2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
இதுவரை:
முன்னணி நடிகை வந்தனாவுடன் தொழிலதிபர் ராம்குமார் உல்லாசமாக இருக்கிறான். கைபேசி அழைக்கிறது…. லைனில் மனைவி மகா.
இனி:
காலைப் பொழுது சென்னைக்கு சற்று சோம்பலாக விடிந்தாலும், சுறுசுறுப்புக்கு சற்றும் பஞ்சமில்லாத இடமென்றால் அது மாயவனின் டீக்கடை தான். உள்ளுர் விஷயத்திலிருந்து, உலக விஷயம் வரை அத்தனையும் அலசப்படும் ஒரு இடம். சுந்தரம் அங்கு வந்து சேர எல்லோரும் ஆவலாக அவரை மொய்த்தார்கள்.
“என்ன சுந்தரம் அண்ணாச்சி! பாத்து எவ்வளவு நாளாச்சு… இந்தப் பக்கம் வரதே இல்ல. எங்களையெல்லாம் மறந்துட்டீகளா “
“அட முருகா! அண்ணன் நம்மளப் போலவா… ராசா வீட்டுக் கன்னுகுட்டி. மகா மார்பிள்ஸ் கம்பெனி எம்.டி ராம்குமாரோட பர்சனல் கார் டிரைவர்… இந்த மாதிரி சாதாரண டீக்கடைக்கு வர்றதே பெரிய காரியம்” என்று சிரித்தான்.
“எங்க வேல பாத்தா என்னப்பா? பழைய சிநேகிதர்களை மறக்கக் கூடாதுன்னு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வர்றேன். இன்னைக்கு ராம்குமார் ஐயா பெங்களூரு போயிருக்காரு, அதனால காலையில சீக்கரம் போக வேண்டிய வேலையில்ல. கொஞ்சம் நேரம் இருந்துச்சு, அதான் உங்களையெல்லாம் பாத்து பேசிட்டு போலாம்னு வந்தேன்”
பேசிக் கொண்டிருந்து விட்டு சுந்தரம் கிளம்ப, “இன்னும் கொஞ்ச நேரம் இரு.. என்ன அவசரம் சுந்தரம்? நீயே என்னைக்காவது தான வர்ற” என்றார் பெரியவர் ராமசாமி.
“இல்ல மாமா இன்னைக்கு வெள்ளிக்கிழமையில்ல. மகாலஷ்மி அம்மா கருமாரியம்மன் கோயிலுக்குப் போவாங்க. என்னை எதிர்பார்த்து காத்துகிட்டிருப்பாங்க”
“அந்தம்மா குணம் எப்படி சுந்தரம்?”
“அம்மா தங்கமான குணம்.. பெயருக்கேத்த மாதிரி மகாலட்சுமிதான். அழகிலும் சரி… குணத்திலும் சரி… வித்தியாசமில்லாம பழகுவாங்க. என்னை மட்டுமல்ல.. வீட்ல வேல பாக்கிற எல்லாரையும் அன்பா நடத்துவாங்க. எவ்வளவு வருஷமா அந்த வீட்ல வேலை பாக்குறேன். நான் அந்த வீட்டுக்கு வேலைக்குப் போனப்ப ராம்குமார் ஐயா, மகாலட்சுமி அம்மா, எல்லாம் சின்ன குழந்தைங்க.”
“இன்னைக்கும் மகாலட்சுமி அம்மா என்ன “அண்ணா அண்ணா”ன்னு தான் கூப்பிடுவாங்க. ஒரு கார் டிரைவரா என்னை நினைக்கல… இந்த குடும்பத்துல ஒருத்தனாத் தான் நினைக்கிறேன். மகா அம்மாவும் என்னை அப்படித்தான் நினைக்கிறாங்க. ஒரே வித்தியாசம் என்னன்னா, முன்ன பெரியவர் ஈஸ்வர் அய்யாவுக்கு கார் ஓட்டினேன்…. இப்ப சின்னையா ராம்குமாருக்கு ஓட்டுறேன். சரிப்பா நான் கிளம்புறேன்”
பங்களாவுக்கு போய் சேர்ந்தார் சுந்தரம். “ஈஸ்வர பவனம்” பித்தளை போர்டு மினுமினுத்தது. போர்டின் ஓடத்தில் லேசாக அழுக்கு இருப்பது போல தோன்ற, சுந்தரம் தன்னுடைய துண்டை எடுத்து துடைத்தார். உள்ளேப் போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வர ..
“சுந்தரம் அண்ணா! வந்துட்டீங்களா உங்களத்தான் காணமேன்னு நினைச்சுகிட்டிருந்தேன் கரெக்டா வந்துட்டீங்க.. காபி குடிச்சுட்டுப் போங்க… நான் இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்திடுவேன்” என்றாள் மகா. ஏனோ அவள் முகம் சற்று வாடினால் போல தோன்றியது .
“காரைத் தொடச்சு ரெடி பண்றேன். நீங்க நிதானமா கிளம்பி வாங்கம்மா …”
அரைமணி நேரத்தில் கோயிலுக்குப் போக ரெடியாகி வந்தாள் மகா ..எப்போதும் காரில் வரும்போது கலகலவென்று ஏதாவது குழந்தை போல பேசிக் கொண்டே வருபவள் என்று பேசாமல் அமைதியாக இருந்தது சுந்தரத்திற்கு உறுத்தலாக இருந்தது.
“அம்மா வழியில ஏதோ வேலை இருக்குன்னு சொன்னீங்களே.. கடைக்குப் போகனுமா “
“வேண்டாம் அண்ணா… அடுத்த வாரம் பாத்துக்கலாம். ரொம்ப ஒன்னும் அவசரமான வேலையில்ல” என்றாள் சோர்வாக .
ஏதோ ஒன்று அவள் மனதை உறுத்திக் கொண்டிருப்பது அவருக்குப் புரிந்தது ..
“அண்ணா! நீங்க இந்த வீட்டுல எவ்வளவு வருஷமா வேலை பாக்குறீங்க?” மகா ஏதோ சுற்றி வளைத்து கேட்க வருவது புரிந்தது…
சுந்தரம் அவளே பேசட்டும் என்று பொறுமையாக பதில் கூறாமல் இருக்க, “அப்பா காலத்திலிருந்தே இங்க வேல பாக்கிறீங்க உங்களுக்குத் தெரியாதது இல்லை! பெங்களூரில் நம்ம மகா மார்பிள்ஸ் கிளையண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?
“அப்படி யாரும் இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலயேம்மா”
“உங்க ஐயா அடிக்கடி பெங்களூர் கிளம்பிப் போயிடுறாரு. காரணம் கேட்டா கிளையண்ட பாக்க போறேன்னு சொல்றாரு. அவர்கிட்ட நிறைய மாற்றம் தெரியுது. முன்னப்போல இல்ல எதைக் கேட்டாலும் எரிஞ்சு விழுறாரு யோசிச்சு யோசிச்சு பதில் சொல்றாரு. அடிக்கடி தனியா போய் பேசுறாரு… முக்கியமான கிளையண்ட், நிறைய பிரச்சனைன்னு சொல்றாரு. உண்மையாகவே நம்ம கம்பெனில ஏதாவது பிரச்சனையா? பிசினஸ்ல ஏதாவது ப்ராப்ளமா? அதான் கேட்டேன்”
திக்கென்றது சுந்தரத்திற்கு. தனக்கு கொஞ்ச நாளாக தனக்கு வந்திருக்கிற சந்தேகம், மகாவிற்கும் வந்திருக்கிறது. ஆனால் தனக்கு வந்த சந்தேகம் வேற… மகா நினைப்பது பிசினஸ்ல ஏதோ பிரச்சனைன்னு. அவள் அப்படியே நினைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டார். தன்னுடைய சந்தேகம் பொய்யாக போக வேண்டும் என்று கடவுளை மனதார வேண்டிக் கொண்டார் .
இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டும்… தான் ஏதாவது சொல்லப் போய் மகாவிற்கு அது வேறு ஏதாவது சந்தேகத்தை கிளப்பி விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
ஆனால் மகாவோ ‘என்ன பிரச்சனை கம்பெனியில் என்றாலும் சுந்தரம் அண்ணாவுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். எனக்குத் தெரிந்தால் நான் வருத்தப்படுவேன் என்று நினைக்கிறார் போல ‘ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
“ஒருவேளை வேற ஏதாவது வேலை விஷயமா போய் இருக்கலாம்மா” என்றார் சுந்தரம் மழுப்பலாக. அவளை திசைத் திருப்ப, “அம்மா இந்த மாசம் தானே நம்ம ஐயாவோட அப்பாவுக்கு திவசம் வரும் .ஐயருக்கு சொல்ல வேண்டாமா… அன்னதானத்துக்கு வேற ஏற்பாடு பண்ணனும். நீங்க என்ன தேதில வருதுன்னு பாத்துட்டீங்களா?”
“ஐய்யோ.. சுந்தரம் அண்ணா! மறந்திட்டேனே… எப்படி மறந்தேன்? மாமாவுடைய திதி இந்த மாசம் தான் வரும். மாதம் பிறந்து நாலஞ்சு நாள் ஆயிடுச்சு. கடவுளே திதி முடிஞ்சிருக்கக் கூடாது.. அண்ணா ஒன்னு செய்வோம் கோயிலுக்கு போறதுக்கு முன்னாடி, நம்ம ஐயர் வீட்டுக்குப் போயி நாம நேர கேட்டுடுவோம். நீங்க ஐயர் வீட்டுக்கே நேர போங்க” என்றாள் படபடப்பாக. திதி முடிந்திருக்கக் விடக்கூடாதே என்ற படபடப்பு அவளுக்குள் இருப்பதை உணர முடிந்தது.
நல்லவேளையாக ஐயர் வீட்டில் இருந்தார்.
“வளர்பிறை பஞ்சமி திதி …இப்ப நடக்கிறது வளர்பிறை.. ” என்றவர் பார்த்துவிட்டு, “அம்மா! நாளை மறுநாள் பஞ்சமி வருது.. நாளை ஒதுக்கல் நாளை மறுநாள் திதி” என்றார். மகாவுக்கு கையும் ஓடல காலும் ஓடல.
“அண்ணா! இவர் வேற கிளம்பி பெங்களூரு போயிட்டாரே.. நாளைக்காவது வந்தால் தானே நாளக்கழிச்சு திதி கொடுக்க முடியும். இதுவரை ஒருதடவை கூட மாமா திதியை மறந்ததில்ல, இந்த தடவை மறந்துட்டேன். அவரு வேற ஏன் முன்னாடியே சொல்லலை இப்படி கடைசி நேரத்தில் சொல்றேன்னு கோவிச்சுக்கப் போறாரு..”
“மகா அம்மா இப்பவாவது பாத்துட்டீங்களே… நல்லவேளை இப்ப கோயிலுக்குத் தானே போறோம்.. அன்னதானத்துக்குச் சொல்லிட்டு வந்துடுவோம். அப்புறம் நாளைக்கு வாங்கற சாமான்கள் எல்லாத்தையும் வாங்கி வச்சுடலாம். அய்யா நீங்க சொல்லிட்டீங்கன்னா வந்துடுவாரு.. நாள கழிச்சு நல்லபடியா திதியை கொடுத்திடலாம் ..” ஆறுதலாக சுந்தரம் கூற, மகா தலையசைத்தாள். அவளுக்குள் ஒரு தைரியம் வந்தது.
“சரிண்ணே! அப்படியே செஞ்சுடுவோம்..” என்றவள், ஐயரிடம் விடைபெற்றுக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினாள்.
கோவிலில் அன்னதானத்துக்குப் பணம் கட்டிவிட்டு அர்ச்சனை பண்ணி, சாமி கும்பிடும் வரை நிம்மதியாக இருந்த மகா.. காதில் ஏறியதும் திரும்ப ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.
‘இப்பவெல்லாம் ராம்க்கு ரொம்பவே கோவம் வருது எது கேட்டாலும் சிடுசிடுங்கறார். அடிக்கடி யாருடனோ ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருக்கிறார். என்ன காரணமாக இருக்கும்?’ மகா மனம் மறுபடி அலைபாய்ந்தது.
“அண்ணா நான் சொன்னது நினைவிருக்குதா.. பெங்களூர்ல கிளையண்ட் யாரும் இருக்காங்களான்னு கம்பெனியில விசாரிச்சுப் பாருங்க. நான் கேட்டேன்னு தெரிய வேண்டாம். ஐயாவுக்குக் கூடத் தெரிய வேண்டாம்”
அதன் பிறகு மகா ஒன்றும் பேசாமல் ஏதோ யோசனையிலேயே இருப்பதுபோல தெரிந்தது.
அவள் மனம் சஞ்சலப்படுவது அவருக்கு புரிந்தது. காரணம் என்னவாக இருக்கும், ராம்குமார் அடிக்கடி பெங்களூர் போவதற்கு?ஒன்றும் பிடிபடவில்லை. மகாவிற்கும் சுந்தரத்திற்கும். இன்னும் ஆறு மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறப்போவது தெரியாமல், அவரவர் சிந்தனையில் அவரவர் மூழ்கி இருந்தனர். அவ்விருவரையும் சுமந்தபடி கார் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings