2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ரமா! என்னைப்பத்தி ஏன் எல்லார் கிட்டயும் தப்புத்தப்பா பிரகடனம் பண்ணிகிட்டு திரியற” என மிகவும் கோபக்குரலில் கேட்ட முகுந்தனைப் பார்த்து ஏதும் புரியாமல் விழித்தாள் ரமா.
“என்ன ஒண்ணுந்தெரியாத மாதிரி பாக்கற. என் அக்கா கிட்ட என்ன சொல்லி வச்ச” என்று மேலும் அவன் கத்தத் தொடங்கவே, “இதோ பாருங்க என்ன ஏதுன்னு சொன்னாத்தானே தெரியும். நீங்க பாட்டுக்கு ஒண்ணுமே சொல்லாம கத்திகிட்டு இருந்தா தலையும் புரியலை வாலும் புரியலை” என்றாள் ரமா.
“ஓஹோ புரியலையா உங்கிட்ட எப்பப் பார்த்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறேன்னு அக்காகிட்ட சொன்னியாமே. பேசவே பயமா இருக்கு கூடுமானவரை வாயே திறக்கறதில்லைன்னு வேற சொல்லி இருக்க. இது போதாதுன்னு என் சித்திகிட்ட, அவர் கையில பணம் புழக்கம் அவ்வளவா இல்லை நிலமை கொஞ்சம் டைட்டாதான் இருக்கு. பிஸினஸ் டல்லுன்னு நினைக்கிறேன். எதையும் எங்கிட்ட வாயைத் திறந்து சொல்லலை. எனக்கு செலவுக்கு கொடுக்கிற காசுக்கு கணக்கு பாக்கறத வச்சு சொல்றேன்னு சொல்லி இருக்க. என்ன நினைச்சு இதெல்லாம் பண்றேன்னு எனக்குப் புரியலை” என்று மேலும் மேலும் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே இருந்தான்.
இவள் வாய் திறக்க வாய்ப்பே தரவில்லை. ருத்ர தாண்டவம் ஆடறவன்கிட்ட என்ன பேச முடியும் என்று மௌனமாகவே நின்று விட்டாள் ரமா. தானாகவே பேசி தானாகவே அமைதியானான் முகுந்தன். அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ரமா, மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.
“எந்த விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்குங்க. இன்னொரு பக்கத்தை பாக்காமலே இருந்தா விஷயத்தில உள்ள உண்மை எப்படிப் புரியும். என் சித்தப்பா சொல்லுவார் நாணயத்திற்கு ரெண்டு பக்கம் போலத்தான் ஒவ்வொரு சம்பவத்துக்கும் பின்னாடி ரெண்டு சரித்திரம் இருக்கும்னு.
நாணயத்தின் தலைப்பக்கம் பாக்கிறவங்க தலைதான் இருக்குன்னு பேசுவாங்க. பூ பக்கம் பார்க்கிறவங்க பூதான் இருக்குன்னு அடிச்சு பேசுவாங்க. அப்படி இல்லாம அடுத்தவங்க சொல்றதில உண்மை இருக்குமோன்னு நினைச்சு மறுபக்கம் போய் பாக்கற பொறுமை இருந்தா உண்மை ஈசியா வெளியில வந்திடும்லன்னு.
நீங்க இப்ப அப்படித்தான் பேசறீங்க. நான் என்ன சொன்னேன் ஏன் சொன்னேன்னு எங்கிட்ட கேக்கனும்ல. தூக்கு தண்டனை கைதிக்குக்கூட அவன் தரப்பை சொல்றதுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க தெரியுமா. நீங்க என்னடான்னா எனக்கு பேசவே வாய்ப்புத் தராம ருத்ர தாண்டவம் ஆடறீங்க.
இப்பவாச்சும் நடந்ததைக் கேளுங்க. உங்க அக்கா போன வாரம் வந்தப்ப அவங்க பெண்ணோட கல்யாணத்தைப் பத்தியும் அதுக்கு ஆகும் செலவைப் பத்தியும் கவலையாப் பேசினப்ப, நீங்க ஆறுதலா பேசாம எப்பவோ வர கல்யாணத்துக்கு இப்ப என்ன கவலை. அவனவன் அன்றாடப் பொழப்புக்கே அல்லாடிட்டு இருக்கான்னு பட்டுன்னு சொல்லிட்டீங்க.
உங்க அக்கா நிறைய மனவருத்தத்தோட எதையும் காட்டிக்காம கிளம்பிட்டாங்க. வீட்டில பிறந்த பொண்ணு மனச்சங்கடத்தோட போனா குடும்பத்துக்கு, குறிப்பா கூடப் பிறந்தவனுக்கு ஆகாதுன்னு சொல்வாங்க. அந்த சங்கடம் உங்களுக்கு வந்திடக் கூடாதேன்னு அவங்ககிட்ட என்கிட்டயும் அப்படித் தான் பேசறார் ஏதோ பிரச்சனை போல இருக்குன்னு சொல்லி அவங்களை அமைதிப்படுத்தினேன்.
உங்க சித்தியும் அவங்க பையனுக்கு ஏதோ பிஸினஸுக்கு தேவைப்படற பணத்துக்கு உங்களை நம்பியிருக்கறதா சொல்லிட்டு இருந்தாங்க. அது என் காதில விழவே உங்களை அந்த தர்ம சங்கடத்தில இருந்து காப்பாத்தத்தான் அவங்ககிட்ட அப்படிச் சொன்னேன். அதுவும் உங்க சித்தி பையன் பொறுப்பில்லாம காசை வீணடிக்கிறான் அதைப் புரிஞ்சுக்காம சித்தி பணத்தைக் கொடுத்து கொடுத்து அவனை மேலும் மேலும் வீணடிக்குதுன்னு நீங்க முன்னாடி சொன்னதனாலதான். ஆனா அவங்க ரெண்டு பேரும் உங்ககிட்ட இப்படி போட்டுக் கொடுத்து சண்டை மூட்டி விடுவாங்கன்னு நினச்சுப்பாக்கலை நான்” என்று பேசி முடித்தவளை
குறுநகையுடன் பார்த்த முகுந்தன் “இப்பதான் எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்குன்னு எனக்குப் புரிய வச்ச, ஆனா நீ மறந்திட்டியே. சித்தியும் அக்காவும் போட்டுக் கொடுக்கலை. உன்னை அவங்களுக்கெல்லாம் ரொம்பப் பிடிக்கும்ங்கிறதால ஏன் அவகிட்ட கோபமாப் பேசற ஏன் செலவுக்கு கொடுக்கக்கூட கணக்கு பாக்கறன்னுதான் கேட்டாங்க. அந்த இரண்டாவது பக்கத்தை நீயும் கொஞ்சம் பாரேன்” என்று சொன்ன கணவன் முகத்தை நாணத்துடன் பார்த்து ரமாவும் முறுவலித்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings