in

கசாருகன் யார்? (சிறுகதை) – ✍ லட்சுமி பாலா, சிவகாசி

கசாருகன் யார்? (சிறுகதை)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“காலைல விடிஞ்சதுல இருந்து ஒரே வேலை. உட்கார கூட நேரமில்லை. இந்த சீனுவ ஸ்கூல்க்கு அனுப்புறதே பெரிய வேலையா இருக்கு” என்று புலம்பியபடி வேலை செய்து கொண்டிருந்த தன் மருமகள் ரதியை பார்த்த மாமியார் ராதா, “அப்படி என்னம்மா வேலை உனக்கு? ஒரு எட்டு வயசு பையன ஸ்கூல்க்கு அனுப்புறத பெருசா சொல்ற”

அதிர்ந்த ரதி, “ஐயோ அத்த நான் சும்மா சொன்னேன். நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதிங்க” என்று அவள் சொல்லும் போதே, வீட்டிற்கு தேவையான மளிகை சாமான் வந்து இறங்கியது.

கணக்கு பார்த்து ரூபாயை செலுத்திய ராதா, “ரதி, புது அரிசி மூடைல இருந்து ரெண்டு உலக்கு அரிசி எடுத்து ஊர வை” என்றவர் பூஜை அறைக்குள் சென்றார்.

அரிசி எடுப்பதற்கு அரிசி மூடையை திறந்த ரதிக்கு, கையில் ரோமம் போல்  தட்டுபட்டது

“என்ன என்னமோ உள்ள இருக்கு. ஏதாவது ப்ரீயா இருக்குமோ” என்று யோசித்தபடி கையில் எடுத்தவள், கத்தி அந்த இடத்திலேயே மூர்ச்சையானாள்.

அவள் கத்திய கத்தில் அதிர்ந்து போய் வந்த ராதா, அங்கு மூடையிலிருந்த அரிசி செந்நிறமாக இருப்பதையும், பக்கத்தில் தன் பேரன் சீனுவின் தலை மட்டும் தனியாக கிடந்ததை பார்த்து நெஞ்சு வெடிக்க கத்தினார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சீனுவின் குடும்பத்தினரிடமும், பக்கத்து வீட்டினரிடமும் விசாரணை நடத்தினர்.

அங்கு வந்த டிஎஸ்பி ராஜாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், “சார்! சிட்டில இது மாதிரி சின்ன பசங்க கொலைகள் அதிகமா நடக்குது. இதுவரையும் எட்டு கொலைகள் நடந்துருக்கு, காவல்துறை என்ன சார் செய்து?”

“இந்த கொலைகள் செய்ற அந்த சீரியல் கில்லர கூடிய சீக்கிரம் எங்க டிபார்ட்மெண்ட் கண்டுபிடிக்கும்” என்று கூறியவர் ஜீப்பில் ஏறி சென்றுவிட்டார் ராஜா

வீட்டிற்கு வந்த ராஜாவை எதிர்கொண்ட அவரின் மனைவி தேவி, “ராஜா… இன்னும் நம்ம ராம் டியூசன்ல இருந்து வரல. டியூசன் சென்ட்டர்க்கு கால் பண்ணா, அவன் அப்பவே கிளம்பிட்டதா சொல்றாங்க”

“நீ ஒன்னும் பதறாத தேவி, வர்ற வழில அவன் நண்பன் யாரையாவது பார்த்திருப்பான். அவன் இப்ப சின்ன பையன் இல்ல செவன்த் படிக்குறான்” என்ற பொழுதே அவர்கள் வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

கதவை திறந்த ராஜா அங்கு யாரும் இல்லாததை கண்டு கதவை மூட சென்றவர், அப்போது தான் கிழே ஒரு பரிசு பெட்டி இருந்ததை பார்த்தார்.

நடுங்கியபடியே அதை கையில் எடுத்து உள்ளே சென்று நடுக்கூடத்தில் உள்ள மேஜையில் வைத்தவர், அந்த பரிசு பெட்டியை பிரித்தார்.

தேவியும் ஆர்வமாக, “யாரு ராஜா இத குடுத்தா?” என்றவரை காதில் வாங்காமல் பெட்டியினுள் கைவிட்டார். அவருக்கு கிடைத்தது அவர் மகனின் தலை, ரத்தம் சொட்ட சொட்ட இருந்தது. அதை பார்த்த ராஜா தொப்பென்று கீழே விழுந்தார். தேவி அந்த இடத்திலையே சிலையாக சமைந்தார்.

இரு வாரங்கள் சென்றதும் ராஜா தன் பணிக்கு திரும்பினார். அவரிடம் பழைய உற்சாகம் இல்லாமல் பேய் அடித்தது போல் இருந்தார்.

அவரை வரவேற்ற ஐபிஸ் அதிகாரி, “சாரி மிஸ்டர். ராஜா, உங்க இழப்புக்கு நாங்க வருந்துறோம். இந்த கேஸ்ச நீங்க தான் தொடர்ந்து நடத்தனும்னு நான் விரும்புறேன். நீங்க என்ன சொல்றீங்க?”

“கண்டிப்பா சார். என்னோட மகனை இப்படி பார்க்க வச்சவங்கள நான் சும்மா விடமாட்டேன். நடந்த எல்லா கொலைகளுமே தலைய தனியா வெட்டி எடுத்துருக்கானுங்க, பாடிய என்ன செஞ்சாங்கன்னு தெரியல. இதுவரையும் என்னோட பையனையும் சேர்த்து ஒன்பது கொலைகள் நடந்துருக்கு.

அந்த பையன் சீனு கொலைல மளிகைக் கடைக்காரர், அவங்க வீட்டுக்கு சரக்கு போட வர்றவருன்னு எல்லாரையும் விசாரிச்சிட்டேன். அவர் சரக்கு கொண்டு வரும் போது களைப்பா இருக்குன்னு ஒரு இடத்துல நிப்பாட்டி டீ குடிச்சிருக்காரு, அங்க தான் இவங்க அரிசி மூடைல வச்சிருக்கணும். அந்த இடத்துல ஏதாவது சிசிடிவி இருக்கானு பார்க்கணும். நான் வரேன் சார்” என்று கூறி விடைபெற்றார்.

ராஜா ஸ்டேஷன் சென்றதும் எஸ்.ஐ பழனி ஓடி வந்து, “சார் நான் இந்த கோப்புல சில முக்கிய தகவல்கள் சேமிச்சி வச்சிருக்கேன். பாருங்க சார்” என்றார்.

அதை அவரிடமிருந்து வாங்கிய ராஜா, “இத நாம உள்ள போய் பேசலாம் பழனி” என உள்ளே அழைத்துச் சென்றார்.

கோப்புகளை நன்கு அலசிய ராஜா, “இப்ப இந்த பைல் படி பார்த்தா என் பையன் ராமும், அந்த பையன் சீனுவும் ஒரே ஸ்கூல். அதுக்கு முன்னாடி கொலையான பசங்க எல்லாரும் பக்கத்து ஸ்கூல்” என்று சொல்ல, தலையை ஆட்டினார் பழனி

மேலும் தொடர்ந்த ராஜா, “அப்ப அந்த ஸ்கூல்ல இருந்து என் பையன் படிக்குற இடத்துக்கு மாற்றல் ஆகி வந்த யாரோ தான் இத செஞ்சிருக்கனும்”

“ஆமா சார். நாங்க அந்த ரெண்டு ஸ்கூல் பிரின்சிபால்கிட்ட விசாரிச்சிட்டோம். செல்வம்னு ஒரு வாத்தியார் தான் அந்த ஸ்கூல்ல இருந்து இந்த ஸ்கூல்க்கு மாற்றலாகி வந்துருக்காரு. பசங்ககிட்ட விசாரிச்சதுல அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட், யாரு என்னனு பார்க்கம பனிஷ்மெண்ட் பண்ணுவாருன்னு சொல்றாங்க” என்றார் பழனி.

நெற்றியை சுருக்கி யோசித்த ராஜா, “சீனு, ராம் வகுப்புல இருக்குற பசங்ககிட்ட விசாரிச்சீங்களா?” என்று கேட்க

“எஸ் சார். நாங்க விசாரிச்சதுல இந்த செல்வம் மேல தான் சார் சந்தேகம். அவரோட வாய்ஸ் பொண்ணு மாதிரி இருக்குமாம். சீனு சரியா பாடத்த கவனிக்காம அவர கிண்டல் பண்ணிருக்கான். அதே மாதிரி தான் சார் ராமும் அவர் போகும் போது வரும் போது கிண்டல் பண்ணிருக்கான்”

“கொலை பண்ணிட்டு நமக்கு வெறும் தலைய மட்டும் அனுப்பி வச்சுருக்கான். பாடிய என்ன பண்ணான்னு தெரியல. அவன் கண்டிப்பா ஒரு சைக்கோ தான். பழனி நீங்க நம்ம போர்ஸ் எல்லாரையும் ரெடியா இருக்க சொல்லுங்க. இன்னைக்கு அவன நாம அரெஸ்ட் பண்றோம்” என்றார்.

செல்வம் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது அவரை சுற்றி வளைத்து  காவல்துறையினர் கைது செய்தனர். காவல்நிலையத்திற்கு வந்த செல்வத்தை பார்த்த ராஜா, வெறி கொண்டு அவரை தாக்கினார்.

“என் ஒரே பையனை இப்படி பண்ணிட்டியேடா பாவி” என்றவர், அடிப்பதை நிறுத்தவில்லை.

பின்பு களைப்புடன் இருக்கையில் அமர்ந்தவரிடம் ஏட்டு ஒருவர், “சார் இந்த கிப்ட் பார்சல் நம்ம ஸ்டேஷன் வாசல்ல இருந்துச்சு” என்று அதை ராஜாவிடம் கொடுத்தார்.

அதை பார்த்ததும் ராஜாவின் கைகள் நடுங்கியது. ஏனெனில், அதே மாதிரியான பரிசு பெட்டி தான் முன்பு அவர் வீட்டிற்கு வந்தது. நடுக்கியபடியே அதை பிரித்தார் ராஜா. உள்ளே பழனியின் தலை ரத்தம் சொட்ட சொட்ட இருந்தது.

அதை அதிர்ச்சியுடன் ராஜாவும், பக்கத்தில் இருந்த காவலர்கள் அனைவரும் பார்த்தனர். அதில் ஒரு கடிதம் வேறு இருந்தது. அதை எடுத்து படித்தார் ராஜா

அந்த கடிதத்தில், ‘இன்னும் நாலு பசங்க சாவாங்க. உன்னால என்ன கண்டுபிடிக்க முடியாது’ என எழுதி இருந்தது.

காவல்துறையினருக்கு இது மிகவும் தலைவலியாக இருந்தது. தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு எழுந்த ராஜா, நேரே சென்று செல்வத்திடம் சென்று நின்றார்.

செல்வத்தை இருக்கையில் அமர்த்தியவர் அவருக்கு தண்ணீர் கொடுத்த பின், “சொல்லுங்க செல்வம், நீங்க கிளாஸ் நடத்துரப்ப என்ன நடந்துச்சு” என்றார்.

அவரை விழிவிரித்து பார்த்த செல்வம், “சார் நான் எதுவுமே செய்யல சார். பசங்கன்னா கேலி கிண்டல் பண்ண தான் செய்வாங்க. அதுக்காக கொலை பண்ற அளவு யாரும் போக மாட்டாங்க. இதுக்கு முன்னாடி இருந்த ஸ்கூல்ல மாசம் பிறந்தவுடனே சம்பளம் தர மாட்டாங்க. அதான் சார் இந்த ஸ்கூல் வந்தேன். ஒரு நாள் அந்த பையன் சீனுவும், ராமும் நான் பாடம் நடத்துரப்ப தூங்கி தூங்கி விழுந்தாங்க. அதனால அவங்கள நான் வெளிய அனுப்புனேன்.”

அதிர்ந்த ராஜா, “என்ன சொல்றீங்க என்னோட பையன் நல்லா படிப்பான். கிளாஸ் கூட நல்ல கவனிப்பான்”

தலையை ஆட்டிய செல்வம், “ஆமா சார் இந்த ரெண்டு பசங்களும் நல்லா படிக்குறவங்க தான். ரெண்டு பெரும் ஒரே ஒரு  தடவ தான் தூங்கி விழுந்தாங்க. நான் கண்டிச்ச பிறகு இப்படி செய்ய மாட்டாங்க. அதுக்கு ஒருவாரம் கழிச்சு தான் இப்படி ஆச்சு” என்றார்.

கண்ணில் இருந்து வந்த கண்ணீரை வர விடாமல் தன்னை சமாளித்த ராஜா, “இதுக்கு முன்னாடி நீங்க வேலை செஞ்ச இடத்துல கொலையான பசங்களும் இப்படி தான் இருந்தாங்களா?”

தலையை சொரிந்த செல்வம், “எனக்கு அவ்வளவா நியாபகம் இல்ல சார். பொதுவா இந்த வயசுல அயன், ஹீமோகுளோபின் லெவல் எல்லாம் கம்மியா இருக்கும். அதனால நிறைய பசங்க பாடம் நடத்துரப்ப தூங்கி விழுவாங்க” என்றார்.

ராஜாவிற்கு அந்த கொலையாளியை நினைத்து கோபம் வந்தது, செல்வத்திடம், “நீங்க இப்ப வீட்டுக்குப் போகலாம். ஆனா நாங்க எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும்” என்று அவரை அனுப்பி வைத்தார்.

“கொலையான பசங்க எல்லாரும் அரசாங்க அதிகாரியோட பசங்கன்னு அன்னைக்கு பழனி தந்த கோப்புல இருந்தது.

“பாடி கிடைக்காததுனால போஸ்ட் மாட்டம் கூட பண்ண முடியல. அரசாங்க அதிகாரிகளை பிடிக்காத ஒருத்தன் சைக்கோவா மாறி கொலை பண்றான்.” என்று ராஜாவின் மூளை சிக்னல் கொடுக்கும் போது, ஒரு ஏட்டு ஓடி வந்தார், “சார் கலெக்டர் பையன காணுமாம். ஐஜி லைன்ல இருக்காரு” என்றார்.

‘இதுக்கு மேல எந்த உயிரும் போக நான் விட மாட்டேன்’ என்று நினைத்த ராஜா, கலெக்டரின் மகன் கோபியின் பள்ளி சிசிடிவியை ஆராய்ந்தார். அதில் கோபி ஐஸ்கிரீம் சாப்பிட்டபடியே பள்ளி செல்கிறான்.

மறுநாள் அவன் காணாமல் போன அன்று கையில் ஐஸ்கிரீம் இல்லாமல் செல்கிறான்.

யோசித்த ராஜா, ‘எல்லா பசங்களையும், சிசிடிவி இல்லாத இடமா பார்த்து கடத்தி வேற இடத்துல போய் கொன்றுக்கான்’ என்று யோசித்தவர் ஐஸ்கிரீமையும், செல்வம் சொல்வதையும் வைத்து பார்த்தவர்.

ஒரு முடிவுடன் கோபி படிக்கும் பள்ளிக்கு விரைந்தார். அதற்க்கு முன் சில ஏற்பாடுகளை செய்தார். அங்கு பள்ளியில் இருந்து தள்ளி 500மீ தொலைவில் ஐஸ்கிரீம் விற்க்கும் ராயனை  மாறுவேடத்தில் வந்த காவலர்கள் கண்காணித்தபடி இருந்தனர்.

பிறகு ராஜாவின் கண் அசைவில் அவனை காவலர்கள் சுற்றி வளைத்தனர். ஓடப் பார்த்தவனின் காலில் சுட்டார் ராஜா. பின் அவனை கைது செய்தனர்.

அவன் வைத்திருந்த ஐஸ் கிரீம் பெட்டியில் இருந்த கோபியை விடுவித்த ராஜா, “உனக்கு ஒன்னும் இல்லையே கோபி, எப்படி இவன் கிட்ட மாட்டுன?”

கண்ணை கசக்கியபடி பார்த்த கோபி, “நான் பைன் அங்கிள். நான் இங்க தினமும் ஐஸ்கிரீம் வாங்குவேன். அதை சாப்பிட்டா தலை சுத்துது. அதான் இன்னைக்கு வாங்கல. உடனே இவன் என்னைய கட்டி போட்டு இதுக்குள்ள வச்சிட்டான்” என்றான்.

பிறகு கோபியை கூட்டி சென்று அவன் பெற்றோரிடம் விட்டவர், காவல்நிலையம் சென்று ராயனை அடித்து உதைத்து, “சொல்லுடா பாடிய என்ன பண்ண?” என்றார்.

வலி தாங்காத ராயன் இடத்தை சொன்னான். அங்கே அவனையும் அழைத்துக் கொண்டு தன் போர்ஸ்சுடன் சென்றார். அங்கு பெரிய பெரிய ப்ரிஸரில் அனைவரது உடலும் இருந்தது. பார்க்கவே கொடுரமாக இருந்தது. அவர் மகன் உடலைப் பார்த்து கண்கலங்கினார் ராஜா.

கொஞ்சமும் பயம் இல்லாமல் பார்க்க சைக்கோ போல் நின்றிருந்த ராயன், “இந்தா போலிசு, பசங்க மட்டும் தான் என்னோட ப்ளான். இந்த போலீசு பழனி, நான் ஐஸ்கிரீம்ல போதை வைக்குறத பாத்துட்டான், அதான் கொன்னுட்டேன். நாங்க மட்டும் அஞ்சுக்கும், பத்துக்கும் பிச்சை எடுக்கணும், நீ மட்டும் சொகுசா லஞ்சம் பென்ஷன்னு வாங்குவியா?” என்று பேசிக் கொண்டு சென்றவன் நெற்றி பொட்டில் சுட்ட ராஜா, “103 இவன் பாடிய போஸ்ட் மாட்டம் பண்ண அனுப்பி வைங்க” என்று சொல்லி சென்றார்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

     

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 5) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    யதார்த்தம் (சிறுகதை) – ✍ கௌரி கோபாலகிருஷ்ணன், சென்னை