2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9
“நான் வரமாட்டேன் என்று நீ சொல்ல வேண்டியது தானே?” என்று கேட்ட லலிதாவிடம்
“நான் அரை உறக்க நிலையில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை. ஏதோ ஒரு கட்டுப்பாட்டில் நான் இருந்தேன். இது கனவா அல்லது நினைவா என்று புரியவில்லை. என் முத்துமாலை கழுத்தில் இல்லாததை உணர்ந்த பொழுது தான் இது கனவல்ல… நிகழ்ந்தது என்று புரிந்து கொண்டேன். எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது?” எனக்கு மட்டும்தான் இவ்வாறு நடக்கிறதா? இல்லை, இங்கு இப்படி நிறைய பெண்களுக்கு நடக்கிறதா? எனக்கு அச்சமாக இருக்கிறது. நான் ஊருக்கு திரும்பி விடலாமா? என்று யோசிக்கிறேன் “என்றாள் வதனா பயந்த விழிகளுடன்.
“நீ சொல்வது சரிதான். ஆனால் இதற்கு என்ன காரணம் என்று அறியாமல் எதற்காக நாம் ஊருக்கு செல்ல வேண்டும் முதலில் இதைப் பற்றி ராணியாரிடம் தெரிவிக்கலாமா?” என்று கேட்டாள் லலிதா.
“ம்…சரி. ஆனால் அவரிடம் தனித்து பேச வேண்டும் இந்த மாளிகையில் வேண்டாம்” என்றாள் வதனா.
“சரி, ராணியிடம் எப்பொழுது பேசலாம் என்று நான் அனுமதி பெற்று வருகிறேன் நீ அதற்குள் நீராடி விட்டு வா” என வேகமாக கீழிறங்கினாள் லலிதாங்கி.
சூரிய வெப்பத்தை தாங்கி வந்து மிதமான காற்று வதனாவின் உடலெங்கும் பரவி இதமளித்தது. மனதை அழுத்திய அச்சமும் சிந்தனையும் விலகி ஒரு புத்துணர்வு ஏற்பட்டது.
கண்களை மூடி அதை ரசித்தாள். கண்களை திறக்கும் போது எதிரே இருந்த மாளிகையின் மேல் தளத்தில் மதி மகேந்திரன் யோகாசனங்கள் செய்வதைக் கண்டாள்.
யாரது ஓ… நேற்று சித்திரக் கூடத்தில் கண்ட அந்த கட்டழகனா? என மனதிற்குள் பேசினாள். தினம் பயிற்சிகள் செய்வதால் தான் அவன் திரண்ட தோள்கள் கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது என்று அதியசத்துடன் அவன் அழகை ரசித்தாள்.
திடீரென அவள் எதிர்பாராத சமயம் அவன் தன்னை நோக்கி திரும்புவதை பார்த்து ஒரு கணம் கன்னம் சிவந்து உடல் துவண்டது. தலை தாழ்ந்தாள். மெதுவாக நடந்து படிகளுக்கு அருகில் வந்து மீண்டும் ஒருமுறை அவனை காண வேண்டும் என்று அடம்பிடித்த மனதை அடக்க முடியாமல் தலைநிமிர்ந்து அவனை நோக்கினாள்.
மதில் சுவர் மேல் இரு கைகளையும் ஊன்றியபடி அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் மகிழ்ச்சி பெருகியது. பெருமிதம் கொண்டாள். பருவம் தந்த இன்ப வலைகளில் பின்னிய மனதுடன் கீழே இறங்கினாள்.
மதி மகேந்திரன், அவளிடம் தன் மனம் இனம்புரியாத ஈர்ப்புடன் இறுகியதைக் கண்டு அதிசயித்தான். தன்னுள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை ரசித்தான் ஒரு நிமிடம். மறுநிமிடமே தான் ஒரு இளவரசன் என்கிற கட்டுப்பாட்டிற்குள் வந்தான். மனம் சிந்தனை வசப்பட்டு எதற்காக அவள் தாழம்பூத் தோட்டத்திற்குள் செல்ல முற்பட்டாள்? அன்று ஒருநாள் மூலிகை அருவிக்கருகே மயங்கிக் கிடந்தாள். இது சாதாரணமாக நடக்கிறதா? அல்லது ஏதாவது உள் நோக்கம் இருக்கிறதா? என்று ஆராயத் தொடங்கியது.
தானே இதை தனித்து கண்டறிய உறுதி கொண்டான். மாய வண்ணனிடம் கூட இதைப் பற்றி பேசக்கூடாது என நினைத்துக் கொண்டான். அவளிடமே இதைப் பற்றி வினவலாமா? அல்லது அவளறியாமல் அவளை பின் தொடரலாமா? என தீவிரமாக சிந்தித்தான். அதற்கான விடை அன்றைய மாலைப் பொழுதிலேயே அவனுக்கு கிடைத்தது.
மதி மகேந்திரன் தன் தாயின் பிரத்தியேக அரண்மனைக்குள் வேகமாக நுழைந்தான். தன் தாயின் அறைக்குள் இருந்து தாயார் யாருடனோ உரையாடிக் கொண்டிருப்பதை உணர்ந்து அறையின் வாயிலில் ஒரு நிமிடம் தயங்கினான். உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று. அவன் காலடியின் சத்தம் கேட்டு “உள்ளே வா மகேந்திரா” என்று அழைத்தாள் ராணி.
அங்கே…
வதனாவும், லலிதாவும் தன் தாயின் காலடியில் அமர்ந்திருப்பதைக் கண்டு ஒரு கணம் அதிசயத்தான். இவர்கள் எப்படி இங்கு? எதற்காக? என்று சிந்தனை தீவிரமானது.
“ஒரு அவசரமான, அவசியமான செயலுக்காக தான் உன்னை அழைத்தேன் மகேந்திரா” என்றாள் ராணி.
“சொல்லுங்கள், தாயே” என்றான் மகேந்திரன் பணிவாக
இருவரின் உரையாடலை கேட்ட வதனா திடுக்கிட்டாள். என்ன..? இவர் இளவரசரா? என்று மனம் அதிர்ந்து உடல் சிறிது நடுக்கம் கொண்டது. தான் பெரிய தவறு இழைத்து விட்டதாக பதறினாள்.
“வதனா, இனி அச்சம் கொள்ள தேவை இல்லை. இளவரசர் உன் துன்பத்தைப் போக்கி விடுவார். நீங்கள் இந்த மாளிகையில் அச்சமில்லாமல் தங்கலாம் இருவரும் அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நாளை பார்க்கலாம் ” என்று உத்தரவு கொடுத்தாள் ராணி.
அவர்கள் சென்றதும் வதனாவிற்கு ஏற்பட்ட நிகழ்வுகளை தன் மகன் இளவரசன் மகேந்திரனிடம் கூறினாள் ராணி.
“ஏனம்மா இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்ட மகேந்திரனை கூர்மையான பார்வையுடன் பார்த்த ராணி “நீ என்ன சொல்கிறாய்” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
“வதனா அனுபவித்த இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் தாங்கள் தான் காரணம் என்று நான் கூறுகிறேன்” என்றான் மகேந்திரன் தாயின் முகத்தை சிறிது கோபத்துடன் நோக்கி.
“எதை வைத்து இவ்வாறு சொல்கிறாய்” என்று சாந்தமான குரலில் கேட்டாள் ராணி.
மெதுவாக எழுந்து நடந்த மகேந்திரன் சாளரம் அருகே சென்று பார்வையை வெளியே ஓடவிட்டு பின் தாயின் முகத்தை நோக்கி திரும்பி “தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிக்குள் மட்டுமே அவளுக்கு இவ்வாறு நடந்துள்ளது” என்றான்.
“அதனால்… நான் தான் இதை செய்திருப்பேன் என்று நீ நம்புகிறாயா? என் பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண்ணிற்கு நான் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? நம் நாட்டுப் பெண்களும் கலைகளில் முன்னேற வேண்டும் என்று தான் இந்த கல்விச்சாலை நடத்துகிறேன். அதுவும் பெண் குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். எனக்கு நீ ஒரே மகனாக போய்விட்டாய் என்னைப் பற்றி இவ்வளவு தெரிந்திருந்தும் உனக்கு ஏன் என் மேல் இவ்வாறு சந்தேகம் ஏற்பட்டது மகேந்திரா?”என்று கேட்டபடி மகேந்திரனின் முகத்தை கண்களால் ஆராய்ந்தாள்.
“இந்த கல்விச் சாலையை ஆரம்பித்ததே அதற்காக தானே அம்மா” என்றான் சற்று ஏளனம் கலந்த குரலில்.
“என்மேல் குற்றம் சுமத்துகிறாயா?” என்று கடுமையான குரலில் கேட்டாள் ராணி.
“இல்லையம்மா நீங்கள் செய்தது குற்றம் அல்ல. எல்லா தாயும் செய்யக்கூடிய ஒன்று தான். தனக்கும் தன் அந்தஸ்துக்கும் நிகரில்லாத ஒரு உறவை ஏற்றுக் கொள்ள மனம் விரும்பவில்லை. அதுவே காரணம்” என்றான் மகேந்திரன் திடமாக.
“நீ..நீ..என்ன சொல்கிறாய்? “சிறிது தடுமாறியது ராணியின் குரல்.
“ஆம் தாயே…இந்த நாட்டை ஆளப்போகும் எதிர்கால ராணிக்கு இளவரசி என்கிற அந்தஸ்து இருக்க வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பது நியாயம்தான். ஆனால் விதியை மாற்ற நினைப்பது உசிதமல்ல. இதை எவ்வாறு நான் அறிந்தேன் என்று சிந்திக்கிறீர்களா? நேற்று தாழம்பூத் தோட்டத்திற்கு போகும் வழியில் தங்களுடைய கால் சிலம்பின் மணிகளில் ஒன்று எனக்கு கிடைத்தது. அது மட்டுமல்ல. போன மாதம் நான் ஒரு ஜோதிடரை சந்தித்தேன். அவர்தான் கூறினார். ஒரு சாதாரண பிரஜை எனக்கு மனைவியாவாள், இந்நாட்டின் எதிர்கால ராணியாவாள் என்று. ஆழமாக சிந்தித்ததில் இப்படி இருக்க வாய்ப்புள்ளதே என்று தோன்றியது. தாயே ஆனாலும் மனதைப் பொறுத்துதான் எல்லாம் அமையும். நான் யூகித்தது சரியாகி விட்டது. நான் விதியை மதிப்பவன். இந்த மதிக்கு வதனா தான் என்று காலம் போட்ட முடிவு, அதை மாற்ற எண்ணாதீர்கள்” என சொல்லியபடி ராணியின் காலைத் தொட்டு வணங்கினான் மதி மகேந்திரன்.
தன் செயலை தன் மகன் கண்டுபிடித்துக் கூறியது அதிர்ச்சியைத் தந்தாலும் சிறிது ஆழமாக சிந்தித்து பின் மனதைத் தேற்றிக் கொண்டாள் ராணி.
பின் தன்கண்களில் நீர் கோர்த்தபடி, நா தழுதழுக்க “என்னை மன்னித்துவிடு மகேந்திரா. உனைப் பெற்றதால் பெரு மகிழ்ச்சியடைகிறேன் இன்று” என்று உச்சி முகர்ந்தாள் ராணி.
மதி மகேந்திரனின் பிறந்த தினத்தன்று வதனச் சந்திரிகாவை வருங்கால ராணியென பிரகடனப்படுத்தினாள் சௌபர்ணிகா.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings