in

மீண்டும் வசந்தம் ❤ (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை     

மீண்டும் வசந்தம் ❤ (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காலிங் பெல் விடாது அடிக்கும் சப்தம் கேட்டு மேலே போர்த்தியிருந்த போர்வையைத் தூக்கி எறிந்தான் மாதவன். கோபத்துடனும் எரிச்சலுடனும் போய் கதவைத் திறந்தவன் திடுக்கிட்டான்.

“நீயா?” என்றான் வியப்புடன்.

“ஆம்” என்றாள் ஜெயந்தி தயக்கத்துடன்.

“நீ ஏன் இங்கே வந்தாய்?”

“உள்ளே வந்து பேசலாமா?”

கதவை அகலமாகத் திறந்து வந்தவளுக்கு உள்ளே வழி விட்டான். வந்தவள் வேறு யாரோ இல்லை, அவன் முன்னாள் மனைவி.

“இங்கே ஏன் வந்தாய்? உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோர்ட் டைவர்ஸ் கொடுத்து விட்டதே. வெளியில் எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறார்களே என்று தான் உன்னை உள்ளே விட்டேன். இப்போது சொல், ஏன் இங்கே வந்தாய்?”

“எனக்கு ஆதரவாக இருந்த என் தந்தை இறந்து விட்டார், வேறு யார் பாதுகாப்பில் நான் தங்க முடியும்? எனக்கு ஒரு மூன்று மாதம் மட்டும் இந்த வீட்டில் தங்க இடம் கொடுங்கள், அதற்குள் நான் ஏதாவது வேலை தேடிக் கொண்டு எங்காவது லேடிஸ் ஹாஸ்டலில் சேர்ந்து விடுகிறேன்”

“என் வீடென்ன அநாதை ஆஸ்ரமமா? நான் என்ன இளிச்சவாயனென்று நினைத்தாயா? ஒரு போன் கூட செய்யாமல், என் அனுமதி கேட்காமல் இங்கு வந்து நிற்கிறாய்” என்று கத்தினான். 

மாதவன் வசிப்பது சென்னையில் உள்ள அவனது சொந்த அபார்ட்மெண்ட்டில். சென்னை தி.நகரில் உள்ளது. அவனுக்கு சென்னையில் வேலை கிடைத்தவுடன், வங்கிக் கடன்  இவற்றின் மூலம் வாங்கினான். அப்போது அவன் அம்மாவும் அப்பாவும் கூடவே இருந்தனர்

மாதவன் செய்த ஒரே தப்பு, அவன் காதலிக்கும் ஸ்டெல்லாவைப் பற்றி சொல்லாதது தான். மாதவனின் பெற்றோர் சுத்த சைவ மதம். ஸ்டெல்லாவைப் பற்றி வீட்டில் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் அப்பா இந்து சமையத்தின் பெருமைகளைப் கூறிக் கொண்டு இருக்கும் போது, அவன் அம்மா சைவத்திருமறைகளைப் பற்றி வியாக்கியானம் செய்து கொண்டிருப்பாள்.

ஸ்டெல்லா வீட்டிலோ மாதவன்  கிறித்தவனாக மதம்  மாறினால் தான் சர்ச்சில் கல்யாணம் என்றார்கள். இரு குடும்பங்களும் இந்த விவாதத்தில் தீவிரமாக இருக்கும் போது, பீட்டர் என்ற பணக்காரப் பையனைத் திருமணம் செய்து கொண்டு லண்டன் பறந்து விட்டாள் ஸ்டெல்லா.

இந்த எரிச்சலில் மாதவன் கொதித்துக் கொண்டிருக்கும் போது, அவன் அம்மாவும் அப்பாவும் அவனுடைய மாமா பெண் ஜெயந்தியைக் கொண்டு வந்து எதிரில் நிறுத்தினார்கள். 

“தாயில்லா பெண், அவள் அப்பாவும் இப்போது மிகவும் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார். திடீரென்று அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஜெயந்தி அநாதையாகி விடுவாள். நாம் தானே அவளுக்கு ஆதரவு தர வேண்டும்” என்று பலவாறாக அவனை வற்புறுத்தித் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.

திருமணத்திற்குத் தான் சம்மதித்தானே தவிர, அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள சம்மதிக்கவில்லை. பாராமுகமாக இருந்தே அவளைக் கொன்றான்.

பிறகு ஒரு நாள் அவன், “என்னை மன்னித்து விடு. ஸ்டெல்லா இருந்த மனதில் உன்னை ஏற்றுக் கொள்ள என்னால் முடியவில்லை. நாம் இருவரும் பரஸ்பரம் சுமுகமாக விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து விடலாம். நீ இதற்கு சம்மதிக்க வேண்டும். உன்னை கொண்டு போய் உன் அப்பாவிடம் விட்டு விடுகிறேன். நீ உன் விருப்பப்படி வாழலாம். என்ன சொல்கிறாய்?” என்றான்.

“நான் என்ன சொல்வது? என்னால் என்ன செய்ய முடியும்? இந்த முடிவால் நீங்கள் மட்டுமாவது சந்தோஷப்படுவீர்கள் என்றால், எனக்கும் சந்தோஷம் தான்” என்றாள் ஜெயந்தி வரண்ட குரலில்.

விவாகரத்து பெற்ற பின்னர் ஜெயந்தியை அவள் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு கோர்ட் உத்தரவின்படி அவளுக்கு வேண்டிய பண உதவியும் செய்துவிட்டு சென்னை திரும்பினான் மாதவன்

அதன் பிறகு ஜெயந்தியை சுத்தமாக மறந்தும் விட்டான். அவளுக்கு அனுப்பும் ஜீவனாம்சத் தொகையும் வங்கியின் மூலம் தன்னாலேயே போய்ச் சேர்ந்து விட ஏற்பாடு செய்திருந்தான். அதனால் மாதவனுக்கு அவளைப் பற்றி நினைக்க வாய்ப்பே இல்லாமல் போயிற்று.

ஸ்டெல்லாவைப் பற்றி கசப்பான நினைவுகளுடனும், மனம் முழுவதும்  வெறுப்பமாகத் தான் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்தான். ‘இப்போது ஏன் சனியன் ரயிலேறி வந்திருக்கிறது?’ என்று வெறுப்புடன் நினைத்துக் கொண்டான்.

“சரி இப்போது சொல், ஏன் வந்தாய்? சொல்லி விட்டு உடனே கிளம்பு” என்றான் எரிச்சலுடன்.

“நான் திருமணத்தின் போது பி.எஸ்.ஸி.நர்ஸிங் முடித்திருந்தேன். விவாகரத்து ஆகி பிரிந்திருந்த இரண்டு வருடங்களில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணி செய்தேன். அப்பா மிகவும் உடல் நலமில்லாமல் போனதால் என் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். அப்பா இறந்த பிறகு அங்கு வேறு ஆதரவு இல்லாமல்,  தனிமை பயமுறுத்தியதால் இங்கே வந்தேன். சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அடுத்த மாதம் இன்டர்வியூ, வேலை கிடைக்கும் வரை இங்கே தங்க தயவு செய்து அனுமதியுங்கள்” என்று கெஞ்சினாள்.

அப்போது அங்கே வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி செங்கமலம் வந்தாள். அவள் அந்த வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு முன்பிருந்தே வேலை செய்து வருகிறாள். அதனால் அவளுக்கு இவர்கள் வாழ்க்கைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரியும். அவளுக்கு ஜெயந்தியின் மேல் எப்போதும் அனுதாபமும், அதனால் எழுந்த அன்பும் உண்டு. யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற தெளிவும் உண்டு.

மாதவனை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் செங்கமலம்.

“என்ன முறைக்கிறாய்?” என்றான் மாதவன்.

“இந்த ஆம்பளைங்க மனசை மட்டும் ஆண்டவன் ஏன் கல்லாகப் படைத்திருக்கிறான் என்று யோசிக்கிறேன்” என்றாள் செங்கமலம்.

“எனக்கா கல் மனசு? சட்டப்படி விவாகரத்து ஆகி விட்டது, மாதாமாதம் ஜீவனாம்சத் தொகை ஒழுங்காக சேர்ந்து விடுகிறது. இன்னும் ஏன் இங்கு வந்து உயிரை வாங்க வேண்டும்”              

“தம்பி… நான் பேசுவது உங்களுக்கு அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கலாம். ஆனால் உங்கள் நல்வாழ்க்கையில் எனக்கு அக்கறை உண்டு. நீங்கள் நன்றாக இருந்தால் தான் நாங்கள் நன்றாக இருக்க முடியும். என் பிள்ளைகள் இன்று கல்லூரியில் படிக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம்.

எங்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்த நீங்கள், ஒரு பெண்… அதிலும் எந்த குற்றமும் செய்யாத உங்கள் கடந்த கால மனைவி ஆதரவுத் தேடி வரும் போது அடைக்கலம் தருவது தானே  மனிதத்தன்மை. நான் பேசுவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்” என்றாள் செங்கமலம் .

“எனக்கு ஒரு மூன்று மாதங்கள் மட்டும் இங்கு தங்க அனுமதி கொடுங்கள். உங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டேன், எந்த உரிமையும் எடுத்துக் கொள்ள மாட்டேன் ” என்று கண்களில் கண்ணீர் வழிய மன்றாடினாள் ஜெயந்தி.

என்ன இருந்தாலும் இவனும் மனிதன் தானே. அவள் துயரத்தில் மனம் இளகியது

“சரி… செங்கமலம் நீ தான் சாட்சி. மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு நாள் கூட இவள் இங்கு தங்கக் கூடாது” என்று கூறி அனுமதித்தான்.  

மாதவன் கண்ணில் அதிகம் படாமல் அவனுடைய தேவைகளை கவனித்து வந்தாள் ஜெயந்தி. தூங்கி எழுந்ததும் பேஸ்ட்டும் பிரஷ்ஷும் வைப்பது முதல், படுக்கும் முன்பு பால் டம்ளர் கொண்டு போய் அவன் அறையில் வைக்கும் வரை ஒரு வேலையும் தவறுவதில்லை.

இரண்டு வருடங்கள் ஓட்டலிலும் மெஸ்ஸிலும் சாப்பிட்டு நாக்கும் வயிறும் கெட்டுப் போயிருந்தவனுக்கு, ஜெயந்தியின் கை மணத்தினால்  ருசியான உணவும், பார்த்துப் பார்த்து செய்யும் கவனிப்பும் வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், மாதவனுக்குத் தேவையாகத் தான் இருந்தது.

ஒரு மாதம் அமைதியாக ஓடியது. ஒரு நாள் ஜெயந்தி, செங்கமலத்தின் துணையுடன் மாதவன் எதிரில் வந்து நின்றாள்.

‘என்ன’ என்பது போல் அவர்களை ஏறிட்டுப் பார்த்தான்.

கையிலிருந்த ஒரு கவரை எடுத்துக் கொடுத்த ஜெயந்தி, “இது எனக்கு நர்ஸிங் வேலைக்காக தனியார் மருத்துவமனையிலிருந்து வந்த உத்தரவு. ஒரு வாரத்தில் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்டர். அந்த மருத்துவமனையோடு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலும் உள்ளது. இன்று போய் பார்த்து விட்டு வரலாம் என்று நினைக்கிறேன். செங்கமலத்தைத்  துணைக்கு அழைத்துச் செல்லட்டுமா? ஏனெனில் எனக்கு இந்த ஊரில் சரியாக வழி தெரியாது” என்றாள் மூச்சு விடாமல்.

மௌனமாய் சரியென்று தலையாட்டினான் மாதவன்.

இரண்டு நாட்கள் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள் ஜெயந்தி. அடுத்த நாள் காலையில் மாதவனுக்கு வேண்டிய காலை உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்து விட்டு, அவன் எதிரில் வந்து நின்றாள்.

“உங்களுக்கு காலை பலகாரங்கள் டேபிள் மேல் வைத்துள்ளேன். மத்தியானத்திற்கு வேண்டிய சாப்பாடு ஹாட்பேக்கில் இருக்கிறது. சாப்பிட்ட பிறகு ப்ரிஜ்ஜில் வைத்து விட்டு இரவு சாப்பிடும் போது ஓவனில் சூடு  செய்து கொள்ளலாம்” என்றாள்.

‘ஏன் இதெல்லாம் என்னிடம் சொல்கிறாய்?’ என்பது போல் அவளை அவன் ஏறிட்டுப் பார்க்க, “நான் இன்று வேலையில் சேர வேண்டும், ஹாஸ்டலும் கொடுத்து விட்டார்கள். உங்களுக்கு தேவையான இட்லிமாவு ஒரு பத்து நாட்களுக்கு வருவது போல் ஆட்டி ப்ரிஜ்ஜில் வைத்திருக்கிறேன். தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, பருப்புப் பொடி எல்லாம் கூட இருக்கிறது. நான் கிளம்பட்டுமா?” என்றாள் மெல்லிய குரலில்.

“இன்றே கிளம்புகிறாயா?” என்றான் மெல்லிய குரலில்

“ஆம், நான் போய் ஹாஸ்டலில் என் அறையை அரேஞ்ச் செய்ய வேண்டும். இத்தனை நாட்கள் நீங்கள் என்னை ஆதரித்ததற்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவு இல்லையென்றால் என்னால் இந்த வேலையில் சேர்ந்திருக்கும் முடியாது. இனிமேல் என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும்  இருக்காது. மிக்க நன்றி” என்றாள் கண்களில் நன்றி உணர்ச்சி மேலிட.

செங்கமலம் ஒரு ஆட்டோவை அழைத்து வந்தாள். தான் எடுத்துக் கொண்டு வந்த சிறிய சூட்கேஸுடன் கிளம்பி விட்டாள் ஜெயந்தி.

போகும் முன், “கூடிய வரை ஹோட்டல் சாப்பாட்டைத் தவிர்த்து விடுங்கள்” என்றாள். மாதவன் ஒன்றும் சொல்லவில்லை.

ஜெயந்தி கிளம்பியவுடன், ‘அப்பாடி நிம்மதி’ என்று தான் நினைத்தான் முதலில், ஆனால் அடுத்த நாள் காலையில் மணக்கும் காபி இல்லை. அவள் இல்லாத வெறுமையை ஒவ்வொரு நொடியும் உணர்ந்தான்.

அவள் வாய் திறந்து தன்னுடன் பேசுவதில்லை. அவள் அவன் எதிரில் வருவதையே பெரும்பாலும் தவிர்த்தாள். அப்படியிருந்தும் ஜெயந்தி சென்றது எப்படி தன்னை இப்படி பாதிக்கிறது என்று ஆச்சரியம் அடைந்தான்.

இப்போதெல்லாம் அலுவலகம் முடிந்த பிறகு வீட்டிற்கு வருவதில்லை. வீட்டில் நுழையும் போது யாரும் இல்லாதது அவனை மிகவும் பாதித்தது.  ஏன் சில நேரங்களில் தனிமை பயம் கூட கொடுத்தது.

அப்போது கூட, மனதிற்குள் ஜெயந்தியைத் தான் திட்டினான் மாதவன். இவ்வளவு நாள் கூடவே இருந்து கடைசியில் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாள் என்று எரிச்சல்பட்டான்.

ஜெயந்தியும் மருத்துவமனையில் ஏறக்குறைய அதே மனநிலையில் தான் இருந்தாள்.  ‘எல்லாவற்றிற்கும் கூடவே இருந்தால் தான் மாதவன் தன் வேலைகளைத் தானே செய்வான். தானாக எடுத்து சாப்பிடுவானா? இல்லை, நேரம் கழித்து எழுந்து சாப்பிடாமலே ஓடி விடுவானா?’ என்று அடிக்கடி நினைத்துக் கொண்டாள்.

விவாகரத்து ஆகி இரண்டு ஆண்டுகள் பிரிந்து இருந்தோம். அப்போதெல்லாம் மனம் ஒன்றும் அதிகம் அவரை நினைக்கவில்லை. இப்போது சில வாரங்கள் மாதவன் வீட்டில் தங்கிய பின், மனம் ஏன் எப்போதும் அவனைப் பற்றியே நினைக்கிறது என்று தன்னைத் தானே கடிந்து கொண்டாள் ஜெயந்தி

மாதவனின் நினைவை மறக்கத், தன்னை முழுமையாக பணியில் ஈடுபடுத்திக் கொண்டாள். தோழிகள் யாராவது விடுப்பு எடுத்தாலும் அந்த வேலையையும் இவளே இழுத்துப் போட்டு கொண்டு செய்தாள். மூன்று மாதங்கள்  இப்படியே ஓடியது

ஒரு நாள் செங்கமலத்திடமிருந்து திடீரென அழைப்பு வந்தது. வேலை நேரத்தில் ஜெயந்தி போன் பேசுவதில்லை என்பதால், அழைப்பை துண்டித்தாள் ஜெயந்தி.

கைபேசி ஒலி எழுப்பவும், அதை உயிர்ப்பித்து, “செங்கமலம், என்ன விஷயம்? வேலை நேரத்தில் ஏன் போன் செய்கிறாய்?” என்றாள் சற்று கடுமையாக.

“அம்மா, நம்ப ஐயாவிற்கு பயங்கரமான வயிற்று வலி. ரொம்பவும் துடிக்கிறார், உடனே வா ” என்றாள் பட்டென்று போனை வைத்து விட்டாள்.

தலைமைச் செவிலியரிடம் அரை நாள் விடுமுறை சொல்லி விட்டு ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு மாதவன் வீட்டிற்கு ஓடினாள் ஜெயந்தி.

வயிற்று வலி தாங்காமல் புழு போல் துடித்தான் மாதவன். வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறினான். ஜெயந்தி ஆம்புலன்ஸிற்கு போன் செய்தாள். இரத்த அழுத்தம், டெம்ப்ரேச்சர், பல்ஸ் எல்லாம் டெஸ்ட் செய்தாள்.

இரண்டு முறை வாந்தி எடுத்தான் என்று தெரிவித்தாள்  செங்கமலம். ஜுரமும் இருந்தது. ஜெயந்திக்குப் புரிந்து விட்டது, இது அப்பென்டிஸைட்டிஸ் உடனே ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று.

ஆம்புலன்ஸும் வந்து விட்டது. எமர்ஜென்சிக்கு போனில் விவரம் தெரிவித்து விட்டு, உடனடியாக ஆபரேஷனுக்கும் ஏற்பாடு செய்து விட்டாள். மாதவன் பயத்தில் அவள் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்

“என் கூடவே இருப்பியா ஜெயந்தி?” என்றான் பயத்துடன்

அவன் கைகளை ஆதரவுடன் தட்டிக் கொடுத்து, “நான் உங்களுடனே தான் இருப்பேன், பயப்படாதீர்கள்” என்றாள் கனிவுடன்.

ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு மாதவன் கூடவே அவன் வீட்டிற்கு சென்றாள் ஜெயந்தி. சில நாட்களில் உணவின் மூலமும் மருந்துகள் மூலமாகவும் குணமானான் மாதவன்.

“நான் உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டும்” என்றாள் ஜெயந்தி.

இப்போதெல்லாம் மாதவன் அவளுடன் பேசும் தோரணையே மாறி விட்டது.

“சொல்லு ஜெயந்தி” என்றான் ஆர்வத்துடன்

“இப்போது உங்களுக்கு உடம்பு நன்றாக இருக்கிறது. அதனால் நான் நாளை டியூட்டியில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்” என்றாள்.

உடனே மாதவன் முகம் வாடி விட்டது.

“உங்களுடனே இருப்பேன் பயப்படாதீர்கள் என்றாயே, அது பொய்யா?” என்றான்.

“ஓ… அது ஆபரேஷன் தியேட்டரில் சொன்னது”

அதுவரை அமைதியாக இருந்த செங்கமலம், “நீ இப்படி பாதியிலேயே விட்டு விட்டுப் போவதற்கு இவரைக் காப்பாற்றமலே  இருந்திருக்கலாம்” என்றாள்.

“என்ன உளறுகிறாய்?” என ஜெயந்தி கேட்க

“அவள் சொல்வதில் தப்பென்ன ஜெயந்தி, மறுபடியும் ஹோட்டலில் மெஸ்ஸில் சாப்பிட்டு போய் சேர வேண்டும் என்று என் தலையெழுத்து இருந்தால் யார் மாற்ற முடியும்?” என்றான் மாதவன்.

“என்ன இப்படிப் பேசுகிறீர்களே? நான் என்ன செய்யட்டும்?”

“என்னை மன்னித்து விடு ஜெயந்தி. எனக்கு மன்னிப்பு கேட்கும் அருகதை கிடையாது. உன்னை மிகவும் துன்புறுத்தி, அவமானப்படுத்தி விட்டேன். உனக்கு என்னை நிராகரிக்க எல்லா உரிமையும் உண்டு. ஆனால் இனிமேல் என்னால் நீயில்லாமல் வாழ முடியாது. தயவுசெய்து என்னோடு வாழ்ந்து, நம்மை வாழ வை ஜெயந்தி” என்றான்.

“சமையல்காரி தான் வேணும்னா, நான் அதுக்கு ஆள் ஏற்பாடு பண்றேன்” என ஜெயந்தி குத்தலாய் கூற 

அவள் வருத்தம் தான் வார்த்தையாய் வெளிப்படுகிறது என்பதை உணர்ந்த மாதவன், “உன் வருத்தம் எனக்கு புரியுது ஜெயந்தி. உணவு பத்தி சொல்றது உன்னை பிடித்து வைக்க ஒரு சாக்கு தான், எனக்கு உன் அருகாமை வேண்டும். உன் அன்பும் ஆதரவும் வேண்டும். மொத்தத்தில் நீ வேண்டும்

உன் மனம் நோக்கும் படி நடந்து கொண்டதற்கு மன்னித்து விடு. உனக்கு செய்த கொடுமைக்கெல்லாம் ஈடு காட்டும் விதமாய், இனி வாழ்நாள் முழுக்க உன் மீது அன்பு காட்டுவேன்” என மனம் விட்டு பேசினான்

தவறு உணர்ந்து மனம் திருந்தி அவன் பேசுகிறான் என்பதை உணர்ந்த போதும், வேண்டுமென்றே, “மறுபடியும் என்னை விரட்டினால் நான் என்ன செய்ய? ” என்றாள் குறும்பாக.

“சத்தியமாக அப்படி செய்ய மாட்டேன். ஏற்கனவே செய்ததற்கு இது தான் தண்டனை” என்று காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டான்.

“ஐயோ செங்கமலம் பார்க்கிறாள்” என்று அவன் கைகளைப் பிடித்துத் தடுத்த ஜெயந்தி, கலகலவென்று சிரித்தாள்.

தன்னை மறந்து, அவள் சிரிப்பதையே ரசித்துப் பார்த்து நின்றான் மாதவன்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

எதிர்பாராதது (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பை

ஆழ உழுதல் (சிறுவர் கதை) – ✍ இந்திரா ரமேஷ், சிங்கப்பூர்