அன்பில் துளிர்த்த சிறுமலரே அரிதாய் கிடைத்த தவமலரே இதயக் கூட்டில் குடி கொண்ட என் சிட்டுக்குருவியும் நீதானே நீ விழிதிறந்த நாளில் விடிவெள்ளி தோன்றலாய் மலர்ந்தது என் வாழ்வில் மகரந்தமாய் ஓர் அன்புறவு இரவிலும் தெரிவதில்லை பால்நிலா எனக்கு நின்முக ஒளிர்வே என்கண் நிறைப்பதால் நட்சத்திர வெண்பற்கள் நளினமாய் மின்னுது உந்தன் புன்னகை உய்ப்பித்த ஒளியினில் குயிலின் மனதையும் கவர்ந்து அழைக்குது தாளம் மீட்டிடும் நின் பொற்கரங்கள் பூந்தென்றலும் ஏங்குதே பூவே நின்மேனி தழுவ பூக்களும் மலருதே பட்டுகைகள் தீண்டவே வானவில்லே நின் வரவால் வாடிய மனமெல்லாம் வசந்தம் பூத்த வானமாய் வண்ணமயம் ஆனதின்று அம்மாவென்ற உன் விளிப்பில் அகிலம் வென்றேன் ஓர்நாளில் அடைந்திட்டேன் நானும் அளவிலா பிறவிபேரின்பம் எனை நான் மறக்கும் ஏகாந்த வேளையில் இதயத் துடிப்பாய் இருப்பை உணர்த்துகிறாய் இன்பமழையில் நான்நனைய ஆசைமுத்தம் தருகிறாய் அணைக்கும் தருணத்தில் அன்னையை உணர்த்துகிறாய்
#ad
#ad