டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
மாடியில் இருக்கும் அறைதான் மாறனின் அறை. புத்தகம் வாசிப்பதில் மூழ்கியிருந்தான்
“டேய் மாறா டேய்” என்று அவன் அம்மா கதவை தட்டினார்
எரிச்சலுடன் “என்னம்மா?” என்றான்
“கதவை திறப்பா”
“எதுக்கு?”
“உன்ன பார்க்க ஒரு பெரியவர் வந்திருக்கார்”
“பெரியவரா யாரு?”
இவன் வேற கேள்வி மேல கேள்வியா கேப்பான், “முத கதவைத் திற”
“ம்…” தான் வாசித்த புத்தகத்தில் ஒரு பென்சிலை வைத்து புத்தகத்தை மூடி வைத்து எழுந்தான். யாராக இருக்கும் சரி பார்ப்போம்.. கதவைத் திறந்தான்
“அம்மா இவ்வளவு நேரமா டா”
“சரி யாரு மா?”
“போயி யாருன்னு பார் டா”
மாடியிலிருந்து கீழே இறங்கினான் மாறன்
வீட்டின் வரவேற்பு அறையில் நாற்காலியில் அப்பெரியவர் அமர்ந்திருந்தார். இந்தியாவின் சராசரி உயரம் பெரியவருக்கு வயதின் அடையாளமாக அவரின் தலை கொஞ்சம் வழுக்கை. முகத்தில் மூக்குக் கண்ணாடி இல்லை
அவர் பார்வையில் ஒரு தெளிவு வெண்மேகம் இருக்குமிடத்தில் சில கருமேகம் இருந்தால் எப்படியோ, அப்படி தான் அவரின் தலையில் வெள்ளை மூடிகளுக்கிடையே சில கருப்பு முடிகள்
முகம் கருங்காலி மரத்தின் நிறம் போல், தேகம்மோ தேக்கு கட்டைப் போல, பார்த்தால் விவசாயி போல இருந்தார்
மாறனை பார்த்த பெரியவர் எழுந்து இரு கை கூப்பி வணங்கினார். பதிலுக்கு மாறனும் பெரியவரை வணங்கினான்
“வாங்க வெற்றி மாறன் நலமா?” என்றார் பெரியவர்
மாறனோ ஒரு நோஞ்சான் உடம்புகாரன், முகத்துக்கும் அவன் மூக்கு கண்ணாடிக்கு சம்பந்தமே இருக்காது. மாநிறம் தான் பார்பதற்கு பரிதாபமான ஒரு உருவம்
“ம்….நலம் நீங்க?”
“நீங்கள் நலம் என்றால் நானும் நலம் தான் மாறன்”
“ஐயா நீங்க யார்? என்ன விஷயமா என்ன என்ன பார்க்க வந்திருக்கீங்க?”
“நானா…?”
“நீங்க தான்”
“சொல்லுகிறேன்”
“உங்க பேரு?”
“பொறுங்க மாறன்”
“என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?”
“தெரியும்”
“எப்படி?”
தேன்கூட்டில் கல்லெறிந்தால் எரியும் திசை நோக்கி விரைந்து செல்லும் தேனீக்கள் போல, கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் மாறன்.
யார் இவர்? என்னை எதுக்கு பார்க்க வந்தார்? இவருக்கு எப்படி என் பேர் தெரியும்? ஆனால் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறாரே என யோசனையில் இருந்தான் மாறன்
“மாறன் உங்களத் தான்?”
“சொல்லுங்க”
“கொஞ்சம் குடிக்க தண்ணி வேணும்”
“அம்மா அம்மா” வீட்டினுள் நோக்கி அழைத்தான் மாறன்
“உங்க அம்மா வெளியே போயிருக்காங்க மாறன்” என்றார் பெரியவர்
“சரி நான் கொண்டு வருகிறேன்” என்று சமையலறை நோக்கி விரைந்த மாறன், வீட்டில் மாட்டப்பட்டிருந்த பழைய புகைப்படங்களையும் ஓவியங்களையும் மரத் தூண்களையும் அருகில் சென்று பார்த்துக் கொண்டிருந்தார் பெரியவர்
“இந்தாங்க தண்ணி”
“அருமையாக இருக்கிறது உங்களது வீடு. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வீட்டைச்சுற்றி காண்பிக்க மாட்டீர்களா?” என்று கேட்டுக் கொண்டே தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தார் பெரியவர்
“தெரிந்த விருந்தாளியாக இருந்தாலும் காட்டலாம். நீங்க யார்?”
“சரிங்க மாறன் உங்க அறைக்கு போகலாமா?”
“நான் கேட்ட கேள்விக்கு பதில்?”
“உங்க கேள்விக்கு பதில் உங்கள் அறையில்”
“என் அறையிலா?”
“முதல்ல நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?”
“உங்க ஒட்டு மொத்த கேள்விக்கு பதில் உங்கள் அறையில்”
எரிச்சலுடன் “சரி வாங்க என் அறைக்கு” என்று அழைத்தான் மாறன்
“இது தான் உங்கள் அறையா?” மாறன்
“ஆமாம்”
“சரி இப்பயாவது நீங்க யாருனு சொல்லுங்க”
“அதுக்குள்ள என்ன அவசரம் மாறன், சொல்றேன். பொறுங்க, நிறைய புத்தகங்கள் இருக்கிறது, இதையெல்லாம் படித்து விட்டீர்களா மாறன்?”
“பெரியவரே என்னை கேள்வி கேட்கிறீர்களே, நான் கேட்டா பதில் சொல்ல மாட்டீங்க. நான் எதுக்கு உங்களுக்கு பதில் சொல்லணும், என் வீட்டை விட்டு நீங்க வெளிய போங்க”
“சரிங்க மாறன், நான் சொல்கிறேன் நான் யாரென்று. நான் தான் உங்க மனசாட்சி”
குபீரென்று சிரித்தான் மாறன்
“நீங்க என் மனசாட்சியா? சும்மா கேலி பேசாதீர்கள், மொத இங்க இருந்து போங்க. பைத்தியம் பிடிச்சிருச்சு போல உங்களுக்கு”
பெரியவர் மௌனமாக இருந்தார். புன்முறுவலுடன், “இதை நீங்க நம்பித் தான் ஆகணும் மாறன், நான் உங்க மனசாட்சி தான்”
“மனசாட்சியாவது மண்ணாங்கட்டியாவது, இங்கிருந்து மொதல்ல போறீங்களா இல்லையா?”
“நம்புங்க, நான் உங்க மனசாட்சி தான்”
“சரி, என் மனசாட்சி என்ன மாதிரி தான இருக்கணும்”
“அவங்க அவங்க மனசாட்சி அவங்களை போல தான் இருக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா?”
“ஆமாம்”
“யார் சொன்னா?”
“அது அது வந்து…”
“சொல்லுங்க மாறன்”
“திரைப்படத்தில்…”
“திரைப்படத்தில் காட்டுவது எல்லாம் உண்மையா?”
“இல்ல”
“அப்ப நீங்க நம்பித் தான் ஆகணும்”
“அது எப்படி?”
“கடவுள் இருக்கு இல்ல என்பதை விட, நான் தான் கடவுள் என்று சொல்லும் போலி ஆசாமிகளை நம்புகிறோம். ஐந்து வருடம் மக்கள் ஞாபகமே இல்லாத மறதிவாதிகளை, அதாவது அரசியல்வாதிகளை நம்புகிறோம். நிரந்தரம் இல்லாத வாழ்க்கை இது, அதையும் தினமும் நம்பி தான் வாழ்கிறோம். அப்ப என்னை மட்டும் ஏன் நம்ப மாட்டீங்க மாறன்?”
“ஏங்க பெரியவரே, திடுதிப்புன்னு நான் தான் உங்க மனசாட்சினு சொன்னா யார் தான் நம்புவாங்க”
“சரிங்க மாறன், உங்கள பத்தி நான் சொல்லவா?
“சரி”
“நேத்து நூலகத்துக்கு போனீங்களா?”
“ஆமாம் போனேன்”
“அங்க ‘நானும் என் மனச்சாட்சியும்’ என்ற புத்தகத்தை யாருக்கும் தெரியாம நீங்க திருடி வந்து விட்டீர்கள், இது உண்மையா இல்லையா?”
“இல்ல நான் திருடன் திருடன் இல்லை” என கத்திக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான் மாறன்
“ச்சை இது கனவா”
“டேய் மாறா டேய், உன்ன பார்க்க ஒரு பெரியவர் வந்து இருக்கார்” அம்மா கதவு தட்டும் சத்தம் கேட்டது
பதட்டத்துடன் படுக்கையிலிருந்து எழுந்தான்
தன் அறையில் இருந்த மேஜையில் பார்த்தான். ‘நானும் என் மனசாட்சியும்’ என்ற புத்தகம் என்னைப் பார்த்து சிரித்தது
சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings