in

முத்தக்கா (சிறுகதை) – ✍ நாகி. ஆர். ராஜேந்திரன், நாகியப்பட்டி, சேலம்

முத்தக்கா

மாத போட்டிக்கான பதிவு (அக்டோபர் 2021)

“அடியேய் தங்காயீ, இன்னிக்குக் கொழாயில தண்ணி வர்ற நாளு. அந்தக் கொடத்த எல்லாம் நல்லா கழுவி வையீ”

“சரிம்மாவ்”, தன் வூட்டத்தள்ளி இருக்கிற தெரு முனையில் சேத்தாளி பொண்ணுங்கக் கூட வெளயாடிக்கிட்டே சொன்னா தங்காயி

மத்தியானத்துக்கும் மேல தெருக்கொழாயில தண்ணிப் புடிக்க, காலையிலேயே தன் மவள தயாராக இருக்கச் சொல்லிப்புட்டு, சிக்காக்கவுண்டன் கடலக்காட்டுக்குக் களவெட்ட, களக்கொத்தையும், தூக்குச் சட்டியையும் எடுத்துக்கிட்டு புறப்பட்டா முத்தக்கா

அவ கூட நாலஞ்சு பொண்ணுங்களும் வேலக்கிப் போனாங்க. தன்னூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறா தங்காயி. படிப்புல அவ சுட்டி

ஒரு மொற முத்தக்காகிட்ட, “உம் மக தங்காயீ நல்லா படிக்கறவ, காலேஜ் வரைக்கும் படிக்கவை. அவ கவர்ன்மெண்டு வேலைக்குப் போய் உன்ன நல்லா பாதுப்பா”னு தங்காயீ வாத்தியார் ராமன் சொன்னாரு

“ஆவட்டும் சாமி, அது எம்புட்டுப் படிக்கிதோ அம்புட்டும் படிக்க வைக்கிறன்”னு வாத்தியார்கிட்ட சொன்னா முத்தக்கா

கிட்டிணன், அதான் முத்தக்கா புருசன், சேகோ மில்லுல மாவு மூட்ட தூக்கும் வேல பாத்துக்கிட்டு இருந்தான். ஒரு நாளக்கி எரணுறு முந்நூறுனு கூலி கெடைக்கும். மொடாக் குடிகாரன்      

“இந்தா முத்தக்கா”னு பாதிக் கூலிய தான் பொண்டாட்டிக்கிட்ட கொடுப்பான்

“கட்டயில போறவன், குடிச்சே அழிஞ்சு போவான்”னு பணத்த வாங்கிக்கிட்டே திட்டுவா. ஒரு நாளும் கொறவா இருக்கேனு  தம் புருசன்கிட்ட கேட்டதில்ல

அவத் திட்டறத கேட்டு சிரிப்பானே தவிர, வேற ஒன்னும் சொல்ல மாட்டான் கிட்டிணன். அம்புட்டுப் பாசம் பொண்டாடி மேல

“சோறு போடு முத்தக்கா” என்றான்

முத்தக்கா வாய்க்கு ருசியா சோறாக்கத் தெரிஞ்சவ. புருசனுக்கு ஆக்கிப் போடறதுல வஞ்சன செய்ய மாட்டா. புருசங்காரனும் முத்தக்காவ எந்தக் கொறையும் சொன்னதில்ல

முத்தக்கா, கிட்டிணன கண்ணாலம் கட்டிக்கிட்டு வரும் போது, அவன் குடிசயில தான் இருந்தான். அவன் சின்னவயசா இருந்தப்பவே அவன் அப்பா அம்மாவும் செத்துட்டாங்க

ஒண்டிக்கட்டக்கி இந்தக் குடிசயே போதுமின்னு இருந்துட்டான். தென்னம் மட்டயும், வக்கோலும் போட்டு மேஞ்சது. அவனுக்குக் கண்ணாலம் ஆயி, நாலஞ்சு வருசத்துக்கு அப்புறமா, கவுருமெண்டு அவனுக்கு ஒரு தொகுப்பு வூடு ஒதுக்கிக் கொடுத்தது

அதுக்கப்புறந்தான், ‘மழப்பேஞ்சா வூடு முச்சூடும் ஒழுகு துன்னு’ சண்டக் கட்டறத நிறுத்துனா முத்தக்கா

முத்தக்கா வூட்டுக்கு பத்து பதினஞ்சி வூடு தள்ளி, குடியிருக்கும் அவச் சொந்தக்காரி மாரியம்மா, ஒரு நா திடீருன்னு ஓடியாந்து, “ஏண்டி முத்தக்கா, ஒனக்கு சேதி தெரியாதா?”னு கேட்ட

மாரியம்மா கண்ணும் கலங்கியிருந்துச்சி.  அப்பத்தான் வேலக்கிப் போயிட்டு வந்து, மூஞ்சி கை காலெல்லாம் கழுவி, தொடச்சிக்கிட்டு இருந்தா முத்தக்கா.

“இல்லியே அக்கா, என்னா சேதி?”னு கேட்டா முத்தக்கா

“லாரியில மாவு மூட்ட ஏத்தும் போது, மூட்ட சரிஞ்சி ஒம் புருசன அமுக்கிடுச்சாம். அவன் மூச்சுத் தெணறி செத்துட்டானாம்டி” என்று சொல்லிட்டு வாய்விட்டு அழுதா மாரியம்மா

“அட நாசமா போறவனே, எந்தலயில மண்ண அள்ளிப் போட்டுட்டியே” அந்தத் தெருவே அதிரும்படி கொரலெடுத்து அழுதா முத்தக்கா

“ஐயோ, எம் மவராசன் மொகத்தப் பாக்கணுமே”னு  தலயில அடிச்சிக்கிட்டு தெருவுல ஓடப் போனவள

கையப் புடிச்சி இழுத்த மாரியம்மா சொன்னா, “போலிசெல்லாம் வந்துசாம்டி, அவன் ஒடம்ப அறுத்துப்பாக்க ஆம்புலன்சுல ஆசுப்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போய்டாங்களாம். பொணம் வர்றதுக்கே எப்படியும் இருட்டுக் கட்டிப் போய்டுமாம்”

முத்தக்கா வாயிலியும் வவுத்துலியும் அடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டா. அங்க வந்த அக்கம் பக்கத்து பொம்பளைங்க எல்லாம் முத்தக்காவ கட்டிப் புடுச்சி அழ ஆரம்பிச்சிட்டாங்க. ஆம்ளைங்களும் அவ வாசல்ல கூட்டாமா கூடிட்டாங்க

கிராமத்தலைவரு சின்னானக் கூப்பிட்டு, “டேய் நீ போயி குழி வெட்ற வேலயப் பாரு, பந்தல் கிந்தலாம் வேணாம். மோளமும் அடிக்க  வேணாம், பொணம் வந்தா ரொம்ப நேரம் வச்சிருக்க முடியாது. பொண்டாட்டியும் புள்ளையும் அவன் மொகத்தப் பார்த்ததும் தூக்கிடணும். பாட கட்றவன்கிட்ட சொல்லுங்க கைப்பாடயா கட்டடும்”னு சொன்னாரு தலைவரு

இது நடந்து அஞ்சு வருசத்துக்கும் மேலாவுது. தங்காயிக்கு அப்ப அஞ்சு வயது தான். முத்தக்கா கெடைக்கிற கூலி வேலக்கிப் போய், தனியா குடும்பம் நடத்திக்கிட்டு வர்றா. இவ குடும்பத்திலேயும் ஒறவுனு சொல்லிக்க யாரும் கெடயாது

அன்னைக்கு அந்த வாத்தியாரு சொன்ன மாதிரி, தங்காயீய படிக்க வைக்கிணுமுன்னு வயிராக்கியமா இருக்கா முத்தக்கா

“அம்மா, தண்ணி வந்திருச்சி”

“ஓடு ஓடு… பக்கத்து வூட்டுக்காரி வர்றதுக்குள்ள கொடத்தப் பைப்புல வை” அடுப்புல சோறாக்கிட்டு இருந்தவ முத்தக்கா, நெருப்ப உள்ள தள்ளிக்கிட்டே சொன்னா       

தங்காயீ தண்ணிய புடுச்சி, வெளியில இருந்த பேரல்ல ஊத்திக்கிட்டு இருந்தா. அதுக்குள்ள அம்மாகாரியும் வந்துட்டா. ரெண்டு மூனு நாளக்கி ஒரு தடவ தான் தண்ணி வரும்

“தண்ணி போதும் தங்காயீ, நீ போய் கை காலெல்லாம் அலம்பிட்டுப் படி”

“சரி”னு தலய ஆட்டிட்டு வூட்டுக்குள்ள போயிட்டா

வேலையெல்லாம் முடிச்சுட்டு வழக்கம் போல வாசல்ல பாயப் போட்டு ஒக்காந்தா முத்தக்கா. அப்போது பக்கத்து வூட்டு செல்லி வந்தா, கொஞ்ச நேரத்துல அங்க மாரியம்மாவும் வந்து சேர்ந்தா

தெரு வெளக்கெல்லாம் எரிஞ்சிக்கிட்டு இருந்துச்சு. தெனமும் வேலக்கிப் போன எடத்துல நடந்தத, கதக்கதயாப் பேசிச் சிரிச்சிக்கிட்டு இருப்பாங்க

அப்ப செல்லி தயங்கிக்கிட்டே கேட்டா, “ஏன் முத்தக்கா, அந்தச் செவப்பாயி புருசன் கந்தசாமி ஒன்ன ஒரு நா கூப்பிட்டானாம்ல? ஏன் வூட்டுக்காரரு சொன்னாரு”

“ஆமாஞ் செல்லி, உண்மை தான். நான் வேலக்கிப் போறப்ப பின்னாடியே வரும் அந்த நாயி. பல நாளா முத்தக்கா முத்தக்கானு தொந்தரவு தாங்க முடியல. ஒரு நா செருப்ப கழட்டனம் பாரு. அதுக்கப்பறம் அந்த நாயி வர்றதில்லை” என்றாள்

பொறவியிலயே முத்தக்காவுக்கு கொஞ்சம் வாய் நீளந்தான். சண்டயில பேச ஆரம்பிச்சானா, கேக்கற காதுங்க நாறிப் போயிடும் அப்படி பேசுவா. அவகிட்ட எந்த ஆம்பளயும் நெருங்க மாட்டான்

முத்தக்கா சொன்னதைக் கேட்டு, செல்லியும், மரியம்மாவும் சிரிச்சாளுங்க. முத்தக்காவும் சிரிச்சிக்கிட்டா

“இதுக்குத் தாண்டி நானும் ரெண்டு வருசமா சொல்லிட்டு இருக்கேன், நீ தான் கேக்க மாட்டங்கிற”

“நமக்குச் சொந்தக்கார பையன் தான், ஒம் புருசன் வயசு தான் இருக்கும். பொண்டாட்டிய நோயிக்குப் பறிக் கொடுத்தவன், புள்ளக்குட்டியும் கெடயாது. நீ மட்டும் ‘ம்’னு சொல்லு, அடுத்த மாசத்துலயே கண்ணாலத்த வச்சிடலாம்” என்றாள் மாரியம்மா

“இல்லக்கா” முத்தக்கா சொல்லி முடிக்குறதுக்குள்ள மாரியம்மா குறுக்கிட்டு பேசினா

“ஒனக்கென்னடி வயசாகுது முப்பதோ முப்பதஞ்சோ தான? இன்னும் மிச்சக் காலத்த தனியா ஓட்டிப்புடுவியா? எம் புருசன் கூட சொன்னாரு, நீ கண்ணாலம் பண்ணிக்கிறது தான் ஒனக்கு நல்லது”னு

“எம் புருசன் குடிக்காரன் தான், ஆனா எம்மேல உசுரயே வச்சிருக்கும். அப்படிப்பட்ட மனுசனுக்கு துரோகம் பண்ண மாட்டங்கா. தங்காயீய நல்லா படிக்க வச்சு, நல்ல எடத்துல கண்ணாலம் கட்டி வச்சுட்டு தான் கண்ண மூடுவேன். ஆமாங்கா”. தொண்ட கரகரக்க சொன்னா முத்தக்கா

கண்ணுல தண்ணி கடகனு கொட்டிச்சு. மத்த ரெண்டு பேரும் கண் கலங்கிட்டாங்க. முத்தக்கா தன்னோட முடிவ மாத்திக்க மாட்டானு தெரிஞ்சுகிட்ட மாரியம்மா, “ஒன்னிஷ்டமடி  இனிமே நான் சொல்றதுக்கு ஒன்னுமில்ல”

“சரி நேரமாயிடுச்சி நான் கெளம்பறேன்” செல்லியும் சொல்லிக் கொண்டு எழுந்தா. முத்தக்காவும் எழுந்து பாய ஒதறி எடுத்துக்கிட்டு வூட்டுக்குள்ள போனா

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

#ads – Amazon Great Indian Festival Deals 👇


 தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

  

                                      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. முத்தக்கா கதை அருமை. கிராமத்து மண் வாசம் வீசுகிறது.மாரியம்மாள் சொன்னவுடன் முத்தக்கா மறுக்கண்ணாலத்துக்கு சம்மதிக்காமல் தங்காயி வளர்த்தி ஆளாக்கனும் சொன்னாலே. தாயின் பாசம் வெளிப்படுகிறது. கிட்டிணன் பாதியிலே போய் சேர்ந்துவிட்டான். முத்தாக்கா தனியாள் ஆகிட்டாள். இதனால் பலபேர் தொந்தரவு தருகிறார்கள். முத்தாக்கா தைரியமாக அவர்களை எதிர்த்து வாழ்கிறாள். தனியாளாக இருந்தாலும். தைரியம் தன்னம்பிக்கை இருந்தால் இந்த சமூகத்தில் வாழ்ந்துவிடலாம் . இந்த முத்தாக்கவின் கதை

  2. கதை என்னவோ சொல்லவந்து விடுபட்டுப் போய்ச் சட்ட்னு முடிஞ்சிருக்கே!

ஆண் தேவதை (சிறுகதை) – ✍ ஐஸ்வர்யா குமார்

மண் வாசம் (சிறுகதை) – ✍ சியாமளா வெங்கட்ராமன், சென்னை