2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12
“உங்க தன்னம்பிக்கையைப் பாராட்டறேன் சார்! பேசாமடந்தைன்னு பேரெடுத்த ஒரு பெண்மணியைப் பேச வெச்சுடலாம்னு நம்பறீங்க!” என்றாள் தர்ஷினி.
“உங்க ஸிஸ்டர் சொன்ன மாதிரி, அதுக்குத் தானே நாம எல்லோரும் இருக்கோம்” என்றார் சிவசரண்.
“பிடிவாதத்தை உடைக்கிறது ஈஸி, பயத்தை உடைக்கிறது கஷ்டம். அதுவும் பல வருஷங்களா வேருன்றி வளர்ந்த பயத்தை” என்றாள் தர்ஷினி.
“இந்த ஷாக் அவங்க வாயைத் திறக்கும்னு நம்புவோம்” என்றார் சிவசரண்.
கான்ஸ்டபிள் மிஸஸ் விஷ்ணுகுமாரை அழைத்துவரப் பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராக அவர்களை அனுப்ப முடியாது என்று ஆட்சேபங்கள் தெரிவிப்பதும், கான்ஸ்டபிள் ஒரே வார்த்தையாக “இன்ஸ்பெக்டர் வரச் சொல்றாருங்க” என்றே பதிலளிப்பதும் எல்லார் மனக் கண்களிலும் ஓடியது. (அதுதான் நடந்ததும்.)
மெதுவாக நடந்து உள்ளே வந்தாள் மிஸஸ் காமாட்சி விஷ்ணுகுமார். உள்ளே வரும்போதே ஒருமுறை தடுமாறி விழப் போனாள். கான்ஸ்டபிள் அவளைச் சட்டென்று பிடித்துக் கொண்டு, அப்படியே அழைத்துவந்து நாற்காலியில் அமர்த்தினார்.
“பெரிய துக்கம். புத்திர சோகம் தாங்க முடியாதுதான். உங்களை இந்த மாதிரிக் கூப்பிடக் கஷ்டமாத்தான் இருக்கு, இருந்தாலும்…” என்று இழுத்தவாறே ஆரம்பித்தார் சிவசரண்.
“அந்தச் சோகம் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு ஏற்பட்டுப் போச்சுங்க” – மெல்லிய குரலில் சொன்னாள் காமாட்சி.
சிவசரண் திடுக்கிட்டு அவளை ஏறிட்டார்.
“என்றைக்கு என் மகன் என் கணவரை விரோதிச்சுக்கிட்டு வீட்டைவிட்டே ஓடினானோ, அன்றைக்கே அவன் இனி இந்த வீட்டுக்குத் திரும்பப் போறதில்லைன்னு புரிஞ்சுபோச்சு. அவனுக்காக அப்பவே பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் அழுதாச்சு. இப்போ அழுகைகூட வத்திப் போச்சு” என்றாள் காமாட்சி விட்டேற்றியாக.
“அப்போ, உங்க கணவருக்குத் தெரியாம நீங்க ஜெயக்குமாருக்கு ஆசீர்வாதம் பண்ணினது, அவர் இறந்துட்டார்னு கேட்டதும் அழுதது எல்லாம்?” என்று கேட்டாள் தன்யா. வேலையாட்களிடம் விசாரித்திருக்கிறாளோ என்று தோன்றியது சிவசரணுக்கு. அதற்குள்ளாக எப்படி?
அச்யுத் என்ற சதுரா டிடெக்டிவ்வும் வாட்ஸப் மெசேஜ்களும் செய்யும் மாயாஜாலம் இது என்று எண்ணிக் கொண்டான் தர்மா.
காமாட்சி திரும்பி தன்யாவைப் பார்த்தாள். “உண்மையைச் சொல்றேம்மா, எனக்கு இன்னொரு மகன் இருக்கான்ங்கறதையோ, அவன் திரும்ப வந்திருக்கான்ங்கறதையோ என் மனது நம்ப மாட்டேன்னது. யாரோ என் புள்ளை மாதிரியே ஒரு பையன் வந்திருக்கான்னு தோணிச்சு. ஏன்னா, இப்போ உயிரோட இருந்தாக்கூட, இவனும் நிலையில்லையே! உயர்ந்தா ஒரு வாரம் இருப்பான். அப்புறம்…”
“அவன் மேல அன்பு செலுத்தவே பயந்திருக்கீங்க, இல்லையா அம்மா? அதுக்குக் காரணம் உங்க கணவர் மேலான பயம்னு மட்டும் சொல்ல முடியாது, இல்லையா?” என்று கேட்டான் தர்மா.
அவனை எல்லோருமே திரும்பிப் பார்த்தார்கள்.
“தம்பி, நீ என்னைப் புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கறேன்” என்றாள் காமாட்சி.
“ஜெயக்குமார் என் நண்பன்தான் அம்மா. உங்களைப் பற்றி என்னிடம் பேசியிருக்கான். அதோட, உங்க மனநிலை எனக்குப் புரியுது. உங்க கணவர், உங்க உறவினர்கள்னு நபர்களுக்குப் பயப்படறதைவிட, பாசம் என்ற உணர்வுக்கே பயப்படறீங்க! நாம வைக்கிற பாசம் சோகத்தில் முடிஞ்சுடுமோ என்ற பயம்! உங்க பயத்தைப் போக்க உங்களைச் சுற்றி இருக்கறவங்க யாருமே முயற்சி எடுக்காதது வருத்தம்தான்” என்றான் தர்மா.
“யார் எடுக்கணும்? மற்றவங்களைக் குறைசொல்லி என்ன பிரயோஜனம்ப்பா? ஒரே வீட்டுக்குள்ள என் குழந்தைகளை – அதாவது ஜெய் தவிர மற்ற குழந்தைகளை – கூட்டிவைக்க என் கணவரால முடிஞ்சது, ஆனா அவங்க ஒரே குடும்பந்தான் என்ற எண்ணத்தைக் கூட்ட அவரால் முடியல! எல்லோரும் அவரோட அதிகாரத்துக்குப் பணிஞ்சுதான் இங்கே இருந்தாங்க, அவர் மேலேயோ, ஒருத்தருக்கொருத்தரோ எந்த அன்பும் அவங்களுக்கு இல்லை!
என் புருஷனை அவங்க எல்லோரும் ஒரு சர்வாதிகாரியா, ஒரு ராட்சஸனா பார்த்தாங்க. நான் மட்டும்தான் ஒரு நோயாளியா பார்த்தேன். இராணுவத்திலிருந்து ரிடையர் ஆகி வந்தபோதே அவருக்கு டயபடீஸ் வந்துட்டது. ஜெய் வீட்டைவிட்டு ஓடினபோது அவருக்கு நரம்புத் தளர்ச்சி வியாதி வந்தது. அது அதிகமாகி இப்போ சக்கர நாற்காலிலயும் தள்ளிட்டது. அதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை…”
“…ஜெய்க்கு இருந்தது” என்றான் தர்மா.
காமாட்சி திடுக்கிட்டாள். ஆனால் “கவனிச்சேன்” என்றாள். “ஆனா அதுக்கப்புறம் அவனும் மாறிட்டான்ப்பா. அவர் காலுக்கடியில் கண்ணிவெடி வைக்க ஆரம்பிச்சான். எனக்கு இந்தச் சண்டைகள் எதிலும் அக்கறை இல்லை. இந்தக் குழந்தைகளை வழிநடத்தற பொறுப்பு எப்பவோ என் கையை விட்டுப் போயிட்டது. என் புருஷனைப் பார்த்துக்கறது மட்டுந்தான் என் வேலை! எனக்கு அவர்தான் எல்லாம்! அவருடைய உடம்பையும் மனதையும் இந்தக் கூட்டம் எதுவும் கெடுத்துடாம பார்த்துக்கறது ஒண்ணுதான் என் வாழ்நாள் நோக்கம்!”
நீண்ட மௌனம்.
“அவ்வளவுதானே? நான் போகலாம் இல்லையா?” – காமாட்சி எழுந்தாள்.
சிவசரண் அவளை உற்றுப் பார்த்தார். “தாராளமா போகலாம். ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிட்டுப் போயிடுங்க. உங்க கணவரோட உடம்பையும் மனதையும் பார்த்துக்கறது ஒண்ணுதான் வாழ்நாள் லட்சியம்னு சொன்னீங்க! அந்த மனநலத்தைத் தான் வந்ததிலிருந்தே நாசம் பண்ணிட்டிருந்தார் ஜெயக்குமார். உங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க யார் என்ன மனசுக்குள் நினைச்சாலும் உங்க கணவரோட கண்ட்ரோல் அப்சொல்யூட்டா இருந்தது. அதுக்கும் ஒரு சவாலா வந்து சேர்ந்தார் ஜெயக்குமார். அதனால…” சிவசரண் தயங்கினார்.
காமாட்சி அவரையே பார்த்தாள்.
“எப்போதும் உங்க கணவருக்குப் பகக்த்திலேயே இருக்கற நீங்க, ஜெயக்குமார் மரணத்தின் போது அங்கே இல்ல! எங்கே இருந்தீங்கம்மா?”
காமாட்சி மௌனமாக நின்றாள்.
“பாரபெட் சுவருக்குப் பக்கத்தில்தான் நின்னுட்டிருந்தீங்கன்னு பார்த்தவங்க சொல்றாங்க. வெளிப்படையா கேட்கறேன் – ஜெயக்குமாரைத் தள்ளிவிட்டது நீங்களா?”
காமாட்சி பேசவில்லை. புன்சிரித்தாள்.
“அல்லது உங்க கணவரா?” சேர்த்துக் கொண்டாள் தன்யா.
காமாட்சி திடுக்கிட்டாள். “அவரு… அவரு ஏன் தள்ளிவிடணும்?” என்றாள்.
“ஜெயக்குமாருடைய நடவடிக்கைகள், உங்க கணவர் அவனால் பலவீனப்பட்டது, அவருடைய கோபம், அந்த நேரத்தில் நீங்க உங்க கணவருக்குப் பக்கத்தில் இல்லாதது, இதையெல்லாம் வெச்சுப் பார்த்தா, உங்களைவிட அவர் தள்ளிவிடத்தானே நிறைய காரணங்கள் இருக்கு? இன்ஸ்பெக்டர் நல்லவர். நானா இருந்தா முதலில் அவரை அரெஸ்ட் பண்ணிட்டுத்தான் இந்த விசாரணையையே நடத்துவேன்” என்றாள் தன்யா, காமாட்சியைக் கூர்ந்து கவனித்தவாறே.
காமாட்சி துடித்துப் போனாள். “அ… அவர்… அரெஸ்ட்…” தடுமாறினாள். பிறகு “இதோ பாருங்க, உங்ககிட்ட உண்மையைச் சொல்றேன். ஜெய் பண்ணிய வேலைகள் எல்லாம் அவருக்குக் கோபம் வந்தது, ஆனா அவரைவிட எனக்குத்தான் கோபம் வந்தது. அவருக்கு வந்த கோபம் ஏதோ இப்போ புதுசா தோன்றினது இல்லை, வருஷங்களா அவர் நெஞ்சில் புரையோடிட்டது. அவரால் அதை மாற்றிக்க முடியாது! தான் ஜெய் மேல கோபப்படறோம், அவனைத் தள்ளி வெச்சிருக்கோம் அப்படிங்கறது அவருடைய அடையாளமும் பெருமையுமா கூட இருந்தது.
அவனுடைய சவாலை ஓரளவு அவர் ரசிச்சார்னுதான் சொல்லணும். ஒரு வில்லனைப் போல அவனைப் பார்த்து, ‘நான் ஹீரோடா! எப்படி ஜெயிக்கறேன் பாரு!’ அப்படின்னு காட்டிக்க நினைச்சார். அவன் வீட்டைவிட்டுத் தோல்வியில் வெளியே போறதைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டார். இப்படி ஆம்புலன்ஸில் போறதைப் பார்க்கணும்னு அவர் நினைக்கலை, புரிஞ்சுக்குங்க!”
“இதெல்லாம் கோர்ட்டில் எடுபடாதும்மா!”
“அவரைவிட்டு விலகி நின்னேனே தவிர, அவரைப் பார்த்துட்டேதான் இருந்தேன். அவர் அவனைத் தள்ளிவிடலை! அதை நிச்ச்சயமா சொல்ல முடியும்!”
“ஏன் விலகி நின்னீங்க? அதுதான் கேள்வி!”
“வ… வந்து…”
“உங்க கணவர் சொன்னார், இல்லையா? ஜெய்கூடப் பேசணும்னு! சரிதானே? அவனைப் பார்க்கத்தானே அவர் சுவற்றுக்குப் பக்கத்தில் போனது? சொல்லுங்கம்மா! ஜெய் உங்க மகன். அதை நினைவுபடுத்திக்கிட்டுச் சொல்லுங்க!”
காமாட்சி பேச முயன்றாள். ஒரு கேவல்தான் வெடித்தது. வேகமாக வெளியே போய்விட்டாள்.
“ரைட்” என்றார் சிவசரண் திருப்தியாக.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings