாம் என்றாலும், காலை நிவேதனத்தில் எள் சாதம், புளியோதரை சிறப்பானது.
- எள் சாதம்
- 50 கிராம் எள்ளைக் கல்லரித்துக் கொண்டு வெறும் வாணலியில் நான்கு அல்லது ஐந்து மிளகாய் வற்றல், உப்பு தேவையானது சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும்.
- சமைத்த அன்னத்தில் கால் தேக்கரண்டி உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும்
- கொஞ்சம் உதிர் உதிராகச் சாதம் ஆனதும் தேவையான எள்ளுப் பொடியைப் போட்டுக் கிளறவும்.
- புளியோதரை
- புளியோதரைக்குப் புளிக்காய்ச்சல் தயார் செய்யணும். சுமார் 150 கிராம் புளியை ஊற வைத்துக் கொஞ்சம் கெட்டியாக புளிச் சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வெறும் வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி எள், ஒரு மேஜைக்கரண்டி கடுகு, ஒரு மேஜைக்கரண்டி மிளகு, இரண்டு தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்
- தேவையானால் மிளகை மட்டும் தனியாகக் கொஞ்சம் நெய் விட்டு வெடிக்க விட்டு எடுத்துக் கொள்ளலாம்.
- இவை ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடித்துக் கொள்ளவும். நன்கு நைசாகவே பொடிக்கலாம்.
- அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது பாத்திரத்தைப் போட்டுச் சுமார் 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- பத்து மிளகாய் வற்றலைக் காம்பு ஆய்ந்து இரண்டு மூன்றாகக் கிள்ளி உள்ளிருக்கும் விதைகளை எடுத்த பின்னர் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போடவும்.
- மிளகாய் வற்றல் கறுப்பாக ஆக வேண்டும்..அதன் பின்னர் கடுகு, ஊற வைத்த கொண்டைக்கடலை அல்லது கடலைப்பருப்புப் போட்டு விட்டு ஒரு கைப்பிடி வறுக்காத வேர்க்கடலையும் சேர்க்கவும்.
- பெருங்காயம் ஒரு துண்டு சேர்க்கவும். பெருங்காயம் பொரிந்ததும் கருகப்பிலை போட்டு மஞ்சள் பொடி சுமார் 3 தேக்கரண்டி சேர்க்கவும்.
- அல்லது சின்னதாக விரலி மஞ்சள் துண்டை மிளகு வறுக்கையில் சேர்த்து வறுத்துவிட்டு அந்தப் பொடி செய்யும்போது சேர்த்துப் பொடித்துக் கொள்ளலாம்.
- இப்போது கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைச் சேர்த்து உப்புச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்துச் சேர்ந்து வரும் போது, சுமார் ஐம்பது கிராம் வெல்லத்தூள் சேர்க்கவும்.
- வெல்லத்தூள் கரையும் போது, ஏற்கெனவே செய்து வைத்திருக்கும் பொடியில் தேவையானதைப் போட்டுக் கலக்கவும்.
- மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, அடுப்புச் சூட்டோடு வைத்தால் இன்னும் கொஞ்சம் இறுகும்.
- சாதத்தை உதிராக வடித்துக் கொண்டு, அரைத் தேக்கரண்டி உப்பு, அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி, அரைத் தேக்கரண்டி பெருங்காயப் பொடி சேர்த்து ஒரு சின்னக் குழிக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு சாதத்தை உதிர்க்கவும்.
- செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலில் தேவையானதாகக் கொஞ்சம் எடுத்து இதில் போட்டு நன்றாகக் கலக்கவும்
- புளியோதரை தயார் ஆனதும் நிவேதனம் செய்துட்டு விநியோகிக்கலாம்.
- வேர்க்கடலை சுண்டல்
- இன்று மாலை வேர்க்கடலைச் சுண்டல் பண்ணலாம்.
- வேர்க்கடலையை முதல் நாளே ஊற வைத்து மறுநாள் நன்கு கழுவி உப்புச் சேர்த்துக் குக்கரில் அல்லது வாயகன்ற கனமான பாத்திரத்தில் வேக வைக்கவும்.
- பின்னர் நீரை வடிகட்டி விட்டுக் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம், கருகப்பிலை தாளித்துக் கொள்ளவும்
- பின், அதில் வடிகட்டி வைத்திருக்கும் வேர்க்கடலையைப் போட்டு, சிறிது மிளகாய்வற்றல்+தனியாப் பொடியையும் சேர்த்துக் கிளறவும்
- அதன் பின், தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறினால், சுண்டல் விநியோகத்துக்குத் தயார்.
#ads
இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு
- நவராத்திரி வழிபாடு உருவான கதை
- கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
- நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
- நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
- நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
- நவராத்திரிக்கான பாமாலை
- நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
- லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள்
- அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள்
- அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்
கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
வேர்க்கடலைச் சுண்டல் இரண்டு நாட்கள் வந்திருக்குனு நினைக்கிறேன். பார்க்கிறேன். இல்லைனா வேறே சுண்டல் போடணும்.
ஒகே பாத்துட்டு சொல்றேன். நன்றி