sahanamag.com
தொடர்கதைகள்

ஆழியின் காதலி ❤ (பகுதி 5) -✍ விபா விஷா

ஞ்சுப் பொதிகளாம் மேகக் கூட்டங்களுக்கு நடுவே மிதந்து மிதந்து செல்கையில், சிற்சில விண்மீன்கள் உடலில் அங்கும் இங்கும் உரசிட, வானுலகை நோக்கி இனிய பயணம் அது 

சட்டென்று சூரியனின் அருகினில் வந்து விட்டார்கள் போல, தனது கதிர்கள் மூலம் சொர்க்கத்திற்கு பொன்னொளி வீசிக் கொண்டிருந்தான் அந்த ஆதித்யன்

பயத்தில் இருவரும் கண்களை இறுக்க மூடி இருந்தாலும், பகலவனின் பட்டொளி, இமைகளைத் தாண்டி விழிகளைத் தொட்டது.

மிதந்து கொண்டு வந்தவர்கள் மெதுவாகத் தரையில் கிடத்தப்பட்டனர் போலும். ஆஹா என ஒரு பஞ்சு போன்ற மெத்தை… இல்லை இல்லை… இது பஞ்சு போல மிருதுவாக இல்லையே

உடலெங்கும் ஏதோ நறநறக்கிறது. என்னவென்று கண் திறந்து பார்க்கலாம் என்றால், அதுவும் முடியவில்லை.

ஏதோ தவறென்று இருவருக்கும் தோன்றிட, ஒருசேர மேலே எழ எத்தனிக்கையில், கைகால்களை சற்றும் அசைக்க முடியாமல் தொய்ந்தான் விக்ரம், பின்னோடு அர்னவும்  

ஐயோ இதென்ன? சொர்க்கம் வந்தும் கூட யாரோ வலுக்கட்டாயமாக முகத்தைப் பிடித்து வாயைத் திறந்து எதையோ ஊற்றுகிறார்கள்? இது தான் அமிர்தமோ? 

‘அடச்சே… உயிர் காக்கும் அமிர்தம் இவ்வளவு கசப்பாகவா இருக்கும்?’ என எண்ணி முடிக்கையில், விழிகள் பட்டென்று திறந்திட, சட்டென எழுந்த இருவரும், வயிறு புரட்ட வாயிலெடுத்தனர்

வயிற்றில் இருக்கும் குடல் முதற்கொண்டு வெளியே வந்து விடுமோ என ஐயுறும் அளவிற்குச் சென்றவர்கள், இறுதியாக மிகுந்த சோர்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்பொழுது தான் அவர்களுக்குத் தெரிந்தது, தாங்கள இருப்பது சொர்க்கம் அல்ல என்று (ரெண்டும் செத்து போய்ட்டதா நினைச்சுட்டு இருக்குங்க)

அது மட்டும் அல்லாமல் அங்கு தங்கள் இருவரும் மட்டும் தனித்து இல்லை என்றும் உணர்ந்தனர் 

அவர்களைச் சுற்றி ஒரு நூறு பேராவது நின்று கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் விக்ரமிற்கு ஒரு இமாலய சந்தேகம் உதித்தது

“பாஸ் இந்த இடத்தைப் பாத்தா சொர்க்கம் மாதிரி தெரியலையே?” என விக்ரம் கேட்க

“அடேய் இது சொர்கமே இல்லடா” என முறைத்தான் அர்னவ்

“எல்லாரும் செத்த பின்னாடி சொர்கத்துக்குத் தான வருவாங்க பாஸ்? ஐயோ… அப்போ நாம சொர்கத்துக்கு வராம நரகத்துக்கு வந்துட்டமா?” என்று அதிர்ச்சியடைந்தான் விக்ரம்.

“அட லூசுப்பயலே… நாம இன்னும் சாகவே இல்லடா. உன்ன எல்லாம் எவன்டா என் ஆபிஸ்ல வேலைக்குச் சேர்த்தது, ஒருவேளை மூக்கு வழியா உள்ள போன தண்ணி மூளையையும் கலக்கிடுச்சா?” என அர்னவ் விக்ரமை கடித்துக் குதற

இதற்கு மேல் தனக்கிருக்கும் சந்தேகங்களை அர்னவிடம் கேட்டால் அவன் அகோரியாகி ருத்ரதாண்டவம் ஆடி விடுவான் என்பதால், தனக்கு எதிரில் நிற்பவர்களிடம் தனது கேள்விக் கணைகளைத் தொடுப்பது தான் பாதுகாப்பானது என நினைத்து அவர்களிடம் பேச வாயைத் திறந்தான் விக்ரம்

அதற்குள் முந்திக் கொண்ட அர்னவ், “நீங்கெல்லாம் யாரு? இது என்ன இடம்? நாங்க எப்படி இங்க வந்தோம்?” என மயக்கத்தில் இருந்து எழும் எல்லோரும் கேட்கும் கேள்விகளையே அட்சரம் பிசகாமல் கேட்டான்

‘ஆமா என்ன கேள்வி கேக்கக் கூடாதுனு சொல்லிட்டு இவர் மட்டும் அடுக்கடுக்கா கேள்வி கேட்பாரு’ மைண்ட்வாய்ஸ் வேற யாரோடதும் இல்ல, நம்ம விக்ரமோடது தான்

அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் ஒரு மார்க்கமாகப் பார்க்க, அர்னவிற்கே சற்று வயிறு கலங்கித் தான் போனது 

அவர்களில் தலைவனைப் போலிருந்த ஒருவர் மற்றவர்களைப் பார்க்க, அவரைத் தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்

“என் மனதில் உதித்த வினாக்களைத் தங்கள் நாவு உதிர்த்தது ஏனோ?” என அவர் ஒரு ஏளனத் தொனியுடன் வினவினார்

அதைக் கேட்ட விக்ரம், “பாஸ் இவங்க என்ன மொழி பேசறாங்கனே புரியலையே?” எனப் புலம்ப எத்தனிக்க

“அடேய் அடேய் இது தமிழ் தான்டா… ஆனா நாம மறந்து போய்ட்ட சரியான தமிழ்” என விளக்கினான் அர்னவ்

பின்பு அந்தத் தலைவனிடம் திரும்பி, “ஐயா, நாங்க கடல் ஆராய்ச்சி செய்றவங்க. எங்களுக்கு முன்னாடி கடல் ஆராய்ச்சி செய்ய வந்தவங்க கப்பலோட காணாம போய்ட்டாங்க. அவங்க கடைசியா அம்பாரத் தீவு பக்கமா தான் இருந்தாங்கனு எங்களுக்குத் தகவல் கிடைச்சது. அதனால தான் நாங்க அம்பாரத் தீவைத் தேடி வந்தோம். அந்தத் தீவ எப்படி அடையறதுனு எங்களுக்குச் சொல்லுங்க” எனக் கோரினான் அர்னவ் 

“ஹ்ம்ம்… மரண அரசியின் பிடியினில் சிக்கி மீண்டெழுந்ததால் அந்தக் காலன் மீதான பயம் போய்விட்டதோ? நீங்கள் மீண்டும் உங்கள் தேசத்தை அடையும் வழியை வேண்டுமானால் சொல்கிறேன்” என்றவர், அவர்கள் தங்க ஒரு இடத்தினைக் காட்டுமாறு அங்கிருந்த ஒரு பெண்ணிடம் பணித்து விட்டு அகன்றார்

அவள் அவர்களை மெல்ல ஒரு குகைக்கு வழி நடத்திச் சென்றாள்

இவர்கள் இருவரும் பார்வையிலேயே வினா எழுப்ப, “உங்கள் தேசத்திற்கு நீங்கள் திரும்பும் வரையில், உங்களது இருப்பு இங்கே தான்” எனக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் அவள்

அவள் அப்பால் சென்றதும்,  நம் கேள்வியின் நாயகன் விக்ரம் மீண்டும் தன் கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தான் 

“பாஸ் யாரு இவங்கெல்லாம்? பாக்கறதுக்கு ஒரு மாதிரியா இருக்காங்க, பேசுனா இன்னொரு மாதிரியா இருகாங்க” எனக் கேட்டான்.

“இவங்கள பாத்தா ட்ரைபல்ஸ் மாதிரி இருக்குடா, அதான் அவங்க பேச்சு, மொழி எல்லாம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு” என இம்முறை சற்று பொறுமையுடன் பதிலளித்தான் அர்னவ்.

“அட இவங்க என்ன தான் காட்டுவாசிகளோ? இன்னும் குகைகள்லயே வசிச்சுட்டு இருக்காங்க. ஒரு குடிசை கூடக் கட்டிக்கத் தெரில” என விக்ரம் நொடித்துக் கொள்ள

இவனை எல்லாம் திருத்தவே முடியாது எனத் தலையில் அடித்துக் கொண்டு குகையினுள் சென்றான் அர்னவ்.

அவனைப் பின் தொடர்ந்த விக்ரம், “ஆனா இதுல எனக்கு ஒரே ஒரு சந்தோசம் பாஸ். கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கற மாதிரி, நாம தமிழ் பேசத் தெரிஞ்ச ட்ரைபல்ஸ்’கிட்ட மாட்டிக்கிட்டோம்” என குதூகலித்தான்

அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல், குகையின் சுவரில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்தான் அர்னவ்

“என்ன பாஸ் வந்ததுல இருந்து எதுவுமே பேச மாட்டேங்கறீங்க” என விக்ரம் சலிப்புடன் கூற

“பின்ன சந்தோஷத்துல துள்ளி குதிச்சு ஆடச் சொல்றியா?” எனத் தீயாய்க் காய்ந்தான் அர்னவ்

அதற்குச் சிறு புன்னகையைப் பதிலாய் அளித்து விட்டு, “இங்க பாருங்க பாஸ்… நாம சென்னையிலிருந்து கிளம்பறப்பவே நம்ம உயிர் பற்றிய நிச்சயம் இல்லாம தான கிளம்பினோம்? இப்ப ரெண்டு முறை நாம உயிர் பிழைச்சு வந்துருக்கோம், அதுவே ஒரு நல்ல விஷயம் தான? இனி அடுத்து என்ன செய்யறதுனு யோசிக்காம இப்படிக் கோபமா உட்கார்ந்துருந்தா யாருக்கு என்ன உபயோகம் சொல்லுங்க?” என விக்ரம் தன்மையுடன் வினவ, அர்னவிற்குச் சுருக்கென்றது

‘ஆம் இவன் கூறுவதும் சரி தான். நடந்து முடிந்தற்காக வருந்துவதை விட இனி நடப்பதை எப்படி நல்லதாக முடிக்கலாம் என யோசிப்பதே புத்திசாலித்தனம்’ என எண்ணியவன்

“கரெக்ட் தான் விக்கி, இப்படி சோகமா உட்கார்ந்து யாருக்கு என்ன யூஸ்? ரிலாக்ஸா அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம். இப்ப நடந்த விஷயங்களால மனசு என்னமோ மாதிரி ஆகிடுச்சுடா. அதான் தேவையில்லாம உன்கிட்டயும் கோபமா பேசிட்டேன்” என மனமார உணர்ந்து கூறினான் அர்னவ்.

“ம்ம்… இப்ப பேசினீங்களே இது தான் என் பாஸ். அத விட்டுட்டு என்னமோ கப்பலே கவுந்துட்டா மாதிரி.. ஹி ஹி.. கவுந்து தான் போச்சு… அதுக்காக இவ்ளோ கவலப்பட்டு என்ன ஆகப்போகுது? இதோ இந்தத் தீவுல இருக்கறவங்ககிட்டயே நாம அந்த அம்பாரத் தீவுக்குப் போறதுக்கு வழி கேப்போம். அப்பறம் ஏதோ பெரிய பிஸ்தா மாதிரி 1500 நாட்டிக்கல் தொலைவுல இருக்கற நம்ம நாட்டுக்கு போறதுக்கு வழி பண்றேன்னு மிடுக்கா சொல்லிட்டு போனாரே, அவருகிட்டயே அந்தத் தீவுக்கும் போறதுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லலாம். ஆனா இந்தத் தீவு மக்கள்லாம் எப்படிப்பட்டவங்கனு தான் இன்னும் புரிஞ்சுக்க முடியல. இப்போதைக்கு நரமாமிசம் சாப்பிடறவங்களா மட்டும் இருந்துடக் கூடாதுங்கறது தான் என்னோட வேண்டுதல்” என்றான் விக்ரம்

அவன் சொன்ன கடைசி வாக்கியத்தை கேட்ட அர்னவ், சட்டென சிரித்து விட்டான்

இவ்வாறு இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க, அங்கு இன்னொரு குகையில், அந்தத் தீவின் தலைவரும், இவர்களுக்குக் குகைக்கு வழிகாட்டிய பெண்ணும் பேசிக் கொண்டிருந்தனர்

“என்ன ஐயனே.. இவர்கள் மெய்யாகவே அந்த மனிதரைத் தான் தேடிக் கொண்டு வந்தனரா? அப்படியாயின் அவர்களிடம் நாமே மெய்யுரைத்திருக்கலாமே?” என வினவினாள் அவள் 

“அப்படி எடுத்த உடனே எதையும் விளம்பிட இயலாது கயா. முதலில் அவர்களின் நோக்கம் என்னவென்பதை ஐயம் திரிபுர நாம் உணர வேண்டும். அதன் பின்பே அவர்களிடம் மெய் புகலலாமா என்பதை யோசிக்க வேண்டும்” என்றார் அவர் 

“என்னவோ ஐயனே, இப்படி ஒவ்வொருவராக வரும் மானிடர்களை அவளிடம் இருந்து காப்பதே நமக்குப் பெரும் பாடாக இருக்கிறது” எனப் பெருமூச்சுடன் கயா கூற

“நாம் அந்த மானுடர்களை மட்டுமா காப்பாற்றினோம்? அவர்களைக் காத்ததன் விளைவாக, நமது இனமும் அல்லவா அந்த அரக்கியிடம் இருந்து காக்கப்பட்டு வருகிறது?” எனக் கேட்டவாறே, உள்ளே நுழைந்தாள் சாமினி

ஆம்.. இவள் தான் நாம் முந்தைய அத்தியாயம் ஒன்றில் பார்த்த, அந்த கடல் தேச தலைவனின் மகள்  

அங்குப் பேசிக் கொண்டிருந்தது அவள் தந்தை இளந்திரையனும், அவளின் உற்ற தோழி கயாவும் தான்

அவளும் அவளுடைய இனமும் தான்,  அந்த அம்பாரத் தீவை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர், அவர்கள் சாபம் தீரும் காலத்தை எதிர்நோக்கி.. 

(இங்க நம்ப ஆளுங்க, அம்பாரத் தீவுலயே இருந்துட்டு, அந்தத் தீவுக்கு எப்படிப் போறதுனு பிளான் பண்ணிட்டு இருக்குதுங்க)

“என்ன கயா? என்ன பேசிக் கொள்கிறார்கள் அவ்விருவரும்?” எனச் சாமினி கேட்க 

“ம்ம்ம்.. அவர்கள் அம்பாரத் தீவிற்குப் போக வேண்டுமாம், அதுவும் படகு சம்பாதித்துக் கொண்டு. நம்மிடமே வழிமுறையும் கேட்டுக் கொண்டு அவர்கள் அம்பாரத் தீவினை அடைவார்களாம். இது தான் அவர்களின் வானாள் லட்சியமாம்” என உரிய ஏற்ற இறக்கங்களுடன் கயா பகிர, மூவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்

சற்று நேரத்திற்குப் பின் குகையை விட்டு வெளியே வந்த அம்மூவரும், பகலவன் தனது பணியை முடித்து விட்டுக் கடல் மடியில் தலைசாய்க்க இன்னும் சற்று நேரமே இருப்பதால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, கண்களை ஒரு கணம் இறுக்க மூடிப் பின் திறந்து, ஒரு வைராக்கியத்துடன் அங்கிருந்து பிரிந்தனர்.

அதில் கயா மட்டும் இரவு உணவை வழங்க, அர்னவும், விக்ரமும் தங்கியிருந்த குகைக்குச் சென்றாள் 

உணவு வழங்கியதும், எக்காரணத்தைக் கொண்டும் இரவில் குகையை விட்டு வெளியே வரக் கூடாதென்று பணித்து விட்டு, இரவில் மிருகங்கள் தாக்காமல் இருக்க பற்ற வைத்த தணலில் சில மூலிகைகளைப் போட்டு விட்டு, தான் மீண்டும் பகற்பொழுதில் வருவதாகக் கூறி அகன்றாள் 

பின்பு எல்லோரையும் போல், இளந்திரையன் முன் போய் நின்றிருந்தாள்

அந்தத் தீவின் மக்கள் அனைவரும், கதிரவன் கண் சாயும் நேரம் எதிர்பார்த்து, இறுகிய முகத்துடன் கடல் நோக்கி நின்றிருந்தனர்

புள்ளினங்கள் பூபாளம் இசைக்க, மென்தென்றல் சிகை வருடி எழுப்ப, கண் விழித்தான் நம் நாயகன் அர்னவ்

எழுந்ததும் சுற்றுப்புறம் உணர்ந்தவன், மெல்ல விக்ரமையும் எழுப்பினான் 

“விக்கி.. ஏய் விக்கி… அடேய் விக்ரம்…” என அர்னவ் ஒரு அடி வைத்துக் கத்தி எழுப்ப, அலறிப்புடைத்துக் கொண்டு எழுந்தான் விக்ரம்

“ஐயோ ஐயோ ம்மாஆஆஆஆ… காப்பாத்துங்க…. என்னை காப்பாத்துங்க…” என விக்ரம் கத்த 

“டேய் எதுக்கு இப்படிக் கத்தற?” என அதட்டினான் அர்னவ்

“என்னது நான் கத்தறனா? காட்டு கத்து கத்தி என்னை இப்படி பயமுறுத்திட்டு, எதுக்குக் கத்தறேனு என்னையே கேட்கறீங்களா?” என புலம்பினான் விக்ரம்.

“நான் எங்கடா கத்தினேன், எவ்ளோ அழகா உன்ன என்னோட செல்லாக்குட்டி மாதிரி எழுப்பினேன்? நீ என்னடான்னா இப்படிப் பயப்படற போ..” என அர்னவ் சலித்துக் கொள்ள

“அடப் போங்க பாஸ்.. நாம இப்ப எங்க இருக்கோம்னே தெரியல. அதுவும் அந்தக் கடல் அரக்கிகிட்டிருந்து தப்பிச்சு பிழைச்சு வந்துருக்கோம். அவ வேற மறுபடியும் எப்ப எந்த ரூபத்துல வந்து நம்மள தூக்கிட்டு போவாளோனு பயமாருக்கு. இங்க இன்னொரு பக்கம் இந்தக் காட்டுவாசிங்க, அவனுங்க நம்மள என்ன செய்யக் காத்திருக்கானுங்கனு தெரில. இதுல ராத்திரி எல்லாம் தூக்கம் வராத ஒருத்தன காலையில இப்படி அடிச்சு எழுப்பினா, அவன் என்ன செய்வான் பாவம். இதுல செல்லாக்குட்டி மாதிரி எழுப்பினேன்னு சொல்றேங்க?” என அழாத குறையாய் கேட்டான் விக்ரம் 

“எதுக்கு விக்கி இப்படிப் பயந்து சாகற? இங்க பாரு சுத்தியும் எப்படிப் பறவைங்க சத்தம் கேட்குது. இப்படிக் காலையில எழும்போது பறவைங்களோட சத்தம் கேட்டுச்சுனா, நாம ரொம்ப ஆரோக்கியமான இடத்துல இருக்கோம்னு அர்த்தம் தெரியுமா? அது மட்டுமில்லாம, இந்த மரம் செடி, கொடிங்களோட வாசம், கூடவே நம்ம கடலன்னை. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு?” என அர்னவ் இயற்கையை வர்ணித்துக் கொண்டிருக்க

‘இவன் நிஜமா சொல்றானா? இல்ல நம்மள கலாய்க்கறானா?’ எனப் புரியாத விக்ரம், மனதிற்குள் தன் தாத்தாவை திட்டிக் கொண்டிருந்தான்

“யோவ் குவாட்டர் கோயிந்தசாமி, நீ மப்புல உளறினத எல்லாம் நம்பி, நான் இந்த ஆளு கூடக் கடலுக்கு வந்து, இப்படி இவரு உளறுறதயும் கேட்க வேண்டியதா இருக்கு. நான் ஒருவேளை திரும்ப உயிரோட ஊருக்கு வந்தேன்னா, அந்த நாளு தான் உன் வாழ்க்கையோட கடைசி நாளுயா” என கறுவினான்

“என்னடா… என்னமோ சொல்ற மாதிரி இருக்கு?” என அர்னவ் சந்தேகத்துடன் பார்த்தபடி கேட்க 

“அச்சச்சோ… அதெல்லாம் ஒண்ணுமில்ல பாஸ். விடியற வரைக்கும் இந்தக் குகையை விட்டு வெளில வரக்கூடாதுனு சொல்லிட்டு போச்சே அந்தப் பொண்ணு, அதான் இப்ப நாம வெளில போலாமா இல்ல வேணாமானு யோசிச்சேன்” என சமாளித்தான் விக்ரம் 

“இருட்டுல இந்தக் காட்டுல நிறைய மிருகங்கள் வரும். அதனால தான் அந்தப் பொண்ணு நைட் டைம்ல வெளில வராதீங்கனு சொல்லிட்டு போச்சு. இப்பத் தான் விடிஞ்சுடுச்சில்ல, இனி என்ன பயம்? வா வெளில போவோம்” என விக்ரமையும் அழைத்துக் கொண்டு வெளியே வர எத்தனித்தான் அர்னவ்

அதே நேரம், மொட்டை ராஜேந்திரன் போன்ற தோற்றத்தில் அங்கு ஒருவன் வந்தான்

“யாரு பாஸ் இவன்? ஷேவிங் பண்ணின ஓணான் மாதிரி இருக்கான்” என அர்னவ் காதைக் கடித்த விக்ரம், அந்த ஓணான் திரும்பிப் பார்க்கவும்…. கப்சிப் என்றானான்

#ad

                       

#ad 

              

          

(தொடரும்… வெள்ளி தோறும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!