2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தென்காசித் தென்றல் சுகமாக வீசிக் கொண்டிருக்கிறது. கூடவே நம்மை வரவேற்றுப் பன்னீர் தெளிப்பது போல் சாரல்மழை தெறிக்கிறது.
இந்தச் சாரல் ஏதாவது நினைவினை மனதுக்குக் கொண்டுவராமல் இருந்ததே இல்லை. சிலசமயம் ஏதாவது கவிதையைக் கொண்டுவரும்.
இன்றுவந்த சாரல் நினைவடுக்குகளைப் புரட்டிக் காவேரி மாமியைக் காட்டுகிறது.
காவேரி மாமி அந்தக் காலத்து மனுஷி. நாங்கள் வசித்த தெருவிலேயே ஒரு சிறிய வீட்டில் தன் கணவர் பட்டாபியுடன் வசித்தாள். கஷ்ட ஜீவனம்தான். ஆனால் களையாக இருப்பாள். கீறின மஞ்சள் கிழங்கு நிறத்தில் சற்றே பூசின உடல்வாகு.
பட்டாபி மாமா அவளைச் “செல்லம்மா” என்றுதான் கூப்பிடுவார். அது புக்ககப் பெயரா அல்லது பிரியத்தில் கூப்பிடுவதா என்று நான் பலதரம் யோசித்திருக்கிறேன். இரண்டும் இல்லையென்று பின்னால்தான் தெரிந்தது.
பட்டாபி மாமா, பாரதி பக்தர். அவரைப் போலவே முறுக்கு மீசை வைத்திருப்பார். அவ்வப்போது பேச்சில் பாரதியார் கவிதைகளிலிருந்து ஒன்றிரண்டு வரிகளை நுழைத்து விடுவார். (அதற்கு மேல் தெரியாது என்பது வேறு விஷயம்!) அதனால்தான் மாமி “செல்லம்மா” ஆனாள்.
அந்தச் செல்லத்தையாவது மாமா மறப்பார், வெற்றிலைச் செல்லத்தை மறக்கவே மாட்டார். அது தவிர சீட்டாட்டம் வேறு. இந்தியா கூட ஒலிம்பிக்ஸில் ஜெயித்துவிடும், மாமா சீட்டில் ஜெயித்ததாகச் சரித்திரமே கிடையாது.
சொற்ப சம்பளம்தான். நான்கு குழந்தைகள். மாமி ரொம்பக் கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என்று இப்போது தெரிகிறது.
மாமி ரொம்ப ‘செட்டு’. ஓரணா கூட வீணாக்க மாட்டாள். கீரைக்காரனோடு இரண்டு மணி நேரம் பேரம் பண்ணுவாள். கறிகாய் கேட்கவே வேண்டாம்.
அவள் பேச்சுக்குப் பயந்தே கறிகாய்க்காரி “நீ கொடுக்கறதைக் கொடும்மா, நான் இன்னும் நாலு தெரு போகணும்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
இத்தனை கணக்காக இருந்தாலும் மாமி தெருப்பெண்களோடு ஒட்டுதலாக இருப்பாள். நல்லது, கெட்டது நடந்தால் விட்டுக் கொடுக்கவே மாட்டாள். வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். விசேஷம் முடிந்ததும் தனக்கு வேண்டிய பொருட்களை உரிமையாக எடுத்துப் போவாள். ஆனால் இரவல் வாங்கவே மாட்டாள்.
ஒரு நவராத்திரி, வரலட்சுமி விரதம் என்று வந்தால் கட்டாயம் மற்ற மாமிகளை வீட்டுக்குக் கூப்பிடுவாள். ஆனால் வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமத்தைத் தவிர எதுவும் வைத்துக் கொடுக்க மாட்டாள்.
தன்னைக் கூப்பிடும் வீடுகளுக்குத் தவறாமல் போவாள். தனக்குத் தெரிந்த “ஸ்ரீரங்க நாயகியே” என்ற ஒரே பாட்டை வருடா வருடம் எல்லார் வீட்டிலும் பாடுவாள். அவள் குழந்தைகளையும் பாடச் சொல்வாள். அதுகள் பள்ளியில் கற்றது, திருவிழாவில் வைக்கும் ரெகார்டில் கேட்டது என்று எதையாவது கர்ணகடூரமாகக் கத்தும்.
நாங்கள் நண்டும் சிண்டுமாய் இருந்தபோதே அவள் பெரிய பெண்ணிற்கு பதினைந்து வயதிருக்கும். அவள் பாடுவதைக் (அதாவது, தாறுமாறாக இராகம் போட்டு ஒப்பிப்பதை) கேட்டு நானும் என் தங்கையும் சிரிப்பை அடக்கிக் கொள்வோம்.
எங்கள் அத்தையோ வேறு உறவினரோ ஊருக்கு வந்தால் கட்டாயம் காவேரி மாமியைப் பார்த்து நமஸ்காரம் செய்துவிட்டு வருவார்கள். “ஏண்டி! ஊரிலேர்ந்து வரும்போது ஒரு புளியஞ்சாதம் தயிர்சாதம் பிசைஞ்சுண்டு வந்து மாமியாத்திலே சாப்பிடப்படாதோ” என்பாளே தவிர, ஒரு வாய்க் காப்பி கொடுத்துவிட மாட்டாள்.
இப்படியே மாமி மூன்று பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி விட்டாள். பிள்ளை சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறான். தங்கமான மருமகள். இருந்தாலும் மாமாவும் மாமியும் சொந்த ஊரோடுதான் இருக்கிறார்கள்.
எங்கள் சித்தப்பா பெண் கல்யாணத்திற்கு அழைக்க நானும் அண்ணாவும் சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தோம். எங்கள் தெருவில் இருந்த வீடுகள் எல்லாம் கடைகளாகவோ சிறிய மருத்துவமனைகளாகவோ மாறியிருந்தன. சொற்பம் வீடுகளிலேயே குடித்தனம் இருந்தது.
காவேரி மாமி வீடு. அதே வீடுதான். பிள்ளை பக்கத்து வீட்டையும் வாங்கிச் சற்றுப் பெரிது படுத்தியிருந்தான். எல் இ டி டிவி, ஃபிரிட்ஜ் என்று வசதியாகவே இருந்தது.
மாமா வாசலைப் பார்க்க இருந்த புதுரக ஓய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். தள்ளாமை வந்து விட்டது புரிந்தது. பக்கத்தில் குட்டி ஸ்டூலில் இணைபிரியாத வெற்றிலைப் பெட்டி.
அரவம் கேட்டு காவேரி மாமி வெளியே வந்தாள். மோவாய் மட்டும் லேசாய்க் கிழடு தட்டியிருந்தது. மற்றபடி தலைமுடி கூட நரைக்காமல், அதே காவேரி மாமி.
உடனே அடையாளம் புரிந்து கொண்டாள். “வாங்கோ, வாங்கோ! வழி தெரிஞ்சுதா?” என்று உற்சாகமாக வரவேற்றாள். ஆச்சரியமாக இருந்தது. கீரைக்காரனோடு சண்டை போட்ட அதே கணீர் குரல்.
அரைமணி நேரம் அருமையாகப் பேசிக் கொண்டிருந்தோம். “நமஸ்காரம் பண்ணுகிறோம்” என்றதும் மாமாவருகில் போய் நின்று கொண்டாள். இரண்டு பேரும் ஆசீர்வாதம் செய்தார்கள்.
“நாழியாயுடுத்து மாமி, கிளம்பறோம்” என்றோம். “நன்னாயிருக்குடி, இவ்வளவு தூரம் வந்திருக்கே, மாமியாத்தில் ஜலம் சாப்பிட்டுப் போகக் கூடாதோ!” என்று கோபமாகக் கேட்டாள் மாமி.
“சரி மாமி” என்றதும் சொம்பு நிறையத் தண்ணீரும் இரண்டு டம்ப்ளர்களும் வந்து சேர்ந்தது. நான் அரை டம்ப்ளர் அருந்தினேன். அண்ணா சொம்போடு கடகடவெனக் குடித்தான். “நம்ம ஊர்த் தண்ணீர், தண்ணீர்தான் மாமி!” என்றான்.
இரண்டுபேரும் வெளியே நடந்தோம். “சிலர் மாறுவதே இல்லை, பார்த்தாயோ? ஜலம் குடிச்சுட்டுப் போ என்கிறாள் காவேரி மாமி! பழைய காலம் மாதிரியே தோணறது” என்றேன் அண்ணாவிடம்.
அண்ணா லேசாகச் சிரித்தான். “ஏன், காவேரி ஜலம் தந்தா போறாதோ?” என்றான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
அருமை மா!
பிரமாதம். அருமையான வர்ணனை