in

எதிர்பாராதது (சிறுகதை) – ✍ இரஜகை நிலவன், மும்பை

எதிர்பாராதது (சிறுகதை)

ஜனவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தேவகிக்கு மூக்கின் மேல் வந்த கோபம் முகமெல்லாம் சிவப்பாக்கியது.

‘ச்சே…எவ்வளவு நட்பாக பழகிய தோழி? இப்படி உள்ளுக்குள்ளேயே இருந்து குழி தோண்டி விட்டாளே சித்ரா. எனக்கு கிடைக்க வேண்டிய வேலை உயர்வ எப்படி கௌசல்யாவிற்கு கொடுத்தாள். நேரடி விவாதத்தில் எனக்குத் தானே அதிக மதிப்பெண்கள் என்று சொன்னாள்’

முகத்தின் கோபத்தை மறைக்க தண்ணீரை முகத்தில் அறைந்து கழுவி விட்டு, கையிலிருந்த கைக்குட்டையால் அழுந்த துடைத்துக் கொண்டு கழிவறையிலிருந்து தன் இருக்கைக்கு வந்தாள்.

“உதவி மேலாளர் – கௌசல்யா” என அறிவிப்பு பலகையில் போட்டிருந்தனர். ’ஹு..க்கும்’ என தலையை உதறிக் கொண்டு அரைநாள் விடுமுறைக்கு எழுதிக் கொடுத்து விட்டு பையைத் தூக்கிக் கொண்டாள் தேவகி.

தன் அறையிலிருந்து வெளிவந்த சித்ரா, “என்ன தேவகி… ஏன் அரைநாள் விடுமுறை? ஏதாவது தலைவலியா? அப்படி என்ன இருந்தாலும் விடுமுறை எடுக்க மாட்டாயே. வீட்டிலே ஏதாவது நிகழ்வா? அதுவும் என்னிடம் சொல்லாமல் எடுக்க மட்டாயே, என்னாச்சு….?” என்று கேட்டாள்.

”ம்… கொஞ்சம் அவசர வேலை இருக்கு மேடம்”

“என்னிடம் சொல்லக் கூடாத அவசர வேலை என்னம்மா?” சித்ரா கனிவோடு கேட்டாள்.

”எல்லாம் கண்டிப்பாக சொல்ல வேண்டுமோ?” என்று கத்தினாள் தேவகி.

“தேவகி நீ இப்படி கத்தி நான் பார்த்ததேயில்லை, என்னாச்சு?” கையைப் பிடித்தாள் சித்ரா.

”இனியும் என்னாகணும்… வர்றேன்” கைகளை உருவிக் கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள்.

ஆட்டோவை நிறுத்தி ஏறியவள், “எங்க இருக்கீங்க? என்னது… வீட்டுக்கு கொஞ்சம் அவரசமா வர்றீங்களா?” எனக் கணவனை கைபேசியில் அழைத்து விட்டு, பழக்கதோஷமாய் எதிர்முனை பதிலை கூட எதிர்பார்க்காமல் இணைப்பை துண்டித்தாள்.

அவள் வீட்டிற்குள் நுழையும் முன் மகன் ஆர்யா பள்ளிச் சீறுடையில் அப்பாவின் இருச்சக்கர வாகனத்திலிருந்து இறங்கி, “அம்மா நான் தான் முதல் மதிப்பெண். என் வகுப்பில் எனக்கு கோப்பை கொடுத்தார்கள்” என்று ஓடி வந்தான்.

“உன் கோப்பையை கொண்டு உடைப்பில் போடு” என்று அவனைத் தள்ளி விட்டுக் கதவை திறந்தாள்.

”என்ன தேவகி? ஆர்யா எவ்வளவு ஆர்வமா ஓடி வந்தான்” என்றான் தேவகியின் கணவன் சீனு

“ஆமா… இங்கே என் வேலை உயர்வே போச்சு, இனி என்ன வேண்டும்?”

”என்ன சொல்றே?” என்றான் சீனு சற்று அதிர்ச்சியுடன்

“இந்த வருட மதிப்பாய்வில், எங்க அலுவலகத்திலேயே நான் தான் அதிக மதிப்பெண் வாங்கியிருந்தேன். அப்படியிருந்தும் எனக்கு உதவி மேலாளர் பதவி தராமல், அந்தச் சித்ரா தான் நிர்வாக இயக்குனர் என்கிற அகம்பாவத்தில் அவளுக்கு  ஜால்ரா அடிக்கிற கௌசல்யாவிற்குக் கொடுத்திட்டா. இந்த வருடமும் வேலை உயர்வு போச்சு. மாடு மாதிரி உழைச்சதுக்கு எனக்கு வேணும்” அவன் மேல் சாய்ந்து அழவே ஆரம்பித்து விட்டாள்.

”அப்பா… அம்மா ஏன் அழறாங்க?” என்றான் புத்தக பையை மேசையில் வைத்த ஆர்யா

”அது ஒன்றுமில்லை… உனக்கு பசிக்குதா?” என்று மகன் கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டான் சீனு.

“அம்மா கொடுத்து விட்ட டிபனை சாப்பிட்டேன், நான் ராஜனோடு கொஞ்சம்  விளையாடுறேன்” என் சீருடையைக் கூட கழற்றாமல் வெளியே ஓடினான் ஆர்யா.

“சித்ரா உனக்கு தோழி மாதிரினு சொன்னாயே தேவகி?” தேவகியின் தலையை நீவி விட்டுக் கொண்டே கேட்டான் சீனு.

”வெளிவேஷம்… சும்மா தோழி மாதிரி இருந்துட்டு சொந்தக்காரி கௌசல்யாவிற்கு உதவிமேலாளர் பதவியை கொடுத்து விட்டாள். ஏங்க நான் இனியும் அங்க வேலைக்கு போகணுமா? என்னால் இனி அங்க வேலை செய்யமுடியுமானு தெரியல”

“நீ என்ன முடிவெடுத்தாலும் சரி, உன் இஷ்டம் தான்   தேவகி. சரி எனக்கு பசிக்கறது, உனக்கு எப்படி எதிர்லே உள்ள கடைல பிசா வாங்கவா? உனக்கு ரொம்ப பிடிக்குமே” என்றான் சீனு

”சரி அப்படியே சாயங்காலத்துக்கும் நீங்களே ஏதாவது செய்யுங்க, நான் தூங்கறேன்” என திரும்பவும் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் எல்லோரும் மும்முரமாக  பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, வேண்டுமென்றே பிந்திவந்து தன் இருக்கையில் அமர்ந்தாள் தேவகி.

இயக்குனர்  சித்ராவின் உதவியாளர்  வந்து, “உங்களை சித்ரா மேடம்  கூப்பிடுகிறார்கள்” என்றான்.

”வர்றேன் போய்ச் சொல்லு” என்று கூறிவிட்டு தேனீர் அருந்தினாள். வேண்டுமென்றே சித்ராவின் அறைக்குப் போகாமல் நேரத்தை வீணடித்து கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.

திரும்பவும் பணியாள் வர, அறையைத் திறந்து கொண்டு வெளியே வந்த சித்ரா “தேவகி கொஞ்சம் வருகிறாயா?” என்று அழைத்தாள்.

“மேடம் நான் உங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவள், கொஞ்சம் மரியாதை கொடுத்து கூப்பிடுங்கள்” என்று தேவகி வேகமாகக் கூற, அனைவரின் கண்களும் அவளின் பக்கம் திரும்பியது 

“சரி மேடம், கொஞ்சம் என் அறைக்கு வருகிறீர்களா?” என அழைத்து விட்டு உள்ளே சென்றாள் சித்ரா.

பின் தொடர்ந்து வந்த தேவகியிடம், “என்னாச்சு தேவகி, நாம் பத்து வருடமாக பழகுகிறோம். திடீரென்று ஏன் இப்படி? எனக்குப் புரியவில்லை? என்ன பிரச்சனை?” எனக் கேட்டாள் சித்ரா.

“இனியும் என்ன ஆகணும் சித்ரா? உதவி மேலாளர் பதவி எனக்குத் தான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் உன் உறவுக்காரி கௌசல்யாவிற்கு கொடுத்து விட்டாய்! சரி பரவாயில்லை, நான் வெறும் தோழி தானே?” என்று சொல்லிக் கொண்டே கையிலிருந்த ராஜினாமா  கடிதத்தை கொடுக்க எத்தனித்த போது

”ஓ… இதுக்குத் தானா இந்த ஆர்ப்பாட்டம்? தேவகி உன்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்தபடி, நம் பொதுமேலாளர் வெளிநாடு செல்கிறார். அவர் இடத்தில் உன்னை பொது மேலாளர் ஆக்கியிருக்கிறேன்” என்று அருகிலிருந்த பெயர் பலகையை தூக்கிக் காட்டினாள்

அதில் ”மிஸஸ். தேவகி சீனிவாசன் – பொது மேலாளர்” என எழுதியிருந்தது.

”மிக்க நன்றி சித்ரா, நான் அவசரப்பட்டு பேசிட்டேன் சாரி” என்றாள் தேவகி

“சரி விடு… ஆமா கைல என்ன கவர்?” என்று சித்ரா கேட்க

“அது… அது வந்து…” என தேவகி தயங்க, அதை வாங்கி பார்த்த சித்ரா, சிறு புன்னகையுடன் ராஜினாமா கடிதத்தை கிழித்து குப்பை கூடையில் போட்டாள்

“சாரி சித்ரா” என தேவகி வருத்தத்துடன் கூற 

“பரவால்ல விடு, ஆல் தி பெஸ்ட்” என கை குலுக்கினாள் சித்ரா 

தன் அவசர புத்தியால் வார்த்தையை விட்டு தோழியை புண்படுத்திய குற்றஉணர்வால்,  எதிர்பார்த்ததை விட பெரிய பதவி உயர்வில் முழுதாய் மகிழக் கூட இயலாமல் நின்றாள் தேவகி 

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                            

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிள்ளைக் கனியமுது (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி 

    மீண்டும் வசந்தம் ❤ (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை