2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ரங்கன், மனைவி மேகலைக்காக கோவில் வாசலில் காத்திருந்தான். இருவருமாகத்தான் கோவிலுக்குள் சென்றார்கள்.
அர்ச்சனை முடிந்து பிரகாரம் சுற்றி வந்தபின், மேகலை ஏதோ ஒரு பிரார்த்தனையை நிறைவேற்ற அடிப்பிரதட்சணம் செய்ய வேண்டி உள்ளதால், “நீங்க போய் கார்ல வெயிட் பண்ணுங்க வந்திடறேன்” என சொல்லி ரங்கனை அனுப்பி இருந்தாள்.
எனவேதான் இந்தக் காத்திருப்பு. தனியாக உட்கார்ந்திருக்கவே, மனம் தறி கெட்டு ஓடியது ரங்கனுக்கு. பொங்கல் நெருங்கிக் கொண்டு இருப்பதால், கரும்பும் வாழைப்பழமும் இல்லாத கைகளே இல்லை என்பது போல் அனைவரும் தென்பட்டனர்.
அவரவரும் பொங்கல் சீர் செய்ய வாங்குவார்களா இருக்கும். நமக்குத்தான் அந்த கொடுப்பினையே இல்லையே என ஏங்கியது ரங்கனின் மனம். கையில் நிறைய காசும் இருக்கு, தங்கச்சிக்கு செய்ய மனசு நிறைய ஆசையும் இருக்கு, மனைவியோட ஒப்புதலும் இருக்கு. ஆனாலும் சீர் செய்ய முடியலையே என்பதுதான் அவன் வருத்தம். அப்படி என்ன பெரிய தப்பு செஞ்சிட்டோம்னு இப்படி ஒட்டு மொத்த குடும்பமும் ஒதுக்கி வச்சிருக்காங்களோ தெரியலை.
இவங்களாதான் குழந்தைப் பருவத்திலே இருந்தே சொல்லி சொல்லி வளத்தாங்க. ரங்கனுக்குத்தான் மேகலையைப் பண்ணனும்னு. அவங்க மனசோட வச்சுக்காம, எங்க மனசிலயும் ஆழமாகப் பதிய வச்சிட்டு, கல்யாணம் பண்ண வேண்டிய காலகட்டத்தில ரெண்டு குடும்பத்துக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்காக எங்களை மனசை மாத்திக்கச் சொன்னா எப்படி கேக்க முடியும்.
அம்மாகிட்ட எவ்வளவோ எடுத்துச் சொன்னோமே கேட்டாங்களா.
“அம்மா உன் தம்பி பொண்ணுதானே மேகலை. அவ மேல உனக்கு என்னம்மா கோவம். தம்பி மேல கோபங்கிறதுக்காக அவளை தண்டிக்கனுமா? அதோட நீதான அடிக்கடி சொல்லுவ, நீர் அடிச்சு நீர் விலகாதுன்னு. அப்போ மாமா மேல உள்ள கோபம் மட்டும் விலகாதா”ன்னு.
கேட்காமல் பிடிவாதம் பிடிச்சதனாலத்தான் நானும் மேகலையும் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதாப் போச்சு. அதிரடியாக கல்யாணம் பண்ணிகிட்டா, அப்பறம் ரெண்டு குடும்பமும் இதை வச்சே சேர்ந்திடுவாங்கன்னு முழுசா நம்பித்தான் பண்ணிக்கிட்டேன். ஆனா ரெண்டு குடும்பமும் பகை பாராட்டறதில மட்டும் தான் ஒத்துப் போயிருக்காங்க.
தங்கச்சி கல்யாணத்தைக் கூட எங்கிட்ட சொல்லாம, கூப்பிடாம பண்ணி இப்படி நிரந்தரமா ஒதுக்குவாங்கன்னு கனவிலேயும் நினச்சதில்லை. இல்லேன்னா, இந்நேரம் நானும் பொங்கல் சீர் ஊரே வியக்கற மாதிரி என் தங்கச்சிக்கு கொண்டு போயிருப்பேனே.
பாவம் மேகலைக்கும் அவ அப்பா வீட்டில இருந்து எந்த பண்டிகைக்கும் எந்த சீரும் வரதில்லை. இந்தவிதமான எண்ண ஓட்டத்தில் சுயபச்சாதாபத்தில் கரைந்து கொண்டிருந்த போதுதான் ரங்கன் அந்த முதியவரைப் பார்த்தான்.
கைகளில் கட்டை வைத்துக் கொண்டு, கண் பார்வையற்ற மனைவியையும் நடத்தி அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இந்த கோவில் வாசலில் உட்கார்ந்து பிச்சை எடுப்பவர்தான். எப்போதுமே அவரைப் பார்த்தாலே பாகாய்க் கரைந்து விடுவாள் மேகலை.
கண்டிப்பாக உழைத்துச் சாப்பிட முடியாதவர்கள் என்று தெரிபவர்களுக்கு பாரபட்சமின்றி காசு கொடுத்து விட்டுதான் வருவாள். அதிலும் இவர் ஸ்பெஷல்.
இன்று ஏனோ அவர் முகத்தில் அதீத வருத்தம் தெரிவதாகத் தோன்றியது அவரையே பார்த்துக் கொண்டிருந்த ரங்கனுக்கு.
அப்போது அவர் மனைவியிடம் கூறிக் கொண்டிருந்தார். “இன்னும் கண்ணாடி வளையலுக்கும் பூவுக்கும் பைசா கிடைக்கலையே, எப்படி தங்கச்சிக்கு பொங்க சீர் கொடுக்கறது. யாருமே இன்னிக்குன்னு பாத்து தர்மம் பண்ண மாட்டுறாங்களே” என்று.
மீண்டும் மனதிற்குள் அக்னிச்சுடர் வந்து விழுந்தது போல் உணர்ந்தான் ரங்கன். பிச்சை எடுத்து கூட சீர் செய்ய நினைக்கிறாங்க எல்லாம் இருந்தும் நம்மால முடியலையே என்று.
இதற்குள் பிரதட்சணம் முடித்துக் கொண்டு மேகலை வந்துவிட்டாள். கணவனின் முகத்தில் படிந்திருந்த கலக்கத்தை அவன் சொல்லாமலே உணர்ந்து கொண்டவள், என்னவென்று கேட்க, ரங்கன் சற்றுமுன் அந்தப் பெரியவர் வருந்திய விவரத்தைக் கூறினான்
“இவ்வளவு தானே அவர்கிட்ட இன்னும் எவ்வளவு தேவைப்படுதுன்னு கேட்டு கொடுத்திட்டாப் போச்சு. நாமளும் சீர் செஞ்சதா நினைச்சுக்கலாமில்லை” என்றாள் உடனடியாக.
ரங்கனுக்கும் அது உசிதமாகப்படவே, முதியவருக்கு தேவைப்பட்ட ஐம்பது ரூபாயைக் கொடுத்து, “எப்போதும் குடும்பத்தோட சேந்து குதூகலமா இருக்கனும்யா நீங்க” என்ற அவரின் ஆசிகளுடன், மகிழ்ச்சியில் பொங்கிய அவர் முகத்தையும் பார்த்து சற்றே ஆறுதல் பெற்ற மனதுடன், வீடு திரும்பினான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் ஏதும் மிஸ்டு கால் இருக்கிறதா என கைபேசியை எடுத்துப் பார்த்தவன், “மேகலை! இங்கே பாரேன்” என்று மகிழ்ச்சியில் கூவியபடி அவளிடம் ஃபோனில் வந்திருந்த வாட்ஸ்அப் தகவலைக் காட்டினான்.
அவன் தங்கைதான் அனுப்பி இருந்தாள். “எனக்கு நீயும் மேகலையும் வேணும். உன்னோட பொங்கல் சீரும் உடனே வந்து சேரனும். அப்பா அம்மாவை காரணம் காட்டி என்னை ஏமாத்தக்கூடாது. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று.
அந்த முதியவரின் நிறைந்த முகமும் கூறிய வாழ்த்தும் மனதிற்குள் வந்து போனது ரங்கனுக்கு.
(நிறைவு)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings