2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“யக்கா, கோமதிக்கா, என் பிள்ளையப் பாத்தீங்களா?”
பக்கத்து வீட்டு கோமதி அக்கா வீட்டு வாசலில் நின்று குரல் கொடுத்துவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் தெருவில் கண்மண் தெரியாமல் பதறியபடி ஓடினாள் கயல். கயலின் குரல் கேட்டு வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்த கோமதி, கயலின் பதட்டத்தைப் பார்த்து பயந்துபோய் அவளைத் துரத்தியபடியே பின்னால் ஓடினாள்.
“ஏ, கயலு, எதுக்கு இப்படிப் பதட்டமா ஓடறே? வாசல்ல நின்னு புள்ளையப் பார்த்தியான்னு கேட்டுட்டு, நான் வந்து பதில் சொல்றதுக்குள்ள இப்படி ரோட்டுல கண்ணுமண்ணு தெரியாம ஓடறியே. இரு கயலு, நில்லுடி.”
கத்திக் கொண்டே துரத்திய கோமதி கயலை எட்டிப் பிடித்தாள்.
“ஏ புள்ள கயலு, என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இப்படி தலைதெறிக்க ஓடறே? குழந்தை எங்கடி?”
“வீட்ல புள்ளையக் காணோம்கா. எங்க போச்சுன்னு தெரியல.”
சொல்வதற்குள் அழுகை பெருகியது கயலுக்கு.
“புள்ளைய விட்டுட்டு நீ என்னடி பண்ணே?”
“அக்கா, குழந்தை தூங்கிட்டு இருந்தான். அவன் தூங்கற நேரத்துல துணி எல்லாம் துவைச்சு முடிக்கலாம்னு கொழாயடில துணியைத் துவைச்சுட்டிருந்தேன். வேலைய முடிச்சு வந்து பார்த்தா, தூங்கிட்டிருந்த குழந்தையைக் காணோம்.”
“என்னடி சொல்ற? தூங்கிட்டிருந்த குழந்தை எங்கடி போவும்? அப்படியாவது அது என்ன நல்லா நடக்கற குழந்தையா? இங்கெல்லாம் வந்து தேடறதுக்கு? ஒண்ணரை வயசுக் குழந்தை. இப்பத்தான் மெதுவா நடக்க ஆரம்பிச்சிருக்கான். வீட்டுப் பக்கத்துல தேடிப் பாரு கயலு.”
“இல்லக்கா. குழந்தை எந்திரிச்சு எல்லாம் வெளில வந்திருக்க மாட்டான். யாராவது தூக்கிட்டுப் போயிட்டாங்களோன்னு பயமா இருக்கு.”
“நம்ம தெருவுல வெளியாட்கள் யாரும் வந்து தூக்கிட்டுப் போக முடியாதேடி. இவ்வளவு ஜன நடமாட்டம் இருக்கு. தெரு முக்குல பொட்டிக் கடையில அவ்ளோ ஆம்பளைங்க இருக்காங்க. வெளியாட்கள் யார் வந்தாலும் பார்த்துக்குவாங்க. வா டீக்கடை குமரேசன்கிட்ட கேக்கலாம்.”
“எனக்கு பதட்டத்துல ஒண்ணுமே புரியலக்கா. பச்ச புள்ளக்கா, அழுவான். எனக்கு வயிறும், மனசும் பெசையுது கா.”
அரற்றியபடியே குமரேசு கடையை நோக்கி ஓடினாள் கயல்.
“கொமரேசண்ணே, எம்புள்ளயப் பார்த்தீங்களா? வீட்ல புள்ளையக் காணோம்.”
வார்த்தைகளை முடிக்கும் முன்னே வெடித்து அழுதாள் கயல். டீக்கடை பெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுருண்டு உட்கார்ந்தாள்.
“யம்மா கயலு, உம்புருசன்தானே மா கொழந்தையத் தூக்கிட்டுப் போனான்.”
“என்னண்ணே சொல்றீங்க? அவன் எதுக்குக் குழந்தையைத் தூக்கிட்டுப் போனான்? நீங்க பார்த்துட்டு சும்மாவா இருந்தீங்க? அந்தாளைப் பத்திதான் தெரியுமே உங்களுக்கு.”
“இல்ல மா கயலு, நல்லா தெளிவாத்தான் இருந்தான். அவன் புள்ளையத் தூக்கிட்டுப் போறதை நான் எப்படி மா தடுக்க முடியும்? நீ பதறாதே மா. வேலு இப்ப வந்துருவான்.”
“இல்லண்ணே, உங்களுக்கு அந்த மனுசனைப் பத்தி சரியாத் தெரியல. குடிக்கறதுக்காக அவன் என்ன வேணா செய்வான். யக்கா, பாத்தீங்களா, நான் பயந்த மாதிரியே நடந்துருச்சு. குடிக்கக் காசில்லாம ஒரு நா என்னையும், எம்புள்ளையையும் தூக்கிக் குடுத்துடுவான் அந்தப் படுபாவின்னு சொன்னேனில்ல, அப்படியை நடந்துருச்சு பாருங்க.
இப்ப நான் எம்புள்ளைய எங்கேன்னு போய்த் தேடுவேன்? பெத்த புள்ளைய வித்து அந்தக் காசுல குடிக்கறவன் ஒரு மனுசனா? மனசாட்சியே இல்லாத ஒருத்தனுக்கு என்னையக் கட்டி வச்சுட்டு எங்காத்தாவும் போய்ச் சேர்ந்துருச்சு. தட்டிக் கேக்கவும், ஆதரவா நிக்கவும் எனக்கு யாரும் இல்லாததாலத்தானே அந்தாளு இம்புட்டு ஆடுறான்.
யய்யா, என் ராசா… என் கண்ணு… எங்கேய்யா இருக்கே? உங்கப்பன் உன்னை யாருக்கு, எம்புட்டு துட்டுக்கு வித்தானோ? இல்ல எம்புட்டு சரக்குக்கு வித்தானோ? நான் என்ன பண்ணுவேன் கோமதியக்கா, எங்கன போய்த் தேடுவேன்?”
கயலின் கதறல் டீக்கடையில் இருந்தவர்களின் மனதை உலுக்கியது. ஆளாளுக்கு கயலைத் தேற்றினார்கள்.
“என்ன மா கயலு, உனக்கு யாரும் இல்லன்னு நெனைச்சியா? நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்? அப்படி எல்லாம் நடக்க விட்டுருவோமா? ஏ வாங்கடா, கடைவீதிப் பக்கம் நாலு பேரு போங்க, டாஸ்மாக்ல நாலு பேரு போய்த் தேடுங்க, பார்க்ல போய்ப் பாருங்க. கயலு, வாம்மா, உம்புள்ளைய உன் கைல ஒப்படைக்காம நாங்க யாரும் வூட்டுக்குத் திரும்ப மாட்டோம்.”
தபதபவென்று ஆளாக்கொரு பக்கமாக ஓடினார்கள். கயலும், கோமதியும் உடன் ஓடினார்கள். கயலின் கண்கள் வழி நெடுகிலும் தேடிக்கொண்டே வந்தது. டாஸ்மாக்கில் வேலு இல்லை. பூங்காவிலும் இல்லை. கடைவீதியில் ஒரு பொம்மைக் கடை வாசலில் குழந்தையுடன் வேலுவைப் பார்த்ததும் தான் நிம்மதியானது அனைவருக்கும்.
கயல் ஓடிப் போய் வேலுவின் கையிலிருந்து குழந்தையைப் புடுங்கிக் கொண்டாள். ஆசை தீர அவனை அணைத்துக் கொண்டாள். தவிப்பில் இருந்த தாய்மனம் சற்று தேறியது. ஒரு புழுவைப் பார்ப்பது போல் வேலுவைப் பார்த்தாள்.
கோமதிதான் ஆரம்பித்தாள்.
“என்னப்பா வேலு, புள்ளைய எதுக்குத் தூக்கிட்டு வந்தே? கயலு துடிச்சுப் போய்ட்டா.”
“மன்னிச்சிடுங்க கோமதிக்கா, புள்ளையத் தூக்கிட்டு வரும்போது கோவத்துலதான் தூக்கிட்டு வந்தேன். நேத்து குடிக்கறதுக்குத் துட்டு கேட்டேன். கயலு குடுக்க மாட்டேன்னு சொல்லிருச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டேன்….. இன்னிக்குப் புள்ளையக் கொண்டு போய் எங்கேயாவது வித்துட்டு, மொத்தமா காசு வாங்கி வச்சுக்கிட்டா, தெனமும் குடிக்க கயல்கிட்ட கெஞ்ச வேண்டாம் பாருங்க. அதான் அப்படி முடிவு பண்ணி வச்சிருந்தேன். அந்தக் கோவத்துலதான் தூங்கிட்டிருந்த புள்ளையத் தூக்கிட்டு வந்தேன்.
ஆனா நான் தூக்கிட்டு வரும்போது அவன் முழிச்சிட்டு, என்கூட விளையாடிட்டே வந்தான். அவன் கையால ஆசையா என் முகத்துல எல்லாம் தடவினான். மீசையைப் புடிச்சு இழுத்தான். மனசை என்னவோ பண்ணிருச்சு கா. இந்த புள்ளையப் போய் வித்துட்டு, குடிக்கணும்னு நினைச்சேனேனு என் மேலேயே எனக்குக் கோபம் வந்துடுச்சு.
என்கிட்ட புள்ள ஏதேதோ பேசிட்டே வந்துச்சு. மனசு கரைஞ்சு போச்சு. வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு சுகத்தை நான் இதுவரைக்கும் அனுபவிச்சதே இல்ல. குடிக்கும்போது கிடைக்கற போதையைவிட, என் புள்ள கை என்னைத் தடவினப்போ கிடைச்ச சொகம் பெரிய போதையா இருந்துச்சு. குவாட்டர்ல கிடைக்கற போதையெல்லாம் தெளிஞ்சுடும் கா. இந்த சொகம், இந்த போதை மனசுக்குள்ள பச்சக்னு ஒட்டிக்கிச்சு. இனிமே குடிக்கறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன். அதான் நம்ம பாலு கடைல கடனுக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுத்து புள்ளகூட விளையாடிட்டு இருந்தேன்.
கயலு, மன்னிச்சுக்க கயலு. தப்புதான். புள்ளைய விக்கணும்னு நினைச்சு தூக்கிட்டு வந்தது தப்புதான். ஆனா இனிமே என் உசுரே போனாலும் குடிக்க மாட்டேன் கயலு. நம்ம புள்ளயோட இந்தக் கள்ளமில்லாத சிரிப்பு மேல சத்தியமா சொல்றேன் கயலு. மூட்டை தூக்கியாவது உன்னையும், நம்ம புள்ளையையும் நான் பாத்துக்குவேன் கயலு. உன் புருசனை நம்பு கயலு.”
கலங்கிய கண்களுடன் கயலின் கையை ஆதரவாகப் பிடித்துக் கெஞ்சினான் வேலு. நம்ப முடியாத பார்வையுடன் வேலுவைப் பார்த்தாள் கயல்.
“ஏ புள்ள கயலு, அதான் உம்புருசன் மன்னிப்பு கேக்குது இல்ல. நம்பு கயலு. புள்ள மேல சத்தியமா சொல்றான். நம்பிக்கையோட இரு. அவன் மாறலேன்னா இந்நேரத்துக்குப் புள்ளய எங்கேயாவது வித்திருப்பான் இல்ல. விடிவு காலம் பொறந்ததா நெனச்சுக்க. போன ஆடில நீ அம்மனுக்குக் கூழு ஊத்தினயில்ல. அதான் நம்ம மாசாணியம்மன் கண்ணு தொறந்துட்டா கயலு. இனிமே உனக்கு நல்ல காலம் தான் கயலு.”
கயலின் கண்ணீரைத் தன் பிஞ்சு விரல்களால் குழந்தை தடவ, நெகிழ்ந்தாள் கயல். ஓரக் கண்ணால் வேலுவைக் காதலுடன் பார்த்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings