in

மாண்ட்ரியல், கனடா (Montreal, Canada) – (பயணக்கட்டுரை)

Montreal (Canada)

னடா (Canada) நாட்டில் உள்ள மாண்ட்ரியல் (Montreal) எனும் நகருக்கு நாங்கள் சென்றது, 2011ம் ஆண்டின் ஜூலை மாதத்தில்

35 டிகிரி வெயில்  கொளுத்திக் கொண்டிருந்தது. ஜனவரி பிப்ரவரி மாதத்தில் மைனஸ் 20 டிகிரி வரை வெப்பநிலை இருக்கும். ஏப்ரல் அல்லது அக்டோபர் மாதத்தில், மெல்லிய குளிருடன் சுகமான வானிலை நிலவும்

அப்போது நாங்கள் வசித்து வந்த Ontario மாகாணத்தை அடுத்து இருக்கும் மாகாணம் (Province) தான் Quebec. அந்த மாகாணத்தின் ஒரு பெரிய நகரம் Montreal

பெரும்பாலான மக்கள் பேசும் மொழி பிரெஞ்சு. அங்கு செல்பவர்கள், பிரெஞ்சு மொழியில் உள்ள முக்கிய வார்த்தைகள் சிலவற்றையேனும் அறிந்து வைத்திருப்பது நல்லது, இல்லையேல் சிரமம் தான்

Montreal ரோட்டில் ஆரம்பித்து  ரோஸ் பவுடர் கடை வரை, எங்கும் பிரெஞ்சு மயம் தான். இந்த மொழி பிரச்சனையால் நாங்கள் சென்ற போது நிறைய காமெடிகள் அரங்கேறியது

அதில் ஒன்று –

நாங்கள் Montreal சென்றடைந்ததும், அங்கிருந்த Tourist Information Center‘க்கு சென்றோம்

அங்கிருந்த ஊழியர், “Bonjour” என்று சொல்ல. “Bonjour இல்ல அம்மணி எனக்கு கோயம்புத்தூர்”என, என் தொண்டை வரை வார்த்தைகள் தொக்கி நின்றது

அதன் பின் தான், ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இது போல் வார்த்தை கேட்ட நினைவு வரவும், அந்த பெண் நம்மை வரவேற்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்

அதை விட பெரிய சவால் தெருப்பெயர்கள் தான், எல்லாமும் பிரெஞ்சு மொழில தான் எழுதப்பட்டிருந்தது

இப்போது போல் ஆண்டிராய்டு / ஐபோன் MAPS அப்போது  அத்தனை பிரபலம் இல்லை. காரில் பொருத்திக் கொள்ளும் GPS கருவி தான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தோம்

GPSல் தெருப்பெயர் ஒரு விதமாய் காட்ட, அங்கு தெருவோரம் இருந்த பெயர்ப் பலகையில் வேறு விதமாய் இருந்தது. இதன் காரணமாய், ஊர் சுற்றிப் பார்த்ததை விட, U Turn எடுத்த தருணங்கள் தான் அதிகம் 😊

உதாரணத்துக்கு, எங்கள் GPSல் நாங்கள் செல்ல வேண்டிய தெருவின் பெயர் Peel Road எனக் காட்டியது, நாங்களும் எங்கே Peelஎன, கண்களை peel செய்யாத குறையாய் தேடினோம். அங்கு “Rue Peel” என இருந்தது

பார்த்து சுதாரித்து திரும்புவதற்குள், கார் ஐம்பதடி தாண்டி சென்றிருந்தது. இதென்ன நம் தெருவின் குறுக்கு சந்தா,  நினைத்தால் ரிவர்ஸ் எடுத்து வருவதற்கு, ஊரையே சுற்றி வர வேண்டி இருந்தது

அதற்குள், என்னை விடவும் அவசர குடுக்கையான GPS “Drive 200 meters and take a right” என கட்டளையிட்டது

நாம் சற்று நிதானித்து அதை செய்வதற்குள், நம் 16 வயதினிலே சப்பாணி கமல், “ஆத்தா வெயும் காசு குடு” டயலாக் சொல்வது போல், “Take a U turn Take a U turn” என நாம் U Turn எடுக்கும் வரை விடாமல் சொ(கொ)ல்லும் GPS

விசு ஒரு படத்தில் சொல்வார், “இந்த சம்சாரம் இருந்தாலும் கஷ்டம் இல்லைனாலும் கஷ்டம்”னு, அந்த கருத்து GPS‘க்கும் பொருந்தும், இருந்தாலும் கொடுமை இல்லை என்றாலும் கொடுமை தான்

சரி, Peel Road கதைக்கு போவோம். ரோடு பெயர் மாறி இருந்ததாய் கூறினேன் அல்லவா. ஏன் அப்படி மாறி இருந்தது என ஆராய்ந்து பார்த்த போது,   ‘Rue’என்றால் பிரெஞ்சு மொழியில் ‘தெரு’ என அர்த்தமாம்

அதோடு, நம் போல் தெருவின் பெயரைச் சொல்லி, பின் தெரு என சொல்ல மாட்டார்களாம். Rue அதன் பின் தான் Peel. Peel Road, Rue Peel ஆனதன் பின்னணி இதுவே. என்ன பீலோ போங்க,  நாங்க பீல் பண்ணினது தான் மிச்சம்

இதேப் போல், “Tourist Information” என நாம் ஆங்கிலத்தில் சொல்வது “Info Touriste” என்றிருந்தது பிரெஞ்சு மொழியில்

ஹாப்பி பர்த்டேவை “பர்த்டே ஹாப்பி” என தலைகீழாக சொல்வார்களோ என்ற பெரிய சந்தேகமெல்லாம் என் மனதில் எழுந்தது. கேட்டால் நாடு  கடத்தி விடுவார்களோ என மௌனமானேன்

ஒரு வழியாய், இந்த தடைகளையெல்லாம் தாண்டி ஊர் சுற்றினோம். எங்கெல்லாம் சுற்றினோம் என்பதை இனி விரிவாக பார்ப்போம்

Day 1 (முதல் நாள்)

  1. City Guided Tour 

முதல் நாள் நாங்கள் Montreal சென்று சேரும் போதே மதியம் பன்னிரண்டு மணி ஆகி இருந்தது. மதிய உணவை முடித்து விட்டு, காரை பத்திரமாய் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு, Guided City Tour புக் செய்தோம்

Guided City Tour என்பது ஒரு பஸ்ஸில் எல்லோரையும் ஏற்றுக் கொண்டு போய், நகரின் முக்கியமான இடத்தையெல்லாம் சுற்றி காண்பிப்பது தான்

மகாபலிபுரம் மாதிரியான சுற்றுலா தளங்களில், நம்மூர் ஆட்டோ டிரைவர்கள் “பேக்கேஜ் ரேட்” வாங்கிக் கொண்டு  பல இடங்களுக்கும் அழைத்து செல்வார்களே, கிட்டத்தட்ட அது போலத்தான். அது ஆட்டோ, இது  லக்ஸரி பஸ், அது தான் வித்தியாசம்

தெரியாத ஊர் என்பதாலும், மொழி பிரச்சனை இருந்ததாலும், இது போல் துணையோடு செல்வதே சிறந்தது என்ற எண்ணத்தில் இந்த முடிவுக்கு வந்தோம்

நம் ஊர் கைட் போல் “இந்த கல்லணை இந்த ஆண்டில் இந்த சோழனால் கட்டப்பட்டது” என்று விளக்கியபடி ஒரு வழிகாட்டி வருவார் என்ற எதிர்ப்பார்ப்போடு, சுற்றுலா பேருந்தில் ஏறி அமர்ந்தேன்

சற்று நேரத்தில் ஓட்டுநர் வந்தார், வந்ததும் பேருந்தை கிளப்பினார். வழிகாட்டியை (Guide) காணோமே என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஓட்டுநர் காலர் மைக்கில் பேச ஆரம்பித்தார். அதன் பின் தான் புரிந்தது, ஓட்டுனரும் அவரே வழிகாட்டியும் அவரே, டூயல் ரோல் என

அந்த ட்ரைவர் கம் கைட், “அந்தா தெரியுது பாருங்க ஒரு வெள்ள காக்கா…” என்பது போல் பரபரப்பாய் விளக்கம் சொல்லிக் கொண்டே பேருந்தை ஓட்டினார்

சில முக்கிய இடங்கள் தவிர, மற்ற இடங்களில் நிறுத்தக் கூட இல்லை, “பார் பார் பட்டணம் பார்” வகை டூர் தான் அது. சரியாக விசாரிக்காமல் சென்றது எங்கள் தவறு தான்

ஆனால், இதில் உபயோகமான விஷயம் என்னவென்றால், மறுநாள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் என்னவென அறிய முடிந்தது தான்

அதன் பின், எந்த ஊருக்கு சென்றாலும் City Tour புக் செய்வதே இல்லை, சொந்த டூர் தான்

  1. Montreal City Sights

சிட்டி டூர் முடிந்ததும், பேருந்து எங்களை Peel Roadலேயே இறக்கி விட்டு சென்றது

திட்டம் எதுவுமின்றி, சற்று அப்படியே காலாற நடந்து நகரை சுற்றுவோம் என நடக்கத் துவங்கினோம்

எங்கள் எதிர்பார்ப்பை வீணாக்காமல், Montreal நகரின் தெருக்கள், வேடிக்கை பார்க்க அழகாக இருந்தது

அந்த நகர்வலத்தில், எங்கள்  கேமராவில் சிறை பிடித்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு

குதிரை வண்டியில் சவாரி செல்லும் மக்கள்👇

காரிலும், சைக்கிளிலும், மற்றும் நடந்த படி ஐஸ்கிரீம் காபி என ருசிக்கும் மக்கள்  👇

Dorchester Square 👇

Basilica Of Notre Dame என அழைக்கப்படும் ஒரு சர்ச் 👇

  1. Underground City, Montreal

Peel Streetல் இருந்து வேடிக்கை பார்த்தபடி, கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் நடந்து, Underground City‘க்கு போய் சேர்ந்தோம்

Underground City என்பது, ஆபீஸ் டவர்ஸ், கடைகள், ஹோட்டல்கள், அபார்ட்மெண்ட்கள், யூனிவர்சிட்டி, கன்வென்ஷன் சென்டர், மெட்ரோ ஸ்டேஷன்  எல்லாமும் பூமிக்கு  கீழே சுரங்கம் அமைத்து இணைக்கப்பட்டு, ஒரு நகர் போலவே உருவாக்கி இருந்தனர்

கிட்டத்தட்ட 32 கிலோமீட்டர் அளவு இருக்கும் என அங்கிருந்த ஒரு தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. குளிர் காலத்தில் வெளியில் அதிகம் செல்ல இயலாத நிலையில், இந்த Underground Cityல் அதிக மக்கள் கூடுவார்கள்

கனடாவின் சிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான, Montreal‘ன் McGill Universityயும் இந்த Underground Cityயில் இணைக்கப்பட்டுள்ளது

எத்தனை நேரம் செலவழித்தாலும் போதாது என்பது போல் அத்தனை இடங்கள் அந்த Underground Cityயில் இணைக்கப்பட்டிருதது

அதோடு, Shop Till You Drop என ஆங்கிலத்தில் சொல்வது போல், கால் ஓயும் வரை சுற்றி வேண்டிய மட்டும் பொருட்களும் வாங்கலாம்

நாங்கள் Souvenir என சொல்லப்படும் அவ்வூரின் நினைவுச்  சின்னங்கள் சிலவற்றை மட்டும் வாங்கினோம்

Underground Cityயில், வழி நெடுக கண்ணுக்கு விருந்தாய் அலங்கரித்து வைத்திருந்தனர்.  எங்கள் கேமராவில் சிக்கிய ஒரு அலங்காரம் இதோ உங்களுக்காக 👇

ஊர் சுற்றிய களைப்பில் அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு, அன்றிரவு Comfort Inn‘ல் தங்கினோம்

பெயருக்கேற்றார் போல் Comfort Inn சவுகரியமாகவே இருந்தது. நல்ல சர்விஸ், அதோடு சுத்தமாகவும் இருந்தது

Day 2 (இரண்டாம் நாள்)

  1. Montreal முருகன் கோவில்

Montreal சென்ற இரண்டாம் நாள் என்னுடைய பிறந்த நாள் என்பதால், அந்த ஊரின் பிரசித்தி பெற்ற, Montreal திருமுருகன் கோவிலுக்கு  முதலில் சென்றோம்

மிகவும் பெரிதும் அல்லாத சிறிதும் அல்லாத அழகான அமைதியான கோவில். பொதுவாகவே எனக்கு கூட்டம் அதிகம் உள்ள கோவில்களுக்கு செல்ல விருப்பமிருக்காது

அதற்கு தகுந்தாற் போல், வெகு சிலர் மட்டுமே இருந்த அந்த கோவிலில் மன நிறைவுடன் வழிபட்டோம்

Montreal முருகன் கோவில் 👇

  1. Saint Joseph’s Oratory of Mount Royal

அடுத்து நாங்கள் சென்ற இடம், நூறு வருட பழமையான Saint Joseph Oratory என்று அழைக்கப்படும் தேவாலயம் (Church)

இந்த தேவாலயம்,  ஒரே நேரத்தில் இருபதாயிரம் பேர் வரை அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வசதி கொண்டது. கனடாவிலேயே மிகப் பெரிய சர்ச் என இது அழைக்கப்படுகிறது

அது மட்டுமின்றி, கிட்டத்தட்ட நூறடி (30 மீட்டர்) உயரத்தில், தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டில் நூற்றாண்டு கண்ட இந்த தேவாலயம், National Historic Site of Canada எனப்படும் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது

கனடாவிலிருந்து மட்டுமின்றி, உலகம் முழுதும் இருந்து வருடத்திற்கு இரண்டு மில்லியன் மக்கள் இந்த தேவாலயத்திற்கு வருவதாக சொல்கிறார்கள்

சிறப்பு வாய்ந்த அந்த தேவாலயத்தின் படம் இதோ 👇

  1. Olympic Stadium (ஒலிம்பிக் ஸ்டேடியம்)

அடுத்து நாங்கள் சென்ற இடம் ஒலிம்பிக் ஸ்டேடியம், இது 1976ம் ஆண்டு அங்கு ஒலிம்பிக் விளையாட்டு நடைபெற்ற போது கட்டப்பட்டது

ஒரே நேரத்தில் 56000 அமர்ந்து விளையாட்டு போட்டிகளை ரசிக்க ஏதுவான இந்த ஸ்டேடியம் தான், கனடாலேயே அதிக மக்கள் அமர வசதியுள்ள ஸ்டேடியம் என அறியப்படுகிறது

பிரெஞ்சு கட்டிட கலையை அடிப்படையாய் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் குளம், இந்த டவரின் கீழ் தான் அமைக்கப்பட்டிருக்கிறது

ஒலிம்பிக் போட்டிக்கு பின், பல்வேறு உள்நாட்டு விளையாட்டு போட்டிகளுக்கு இந்த மைதானம் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது

  1. Botanical Gardens (பொட்டானிக்கல் கார்டன்)

அடுத்து நாங்கள் சென்ற இடம், Montreal நகரின் முக்கிய சுற்றுலா தலமான பொட்டானிக்கல் கார்டன்

நம் ஊட்டி கார்டன் போல் ரோஜா மலர்கள் தொடங்கி, நம் கொல்லைப்புறத்து வாழை மரம் உட்பட  எல்லாமும் அங்கு காணக் கிடைத்தது

நிறைய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருந்த கற்சிலைகளும், சீன தோட்டமும் பார்க்க ரம்மியமாய் இருந்தன

இரண்டு நாள் Montreal பயணம் இப்படியாக நிறைவு பெற்றது

Last but not least, Montrealலில் என்னை கவர்ந்த ஒரு விடயம் சொல்லியே ஆக வேண்டும்.  பிரெஞ்சு மக்கள் மிகவும் அன்பானவர்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன், அதை நேரில் உணர இது ஒரு வாய்ப்பாக அமைந்தது

அறிந்தவர் அறியாதவர் வித்தியாசமின்றி, இன்முகத்துடன் கடந்து செல்வதும், மரியாதையுடன் நடத்திய விதமும் மெச்ச வேண்டிய ஒன்று. Merci Montreans (தேங்க்ஸ்)

அடுத்த பயணக் கட்டுரையில் சந்திப்போம். நன்றி

அடுத்த பயணக்கட்டுரை வெளியிடப்படும் போது, Auto Notification மூலம் Email பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை (Link) கிளிக் செய்து, Subscribe செய்யலாம். நன்றி

https://sahanamag.com/subscribe/

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. புதிதாகச் செல்பவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும் கட்டுரை. கனடா போகிறவர்கள்/ புதுசாய்ச் செல்கிறவர்கள் படித்தால் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து ஒரு தெளிவு கிடைக்கும்.

உயிரும் நீயே… உறவும் நீயே… (சிறுகதை)

அபூர்வ ராகம் (நாவல்)